குறளின் கதிர்களாய்…(463)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(463)
ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.
-திருக்குறள் -891(பெரியாரைப் பிழையாமை)
புதுக் கவிதையில்…
செயல் எதையும்
செவ்வனே செய்து முடிக்க
வல்லவரின்
ஆற்றலை இகழாதிருத்தல்,
தீங்கெதுவும்
தமக்கு வராமலிருக்கக்
காப்பவர் செய்யும்
காவல்கள் அனைத்திலும்
முதன்மையானது…!
குறும்பாவில்…
செயலைத் திறம்படச் செய்வாரின்
செயல்திறனை இகழாதிருத்தல், தம்மைக் காத்திடச்
செய்யும் காவல்களிலெல்லாம் முதன்மையானது…!
மரபுக் கவிதையில்…
செய்யும் செயலைத் திறம்படவே
செய்து முடிக்க வல்லாரின்
செய்யு மாற்ற லதுதன்னை
சேயென் றிகழா திருந்திடுதல்,
உய்யும் வழிக்குத் தடையாக
உளதாம் தீங்கில் காத்திடவே
செய்யும் காவல் அனைத்தினிலும்
சேரும் முதன்மை இடத்தினையே…!
லிமரைக்கூ…
செயல்வல்லார் திறனதற்கு இகழே
சொல்லா திருத்தலே பெற்றிடும் தமைக்காக்கும்
காவலிலெல்லாம் முதன்மைப் புகழே…!
கிராமிய பாணியில்…
பாராட்டணும் பாராட்டணும்
தெறமயபப் பாராட்டணும்,
எதயுமே நல்லாச் செய்யிறவங்கத்
தெறமயப் பாராட்டணும்..
எதச் செய்தாலும்
நல்லாச் செய்துமுடிக்கிறத்
தெறம உள்ளவங்கள அவமதிச்சிக்
கொறசொல்லாம இருந்தாப்போதும்,
அதுவே
தனக்குக் கெடுதல்வராமப்
பாதுகாக்கிற
காவலுல யெல்லாம் ஒசத்தியா
மொதல்தரமானது..
அதால
பாராட்டணும் பாராட்டணும்
தெறமயபப் பாராட்டணும்,
எதயுமே நல்லாச் செய்யிறவங்கத்
தெறமயப் பாராட்டணும்…!