தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார் !

0
1

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

முத்தமிழ் வாழ்த்த முத்தையா பிறந்தார்
சொத்தாகத் தமிழைச் சேர்த்துமே வைத்தார்
கம்பனைத் தொட்டார் கவிமழை பொழிந்தார்
கண்ண தாசனாய் கவி மன்னரானார்

பக்தியில் திளைத்தார் பரமனைத் துதித்தார்
நெற்றியில் நீறும் பொட்டுமாய் திகழ்ந்தார்
ஆலயம் சென்றார் அரனை வணங்கினார்
ஆத்திக வாதியாய் ஆனந்தம் அடைந்தார்

அரசியல் அலையால் அள்ளுண்டு போனார்
ஆத்தீக அகத்தில் நாத்திகம் நுழைந்தது
விதண்டா வாதம் பேசினார் எழுதினார்
வீணாய்க் காலம் கழித்தார் இருளில்

சாமியை ஏசினார் சாத்திரம் எதிர்த்தார்
சங்கர மடத்தைத் தகர்ப்பேன் என்றார்
தேவார புராணம் தீயிட முனைந்தார்
திசை அறியாமல் சிக்கினார் இருளில்

நாத்திகம் என்பது நஞ்சென உணர்ந்தார்
ஆத்தீகம் அவரை அணைத்துமே நின்றது
கண்ணனைப் பாடினார் காஞ்சியை நாடினார்
திருமுறை படித்தார் திளைத்தார் பக்தியில்

பக்திப் பாடல்கள் பற்பல பாடினார்
பாமரர் விளங்க பலவும் பாடினார்
தத்துவம் பாடினார் சித்தரைப் போலவே
இத்தரை பயனுற எழுதினார் எழுதினார்

உரைநடை உலகில் உயர்ந்தே நின்றார்
உரைநடை கூட கவிநடை ஆனது
உள்ளம் அமர உரைநடை அமைந்தது
கவி கண்ணதாசன் உரை மன்னரானார்

திரைக்கதை வசனம் காவியம் ஆனது
கவிதை நடையில் வசனம் எழுந்தது
கவித்துவ நிலையைக் காட்டியே நின்றார்
கவி கண்ணதாசன் கலைமகள் வரமே

சமயங் கடந்து தமிழை எழுதினார்
அவலம் களைந்திட அதிகம் எழுதினார்
மனதில் பட்டதை வண்ணமாய் வடித்தார்
மாபெரும் கவியாய் திகழ்கிறார் மனங்களில்

வெள்ளித் திரைக்கு அள்ளிக் கொடுத்தார்
வேதனை சோதனை சாதனை பாடினார்
தத்துவப் பாடலை முத்திரை ஆக்கினார்
தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.