தேசத்தந்தைக்கு ஒரு நேசக்கடிதம்!
புமா
அன்பு மகாத்மா!
நலமாயிருப்பாய் நம்புகிறேன்.
இங்கில்லாமல் போனாய்
அதனால்
நலமாயிருப்பாய் நம்புகிறேன்.
நீ
இராட்டை சுற்றினாய்
நாடு சுதந்திரமானது.
உன்
பேர் சொல்வோர்
நோட்டை சுருட்டுகிறார்
வீடு சுகபோகமாகிறது.
அன்று
உன் சபை
வெள்ளைக் கூட்டத்தை
விரட்டியது.
இன்று
கொள்ளைக் கூட்டத்தைத்
திரட்டியது.
கூட்டு சேர்ந்து
கொள்ளையடித்தாலும்
யாரும் மாட்டுவதில்லை.
சுருட்டுவதில்
சுனாமி வேகம்
பினாமிகள் வாழ்க்கை
ராஜ போகம்.
இங்கில்லாமல் போனாய்
அதனால்
நலமாயிருப்பாய் நம்புகிறேன்
நீ மகாத்மா!
உனக்குத் தெரிந்ததெல்லாம்
வினோபாஜி நேதாஜி
2 – ஜியை அறிவாயா?
நீ
காண விரும்பிய
பொருளாதாரம்
வால்மார்ட்டின் பின்னால்
வாலாட்டிப் போகிறது.
உன்
வாழ்க்கை
அந்நியர் ஆட்சியிலிருந்ததால்
அரையாடையோடாவது
இருந்தது.
நல்லவேளை
இங்கில்லாமல் போனாய்.
நலமாயிருப்பாய் நம்புகிறேன்
நீ மகாத்மா!
படத்திற்கு நன்றி : http://en.wikipedia.org/wiki/Mohandas_Karamchand_Gandhi
ஓ போட்டுட்டேன்!