கரித்துண்டினால் ஓவியம்!
ஓவியர் திரு சங்கர நாராயணன்- சங்கருடன் நேர்காணல்.
விஜய திருவேங்கடம்
கரித் துண்டினால் ஓவியம் என்பது கற்கால விடயமாக இருந்து, அவ்வப்போது, ஆங்காங்கே, அகன்ற வீதிகளில் அல்லது கடற்கரையோரம், ஏதேனும் ஓர் ஏழை ஓவியன் தெய்வத் திருவுருவங்களை கரித்துண்டினால்வரைந்திருப்பது வழிப்போக்கர் பலரையும் கவர்ந்திருக்கலாம்.
இவ்வாண்டு அறிஞர் மு வ வின் நூற்றாண்டு என்பதால் அவரது புதினம் “கரித்துண்டு” நினைவிற்கு வரலாம். பென்சிலால் வரையப்படும் ஓவியம் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் முடிந்து போன விடயமாகக் கருதப் படலாம்.
“இந்தியன் இங்க்” ஓவியம் ஏதோ சிலரின் விருப்ப சாதனமாக இருக்கலாம். திரு.ஆதிமூலம் போன்ற மேதைகள் செய்துள்ள சாதனைகள் ஒரு வகையில் புறனடைதான்.
ஆக, இந்த மூன்றுவகை ஓவியங்களும் இன்றைய தொழில் நுட்பம் உயர்த்திப் பிடித்திருக்கிற சாதனங்களிடையே தாக்குப் பிடிப்பது ஆச்சரியம்தான் என்பவர்களுக்கு இதோ நாம் சந்திக்கப் போகும் ஓவியர் சங்கரின் படைப்புகள் அதி ஆச்சரியமாக இருக்கும். ஆம், இவர் இந்த மூன்று சாதனங்களையுமே தமது முக மலர்ச் சித்திரங்களுக்குப் பயன்படுத்துகிறார்.
திரு சத்திராஜு சங்கரநாராயணா -சங்கர்- பிறந்தது ஆந்திரத்தில் உள்ள நர்சாபூர் எனும் சிற்றூர். 1936 ல் பிறந்த இவருக்கு இன்று எழுபத்தி ஐந்து வயது. சென்னை லயோலா கல்லூரியில் .பொருளாதாரத்தில் பி ஏ ஹானர்ஸ் படித்து ,1963 ல் அகில இந்திய வானொலியில் சேர்ந்து நிறைவாக சென்னை வர்த்தக ஒலிபரப்பு இயக்குநராக ஓய்வு பெற்றார்.
இனி திரு சங்கருடன் பேசுவோம்.
பிரபலஸ்தர்களின் முக மலர்ச் சித்திரங்களை வரைவதில் உங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தைப் பார்க்கும் போது ஓவியக் கலையை முறையாகப் பயின்றவர் போலத் தெரிகிறது. வண்ணமும் தூரிகையும் இல்லாமலே பெரு மக்களின் ஆளுமையை வெளிப்படுத்துவது ஆச்சரியம் தருகிறது.ஓவியம் முறையாகப் பயின்றீர்களா ?
முறைப் படி பயிற்சி இல்லை. ஆனால் சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம். என் தந்தையாரும் தமையனாரும் ஓவியர்கள்.அதிலும் தமையனார் ஓவியத்தையே தொழிலாகக் கொண்டவர்.ஆகவே குடும்பச் சூழலும் ஆர்வமும் சேர்ந்து கொண்டன.பொழுது போக்காக ஓவியம் தீட்ட ஆரம்பித்தேன்.
எடுத்தவுடன் கையாண்ட சாதனம் ஏது?
பென்சில். அவ்வப்போது கரித்துண்டும் இந்தியன் இங்க்கும் பயன்படுத்தி என் ஆர்வத்தையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டேன்.
யாரையேனும் முன் மாதிரியாகக் கொண்டுள்ளீர்களா? யாரேனும் உந்துதலாக இருந்தார்களா?
யாரையும் பின் பற்றவில்லை. ஆனால்,என் தமையனார் திரு பாபுவே என் ஆதர்சம் அவர் ஓவியர், கார்ட்டூனிஸ்ட் கதைப் படம் வரைபவர்,திரைப் படக்கலை இயக்குநர்,திரைப் பட இயக்குநர் என்ற பன்முக, ஓவியர்கள் திரு கோபுலு, திரு ஆர்.கே லக்ஷ்மண் ஆகியோரோடு பழகி வளர்ந்தவர். பன்னாட்டுக் கலைஞர். தமிழ் இதழ்களில் கதைகளுக்குப் படம் வரைந்து புகழ் பெற்றவர். திரைப் பட இயக்குநர் ஆவதற்கு முன்னால் விளம்பர முகமைகளில் கலை இயக்குநராக இருந்தவர். அவர் எனக்குத் தமையனாகவும் வழிகாட்டியாகவும் வைத்தது என் அதிர்ஷ்டமே!
உங்களுடைய முதல் ஓவியம் எது? எப்போது வரைந்தீர்கள்?
1952-1957 வரையிலான கல்லூரி நாள்களின் போது என் கல்லூரிப் பேராசிரியரை முதன் முதலில் வரைந்தேன்.கேலிச் சித்திரம் அல்ல.பள்ளி நாள்களிலும் கல்லூரி நாள்களிலும் ஓவியமோ கிறுக்கலோ அது கேலிச் சித்திரமாக இருக்கும் என்பார்கள். ஆனால், நான் போட்டது தத்ரூபம்.
முறையான ஓவியப் பயிற்சி இல்லை என்றீர்கள். அடிப்படைகள் எப்படி அத்துப்படி ஆனது?
என் தமையனார் திரு பாபு எனக்கு உதவினார்.
உங்களுக்கு மிகவும் பிடித்த ஓவியர் என்று யாரைச் சொல்வீர்கள்?
என் தமையனார்தான். ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் எனக்குப் பிடிக்கும்.
கலைக்காக மட்டுமே ஓவியம் தீட்டுகிறீர்களா? வரைந்ததை விற்பனை செய்கிறீர்களா?
இது எனக்குமுழு நேரப் பொழுதுபோக்கு. சில பிரபலஸ்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வரைந்து தந்திருக்கிறேன். அதுவும் அவர்களிடம் நானும் அவர்கள் என்னிடமும் வைத்திருக்கும் அன்பு அபிமானத்துக்காக.
நீங்கள் புகைப் படத்தைப் பார்த்து வரைகிறீர்களா அல்லது நேரில் இருந்து வரைகிறீர்களா?
புகைப்படங்களைப் பார்த்தே வரைகிறேன்.
பிரபலஸ்தர்களின் படங்களைப் போல சாதாரணக் குடிமக்களின் படங்கள் வரைவதுண்டா?
வரைந்திருக்கிறேன். கிராமத்து மக்களை வரைந்திருக்கிறேன்.
உங்கள் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி நடத்தி உள்ளதாக அறிந்தேன். எங்கெல்லாம் நடத்தி இருக்கிறீர்கள்.? உதவியது யார்? வரவேற்பு எப்படி?
2007 மே மாதம் மைசூரில் உள்ள ‘கலா மந்திரா’வில் ஒரு கண்காட்சி நடத்தினேன். இதில் ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர்களின் முக மலர்ச் சித்திரங்கள் இடம் பெற்றன. ‘ஸ்ருஜனா மீடியா சொல்யூஷன்ஸ்’ எனும் அமைப்பினர் உதவினார்கள்.. 2011 பிப்ரவரியில் 250 சித்திரங்கள் அடங்கிய கண்காட்சியை பங்களூருவில் நடத்தினேன். நடந்த இடம் ‘சித்ர கலா பரிஷத்’. பெங்களூரு ஆந்திர ஜோதி’ தெலுங்கு இதழில் பணியாற்றும் தெலுங்கு அன்பர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அது.
எனது இரண்டாவது தனிக் கண்காட்சி ஹைதராபாத் நகரில் ‘ரவீந்திர பாரதி’ அரங்கத்தில் 2011 அக்டோபரில் நடந்தது. முகி மீடியா என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆந்திர அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அது. எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு..பங்களூரு கண்காட்சிக்குப் பிறகு பாரம்பரிய மைசூர்த் தலைப்பாகை அணிவித்து என்னை கௌரவித்தனர்!.
பெங்களூரு,ஹைதராபாத் இவ்விரு நகரங்களிலுமே ஊடகங்கள்-அச்சு இதழ்கள்,வானொலி,தொலைக்காட்சி இவை எனது கண்காட்சியைப் பற்றி விரிவாக செய்தி வெளியிட்டன. ஹைதராபாத் தூர்தர்ஷனும், என்,டி,டி,வி ஹிண்டுவும் என்னை நேர்கண்டு ஒளிபரப்பின.அகில இந்திய வானொலியின் ஹைதராபாத், விஜயவாடா, சென்னை ‘ரெயின்போ’ பண்பலை நிலையங்கள் எனது நேர்காணலை ஒலிபரப்பின.
இத்தனையும் உங்கள் பணி ஓய்வுக்குப் பிறகு நடந்திருக்கின்றன..காரணம்?
ஆம், ஓரளவு உண்மையே.இப்போது நேரம் நிரம்பக் கிடைக்கிறது. ஆனால் பணியின்போதே எனது ஓவிய முயற்சிகள் தொடர்ந்தன.அகில இந்திய வானொலி அந்தக் காலத்தில் நடத்திய வானொலி(தமிழ்), வாணி(தெலுங்கு) ‘லிஸ்னர்’ (ஆங்கிலம்) இவற்றில் படம் வரைந்து உதவியிருக்கிறேன்.
1992 -ம் ஆண்டு திருப்பதியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் போது ‘ஆந்திர ஜோதி’ தெலுங்கு நாளிதழில் நான் வரைந்த அப்போதைய பிரதமர் திரு பி.வி.நரசிம்ம ராவ் அவர்களின் முக மலர்ச் சித்திரம் முதல் பக்கத்தில் வெளியாகியது.
‘நவ்யா’ என்ற தெலுங்கு வார இதழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வரைந்துள்ளேன்.’ஈநாடு”வார்த்தா”சூர்யா’ ‘போஸ்ட் நூன்’என்ற தெலுங்கு இதழ்களிலும் கர்நாடகாவிலிருந்து வெளிவரும் ‘உதயவாணி’ என்ற கன்னட இதழிலும் ,’ Jade’ ‘Indian Panorama’ ‘catalyst’ போன்ற ஆங்கில இதழ்களிலும் எனது ஓவியங்கள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன் வெளியாகியுள்ளன.’ஆந்திரப் பிரதேஷ்’எனும் அரசின் அதிகார பூர்வ மாத இதழ், ‘ஸ்வப்னா” ஜகதி’ தெலுங்கு மாத இதழ்கள்,’Samudra’ ‘Sruthi’,’Splendour’ எனும் ஆங்கில இதழ்கள் எனது ஓவியங்களை வெளியிட்டுள்ளன.
உங்களது ஓவியங்கள் புத்தகங்களாகவும் வந்துள்ளனவா?
ஹாஸ ரேகாலு’ என்ற தலைப்பில் நாற்பது நகைச்சுவை நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள்,மெல்லிசை வாணர்கள் ஆகியோரின் முக மலர்ச் சித்திரங்கள் அடங்கிய முழு நூல் ஜூலை 2008 ல் வெளியிடப்பட்டது.’ஹசம் பிரசுராலு’ என்ற பதிப்பகத்தார் வெளியிட்டது.அதைப் போலவே நான் பெங்களூருவில் நடத்திய 108 கண்காட்சிப் படங்களைத் தொகுத்து ‘துருவ தராலு’ என்ற நூலாக ‘முகி மீடியா’ வெளியிட்டுள்ளது. 2011 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.
இரண்டுமே தெலுங்கு நூல்கள். இதைத் தொடர்ந்துதான் ஹைதராபாத் ரவீந்திர பாரதியில் மூன்று நாள் கண்காட்சி நடந்தது.
கண்காட்சி நடத்துவது பற்றி?
ஒரு கண்காட்சி நடத்துவதற்கு மிகுந்த பொருட் செலவு ஆகும்.நேரமும் ஆகும். யாரேனும் ஊக்கமும், உதவியும் தருகிறபோதுதான் நடத்தமுடியும் முன்பு பணியில் இருந்தபோது முற்றிலுமாக முடியவில்லை.இப்போது ஓய்வில் கொஞ்சம் மற்றவர் உதவியுடன் முடிகிறது. இப்போதாவது முடிகிறதே என்று எனக்கு மகிழ்ச்சியே.
ஆம் , 75 வயதில் இந்தக் கலைப் பணி மிகுந்த நிறைவாக இருக்கும்.அதைப் போலவே உங்கள் முக மலர்ச் சித்திரங்களின் கதாநாயகர்கள் நீங்கள் வரைந்த தங்களது படங்களைப் பார்த்திருக்கிறார்களா? என்ன சொன்னார்கள்?
பல பிரமுகர்கள் மகிழ்ந்து பாராட்டி கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.. டாக்டர் அப்துல் கலாம், ஆமிர் கான், ஆஷா பான்ஸ்லே,டாக்டர் மன்மோகன் சிங்,அமிதாப் பச்சன்,கலைஞர், ரஜனிகாந்த்,கமல்ஹாசன்,கே பாலச்சந்தர், ரத்தன் டாடா, ஆசிம் பிரேம்ஜி,டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ஓவியர் கோபுலு, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பி.பி.ஸ்ரீனிவாஸ்,கே ஜே யேசுதாஸ் ,கிரிஷ் கர்னாட், டாக்டர் மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, டாகடர் யு.,ஆர்.அனந்தமூர்த்தி, ஆர்.கே.லக்ஷ்மண், டாக்டர் அக்கினேனி நாகேஸ்வர ராவ்,டாக்டர் சி.நாராயண ரெட்டி,பிரணாய் ராய், இவர்களிற் சிலர்.
ஒரு படம் வரைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
ஒரு படம் வரைவதற்கு நான்கு மணி நேரம் ஆகும். அதற்கென்று நேரம் ஒதுக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.
குழந்தைகளுக்கு இந்தக் கலையைச் சொல்லிக் கொடுக்கிறீர்களா?
சொல்லிக் கொடுக்க முறையான பயிற்சி , பாடத் திட்டம், இலக்கணம் எல்லாம் வேண்டும் என்று நினைக்கிறேன். இவையெல்லாம் என்னிடம் இல்லை.
நன்றி சங்கர் அவர்களே. ஓர் சுயம்பு ஓவியரை அதுவும் மனித முக மலர்ச் சித்திரங்கள் வரையும் ஓர் ஓவியரை. தாம் வரையும் மனிதரின் ஆளுமையை துல்லியமாக வெளிப்படுத்தும் ஓர் ஓவியரைச் சந்தித்த நிறைவோடு திரு சங்கரிடமிருந்து விடை பெறுவோம்.
திரு சங்கர் வரைந்த ஓவியங்களை இங்கே காணலாம். அவரது தன்னோவியம் உள்பட.!
வானொலிக் குடும்பத்தின் மிகப் பெரிய கலைஞரை நன்கு அறியத் தந்ததில் மிக்க மகிழ்ச்சியும் பெரிமிதமும் கொள்கிறேன்… குறிப்பாக எம்.எஸ். பானுமதி, ரமண மகரிஷி, ரத்தன் டாட்டா, பண்டிட் ரவி ஷங்கர் உட்பட்ட ஓவியங்கள் உயிர்ப்புடன் நம்மோடு உணர்ச்சிகரமாய் பேசுகின்றன. விஜய திருவேங்கடம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.