பாரதில் மாகவி பாரதி உதித்த தினம்
சக்தி சக்திதாசன்
============================
தரணியில் நீ பிறந்தநாள்
தாய் எந்தன் தமிழ்
தங்கமாய் ஜொலித்த் நாள்
இல்லை உனக்கு செல்வம் ஒன்றும்
இருந்தும் சிங்கமென
இனிய தமிழில் கர்ஜித்தாயே !
எத்தனை துயர் கண்டாய்
எமதினிய பாரதியே !
அத்தனை கணங்களையும்
அன்னைத் தமிழ் பாடி
அரவணைத்துக் கொண்ட
அரிய எம் தமிழ் ஆழி நீ
வருடங்கள் தோறும் தவறாமல்
வந்தேகும் ஜயன் உனக்குப் பிறந்தநாள்
வாழும் தமிழ் அன்னை சொந்தங்கள்
வகுத்தொட்டோமா ? சாதனைகள்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
உதயம் முதல் அந்திவரை பாவம் நீ
துடித்திடும் பசியோடு வடித்தாயே
தூய தமிழ்க் கவிதைகளை
ஏடெடுத்தாய் அதில் நீ உன் கனவுகளை
ஏற்றமாய் வடித்து வைத்தாய்
தாய்நாட்டின் சுதந்திரத்தை அழகாய்
கனவுலகில் கண்டுணர்ந்தாய்
வேழமொன்று உனைத் தாக்கி – தமிழ்
வேந்தன் நீ மறைந்த பின்னால்
மலர்ந்த உன் தாய்நாட்டின் சுதந்திரத்தை
மறுலகில் பார்த்து நீயும் ரசித்தாயோ ?
வேற்றுமைகள் எம்மிடையே இல்லை என
சாற்றி நீயும் கவிதை செய்தாய்
போற்றவில்லை உன்னை அன்று புல்லர்
ஏற்றி இன்று பாடுகின்றார் புரியவில்லை
ஆணென்றும், பெண்ணென்றும் பிரித்து வைக்கும்
ஆதிக்க உணர்வு கொண்ட சமுதாய அமைப்பை
ஆட்டி வைக்கும் வகையில் நீயும்
அன்னைமொழியில் பாக்கள் தந்தாய்
எனது உள்ளத்து ஞான தீபமே
நீ பிறந்த நாளதனில் நானுனக்கு
பாவாலே துதி செய்து வணங்குகிறேன்
பாரதியே உன் புகழ் வாழ்க ! கொள்கை வெல்க !
வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படத்திற்கு நன்றி : http://perumandraanjal.blogspot.com/2011/09/blog-post_03.html