கனம் கோர்ட்டார் அவர்களே! – 6

0

இன்னம்பூரான்

மாதம் மும்மாரி பெய்கிறதா?

தனியார் மருத்துவமனைகளில் பணி புரியும் தாதியர்களின் நற்சான்றுகளை, இந்திய அரசியல் சாஸனத்தின் 14, 19, 21, 23 வது ஷரத்துக்களினால் பாதுகாக்கப்படும் மனித உரிமைகளை மீறிப், பலவந்தமாகப் பிடித்து வைத்துக் கொண்டு, அந்த முதலாளிகள் அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்துகின்றனர் என்ற புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசுத் தரப்பு வக்கீலிடம், தொழிற்நல பிரிவு அமைச்சரகம் மூலம் சுற்றறிக்கை விடுத்து, நிவாரணம் காண முடியுமா என்று கேட்டதாக இன்றைய ஊடகச்செய்திகள் கூறுகின்றன. சுருக்கமாக வந்துள்ள அந்தச் செய்தி எழுப்பும் வினாக்கள்:

  1. கேட்க வருத்தமாக இருக்கும் இந்தப் புகாரைப் பற்றி மனுதாரர்கள் பல அலுவலகங்களிடம் முறையிட்டும், ஒன்றும் நடக்கவில்லை என்கிறார்கள். இது பற்றி மத்திய அரசுக்குத் தெரிந்த பின்னணி என்ன?
  2. அரசியல் சாசனம் மீறப்பட்டதா? இல்லையா? என்பதற்குத் தெளிவான பதில் என்ன?
  3. அரசியல் சாஸனம் வந்து 60 வருடங்கள் ஆயின. தனியார் ஆஸ்பத்திரிகளின் இந்த நடவடிக்கை பல்லாண்டுகளாக ஊரறிந்த ரகசியம். இத்தனை வருடங்கள் மெத்தனமாக இருந்தது யார்?
  4. அது மட்டுமல்ல. கல்வித்துறை, கணினித்துறை, மற்றும் பல துறைகளில் இந்த நற்சான்று முடக்கு வாதம் அமலில் இருப்பது அரசின் தொழிற்நலத் துறைக்கோ அல்லது அந்தந்தத் துறைக்கோ தெரியாமல் தான், அவர்கள் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா’ என்று அசடு மாதிரி வினவும் இளவரசர் போல் நடந்து கொள்கிறார்களா?
  5. தொழிற்நலத்துறை ‘சுற்றறிக்கை’ விட்டால் அது சுற்றோ சுற்று என்று சுற்றி விட்டு, ‘யதாஸ்தானம் பிரதிஷ்டயாமி’ (பூமராங்க் மாதிரி வந்துட்டேன்) என்று செயலிழந்து விட்டால் என் செய்வது?
  6. அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவுவார்களோ? சட்டத்தை மீறுபவர்களைக் கடுமையாகத் தண்டித்தால் என்ன?

இந்தியச் சமுதாயத்தை மிகவும் பாதிக்கும் முதலாளித்துவ அடாவடி பற்றிய செய்தித்துளி இது. மறைவில் நின்று மட்டையடி அடிக்கும் விஷயங்கள் வெளி வரலாம். 

  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.