சாகர்

காலை இருளைக் கிழித்துக் கொண்டு அலுமினியப் பறவையாய்ச் சென்னையில் தரையிறங்கியது அந்த எமிரேட்ஸ் விமானம். ஜன்னல் வழியே தூங்கி விழிக்கும் சோடியம் வேபர் விளக்குகளைப் பார்த்தான் விக்ரம். மெட்ராஸ் காலையில் எவ்வளவு அழகா இருக்கு! அவனுக்கு இன்னும் மெட்ராஸ்தான், பேர் மாத்துவதுன்னா வெள்ளக்காரன் வரும் முன்னே இருந்த கிராமத்தில் நல்ல பேரே கிடைக்கலையா மயிலை இல்லை! சோழ காலத்தில் இருந்து நிக்கும் திருவொற்றியூர் இல்லை! மௌன்ட் ரோட்டில்ஆம்னி பஸ்களும் லாரிகளும் விளக்குகள் பளீரிட அணி வகுத்துப் போய்க் கொண்டிருந்தன.

பட்டாம்பூச்சி போல் பளிச்சென்று விமானப் பணிப்பெண்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் அரபிக் மொழிகளில் நன்றி கூறிக் கொண்டிருந்தார்கள். இவர்களால் எப்படி இவ்வளவு பிரெஷ்ஷாக இருக்க முடியுது? நம்மள மாதிரிப் பழக்க தோஷம்தான். விமானத்தின் உட்பக்கம் பார்த்தான் விக்ரம்,துபாயிலிருந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள்,அமெரிக்காவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் வரும் டாக்டர்கள், எஞ்சினியர்கள், என்று ‘திரை கடல் ஓடித் (இன்றைக்கு பறந்து) திரவியம் தேடித் திரும்பும் தன்னைப் போல் கர் ஆஜா பரதேசிக்’ கூட்டம்.

விக்ரம் ஒரு கார்டியோ தொராசிக் சர்ஜன்! இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்! கையளவு இதயம் அது படுத்தும் பாடு தான் என்ன! அந்த இதயத்தைக் கையில் தொட்டு அதைச் சீர் செய்யும் திருப்தியே அலாதி! அந்தச் சின்ன உறுப்பில் தான் என்ன பவர். நாற்பது வயதில் இன்று யுனிவர்சிட்டி ஹாஸ்பிடலில் கன்சல்டன்ட். ஆனால் அதை அடையப் பட்ட பாடு கடந்த பாதை எவ்வளவு கஷ்டமான ஒன்னு!

திவ்யா! இவள் கூட இருந்ததால், தோள் கொடுத்து நடந்ததால் தானே முடிந்தது. பக்கத்தில் தூங்கும் மனைவியைப் பரிவாகப் பார்த்தான். மாநிறம், இருபத்தைந்து வயது என்று சொல்லும் தோற்றம். கூடப் படித்த தோழி, இன்று சைல்டு ஸ்பெசலிஸ்ட், இரண்டு பசங்களுக்குத் தாய் (அவளைக் கேட்டால் மூன்று என்பாள் விக்ரமையும் சேர்த்து!).

அவன் பார்வையின் தன்மை உணர்ந்தோ என்னவோ அவள் கண் விழித்தாள்.

“என்னம்மா வந்திட்டோமா?” என்றவள் தலையை வருடியவாறு, “வந்தாச்சு கண்ணா” என்றான் விக்ரம்.

தூங்கும் பிள்ளைகளைப் பார்த்து, ” நைட்டெல்லாம் தூங்காமல் டிவி கேம்சினுட்டு இப்ப லேன்டிங் ஆகையில தூங்கறதைப் பார்!” என்றான்.

“பிள்ளைகளை ஒன்னும் சொல்லாதம்மா” என்ற திவ்யா, சின்னவன் சக்தியை தூக்கிக் கொண்டாள். அம்மன் வரம் வேண்டிப் பெண்ணாக பிறந்தால் வைக்க முடிவு செய்த பெயர், பையன் ஆனாலும் பரவாயில்லை என்று வைத்தாயிற்று. விக்ரம் வருணை எழுப்பினான். ” ஆர் வி தெர் அல்ரெடி ?” என்றவாறு எழுந்தான் பத்து வயது வருண்.

” ஆமாம் குட்டி உன் ரக் சாக்கை எடுத்துக்கோ” என்றாள் திவ்யா.

விமானத்தின் கதவைத் தாண்டிய உடன் ஏசியை மீறித் தாக்கியது மெட்ராஸ் புழுக்கம். பிள்ளைகள் இரண்டும் உடனே ஜாக்கெட்டைக் கழற்றி விட்டு வெறும் டீசர்டோடு நடந்தனர்.

14 டிகிரியிலிருந்து 41 டிகிரி வெயிலுக்கு வந்தால் கஷ்டம் தானே.

இமிகிரேஷன் முடிந்து, முண்டியடித்து வரிசையில் நின்று பெட்டிகளை எடுத்து வெளியே வர ஒரு மணி நேரம் ஆயிற்று. அந்தக் காலை நேரத்தில் ஏர்போர்ட்டில் கூட்டம் கூட்டமாக நின்ற உறவினர்கள் நடுவே இருந்த திவ்யாவின் பெற்றோரை வருண்தான் முதலில் பார்த்தான். “தாத்தா வி அர் ஹியர்” ஒரே உற்சாகம்தான்!

தாத்தா பாட்டியைப் பார்த்த சந்தோஷத்தில் பசங்களுக்குத் தூக்கம் எல்லாம் போய் விட்டது. 

விசாரிப்புகள் எல்லாம் முடிந்தவுடன் இன்னோவாவில் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு மெதுவாக மீனம்பாக்கத்தை விட்டு வெளியே வந்தனர். வானம் மெலிதாக வெளுக்கத் தொடங்கியது. இன்னோவா வேகமாக அடையாறு நோக்கிச் சென்றது. ஸ்டீரியோவில் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’. விக்ரம் பார்வை வெளியே தெரியும் மெட்ராசை நோட்டமிட்டது. புதிய மெட்ரோ வேலைகள் மிகத் துரிதமாக நடந்து கொண்டிருந்தன.

நம்ம ஊருக்கு இது தேவைதான் வெறும் பல்லவனும்,எலெக்ட்ரிக் ட்ரைன் மட்டும் இருந்த காலத்தை நினைத்தான். அப்போது இவ்வளவு கார்களும் இல்லை. எல்லாரிடமும் ஒரு பைக் இருந்தது. அந்த யமஹா நாட்களை நினைத்தால் இன்றும் இனிக்கிறது. கார் அடையாறில் ப்ளாட்ஸ்   முன்னால் வந்து நின்றது.

ஏசி வண்டியை விட்டு இறங்கியதும் புழுக்கம் நன்றாகத் தெரிந்தது.

”வீடு வந்தாச்சு.” என்றாள் திவ்யா. 

உள்ளே போனதும்,”ஏன் எல்லாம் இன்னும் இருட்டாகவே இருக்கு அப்பா” என்றாள். லிப்டை அழைத்ததும் பவர்கட் என்று புரிந்தது.  

ஜெனரேடர் வேலை செய்யாததால் நான்கு மாடி ஏற வேண்டியிருந்தது.

”என்ன அம்மா இப்படிப் பவர் கட் ஆயிடுச்சு? ஒரே வேர்வை! இதான் எனக்கு இந்தியா புடிக்கலை, கொசு,வெயில் இப்போ பவர்கட்” பொலம்பினான் வருண். அவனுக்கு இன்றும் எப்படி  இந்தியர்களால் கொசு,  ஈ  கண்டு பயமில்லாமல் இருக்க முடிகிறது என்று  ஆச்சரியம்! முதல் முறை இந்தியா வந்த போது கொசுக்கடியெல்லாம்  கிண்டு கிண்டாக வீங்கியதால் வந்த பயம் இன்னமும் போகலை.

“வந்திரும் கண்ணு.” என்றவாறு எமர்ஜென்சி லைட்டை ஆன் செய்தாள் திவ்யா.

”கண்ணா இந்த பவர்கட் மட்டும் இல்லேன்னா இன்னிக்கு நம்ப பாமிலி இல்லை! நீங்களும் இல்லை தெரியுமா!” என்றான் விக்ரம் திவ்யாவை நோக்கிப் புன்னகை செய்தவாறு.

”என்ன டாடா சொல்றிங்க?”  வருணுக்கு திடீர் என்று ஒரு துடிப்பு.

“அது ஒரு பெரிய கதை” என்றான் விக்ரம். ஜன்னலைத் திறந்து மெரினாவின் கடல் வாசத்தையும் தென்னை மரக் காற்றையும் வரவேற்றவாறு.

“பவர் கட்ல என்னதான் பண்றது கதை தான் சொல்லுங்க ” என்றான் சக்தி.

“1994ல நடந்தது இப்பவும் நேத்து நடந்தது போல இருக்கு சொல்றேன் கேளுங்க!”

14 பிப்ரவரி1994. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், சென்னை, தன் புராதானத்தை தன் செமினார் ஹாலின் வாசலில் 1835 என்று அறிவித்துக் கொண்டு கம்பீரமாக நின்றது, ஆசியாவின் முதல் ஆங்கில மருத்துவக் கல்லூரி. செமினார் ஹாலில் “காட்டுக்குயிலு மனசுக்குள்ள…” பாட்டுச் சத்தம் அதிர்ந்து முடிந்தது.

“அட்டகாசம் மக்களே இன்னும் ஒரே ஒரு முறை பண்ணலாம் என்ன சொல்றீங்க” என்றாள் பிருந்தா தன் நண்பர்களைப் பார்த்து.

அவர்கள் எல்லாம் கல்லூரி முடித்துப் பட்டம் பெற்றதைக் கொண்டாடும் விழாவிற்குப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். ஐந்து வருடம் போன இடம் தெரியவில்லை இப்போது எல்லோரும் house surgeons இன்னும் இரண்டு வாரத்தில் graduates reception day.

“ஒன் கிட்டே பாராட்டு வாங்கறத விட வசிஷ்டர் கிட்ட ப்ரமரிஷி பட்டம் வாங்கிடலாம்” கையில் drum stick தட்டியவாறு சொன்னான் ஷிஷிர்.

“ஓகே. இன்னும் ஒரே ஒரு கடைசி முறை,” என்றான் வசந்த் கிட்டாரை டியுன் செய்த வண்ணம்.

டேப் ரெகொர்டரை ஆன் செய்த பிருந்தா சிக்னல் செய்யவே, அபி மெல்ல ஹம் செய்யத் தொடங்கினாள். விக்ரம் கீபோர்ட் வாசித்தவாறு பாட ஆரம்பித்தான். ஷிஷிரும் வசந்தும் கூடச் சேர்ந்து வாசிக்க ‘யாரும் விளையாட்டும் தோட்டம்’ பாட்டு சுதி சேர்ந்தது.

“ஒ மை கட் திரும்ப பவர் கட்டா?” எப்பொழுதும் போல கோபத்தில் வெடித்தாள் பிருந்தா.

“ஓகே ரிலாக்ஸ் பிருந்தா”, என்றான் வசந்த் கழுத்திலிருந்து கிட்டார் பட்டையைக் கழற்றியவாறு.

அபி, “டைம் பார் எ ப்ரேக்” அபி எல்லோருக்கும் பெப்சி கொடுத்தாள்.

“மச்சி விக்ரம் இன்னும் எத்தனை நாள் திவ்யா கிட்ட சொல்லாம இருப்ப? இப்பவும் சொல்லேன்னா நீ எப்பவும் சொல்ல முடியாது; திவ்யா இன்னும் ரெண்டு வாரத்தில் கிளம்பறா தெரியுமில்ல. ” என்றான் வசந்த்.

திவ்யா அவர்களின் தோழி, இன்று ஆன் கால் டூட்டியில் இருந்தாள்.

“தெரியலடா..என்ன பண்ணப் போறேன்னு தெரியலே.” என்றான் விக்ரம் கீ போர்ட் மேலே தாளம் வாசித்தவாறு.

விக்ரம் கல்லூரியில் முதல் நாள் திவ்யாவை மஞ்சள் சுரிதாரில் கையில் புதிய வெள்ளைக் கோட்டுடன் பார்த்த வினாடியே மனதைப் பறி கொடுத்தான். ராகிங் போது சீனியர்கள் அவளோடு நிறுத்தி இம்சித்தது கூட சந்தோஷத்தைக் கொடுத்தது. திருச்சியிலிருந்து யாருமே தெரியாமல் மெட்ராஸ் புதிதாக வந்த விக்ரம் வெகு விரைவிலே ஒரு நண்பர் பட்டாளமே சேர்த்து விட்டான். அவனது குறும்புப் பேச்சும் வசீகரமும் எல்லாரையும் கவர்ந்தது. திவ்யாவும் அதில் ஒருத்தி.

ஐந்து வருட காலத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டனர். காலேஜின் பிரகாஷ் கடையில் பெப்சியாகட்டும், அல்ஸா மாலாகட்டும் ஒன்றாகவே செல்வார்கள். ஒரு ஹிந்தி படம் விடுவது கிடையாது. நைனிடால், கூர்க் சுற்றுலா போன போது இணை பிரியாது சுற்றினார்கள். எல்லோரும் இருவரும் செட்டில் ஆகி விடுவார்கள் என்று எதிர்பார்த்தும், இன்றும் நண்பர்கள்தான்.

எங்கே காதல் என்று சொன்னால், “பிரெண்டா நீனு” அப்படினீட்டுப் போய்ட்டான்னா என்ன பண்றதுன்னு விக்ரம் காதலைச் சொல்லாமலே இருந்து விட்டான். வசந்திடமும் ப்ரிந்தாவிடமும் பொலம்புவான். தன் காதல், கனவுகள், வாழ்க்கை பாதையில் அவள் எவ்வளவு முக்கியம் என்று திவ்யாவைத் தவிர நண்பர்கள் எல்லோரிடமும் சொன்னான்.

இவ்வளவுக்கும் திவ்யாவுக்கு விக்ரமை ரொம்பப் பிடிக்கும். திவ்யாவின் அம்மா அப்பா மலேசியா சென்ற பின் அவள் பிரெண்ட்ஸ் தான் அவள் தனிமையைப் போக்கினார்கள். விக்ரம் அவளை மிகவும் கவனித்துப் பார்த்துக் கொண்டான். நைட் ஷிப்ட் முடிந்து கோஷா ஆஸ்பிடலில் இருந்து குவார்ட்டர்ஸ் கொண்டு விடுவதிலிருந்து, புதிய ஷாருக் கான் படம் கூட்டிச் செல்வது வரை எல்லாம் விக்ரம் தான். அவள் டூட்டியில் இருந்தால் அவனும் இரவில் அவன் வேலை எல்லாம் முடித்து விட்டு அவள் வார்டில் வந்து வேலை செய்வான். விக்ரம் வீட்டில் அவளைக் குடும்பத்தில் ஒருத்தியாகவே நினைத்துப் பழகினார்கள்.

“காலம் பூரா என் கூட இரு திவ்யா”ன்னு என்றாவது விக்ரம் சொல்ல மாட்டானா என்று திவ்யா ஏங்கினாள். இருந்தும் அவனிடம் மனதில் உள்ளதை சொல்லப் பயம். விக்ரம் பின்னால் ஒரு பெண்கள் கூட்டமே அலைந்தது. அவனிடம் ப்ரபோஸ் பண்ணியவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி விலகிக் கொண்டவன். திவ்யாவுக்குத் தானும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து விடுவோமோ என்ற பயம்.

பிருந்தாவிற்கு திவ்யாவின் மனதில் இருப்பது ஓரளவு தெரியும் என்றாலும் திவ்யா அவளிடம் அது பற்றி நேரடியாகப் பேசியது கிடையாது. பிருந்தா விக்ரமிடம் கோடிட்டுக் காட்டினாள், மூன்று பெரும் வள்ளியூர் PHC செல்லும் பொது அவர்கள் இருவரையும் தீர்க்கமாகக் கவனிக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது திவ்யா மலேரியா காய்ச்சல் வந்து தேறி வந்த நேரம். விக்ரம் அவளைக் குழந்தை போலப் பார்த்துக் கொண்டான். எப்படி ஒருவர் மீது ஒருவர் இவ்வளவு ஈடுபாடு, அக்கறை, அன்பு. இவர்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்றாகச் சேரவில்லை என்றால் அந்த விதி கூட மன்னிக்காது. ஆனால் வாய் திறந்து மனதில் உள்ளதைச் சொல்ல வேண்டுமே இந்த விக்ரம்!

“விக்ரம் நீ நிஜமாக திவ்யாவை லவ் பண்றியா?” பிருந்தா தன் நீலச் சுடிதாரின் துப்பட்டாவை முறுக்கியபடி மெல்ல வசந்த் ஆரம்பித்த கேள்வியைத் தொடர்ந்தாள்.

“என்ன கேள்வி இது பிருந்தா?” விக்ரம் வசந்த் கையிலிருந்த சிகரெட்டை வாங்கிப் புகை பிடிப்பது போல் செய்கை செய்தான், திவ்யாவுக்குப் புகை பிடிப்பது பிடிக்காது. விட்டு விட்டான்.

“அவளுக்காக உயிரையும் விடுவேன். அவளில்லாமல் ஒரு வாழ்க்கையை நினச்சுக் கூடப் பார்க்க முடியாது.ஆனா அவ கிட்ட சொல்லப் பயம். எங்க இத்தனை நாள் இந்த எண்ணத்தோடதான் பழகினியான்னு விட்டுப் போய்ட்டா என்ன பண்றதுன்னு பயம். காதலைச் சொல்லப் போய் நட்பு கெட்டுப் போச்சுன்னா நான் என்ன பண்றது. அவ நட்பு எனக்கு முக்கியம். காலம் பூரா வெறும் நண்பனா இருந்தாக் கூட போதும், அதக் கெடுக்கப் பிடிக்கல.” விக்ரம் பார்வையில் சோகம்.

“மச்சி காதல் ஒரு கால வரையற்ற நட்பாதான் இருக்கணும், நல்ல நண்பர்களுக்கிடையே காதல் வருவது ஒன்னும் தப்பில்லை.” என்று ஆறுதல் சொன்னான் வசந்த், மனநல மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வசந்த் பேசுவது என்றுமே சரியாதான் இருக்கும்..

“என்னக் கேட்டா பிரெண்ட்ஸ் இடையே லவ் வருவது ரொம்ப நல்லது, ஏன்னா பிரெண்ட்ஸ் கிட்ட நம்ம நல்ல குணமும் கெட்ட குணமும் பார்க்க மாட்டோம், ஆனா ஒரு பெண்ணை இம்ப்ரெஸ் பண்ணணும்னு நினைச்சா பசங்க எப்படி நல்ல குணம் மட்டும் ஷோ பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியும், கரெக்டா நான் சொல்றது?” என்றாள் பிருந்தா .

“பாரு விக்ரம் நீ இப்ப சொல்லாமல் இருந்தால் எப்பவும், சொல்லியிருக்கலாமோ! சொல்லியிருந்தால் சரி சொல்லியிருப்பாளோ என்று குழம்புவாய். பத்து வருஷம் கழித்து நீ சொல்லுவேன்னு அவ காத்திருந்தாள்னு தெரிஞ்சா, எவ்ளோ கஷ்டப்படுவே! பட் இட் வில் பி டூ லேட்” என்றாள் அபி. விக்ரம் மௌனமாக இருந்தான்.

தொலைபேசி மணிச் சப்தம் அங்கு நிலவிய அமைதியை உடைத்தது, பிருந்தா அதை எடுத்தாள்.

“ஹலோ…, பிருந்தாதான்…அப்படியா சரி….நான் உன்னை ரூம்ல பாக்கிறேன்… ஓ.கே.மா திவ்யா…. இல்லையில்லை ரெகார்ட் பண்ண மறக்கல. காஸெட் கொண்டு வரேன் பை” டேப்ரெகார்டரில் இருந்து காஸெட்டை எடுத்து ஹான்ட்பாகில் வைத்தாள்.“காஸெட்டை கொண்டு போகவில்லைன்னா திவ்யா என்னத் தொலைச்சிடுவா. இன்னக்கி அவ்வளவுதான் போல. நான் கிளம்பறேன்”.

நடந்த பிருந்தா ஒரு நிமிடம் நின்று திரும்பி, “ விக்ரம் நல்லா யோசித்து ஒரு முடிவு எடு. அவ பிறந்த நாள் பரிசா அவளுக்கு ரொம்பப் பிடிக்கும் பரிசு கொடு.. உன் காதல்…. அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுக்கும் பரிசாக இருக்கும். நாங்களும் சந்தோஷப் படுவோம்… இன்னிக்கி வாலண்டைன்ஸ் டே!.”

“ரொம்பச் சரி பிருந்தா” என்றான் வசந்த்.

“பார்க்கலாம்… யோசிக்கிறேன்” என்றவாறு தன் யமஹாவை உதைத்தான் விக்ரம்.

பிருந்தா ரூமுக்கு வந்து குளித்து விட்டுப் படுத்துத் தூங்கினாள், நேற்றிரவு பதினாறு டெலிவரி பார்த்தது இப்போது களைப்பாக இருந்தது. இன்றிரவு எப்படியோ! தூங்கும் முன் ரெகார்ட் செய்த காஸெட்டை மேஜை மேல் டேப்ரெகார்டர் பக்கத்தில் வைத்து விட்டுப் படுத்தாள். ஊருக்குப் போகும் போது தான் கல்லூரி நினைவாக எல்லாம் வேண்டும் என்று திவ்யா ரெகார்ட் செய்யச் சொல்லியது. மேலும் அவள் மிக நல்ல கிரிடிக். சின்னச் சின்ன தவறுகளையும் கண்டுபிடித்துத் திருத்துவாள். ஆன் கால் என்பதால் இன்று அவளால் ப்ராக்டிஸ்க்கு வர முடியாது போகவே ரெகார்டிங் இன்னம் முக்கியமாயிற்று. திவ்யா வந்தவுடன் அதைத்தான் கேட்பாள், எனவே அதை மேஜை மேல் வைத்தால் தூக்கத்தை கெடுக்க மாட்டாள். இன்னும் முக்கால் மணி நேரத்தில் எழுந்து கிளம்பி லேபர் வார்டு போக வேண்டும்.அதற்குள் ஒரு காக்கா தூக்கம் போடலாம்.

“வேக்கி வேக்கி”… எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று யோசித்தவாறு பிருந்தா கண் விழித்தாள். எதிரே கையில் கமகமக்கும் காபியுடனும் புன்னகையுடனும் நின்றாள் திவ்யா. சிவப்பு கார்டன் வரேலி புடவையில் காலையிலிருந்து வேலை செய்த சுவடு தெரியாத தேவதையாகத் தோன்றினாள்.

“தேங்க்ஸ் பா உன் பேஷன்ட் எப்படியிருக்கு?” காபியைச் சுவைத்து சோம்பல் முறித்தாள் பிருந்தா. இருவரும் ஆறாவதிலிருந்து ஈவர்ட்ஸ் பள்ளியில்  ஒன்றாகப் படித்த தோழிகள். இப்போது திவ்யா குடும்பத்துடன் இருக்க மலேசியா போகிறாள். பிருந்தா மூன்று மாதத்தில் பிரபாகர் எனும் பே ஏரியா எஞ்சினியரைக் கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்கா போகிறாள். இனி எப்போது மீண்டும் சந்திப்பு என்பது காலத்திற்குத் தான் தெரியும்.

“பரவாயில்ல… ஐசியுவில் வென்டிலேடோர்ல, பொழச்சிருவான்னு நினைக்கிறேன். பதினெட்டு வயசிலே என்ன காதல், தோல்வி, பூச்சி மருந்து கேக்குது இவங்களுக்கு?”

பிருந்தா ஒரு துண்டையும் உடைகளையும் எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் சென்றாள்.

“அவளை விடு…காஸெட் அங்க இருக்கு… திவ்யா விக்ரம் பத்தி எதாவது யோசித்தியா?”

“இல்ல பிருந்தா உனக்குத் தான் என் பயம் தெரியுமே!” என்றாள் திவ்யா புன்னகை மாறாமல்.

“என்னமோ பண்ணுங்க“ என்று பொலம்பியவாறு கதவை மூடினாள் பிருந்தா.

டேப்பை ஆன் செய்து விட்டுப் படுக்கையில் கால் நீட்டிப் படுத்தவாறு பாடல்களைக் கேட்டாள் திவ்யா. ஒவ்வொரு பாடலையும் ரசித்தவாறு திருத்தங்களை ஒரு தாளில் எழுதிக் கொண்டாள். கடைசியாக ‘யாரும் விளையாடும் தோட்டம்’ ஆரம்பித்த போது போன் அடித்தது.

“ஹலோ“

“திவ்யா நாந்தான் விக்ரம்”

“ஏய் எப்படியிருக்கே? இப்பதான் பாட்டெல்லாம் கேட்டுக்கிட்டிருந்தேன்..”

“நான் உன்ன பாக்கணும்… அதுவும் உடனே…. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“ம்.. என்னவாக இருக்கும் இவ்வளவு சீரியசாக பேசறான்?” என்று யோசித்தவாறு,

“சரி பத்து நிமிஷத்திலே கீழ  வரேன்” என்றாள். போனை கீழே வைத்த போதுதான் பாடல் பாதியில் நின்றது.. பிருந்தாவும் அபியும் பேசுவதைக் கேட்டவாறு டேப் ரெகார்டரை நிறுத்த எழுந்தவள்,

“மச்சி விக்ரம்! இன்னும் எத்தனை நாள் திவ்யா கிட்ட சொல்லாம இருப்ப?” என்றதும் அப்படியே சிலையாக நின்றாள்.

மேற்கொண்ட உரையாடல் முழுவதும் கேட்டு முடிந்தபோது அவள் கண்களில் நீர்த்திரை. மேஜையில் இருந்த வலஞ்சுழி விநாயகரைப் பார்த்து, “பிள்ளையாரப்பா நீ கண் திறந்திட்டே” என்றாள். கண்ணாடியில் முகம் பார்த்தவள் பொட்டு காணோம் என்று உடனே ஸ்ரிங்கார் எடுத்து பொட்டிட்டுக் கொண்டாள். விக்ரமுக்குப் பொட்டு வைக்கவில்லை என்றால் மிகவும் கோவம் வரும். அந்தச் சின்னக் கோலம் போன்ற பொட்டு அவள் முகத்திற்கு மேலும் அழகூட்டியது.

கதவைத் திறந்து வெளியே வந்த பிருந்தாவைக் கட்டி முத்தமிட்டு, “தாங்க்யூ… நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் குடுத்திட்டேடி” என்றவாறு கீழே ஓடினாள். ஒன்னும் புரியாத பிருந்தா மேஜையிலிருந்த டேப் ரேகார்டரை ரீவைண்ட் செய்து ஆன் செய்தாள். பவர்கட் ஆன போது தான் ரேகார்டரை நிறுத்தவில்லை என்று புரிந்தது. பாட்டரியில் வேலை செய்யும் டேப் ரெக்கார்டர் எல்லாவற்றையும் பதிவு செய்து விட்டது என்பதும் புரிந்தது. மனதுக்குள் சிரித்தவாறு, ’இப்படியாவது ஒன்னு சேர்ந்தா சரி’ என்று நினைத்தாள்.

விக்ரம் யமஹாவில் சாய்ந்தவாறு நகங்களை கடித்துக் கொண்டிருந்தான். வெள்ளைக் காட்டன் சட்டையும் டெனிம் ஜீன்ஸும் அணிந்து , கருகரு தலைமுடி கலைந்து, இரண்டு நாள் மீசையில் மாடல் போல இருந்தான். இதில்தான் அவள் மனசைப் பறி கொடுத்தாளா அல்லது அவன் கனிவான நடத்தை மற்றும் பாசத்திலா தெரியவில்லை. பைக் பெட்ரோல் டாங்கில் சிவப்பு ரோஜாப் பூச்செண்டு. அவளை பார்த்ததும், “வா திவ்யா நான் சொல்லப் போறத கேட்டு நீ கோச்சுக்கிட்டாலும் பரவாயில்ல.. நான் சொல்லியே ஆகனும். திவ்யா ஐ …..”

“லவ் யு விக்ரம்” என்று முடித்தாள் திவ்யா.

அவன் முகத்தில் தோன்றிய புன்னகையும், இருவரின் கரங்கள் இணைந்ததையும் ஜன்னல் வழியே கண்ட பிருந்தா மகிழ்ச்சியாகக் கீழே இறங்கினாள்.

“இப்ப சொல்லுங்க பசங்களா.. அந்த பவர்கட் நல்லது தானே செய்தது..” என்று முடித்தான் விக்ரம்.

“ஏம்மா அப்ப அந்தப் பவர்கட் இல்லன்னா நீ பாட்டுக்கு டாடாவை விட்டுட்டுப் போயிருப்பியா..” வருண், விக்ரம் முன்னே சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு கேட்டான்.

“இல்லடா குட்டி.. இப்படியில்லாட்டி வேற எதாவது நடந்து எங்களைச் சேர்த்திருக்கும். வி அர் மேட் பார் ஈச் அதர். அது தான் பவர் ஆப் லவ். அத எந்தப் பவர் கட்டாலையும் பிரிக்க முடியாது.” என்றாள் மகனை அணைத்தவாறு. விக்ரம் அவள் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான் அன்று பிடித்தது போல.

அவள் சொல்லை ஆமோதிக்கின்ற வகையில் பவர்கட் முடிந்து வெளிச்சம் வந்தது.

 

படத்திற்கு நன்றி: http://www.yourlovetips.com/how-to-tell-a-guy-you-love-him 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “பவர் கட்

  1. Dear Sagar… really sweet ‘n romantic and filled with hope for a better world…. sincerely pray for everyone to find their soul (sole) mates as well 🙂

  2. Dear Dr.Sagar,I am Sethuraman, a member of PSVP.Read your short story – in Vallamai.  Interesting and good idea of how power-cut plays a roll(?)!!Congrats!!With regards,intimateSethu

  3. Dear Sagar, I have rarely read any novels these days. This story sounds magical, very refreshing and written elegantly, which makes me wonder that either you were so inspired by a true story, or a professional novel writer, or combination of all. Good Work, Keep it up. Ravi

  4. காதல்.. அதுதான் எவ்வளவு இனிமையானது!. எவ்வளவு கதைகள் வந்தாலும், அதன் தனித்தன்மை ரசிக்க வைக்கிறது. ஒரு சிறுகதைக்கு உண்டான அனைத்து அம்சங்களும் பொருந்திய அழகான கதை ! வாழ்த்துக்கள். எழுத்துப் பிழைகளை தவிர்க்க வேண்டும் டாக்டர்…..

  5. Dear Bala and Usha,
    Thank you for your kind words and support-Sagar

    சகோதரர் இளங்கோ அவர்களே, தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி! பிழைகள் போகப்போக கண்டிப்பாக குறையும்… இருபத்திநாலு வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் எழுதுகிறேன், அதுவும் ஆங்கிலத்தில் தட்டச்சில் அடித்து கூகிள் ட்ரான்ஸ்லிடேரஷன் வழியாக…பிழைகளை பொறுக்க வேண்டும்!! சாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *