’தலக்கோணம்’ இசை வெளியீடு – திரைச்செய்தி
எஸ். ஜே. எஸ். இண்டர்நேஷனல் சார்பில் திருமலை சிவம் தயாரிக்கும் படம் ‘தலக்கோணம்’. இந்தப் படத்தை சமுத்திரக்கனியிடம் பணியாற்றிய கே. பத்மராஜ் கதை எழுதி, இயக்கியுள்ளார்.
புதுமுகம் ஜிதேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரியா நடித்துள்ளார். இவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், பெரோஸ்கான், கஞ்சா கருப்பு, பாண்டு, சண்முகசுந்தரம், நம்பிராஜ், பாலா, அபிநயா ஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர்.
திகில் – சஸ்பென்ஸ் கலந்த இந்தப் படத்திற்கு சுபாஷ்-ஜவகர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 11 டிசம்பர் 2011 அன்று சென்னையில் உள்ள அபிராமி மெகா மகாலில் நடைபெற்றது. விழாவிற்கு அபிராமி ராமநாதன் தலைமை தாங்கி, முதல் பாடல் குறுந்தகடை வெளியிட்டார். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார்.
விழாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் பி. எல். தேனப்பன், இயக்குநர் பேரரசு, பரதன், நடிகர் கஞ்சா கருப்பு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு வந்த அனைவரையும் துளசிச் செடி கொடுத்து வரவேற்றார் தயாரிப்பாளர் திருமலை சிவம். முடிவில் இயக்குநர் பத்மராஜ் நன்றி கூறினார்.