இலங்கை காவல் துறையின் தீபாவளி விழா

1

அண்ணாகண்ணன்

srilanka policeஇலங்கை காவல் துறை, முதன் முதலாகத் தீபாவளி விழாவை 2010 நவம்பர் 6 அன்று நடத்தியது. இது, கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அரசின் கால்நடை கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பொலிஸ் மா அதிபர் கலாநிதி மகிந்த பாலசூரியா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி, இலங்கை பொலிஸ் பெளத்த மற்றும் ஏனைய மத அலுவல்கள் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான மொரீசியஸ் கெளரவத் தூதர் தெ.ஈஸ்வரன் அழைப்பின் பேரில் நான், பார்வையாளனாகப் பங்கேற்றேன். ‘தீபாவளி, நவம்பர் 5ஆம் தேதி என இருக்க, விழாவினை 6ஆம் தேதி நடத்துவது ஏன்?’ எனக் கேட்டேன். ‘சனிக்கிழமை விடுமுறை என்பதால் அனைவரும் கலந்துகொள்ள வசதியாக இன்று நடத்தியிருக்கலாம்’ என ஈஸ்வரன் கூறினார்.

காவல் துறை மைதானம் முழுக்க மின்விளக்குச் சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடை அலங்காரம், மிக நேர்த்தியாக இருந்தது. நடு நாயகமாக நடராஜரும் விநாயகரும் கிருஷ்ணரும் அவருக்கு இரு புறங்களிலும் வீற்றிருந்தார்கள். மேடைக்கு முன்னதாக இருந்த சிறு மேடை முழுக்கக் குத்து விளக்குகள் நிறைந்திருந்தது. அதில் பெரிதான ஒன்றுக்குச் சிறப்பு விருந்தினர்கள் ஒளி ஏற்றினார்கள். மேடைக்குப் பக்கத்தில் இருந்த தனி மேடையில் அகல் விளக்குகள் வரிசை வரிசையாக ஒளிர்ந்தன. காற்றில் அணைய அணைய, அவற்றைத் தொண்டர்கள் மீண்டும் மீண்டும் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

Deepawaliவிழாவின் தொடக்கத்தில் விநாயகருக்குப் பூஜைகள் நடந்தன. வாண வேடிக்கைகள் வானை நிறைத்தன. விழாவை நடத்திய அமைப்பின் தலைவர் மகிந்த பாலசூரியா, வரவேற்புரை ஆற்றினார்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆலோசனையின் பேரில் இந்த விழா நடைபெறுவதாகவும் இனி விசாக் பண்டிகையைப் போல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகியவையும் அரசின் சார்பில் கொண்டாடப்படும் என்றும் கூறினார். அடுத்த ஆண்டிலிருந்து மாவட்டங்கள்தோறும் ஊராட்சி அளவில் இந்தப் பண்டிகைகள் கொண்டாடப்படும் என்றும் கூறினார்.அவரது சிங்கள உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கப்பெற்றது.

சிவகுருநாதன் குழுவினரின் நாகஸ்வர இசை, கணீரென்று ஒலித்தது. தமிழ்ப் பாடல்களுடன் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் மேல்நாட்டு இசை ஒன்றையும் நாகஸ்வரத்தில் வாசித்தனர்.

நிர்மலா ஜான் நடத்தும் நிர்மலாஞ்சலி நடனப் பள்ளியின் மாணவிகள் அருமையாக நடனம் ஆடினர். ராதை குமாரதாஸ் நடத்தும் வீணா வித்யாலயாவின் மாணவியர், மேடையில் எட்டு வீணைகளைக் கொண்டு அருமையான இசையை வழங்கினர். மேலும் பல குழுக்களின் நடன நிகழ்ச்சிகள், கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. ‘முகுந்தா முகுந்தா’ என்ற பாடலுக்கான நடனமும் நன்று.

கழுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிலும் தமிழ்ப் பெண் காவலர்கள் ஆறு பேர், ‘சலங்கை ஒலி’ படத்தில் வரும் ‘ஓம் நமசிவாயா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் சற்றே அடக்கமாக ஆடினர். இந்தப் பாடலுக்கு இன்னும் துடிப்புடன் ஆடியிருக்கலாம். இறுதியில் இடம்பெற்ற நடனம் ஒன்று, நல்ல துடிப்புடன் அமைந்திருந்தது.

நடன மணிகளின் ஒப்பனை, பாவங்கள், ஒருங்கிணைவு, இசைக்கு இயைந்த அசைவுகள் யாவும் சிறப்பாக இருந்தன.
நடனங்களை வடிவமைத்த ஆசிரியர்கள், கலைத் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் அமைத்திருந்தனர். இறுதியில் பஜனை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் விழாவுக்கு வருபவர்களைச் சந்தனக் கிண்ணத்துடன் வரவேற்பார்கள். இந்த நிகழ்ச்சியிலோ வரவேற்பாளர்கள், தங்கள் கைகளால் சந்தனத்தைத் தொட்டு, வருகையாளரின் நெற்றியில் இட்டு வரவேற்றது, சிறப்பு. மேலும் வந்திருந்த அனைவருக்கும் பலகாரப் பெட்டியும் மைலோ என்ற பானமும் வழங்கி உபசரித்தனர். காவல் துறையினரில் உள்ள சிங்களப் பெண்கள், அவர்களின் பாரம்பரிய சேலையிலும் ஆண்கள் பட்டுச் சட்டை – வேட்டியிலும் ஆங்காங்கே தென்பட்டனர். விழாவின் தொகுப்புரைகளைத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழும் மூன்று மொழிகளிலும் அச்சடிக்கப்பெற்றிருந்தது,

பவுத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில், இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையை அவர்களின் முறைப்படியே அரசு விழாவாக எடுத்தது, நல்ல முயற்சி. இது, சமுதாய நல்லிணக்கத்தை நோக்கிய, நம்பிக்கையூட்டும் நகர்வு.

===============================================

படங்களுக்கு நன்றி – http://www.police.lk | http://www.news.lk

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இலங்கை காவல் துறையின் தீபாவளி விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *