விசாலம்

Vishalamதானத்தில் சிறந்தது அன்ன தானம். பசியின் கொடுமை அதை அனுபவிப்பவருக்குத்தான் தெரியும். மங்களூர் பக்கம் போன பின் நாம் ஹோட்டலுக்கே போகும் அவசியம் இருக்காது. ஏன் என்றால் அங்கிருக்கும் எல்லாக் கோயில்களிலும் வயிறு நிறைய சாப்பாடு போட்ட பின் தான் நம்மை அனுப்புகிறார்கள். நான் பார்த்த சிருங்கேரி,   தர்மஸ்தலா, உடுப்பி, கொரநாடு, அன்னபூர்ணி என்ற இடங்களில் அன்னதானம் கணக்கில்லாமல் நடக்கிறது.

“அற்றார் அழிபசி தீர்த்தல்” என்றும் “வறியார்க்கொன்று ஈவதே ஈகை”  என்றும் பொருள் கொடுப்பதைப் பற்றிச் சொன்ன திருவள்ளுவர், “செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு” என்று அன்ன தானத்தின் சிறப்பைப் பற்றியும் சொல்கிறார். இதை மங்களூர்வாசிகள் அப்படியே கடைப்பிடிக்கின்றனர்.

தீபாவளியின் போது காசியில் மிகப் பெரிய அளவில் அன்னதானம் நடக்கிறது. இதை நடத்துபவர்கள் மஹாலட்சுமி யாத்ரா ஸர்விஸ் நிறுவனத்தை நடத்துபவர்கள் என்று ஞாபகம். அவர்களுக்கு இந்த எண்ணம் ஏன் வந்தது?

பலர் காசிக்குப் போகும் ஆசையில் விஷயம் தெரியாமல் பண்டாக்கள் அல்லது வியாபார நோக்கோடு இருக்கும் புரோகிதர்கள் சிலரின் பேச்சைக் கேட்டு, அன்னதானம், அவர்கள் கேட்கும் தட்சிணை என்று தங்கள் சக்திக்கும் மீறிச் செலவு செய்ய வேண்டி வந்தது. சில சமயம் பிராமணர்கள் வேறு சில இடங்களின் பூஜைக்கும் ஒப்புக்கொள்வதால் சரியான நேரத்துக்கு வராமல் யாத்ரிகர்ளுக்குப் பதற்றத்தையும் கொடுத்தனர். தவிர எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி இல்லாமல் மேலும் மேலும் தொகையை ஏற்றினர். இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு சிலர், காசியில் தீபாவளி தினத்தன்று பெரிதாக அன்னத்தினால் லிங்கம் செய்து, பின் அதற்குப் பூஜை செய்து, மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்ய ஆரம்பித்தனர். இதற்குத் தகுந்த இடமாக “மீரா காட்” என்ற கங்கைக் கரை தேர்ந்தெடுக்கப்பட்டது.

தீபாவளி அன்று “கங்காஸ்னானம் ஆச்சா” என்று குசலம் முடிந்த பின், சுமார் ஒன்பது மணிக்கு மேல், இந்த அன்ன லிங்க பூஜை ஆரம்பமாகிறது. முதலில் மீராகாட்  படிகளை ஓரளவு சுத்தம் செய்த பின், கரையை நன்றாக மெழுகி, கோலம் போடுகிறார்கள். பின் பெரிய வாழை இலைகளைப் பரப்புகிறார்கள். சுமார் 3 அடி சதுரத்தில் நல்ல உயரம் வரும்வரை {இரண்டு அடிகள் இருக்கலாம்} அன்னம் {வடித்த சாதம்} லிங்க வடிவில் செய்து அதற்குச் சந்தனம் இடுகிறார்கள். பின் குங்குமம் வைத்து, வில்வ மாலையும்  அணிவிக்கப்படுகிறது. அதன் மேல் ருத்ராட்ச மாலையும் மலர் மாலையும் சார்த்தப்படுகின்றன.

anna lingam
அன்னபூரணி லட்டு போல் இதன் ஒரங்களும் லட்டுவால் அலங்கரிக்கப்படுகிறது. வடைகளும் நடுநடுவே வரிசையாக வைக்கின்றனர். லிங்கம் என்று இருந்தால் நந்தி வேண்டாமா! அவரும் அன்னத்தினால் செய்யப்பட்டு ஜம்மென்று அமர்ந்துவிடுகிறார். அவர் கண்கள் பெரிதாகத் தெரிய, புளியங்கொட்டையைப் பதிக்கின்றனர். அத்துடன் பெரிய காதுகளுக்குப் பச்சை மிளகாய்களைச் செருகுகின்றனர். வாலும் இருக்கிறது. ரொம்ப அழகான வெள்ளை நந்தியைப் பார்க்க, அப்படியே மார்பிளில் செய்த்தைப் போன்ற பிரமை ஏற்படுகிறது.

இதை எல்லாம் தயாரித்த பின், மந்திரங்கள் நன்கு தெரிந்த ஒருவர், கணபதி பூஜையுடன் ஆரம்பித்து, பின் ருத்ரம், அஷ்டோத்திரம் சொல்லி, எல்லா மரியாதைகளும் செய்த பின், லட்டு, சாம்பார், ரசம், பாயசம், வடை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து, பின் எல்லா யாத்ரிகர்ளும் ஆரத்தியில் பங்கு பெற்று, கண்களில் ஒற்றிக்கொள்கின்றனர். பின் பிரதட்சணம் செய்து நமஸ்கரிக்கின்றனர். பின் கங்காதேவிக்கும் உணவு படைக்கின்றனர்.

சாதி, மதம் பார்க்காமல் பிச்சைக்காரர்கள் பலருக்கு வாழையிலை போட்டு, உணவளிக்கின்றனர். உண்டவர்களுக்குச் சக்திக்குத் தகுந்தபடி 21 அல்லது 31 என்று தட்சிணையும் அளிகின்றனர். வயிறார உண்டவர்களின் முகத்தில் இருக்கும் திருப்தியையும் அவர்கள் மனதார வாழ்த்துவதையும் அளவிட முடியாது. கோயிலுக்குச் சென்று காசி விச்வநாதரைத் தரிசித்த மகிழ்ச்சியைவிட, இது தரும் ஆத்ம திருப்திக்கு ஈடே இல்லை எனலாம்.

==========================

படத்திற்கு நன்றி – Ramamurthy

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அன்ன லிங்கம்

  1. நிறைவான செய்தி. இது புதிய வழக்கமாகத் தெரிகிறது

    தேவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *