இந்த நிமிடம் நிலையானதல்ல !

0

தி.ந.இளங்கோவன் 

மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து, எழுத்துத் தேர்வில் வெற்றிகரமாகத் தேர்வாகி, நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருக்கும் சேகருக்கு ஒரே படபடப்பு !

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது மதிப்பெண்களை குறிப்பிடும் இடத்தில், ஒரு செமஸ்டரில் 78% க்கு பதிலாக 87% என்று தான் தவறாகக் குறிப்பிட்டிருந்ததை, நேற்று இரவு தான் கண்டு பிடித்தான், எதேச்சையாக விண்ணப்பத்தின் பிரதியைப் பார்த்த போது.

இன்று ஒரிஜினல் மார்க் ஷீட் காட்ட வேண்டும். எப்படியும் இந்தத் தவறைக் கண்டு பிடித்து விடுவார்கள். இதை வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்த குற்றம் என்று எண்ணி, நேர்முகத் தேர்வை விட்டு வெளியே அனுப்பி விடுவார்களோ என்று மனம் பதறுகிறது. தானாகவே முன் வந்து சொல்லி விடலாமா என்றொரு எண்ணம் தோன்றுகிறது. ஆனால் அப்படிச் செய்வதிலும் சிக்கல் இருக்கிறதென்று நண்பன் சிவா பயமுறுத்தி விட்டான். இந்தக் குழப்பத்தில், நேர்முகத் தேர்வுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளவே முடியாமல் நேற்றிரவு முழுதும் தூக்கமின்றிச் சோர்ந்து போய் விட்டான்.

இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டுமென்பது எத்தனை வருடக் கனவு. கனவாகவே போய் விடுமா?

அருகில் அடுத்து அழைப்புக்காக காத்துக் கொண்டிருந்தவர், மற்றொருவரிடம் மெதுவாகச் சொன்னார் “கொறஞ்சது 80% மார்க் வேணும், அப்பத்தான் இன்டெர்வியூக்கே கூப்பிடுவாங்களாம், தெரியும்ல”. சேகர் கிட்டத்தட்டக் கிளம்பிப் போய் விடலாமா என்று கூட யோசித்தான்.

இது போன்ற சிக்கலான தருணங்கள், சோதனையான நேரங்கள், நம் எல்லோரது வாழ்விலும் ஏதாவது ஒரு  நாள் நிகழத்தான் செய்கிறது.

குடும்பத்தில், அலுவலகத்தில் அல்லது நட்பில் சோதனைகள் வரும்போது, இன்றுடன் எல்லாம் முடிந்து போனது போல ஒரு மன நிலை பொதுவாக எல்லோருக்கும் தோன்றுகிறதல்லவா?

இந்த உறவு இன்றோடு முடிந்து விடும் என்றோ, இந்த வேலைக்கு இன்று தான் கடைசி நாள் என்றோ நம்மில் பலர் எண்ணுகிறோமல்லவா?

அது போன்ற கணங்களில், அடுத்த நடவடிக்கை என்ன எடுப்பது? என்ற குழப்பமும், வாளாவிருப்பது உசிதமோ என்ற போராட்டமும் வருவது இயல்பே. எல்லாமே எதிர்மறையாகத்தான் முடியும் என்ற “Pessimistic” மனோ நிலைக்குத்தான்  நாம் எல்லோருமே ஆட்படுத்தப்படுகிறோம்.

சில நேரங்களில் நம்முடைய உடல் நிலையைக் கூட பாதிப்பதை நம்மில் பலர் அனுபவித்து இருக்கிறோம்.

ஆனால், ஒரு சில நாட்கள் கழித்து ( அ) ஒரு சில மணித்துளிகள் கழித்து, அந்தப் பிரச்சனை நாம் அஞ்சிய அளவு பாதிப்பின்றி, சில நேரங்களில், நமக்கு சாதகமாகக் கூட முடிந்து போகலாம். அல்லது நமக்கு மிகப் பெரிய படிப்பினையை கொடுக்கலாம். ஆனால் அன்றுடன் வாழ்க்கை முடிவதில்லை.

யோசித்துப் பார்த்தோமானால், நம்முடைய அறியாமையும், அனுபவத்தில் இருந்து பாடம் கற்காததின் விளைவையும் தான் நாம் பயமாக எதிர் கொள்கிறோம்.

இவ்வளவு பயந்து போயிருந்த சேகருக்கு என்ன நடந்தது தெரியுமா? இவன் பூர்த்தி செய்து கொடுத்திருந்த விண்ணப்பமே, அந்த அலுவலகத்தில் இல்லை. தொலைந்து போனதாகச் சொல்லி, மறுபடியும், புதிதாக பூர்த்தி செய்து, மார்க் ஷீட் பிரதி இணைக்கச் சொன்னவுடன், அவன் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையேது? அந்தத் தெம்பிலேயே, நேர்முகத் தேர்வையும், மிக வெற்றிகரமாகத் தாண்டி, அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது, இன்று அவன் வாழ்க்கையின் திசையையே மாற்றி விட்டது.

எல்லா நேரத்திலும், இப்படி நடந்து விடும் என்பதில்லை. ஆனால், பதட்டமடைவதிலும், பயப்படுவதிலும் என்ன நன்மை நிகழ்ந்து விட முடியும்?

என்ன முடிவு வந்தாலும்,  அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கு வர வேண்டும்.

சொல்லுதல் எளிது, அதன் வண்ணம் நடத்தல் கடினம்..உண்மைதான். ஆனால், அது போன்ற தருணங்களில், நாம் எப்படி பொறுமை காப்பது என்பதை உணர்ந்தோமானால், நாளடைவில், நமக்கு இந்த மனோ நிலை வசப்படும். சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம் தானே!.

அனுபவங்களை அலசி, நம் குறைகளை உணர்ந்து, களைந்து வாழ முடிந்த நம்மால், சிக்கலான நேரங்களில், மனதை ஒரு நிலையில் வைப்பது கடினமா என்ன?

முயல்வோம், முயல்வோம், மாறுவோம்.. மகிழ்வோம்..

 

tnelango@gmail.com

 

படத்திற்கு நன்றி: http://b-splendid.blogspot.com/2010/05/feelings-and-emotions.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *