நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்! – பகுதி – 1

18

பெருவை பார்த்தசாரதி

பழக்கமில்லாத ஒரு புது இடத்திற்குச் செல்லும் போது நாம் யாரிடமாவது வழி கேட்டுக் கொண்டு செல்கிறோம் அது போல எல்லோருடைய வாழ்க்கையிலும் யாராவது ஒருவர் மற்றவருக்கு ஏதாவதொரு விதத்தில் வழி காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குச் சரியான உதாரணம் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்போது, மாணவர்களின் மேற்படிப்புக்கு அனுபவம் மிகுந்த ஒருவரது வழிகாட்டுதல் (guide) அவசியம் என்பதை இங்கே குறிப்பிடலாம். தேர்வு முடிவு வந்த பிறகு எந்தக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற சந்தர்ப்பத்தில் எல்லோரது வீட்டிலும் ஒரு வைபவமே நடைபெறும். 

இது போன்று இன்னும் பல சந்தர்ப்பங்களில் வழி காட்டுபவர்களை தேடும் போது அவர்கள் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்? என்ற கேள்விக்குப் பதில் வேண்டுமென்றால்?

பின்வரும் கேள்விகளுக்கு கண்டிப்பாக விடை தெரிந்திருக்கவேண்டும்.

*  வழி காட்டுதல் இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியுமா?

*  வழி காட்டுதலுக்கு நாம் யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறோம்?

* சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோமா?

*  நமக்கு வழி காட்டுபவர்கள் நல்ல விஷயாதிகளா அல்லது வாழ்வியலில் ஞானம் உள்ளவர்களா?

*  எப்போதாவது நமது மனம் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் குழப்பமடையும் போது, வழி காட்டுபவர்கள் மேலும் நம்மைக் குழப்பமடையச் செய்யாமல் சரியான தீர்வைக் கொடுப்பவர்களாக் இருப்பார்களா?   

நாம் ஒரு அதி முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, சரியான முடிவை நம்மால் காண முடியாத நிலையில், அவ்வேலையில் ஊக்கம் குறைந்து, சோர்வு, தயக்கம், தள்ளிப்போடுதல் போன்றவைகளால் குழப்பமுற்றிருக்கும்போது நமது வழிகாட்டிகளைவ் நேராக அணுகி அவரது அறிவுரைகளை ஏற்று அவ்வேலையை திறம்படச் செய்து முடித்து விட முடியும். வழிகாட்டும் நபர்களை ‘ROLEMODEL’ என்று கூட மனதில் இருத்திக் கொண்டு அவர்கள் கையாளும் உத்தியை நாமும் பின்பற்ற முடியும். ஒவ்வொருவரும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் நல் ஆலோசனைகளை வழி காட்டுபவர்களிடமிருந்து அனு தினமும் ஏதாதொரு விஷயத்திற்காகப் பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இப்படியெல்லாம் இல்லை என்று கூறுபவர்கள் மிகச் சிலரே.

வேலைவாய்ப்புகள், வீடு கட்டுதல், திருமணம் மற்றும் இதர சுபகாரியங்கள் இவை அல்லாது தொழில் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு ஒரு சிக்கலானசமயத்தில் சரியான பாதை தெரியாமல் தவிக்கும்போது அவர்களுக்குத் தேவை  வழி காட்டிகளின் ஆலோசனைகள் (counseling) மட்டுமே. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும்போது, நாம் தேட வேண்டியது வலிநிவாரணிகள் (painreliever), தூக்கமாத்திரைகள் (sleepingpills) அல்லது மதுபானங்களோ (liquor) அல்ல,  ஒரு சரியான வழிகாட்டியைத்தான் (guide).  தக்க சமயத்தில் இவர்களை அணுகும் போது, நாம் பெற வேண்டியதை உறுதியாகவும் கண்டிப்பாகவும் பெற்று விட முடியும் என்பது அனுபவத்தில் காண்கின்ற உண்மை. 

ஒவ்வொரு மனிதனுக்கும் மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்கள் என்றுமே வழிகாட்டிகள்தான். சில விந்தை மனிதர்களுக்கு இயற்கை கூட வழிகாட்டிகளாக அமைந்ததை நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். இது தவிர மிகச் சிறந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அறிவாளிகளுக்கு அவர்கள் பார்ப்பது அனுபவிப்பது என்று எல்லாமே அவர்களுக்கு  ஒரு வழிகாட்டுதலாக அமைந்து விடும். வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த நிலைக்குச் சென்றவர்களை, உங்களது வழிகாட்டிகள் யார்?… என்று கேட்டால், பள்ளி, கல்லூரி நாட்களில் தங்களுக்கு நல்லாசிரியர்களாக அமைந்தவர்களைக் கூறுவார்கள். அன்று குருகுலக் கல்வியில் போதித்த அறநெறிகள், அறிவுரைகள் மற்றும் நீதிக்கதைகள் போன்றவை இன்று தற்காலத்தில் பகுத்தறிவுக் கேள்விகளுக்கு இரையாகி “இதெல்லாம் தேவையற்றது”என்ற நிலையில் தள்ளப் பட்டிருக்கிறோம். வழி வழியாக வந்த வழக்கங்கள் இடையே காணாமல் போனதால்தான் இன்று அறிவிற் சிறந்த மாணாக்கர்கள் பயிலும் பள்ளியிலும், கல்லூரிகளிலும் நடைபெறுகிற  மாணவர்களின் தற்கொலைப் பட்டியல் அன்றாடம் வெளிவரும் செய்தித்தாள்களுக்கு விருந்தாகி வருகிறது. மாணவர்களின் மன வளர்ச்சிக்குத் தேவையான கல்வியைக் கொடுத்தால் மட்டும் போதுமா? வாழ்வியல் கல்விக்கு வழிகாட்டுவதில் ஆசிரியர்களின் பங்கு மிக மிக அவசியம் அல்லவா? 

சமீபத்தில் சென்னைத் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஒன்றில் உரையாற்றிய ஓய்வு பெற்ற ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் கலாம் அவர்கள் ‘நல்ல புத்தகங்கள் மட்டுமே சிறந்த வழிகாட்டியாக திகழும் என்றும் ஒவ்வொரு வீட்டிலும் படுக்கை அறை, பால்கனி, பூஜை அறை இருப்பது போல ஒரு சிறிய அளவில் நூலகத்தையும் அமைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இன்றைய உலகில் இணையதளங்கள், இமெயில் செய்திகள், அறிஞர்களின் வலைப்பூக்கள், டிவீட்டர்கள் போன்றவை கூட சிலசமயங்களில் சிலருக்கு உதவியாக அமைந்து விடுகிறது. 

நல்ல புத்தகங்கள் கூட, படிக்கும் போது  மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச் சட்டென ஒரு மாற்றத்தைக் கொடுத்து, வாழ்க்கைப் பாதையை திசை திருப்பி விடுகிறதல்லவா?. . ! ஒரு நல்ல நண்பரைப் போல. 

ஒரு முறை மஹாத்மாவிடம் பத்திரிகை நிருபர்கள் கேள்வி கேட்கும்போது ‘உங்களுக்கு வழிகாட்டியாக நீங்கள் யாரைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்’ என்று கேட்டபோது, அதற்கு அவர் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளரான ‘லியோ டால்ஸ்டாயின்’ கதைகள்தான் இக்கட்டான நேரங்களில் எனக்கு வழி காட்டுகின்றன என்று பதில் சொன்னாராம். அதேபோல் ஜான் ரஸ்க்கின் எழுதிய unto this last என்ற புத்தகம் அவருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது. மிக நீண்ட பயணத்தின் போது இந்தப் புத்தகத்தை முழுவதுமாக ஒரே மூச்சில் படித்து முடித்த பிறகும், அதில் வரும் சம்பவங்கள் மட்டும் அவர் நினைவிலிருந்து அகலவில்லையாம். 

மஹாத்மா வளர்ந்து வரும் காலத்தில், விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவருக்கு உறுதுணையாக விளங்கியவர் கோபாலகிருஷ்ண கோகலே. விடுதலைப் போராட்டத்திற்கு கோகலேயின் அறிவுரைகள் மஹாத்மாவிற்கு பெரிதும் உதவியது. ‘கோகலே தான் என்னுடைய வழிகாட்டி’ என்று தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். 

ஆபிரஹாம் லிங்கன் தன்னுடைய மகனைப் பள்ளியில் சேர்க்கும் போது, பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவனுக்குப் படிக்க வேண்டிய பாடத்தைச் சொல்லிக் கொடுக்காதீர்கள். வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே அவனுக்குப் பயன்படாது. வாழ்வியல் அனுபவத்தைப் புகட்டுங்கள், சிந்தனைக்குரிய செயல்களில் ஈடுபட்டுச் சிறந்து விளங்க உங்களைப் போன்ற ஆசான்கள் அவனுடைய வாழ்க்கைக் கல்விக்கு வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தாராம்.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் சில விஷயங்களில் வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதையும் ஒரு உதாரணமாகச் சொல்லலாம். ஒரு முறை மிகப்பெரிய லிஃப்ட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தொடர்ந்து சரிவை எதிர் நோக்கியது. அதற்கான காரணம் என்னவென்றால், லிஃப்டை பயன்படுத்துபவர்கள், லிஃப்ப்டில் உள்ள சிறுசிறு கோளாறுகளையும், மெதுவாகச் செல்வதையும் முன்னிருத்தி அதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். லிஃப்டில் ஏறியவுடன் இது போன்ற சிறிய விஷயங்கள் அவர்கள் சிந்தனையில் பூதாகரமாகத் தோன்றியதே இதற்குக் காரணம். இக்குறையை நிவர்த்தி செய்ய அரும்பாடுபட்ட அந்தக் கம்பெனியின் முதலாளி ஒன்றுமறியாமல் விழித்துக் கொண்டிருந்த போது, அவரது மனைவி சொன்ன சில யோசனைகளே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. மனைவியின் ஆலோசனையின் அடிப்படையில், லிஃப்ட்டின் நான்கு புறங்களிலும் விதவிதமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டன.  

அக அழகைக் காண முடியாத மனிதர்கள், தங்கள் புற அழகை ரசிப்பதற்கே அதிகம் விரும்புவார்கள் என்பது போல, லிஃப்டைப் பயன்படுத்துபவர்களும் தங்களின் புற அழகை ரசிப்பதிலும் சரி செய்வதிலும் அதிகக் கவனம் செலுத்தியதால், மற்றதை மறந்து விட்டார்கள். லிஃப்டில் உள்ள சிறிய கோளாறுகள்  கண்களிருந்து விலகியது  என்பதுதான் அந்த ரகசியம். சிறிய மாற்றங்களால், அந்தக் கம்பெனி மறுபடி சகஜ நிலைக்குத் திரும்பியது. மனைவியின் வழிகாட்டுதலால் கணவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அவருடைய பெயர் ஓட்டிஸ் என்றும், அந்தக் கம்பெனிதான் Otis Elevators என்பதும் உலகறிந்த உண்மை.   

மனிதனால் உருவாக்கப்படும் இயந்திர வாகனம் (Vehicles), துணி துவைக்கும் வாஷிங்மெஷின், அவென் (Oven), குளிர்சாதனப்பெட்டி (Fridge) மற்றும் இதர பொருட்களைப் புதிதாக வாங்கியவுடன் ஒரு டெக்னீஷியன் (Technician) நமது வீட்டிற்கு வந்து அதை எப்படி இயக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லித் தருவார். ஒரு சாதாரண இயந்திரத்தைக் கையாள்வதற்கே ஒரு வழிகாட்டுதல் தேவைப்படும் போது, இறைவனால் படைக்கப்பட்ட மனிதனுக்கு நன்மை மற்றும் தீமைகளை அறிந்து செயல்பட வழிகாட்டுதல் என்பது மிகவும் அவசியமாகிறது. நற்குணங்களோடு பிறக்கும் மானுடர்கள், சில சமயம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வழி தவறுவதை அனுபவத்தில் காண்கிறோம். 

நன்மைகளையும், இன்பங்களையும் மட்டுமே விரும்பும் மனிதர்கள், சிலசமயங்களில் தீயசெயல்கள் என்று தெரியாமல் அதைத் தேர்ந்தெடுக்கும்போது, தக்க தருணத்தில் சரியான வழிகாட்டுதலால் அத்தீயசெயல்கள் நடைபெறாமல் தவிர்க்கப் படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் பக்குவப்படவும், தன்னை நல் வழிப்படுத்திக் கொள்ளவும் வழிகாட்டுதல் என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அத்தியாவசியமாகிறது.  

இதையெல்லாம் சிந்திக்கும் போது, நாம் என்றைக்காவது, யாருக்காவது உதவியிருக்கிறோமா அல்லது தடுமாறும் சமயத்தில் அவருக்கு வழி காட்டியிருக்கிறோமா? என்ற கேள்வி எழும் போது பின்வரும் வரிகளைக் கூர்ந்து படித்தால் நிச்சயமாக மற்றவர்களுக்கு உதவிகரமாகச் செயல்பட முடியும். 

எழுத்தாளர் ராகி.ரங்கராஜன் அவர்கள் ஒரு கருத்தை வலியுறுத்த அவ்வப்போது சில குட்டிக் கதைகளைச் சொல்வார். ஓரிடத்தில் அவர் சொன்னதை இன்னும்  கொஞ்சம் விரிவாக இச்சந்தர்ப்பத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன். 

ஒரு வயதான மனிதர் அறிவாளியும், அனுபவசாலியும் கூட, சமவெளியில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்.  அவரது மனதில் பல விதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அங்கே வயல் வெளியில் இரண்டு குதிரைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒன்றின் கழுத்தில் ஒருவித மணி கட்டித் தொங்க விடப் பட்டிருக்கிறது.  மணி கட்டிய குதிரை அவ்வப்போது தலையை ஆட்டும், அப்போது மணி எழுப்பும் ஒலி கேட்கும்,  பிறகு மேய்வதற்காக கொஞ்சம் இடம் மாறும். பக்கத்தில் மேய்கின்ற குதிரை அப்படியே அதனைப் பின் தொடரும்.  

இப்படி மணி கட்டிய குதிரை இடம் நகரும் போது ஒரு இடத்தில் ஒரு பெரிய பள்ளத்தைத் தாண்டாமல் லாவகமாக அதன் கரை ஓரமாக சென்று கடக்கிறது.  தலையைச் சாய்த்து மேய்வதைத் தவிர வேறோன்றும் அறியேன் என்கிற இரண்டாவது குதிரையும் அப்படியே செய்கிறது. 

இந்தச் சம்பவத்தை அந்தப் பெரியவர் நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார்,    இதில் ரசிப்பதற்கு என்ன இருக்கிறது என்று நம்மைப் போல் சாமானியர்களுக்குத் தோன்றும், ஆனால் அந்த அறிவாளியான பெரியவர், வேறு விதமான சிந்தனையுடன்  சற்று அருகில் சென்று கூர்ந்து கவனிகிறார். அவருக்கு ஒரு உண்மை புலப்படுகிறது, அதாவது, அந்த இரண்டாவது குதிரைக்குக் கண் தெரியாது. 

உடனே அந்த பெரியவரின் எண்ண அலைகள் குதிரையைப் போல் பாய்கின்றன.  ஒரு ஐந்தறிவு படைத்த ஜீவனே மற்றொன்றுக்கு வழிகாட்டியாக உள்ளனவே,  ஆறறிவு பெற்ற நாம், நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களையும், கேட்டதையும், படித்ததையும் மற்றவருக்கு சொல்லி ஒரு வழிகாட்டியாக இருப்போமானால், இந்த உலகம் எப்படி இருக்கும் என்று நினைத்து, அன்றிலிருந்து பார்ப்பவர்களை எல்லாம், பிறருக்கு நீங்கள் வழிகாட்டியாக இருங்கள் என்று அறிவுறுத்தத் தொடங்குகிறார். 

நம்மிடையே பலர் சக மனிதர்களிடம் அன்பு செலுத்துவதை விட வளர்ப்புப் பிராணிகளிடம் (நாய், பூனை, கிளி) அதிக அன்பு காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். தனது பிள்ளைகள் அல்லது மற்றவர்களிடம் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்த்து அது கிடைக்காமல் போகும் போது, அந்த அன்பையும் நேசத்தையும் தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடம் அதை ஒரு குடும்ப அங்கத்தினர் போலப் பாவித்துப் பரிவு காட்டுவார்கள். மனிதர்கள் செஞ்சோற்றுக் கடனைத் திருப்பித் தருகிறார்களோ இல்லையோ, செல்லப்பிராணிகளிடம் கண்டிப்பாக செய்நன்றியை எதிர்பார்க்கலாம்.  

உலக அளவில் புகழ் பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை ஒருவர், தான் வளர்க்கும் உயர்ந்த ரக நாயுடன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.  இவர் தனது பயிற்சிக்கு ஆளரவமில்லாத கரடுமுரடான மலைப்பாதைகளை மட்டும் தேர்ந்தெடுப்பார்.  ஒரு முறை மலையுச்சியில் மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது மலைச்சரிவில் தடுமாறி 800 அடி அதள பாதாளத்தில் விழுந்து விட்டார். சுய நினைவிழந்து, தொடை எலும்பும், பந்துக்கிண்ண மூட்டுகளும் முறிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு நாட்கள் நகர முடியாமல் வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி எப்படியும் தான் காப்பாற்றப் படுவோம் என்ற வைராக்கியத்தில் மூன்றாவது நாள் மறுபடி சுய நினைவை இழந்து விட்டார்.  இவரைக் காணாது தேடுதல் வேட்டையில் இருந்த போலீசார் கடைசியில் இவரைக் கண்டுபிடித்து அவரது உயிரைக் காப்பாற்றினார்கள். 

இந்த ஆபத்தான சமயத்தில் அந்த வீராங்கனைக்குத் துணையாக இருந்தது அவரது வளர்ப்பு நாய். இரண்டு நாட்கள் பட்டினியுடன் அவருடனேயே இருந்த அது பசி தாங்காமல் உணவுக்காக அவ்விடத்தை விட்டு வெளி வரும் போது ஒரு சில மனித நடமாட்டத்தைப் பார்த்து விட்டு வெறித்தனமாகக் கூச்சலிட்டு, காப்பாற்ற வந்தவர்களுக்கு விபத்து நடந்த இருப்பிடத்தை அடையாளம் காட்டியது. பின்னாளில் இந்த வீராங்கனை தொலைக்காட்சி ஒன்றில் தனக்கு நேர்ந்த சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, தன் உயிரைக் காப்பாற்றிய அந்த விலங்கினத்துக்கு ஒரு அறக்கட்டளை ஒன்றையும் நிறுவியிருக்கிறார். தான் எப்படியும் காப்பாற்றப்படுவோம் என்கிற வைராக்கியம் அந்த செல்லப் பிராணியிடமிருந்துதான் அவருக்குக் கிடைத்ததாம். இதே போல விஞ்ஞான வளர்ச்சி விண்ணைத் தொடும் இன்றையக் கால கட்டத்தில், வெடிகுண்டைக் கண்டுபிடிப்பதற்கும், பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கியிருப்போரைக் கண்டுபிடிப்பதற்கும் ஆறறிவு படைத்த மனிதர்களால் செய்ய முடியாத அவசரக் காரியத்துக்கும், இந்த ஐந்தறிவு ஜீவிகளைத்தான் நம்பியிருக்கிறோம். பர்வதமலை மற்றும் சதுரகிரி மலைகளிலும், திக்குத் தெரியாமல் வழிதவறித் தவிக்கும் ஆன்மீக பக்தர்களுக்கு பழக்கமில்லாத பைரவர்தான் (நாய்கள்) வழிகாட்டுகிறது என்பதை பத்திரிகைச் செய்திகளில் படிக்கவில்லையா? 

பெத்லஹேமில் மூன்று ஞானிகளுக்கு இயேசு பிறந்த இடத்தைக் கண்டுபிடிக்க, விண்மீன்கள் வானத்தில் தோன்றி வழிகாட்டியதால், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிற கிறிஸ்மஸ் நாளில் (December-25) அந்த வால் நட்சத்திரங்களுக்கே முதல்மரியாதை தரப்படுகிறது. 

அன்று முதல் இன்று வரை பல திரையிசைக் கவிஞர்கள் எண்ணற்ற பாடல்களை எழுதியிருந்தாலும், ஒரு சில பாடல்களே மனதை விட்டு நீங்காத, கவினுறு பாடலாகக் காலத்தை வென்று மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. மஹாகவி, பாரதிதாசன், கவியரசர், மருதகாசி, பட்டுக்கோட்டையார், வாலி, வைரமுத்து போன்ற பல கவிஞர்களின் சிந்தனையில் தோன்றிய இதமான கருத்துச் செறிந்த ஒரு சில பாடல்களை துன்பம் வரும்போது நினைத்துப் பார்த்தால் ரத்த அணுக்களில் ஒரு புத்துணர்ச்சி வருவதை உணரலாம். வாழ்க்கையின் இக்கட்டான நிலையில், இனிமேல் வாழ வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்படும் போது, தற்கொலை என்கிற கொடுமையான முடிவுக்கு வந்து, பிறகு திருப்பம் நேரிட்டு மிக உயர்ந்த நிலைக்கு முன்னேறிய பலர், தங்களைப் பேட்டி காண வரும் அன்பர்களுக்கு ஒரு சில திரைப்படப்பாடல்களே தங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  

மனம் சஞ்சலப்படும் போது, முடிவெடுக்கும் திறன் வெகுவாகக் குறைகின்றது, அப்போது ஆறுதலும், அறிவுரைகளும் எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இன்றைக்கும் இக்கட்டான சூழ்நிலையில் எல்லோருக்கும் இன்பமும் ஆறுதலும் கொடுக்கும் கவியரசரின் ஒரு திரையிசைப் பாடலை இத்தருணத்தில் நினைவு கூறலாம். 

    வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம் 

‘நித்தியக் கண்டம் பூரண ஆயுசு’ என்பது போல வாழ்க்கையே துன்பம் என்று நினைத்து நல்வாழ்வு வாழாமல் அனுதினமும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பாடலில் கவியரசர் காட்டும் வழிகள் ஏராளம். 

கடைசியாக,

Ø   உங்கள் வழிகாட்டி யார்?

Ø   இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் யாருக்காவது வழிகாட்டியாக செயல்பட்டிருக்கிறீர்களா?

என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? பதில் இல்லையென்றால்! 

இனி நல்ல விஷயங்களையும், அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதின் மூலம் ஒருவர் மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகச் செயல்பட முடியும். 

இந்தப் பதிவைப் படிக்கும் போது, இடர் வரும் காலங்களில் உங்களுக்கு வழிகாட்டிய நபர், தற்போது உங்கள் கண் முன்னால் வந்து நிற்பதையும் உணர்வீர்கள்.

 

படத்திற்கு நன்றி: http://www.shutterstock.com/pic-32544181/stock-photo-help-concept.html

பதிவாசிரியரைப் பற்றி

18 thoughts on “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்! – பகுதி – 1

  1. வழிகாட்டி என்னும் இந்த கட்டுரையே பலருக்கும் வழிகாட்டும் பொருட்டு எழுதியுள்ள
    எழுத்தாளர் பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி!

  2. அரு​மையான, அழகான மற்றும் உப​யோகமான பகிர்வு. நன்றி.

  3. பெருவை சாரதியின் உயர் நோக்கம் பிறரை உயர்த்துவது.. இந்தப் பயணத்தில் அவர் மேன்மேலும் வெற்றிகள் குவிக்கட்டும்.

  4. EVERYBODY IS A GUIDE TO ANOTHER PERSON. IF WE GET THE RIGHT GUIDE WE WILL BE SUCCESFUL. .GOD ONLY PROVIDES THE RIGHT GUIDE

  5. இக்கட்டுரை கலங்கரை விளக்கம்! மனித வாழ்விற்கு!

  6. writing about guide with detail uqotations peruvai sarathi is very nice keep it up and write more

  7. Good article indicating with examples, on how everyone will need / use a guide at some point..

  8. vazhikatti brings valuable & expereinces of our world peoples..  Good.   We can recollect and refresh our thoughts and think back and improve ourselves.  Very Good partha.  Very good.  Write more.  

  9. I am delighted to know today that a good friend of mine is Mr. Peruvai Sarathy. Hope you remember me.  Your messages are really thoughtful, innovative and very useful for the people in all walks of life, irrespective of their religion, caste or creed. It is a great service to the society at this need of hour.  Pl keep writing. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.