எல்லோரும் என் குழந்தைகள்

0

விசாலம்

இல்லறத்தின் நோக்கம் சிற்றின்பம் தானா? இல்லையே! இல்லறத்தில் இருந்தபடியே பேரின்பத்தையும் அடைய முடியும் என்பதை எடுத்துக் காட்டிய பெண்மணிதான்  அன்னை சாரதாமணி  தேவி. அதிகப் படிப்பு அவருக்குக் கிடையாது. மிக ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கிராமத்தில்  உழைத்த உழைப்போ மிக  அதிகம். நெல் குத்துவது, மாவு அரைப்பது, இலை  பொறுக்கி வருவது,   சாப்பாட்டிற்கு இலை தைப்பது.   குச்சிகள் பொறுக்குவது, பெரிய பாத்திரங்கள்  தேய்ப்பது என்று அடுக்கிக் கொண்டேபோகலாம். இதையெல்லாம்   செய்யும் போது அவள் வயது மிகக் குறைவுதான். 

அந்தச் சிறுமி பிற்காலத்தில் ஜகன்மாதாவாக  பல பேர்களுக்கு அன்னையாக விளங்கினாள்.தனக்கென்று குழந்தை இல்லையென்றாலும் குரு மஹராஜின்  சிஷ்யர்கள் யாவரும் அவரது குழந்தைகளல்லவோ ஆனார்கள்!ஸ்வாமி விவேகானந்தர், பிரும்மானந்தர்  போன்றவர்களும் அவரை அன்னையாகப்  பார்த்தனர். அவர் தன் கணவரைக் கடவுளாகவே பார்த்தார். அவர் சேவையே மஹேசன் சேவை என்பதை  உணர்ந்தார். ஒரு சமயம் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் போல் தனக்கும் சமாதி  நிலை வர அவரை வேண்டினார். கண் மூடிஅமர்ந்தார். பின் அவர் இந்த உலகிலேயே இல்லை. சமாதி நிலை கிட்டிவிட்டது. குருதேவரும் அன்று சாப்பிடாமல் பட்டினி  கிடந்தார். ஏனென்றால் அவர் மனைவி அன்னை சாரதா செய்யும் பணிகள் நின்று விட்டன.  பின் சாரதா தேவி கண் முழித்துப் பார்த்தபோது   தன் கணவருக்குச் செய்யும்   சேவை எல்லாம்  செய்ய முடியாமல் போய் விட்டதே என வருந்தினார். இதனால் தனக்குச் சமாதி நிலை  வேண்டாமென்றும் குருதேவரின் சேவையே  முக்தி கிடைக்க வழி என்றும் சொன்னார்.

இவர் ஜயரம்பாடி என்று ஒரு கிராமத்தில் டிசம்பர் 22 ம் தேதி அவதரித்தார். சிறுபையனாக இருந்த கதாதரன் ஒரு உற்சவம் பார்க்க வந்திருந்தான். அந்த மேளாவுக்குச்  சிறுமி சாரதாவும் வந்திருந்தாள். அப்போது ஒரு வயதான மாது  சாரதாவை வம்புக்கிழுத்தாள்.

“என்ன சாரதாகுட்டி நீ யாரை கல்யாணம் செஞ்சிக்கப் போறே?. இந்தக் கூட்டத்திலே  யார் உன் கணவன்'”? தன் ஆள்காட்டி விரலை நீட்டி சாரதா  கதாதரனைக் காட்டினாள். எல்லோரும் கொல்லென்று  சிரித்தனர், பின்னால்  அவள் காட்டியபடியே  கதாதரனுடன் அவள் திருமணம் நடந்ததை என்னவென்று சொல்ல! கதாதரன் ஐந்து வயதான சாரதாவை அவள் கிராமத்திலேயே விட்டு விட்டு  கொல்கொத்தாவில்  தட்சிணேஸ்வரம்  வந்தார். பரமார்த்த சாதனையில் உச்ச கட்டமடைந்து  அன்னை காளியின் தரிசனமும் பெற்றார். ஒரு பித்தனைப் போல் காளிமாதாவின் முன் பல தடவைகள் சமாதி நிலையடைந்து விடுவது சகஜமாகி விட்டது.

சாரதா வயது வந்த பின் கணவரிடம் செல்ல விரும்பியும் அவள் உறவினர்கள் அங்கு அனுப்ப விரும்பவில்லை. “அட மண்டுவே!  உன் கணவர் பித்தன் போல் காளி முன் அமர்ந்திருக்கிறார். அந்தப் பித்தனிடம்போய் என்ன குப்பை கொட்டப் போகிறாய்? துரதிருஷ்டக்கட்டை. நீ  இங்கேயே உழைத்துக் கொண்டிரு” என்று திட்டினர்.

அங்கு வந்து போகும் பலரிடம் சாரதா  “என் கணவர் எப்படியிருக்கிறார்? அவர் நலமாக இருக்கிறாரா?” என்று கேட்க, பலர் அவரை மஹான் என்றே கூறினர். சிலர் அவரை யோகி என்றும், சிலர்  அவரைச் சித்த புருஷர் என்றும் கூறினர். அவரைப் பார்த்தே ஆக வேண்டுமென்ற திடச்சித்தமாக, அவள் தனியாகவே காட்டு வழியாகக் கிளம்பி பல இன்னல்களுடன்  தட்சிணேஸ்வரம் வந்து சேர்ந்தாள். அவளது கணவரும் அவளை வரவேற்று. “இனி எனக்குக் கவலையில்லை. என்னை நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று மனம் நெகிழ்ந்தபடி  கூறினார். அன்று ஆரம்பித்த சேவைதான். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு அன்னை சாரதாதேவி காளிதேவியாகவேக் காட்சியளித்தாள். இதை விடப் பெருமை என்ன வேண்டும்!

குருதேவ் சித்தியடைந்த பின் பல வருடங்கள் அவருடைய  சேவையைத் தொடர்ந்தாள்.    ராமகிருஷ்ண மடத்தையும் கவனித்து  வந்தார். பரம பவித்திரமான வாழ்க்கையைத் தொடர்ந்து, பின் அவரே தெய்வமாகி விட்டார், டிசம்பர் 22 அவரது பிறந்த நாள்…

அந்தத் தேவியைக் கரம் குவித்து வணங்குகிறேன். அன்னை சாரதாதேவி போற்றி..

 

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Sarada_Devi

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *