வற்றாத செல்வம் அருளும் ஸ்ரீவைகுண்டம்

இராஜராஜேஸ்வரி

நவ திருப்பதிகள் என்று போற்றப்படும் விஷ்ணு கோயில்கள்,  நவகிரகங்கள் தாமே எழுந்தருளி மாதவனாம் மகாவிஷ்ணுவைப் போற்றியத் திருத்தலங்கள்.  

இவற்றில் ஸ்ரீவைகுண்டம், சூரியனுக்கு உற்ற தலம். இங்கு உறையும் மூர்த்தி கள்ளர்பிரான் என்றழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் தான் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலத்தில், அந்த மாதத்தின் முதல் வாரத்தின் 6வது நாள் மூலவர் மேல் தன் கிரணங்கள் விழுமாறு செய்கிறான், சூரிய பகவான்.  

வியாச முனிவர், வேதங்களைத் தொகுக்கும் முன் நவகிரகங்களுக்கு யாகம் செய்ய எண்ணினார். அப்படி அவர் நவக்கிரக ஹோமம் செய்த தலம், ஸ்ரீவைகுண்டம். வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் பொருள் உணர்ந்து அப்படியே எழுதினார்.  

அப்படி விநாயகர் எழுத ஆரம்பிக்கும் முன் இந்த ஸ்ரீவைகுண்டத்து கள்ளர்பிரானை வணங்கி விட்டுச் சென்றார். அவருடன் வீரபத்திரரும் வந்திருந்தார். இன்றும் வீரபத்திரர் சித்திரத்தை இந்தக் கோயிலில் நாம் காண முடிகிறது. நவகருடச் சேவையின் போது நம்மாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, கள்ளர்பிரானைப் பாமாலைகளால் ஆராதிக்கின்றார். 

ராமாவதாரத்தில், சுக்ரீவனையும் அனுமனையும் ராமன் ஆலிங்கனம் செய்தது இந்த இடத்தில்தான். அனுமனுக்கு வஜ்ரதேகம் உண்டானது இந்த ஸ்ரீவைகுண்டத்தில்தான். இங்கே தேன்கூடுகள் நிரம்பிய காடுகள், வாழை, தென்னை போன்றவை செழித்து, வானுயர வளர்ந்து நின்றன. இங்கு நிறையத் தீர்த்தங்கள் இருந்தன. நம்மாழ்வார் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், கோனேரி தீர்த்தம், குபேர தீர்த்தம் போன்றவை பிரசித்தமானவை. இங்கு பெரியோர்கள் நிரந்தரமாகத் தங்கி இருக்கின்றனர்.  

இப்பெரியோர்கள் முனிவர்களாகவும் சித்தர்களாகவும் தேவ மாதர்களாகவும் இருப்பதை சுக்ரீவன் கண்டு ராமபிரானிடத்தில் கூறுகின்றார். ராமதூதர்கள் குழுமிய இடம், வானோர்களும் சாதுக்களும் நீராடிய தீர்த்தங்கள் யாவும் காலபோக்கில், பிரளய மாற்றத்தில் தாமிரவருணி நதியோடு மறைந்தது. எனவே, தாமிரவருணியில் நீராடினால், அதுவும், ஸ்ரீவைகுண்ட படித்துறையில் மூழ்கி எழுந்தால், தோஷ நிவர்த்தி சாப விமோசனமும் கிடைக்கிறது என்கிறது நாடி.

‘‘முனிவரும் மறை வல்லோரும் நெறியை மாற்றும் மெய்யுணர்வோரும் விண்ணோரனைவரும் அமரர் மாதரும் சித்தர் என்பார் யாவருமே நன்னீர் நாளும் வந்தாடுகின்றனர் தாமிரவருணிதனிலே’’ என்கிறது நாடி. அமரர் மாதர் என்றால், திருமகள், பார்வதி, சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து வானுலக தேவ மங்கையர் என்பதாம்.

‘‘வலங்கொள் நேமியான் மழை நிற வானவன் என் கள்ளர்பிரான்’’ என்கிறார் அகத்தியர். மழை மேகத்தின் நிறத்தை உடையவனான மகாவிஷ்ணுவின் பாதம் இருக்கும் பூலோகத் தலம் இந்த ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கள்ளர்பிரான் சந்நதி என்கின்றனர் மேலோர்.

ஸ்ரீவைகுண்டம் இருக்கும் திசை நோக்கிக் கும்பிட்டாலே போதும், அனைத்து நன்மைகளும் ஓடி வந்து ஒட்டும் என்கிறார் காகபுஜண்டர். சமஸ்க்ருத மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தக் கோயிலில் 12 நாட்கள் விரதம் இருந்து ராமானுஜ பாஷ்யங்களை பாராயணம் செய்து இருக்கின்றனர். கன்னட நாட்டில் மேல்கோட்டை தலம் போகும் முன்பு ஸ்ரீராமானுஜர் தமது பரிவாரங்களுடன் ஸ்ரீவைகுண்டம் வந்து ஆதித்ய ஹோமம் செய்து, இறைவனை நேரில் கண்டார். தாமிரவருணி மாதா அனுதினமும் உஷத்காலத்தில், கள்ளர்பிரானை ஸ்தோத்ரம் செய்கிறார். சொர்க்கத்தில் வசிக்கும் தேவர்க்கும் சொர்க்கமாய் இருப்பது ஸ்ரீவைகுண்டம் என்ற திவ்ய தேசம். 

வற்றாத செல்வம் வேண்டுவோர், கள்ளர்பிரானை அல்லால் வேறு தலம் நாடுதல் சோர்வுண்டாகும். திருப்பதி வெங்கடாஜலபதி, குபேரனிடம் கடன் பெற்று இருப்பவர். குபேரனுக்குக் கடன் கொடுக்கச் சொல்லி ஆலோசனை கூறிய சூரியனும் இந்தக் கள்ளர்பிரானைத் தொழுதிருக்கிறார்.

சித்திரை மாதம் முழுவதும் விரதம் இருந்து, இந்தக் கோயிலில் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை தினம் 12 முறை பாராயணம் செய்தால், முடியாத வழக்குகள் முடியும். பிரிந்த கணவன் திரும்புவார். வெண் குஷ்டம், அரிப்பு, சொரியாசிஸ் போன்ற கொடிய சரும நோய்கள் முற்றிலும் குணமாகும். செல்வம் குறைவின்றிச் சேரும்.

திருதராஷ்ட்ரன்,தசரதன்,சிபிச்சக்ரவர்த்தி போன்றோர் வந்திருந்து ஆதித்ய தோஷ பரிகாரம் செய்த புண்ணிய தலம் இது. அஸ்தினாபுரம், இந்திரப் பிரஸ்தம் போன்ற தலங்களைக் காட்டிலும் புண்ணிய பூமி. ‘‘தேவர்கள் மொய்க்கும் இறை’’ இந்தக் கள்ளர்பிரான். வைகுந்த வள்ளி, பூமிதேவி இருவரும் பிருகு மகரிஷிக்குக் காட்சி தந்து, ஸ்ரீவைகுண்டத்தில் பெருமானை காட்டித் தந்தனர். பிருகு முனிவர் இந்தப் பெருமாளை 108 கலசங்களை வைத்து ஆவாஹித்து ஆதித்ய கோடி பாராயணம் செய்த இடம்தான் இன்று கலச தீர்த்தம், பிருகு தீர்த்தம் என விளங்குகிறது. சூரபத்மனை வதம் செய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க, கள்ளர்பிரான் சந்நதியில் அறுபத்தெட்டாயிரம் ஆதித்ய ப்ருஹதம் செய்தார், திருச்செந்தூர் செந்திலாண்டவன் எனில், இப்பெருமாளின் கீர்த்தியை என்னென்பது! சந்திரபகவானும் ரோஹிணி தேவியும் பூஜித்த விமானம். இதற்கு ரோஹிண்யா சமேத சந்த்ர விமானம் என்று பெயர். சகல பாவங்களிலிருந்து விடுதலை பெற இந்தத் தலம் உகந்தது. குல தெய்வம் எது என்று தெரியாதவர்களும் குல தேவதைகளை மறந்து போனவர்களும் ஜாதகத்தில் சனி,சூரிய தசை வந்தால், ஏழரை, அஷ்டம, ஜென்மச் சனி வந்தால், ராகு,கேது தோஷமிருந்தால், இந்தத் தலத்தில் தீர்த்தமாடி, கள்ளர் பிரானுக்கு சஹஸ்ர நாம அர்ச்சனை செய்து கோதுமையால் செய்யப்பட்ட இனிப்புப் பதார்த்தத்தை நைவேத்யம் செய்து, உடல் ஊனமுற்றோருக்கு விநியோகம் செய்ய, அனைத்துத் தோஷங்களும் நீங்கும். அந்தக் குலத்திற்கே தரித்திரம் வராது.

About ராஜராஜேஸ்வரி ஜெகமணி

ஆன்மீக எழுத்தாளர், கவிஞர். வலைதளம். http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_29.html

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க