சக்தி சக்திதாசன் 

தேவபாலகன் பிறந்தநாள்
தேவன் யேசுவின் பெருநாள்
அன்பு வழியின் திருநாள்
அகிலம் மகிழும் நன்னாள்

முள்ளில் கீரீடம் அணிந்தே
முழுமுதற் பொருளை உணர்த்தியவன்
சிலுவையில் ஆணியைத் தாங்கியே
சிந்தையில் நல்வழி புகுத்தியவன்

மூன்று முதுபெரும் அறிஞர்
முழுதாய் அவன் பிறப்பறிந்தனர்
மாட்டுத் தொழுவமதில் யேசுபிரான்
மாதா மடியில் தவழ்ந்தவன்

கருணையின் பிறப்பிடம் அறிந்தே
கவியரசர் யேசுகாவியம் படைத்திட்டார்
இனித்திடும் வகையில் வாழ்க்கையை
இயக்கிட இயேசு அருளினன்

எதையும் தாங்கிடும் இதயம் இருந்தால்
என்றும் உண்மையாய் வாழ்ந்திடலாம்
இதையும் சொன்னவர் கர்த்தரே
இதயம் தன்னில் இருத்திடுவோம்

கர்த்தர் காட்டிய வழியினில் என்றும்
காண்பது அன்பின் ஆளுமையே
அன்பைக் கொடுத்து அன்பை வாங்கி
அடைவது ஒன்றே அழியா இலாபம்

மனிதராய் அனைவரும் பிறந்திடலாம்
மனிதராய் வாழ்வது சுலபமா?
மண்ணில் மனிதத்துவம்  உணர்த்திய
மாபெரும் ஞானி இயேசுபிரானே !

அடுத்தவர் வாழ்வைச் சிறப்பிக்க
அன்புடன் துன்பத்தை ஏற்றிட்டு
மறு கன்னத்தை காட்டிடும் போது
மலர்ந்திடும் அன்பு என்றுரைத்தான்

தேவன் இயேசுவின் பிறந்தநாளில்
தோன்றட்டும் அன்பு வழிமுறைகள்
அனைவரும் சிறப்புடன் வாழ்ந்திட
அன்பான நத்தார் வாழ்த்துக்கள்.

படத்திற்கு நன்றி: http://www.shutterstock.com/pic-7876015/stock-photo-jesus-christ-virgin-mary-and-joseph-in-a-crib-scene.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *