இறை பிறப்பின் இனிய பிறந்தநாள்

ஜோசப் குரியன்

இறை பிறப்பின் இனிய பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பெருவிழா இதோ நெருங்கி விட்டது, ஊர் எங்கும் விழாக்கோலம், வீடுகளில் அலங்கரிக்கப்பட்ட குடில்கள், வண்ண, வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், எங்கும், மகிழ்ச்சி, எதிலும் மகிழ்ச்சி, புதிய ஆடைகள், இனிப்புகள், சுவையான உணவு வகைகள், எல்லாம் பட்டியல் போட்டுத் தயாராக இருக்கின்றன, 

கிறிஸ்துவ மக்களின் மிக முக்கியப் பண்டிகை நாளான இதை, அனைவரும் மிக மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். 

கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் குடில், நட்சத்திரம் போன்றவைதான். 

இதில் கிறிஸ்துமஸ் தாத்தா உருவானது 17ம் நூற்றாண்டில் தான், பிஷப் நிகோலஸ் என்பவர்தான் இதை முதலில் அறிமுகம் செய்தார், அவர் பிஷப் அணியும் சிகப்பு நிற அங்கி, தாடி, குண்டான, தொப்பை உருவுடன், வேடிக்கை காட்டி,  மகிழ்ச்சி தரும் ஒரு உருவமாக அறிமுகம் செய்த கிறிஸ்மஸ் தாத்தா  உருவம் இன்றுவரை மாறவே இல்லை. அந்தக் கிறிஸ்துமஸ் தாத்தா இரவில் பறக்கும் மான் கொண்ட வண்டியில் வந்து குழந்தைகளுக்குப் பரிசு கொடுப்பார் என்பது நம்பிக்கை. 

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கு முன், கிறிஸ்துவர்களின் இல்லங்களின் தேவாலயத்தின் பாடகர் குழு வந்து கிறிஸ்துப் பிறப்புப் பாடல்களைப் பாடி வாழ்த்து தெரிவிப்பார்கள், இந்தப் பாடல் குழுவோடு கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் வருவார், பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி சிறு பிள்ளைகளுக்குப் பரிசுகள் கொடுப்பார். 

வீடுகளில் வைக்கப்படும் குடிலில் இருக்கும் நட்சத்திரம், இயேசு கிறிஸ்து பிறந்தவுடன், அவரைக் காண வந்த மூன்று ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தின் அடையாளமாக வைக்கப் படுகிறது, கிறிஸ்துமஸ் மரம் விளக்குகளால் அலங்கரிக்கப் படுவதும் ஒரு நம்பிக்கைக் கதையின் அடிப்படையில்தான். 

ஒருவர் இருண்ட காட்டின் வழியே பயணம் செய்ய வேண்டி இருந்ததாம், இருள் சூழ்ந்த காட்டில் அவர் நடக்கப் பயந்த பொழுது காட்டில் இருந்த மரத்தில் வெள்ளி, நீலம் ஆகிய நிறத்தில் நட்சத்திரங்கள் இருப்பதை கண்டார், தனக்கு வழிகாட்டவே இறைவன் அந்த மரத்தினை அங்கே வைத்து இருக்கிறார் என்று அந்த மரத்தினை எடுத்துக்கொண்டு தான் வீட்டு வந்து சேர்ந்தார். 

வீட்டை அடைந்தவுடன், தன் வீட்டாரிடம், நடந்ததைச் சொல்லி, இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அந்த மரத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டாராம், இதனை நினைவு படுத்தும் விதமாகத்தான் கிறிஸ்துமஸ் மரம் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.

வீடுகளில் வைக்கப்படும் குடிலில் குழந்தை இயேசு உருவத்தினைத் தவிர, அவர் பிறப்பின் போது நடந்த நிகழ்வின் அடிப்படையில் எல்லாப் பொருட்களும் வைக்கப்படும், கிறிஸ்துமஸ் இரவு ஆலயம் சென்று வந்தபின்தான் குழந்தை இயேசு உருவம் மகிழ்ச்சியும், ஜெபமும் சேர்ந்து வைக்கப்படும். இந்தக் குடிலானது புது வருடம் பிறந்த எட்டு நாட்கள் கழித்துப் பிரிக்கப்படும். 

இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இப்படிச் சீரும், சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண கர்த்தாவான இயேசு கிறிஸ்துவின் பிறப்பு எப்படி நிகழ்ந்தது என்று தெரியுமா?   

வாருங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் போய்ப் பார்ப்போம்…………

பெத்தலகேம் நகரில் வீசும் பனிக் காற்றுக்கு ஒதுங்கி தங்க ஒரு இடம் இல்லாமல், தங்கும் விடுதிகளின் கதவுகளைத் தட்டித், தட்டி ஒய்ந்து போனார் தந்தை ஜோசப். கர்ப்பிணியான மனைவி அன்னை மரியாளின் பேறுகாலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

எங்கும் இடம் இல்லை, மாட, மாளிகை எல்லாம் அவர்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தம் கதவினை இறுக்கமாக மூடிக்கொண்டது,  மண்ணுலக மக்களை மீட்க வரும் மன்னவனுக்கு இடம் கொடுக்க யாருமே முன்வரவில்லை, தவித்துப் போனார் தந்தை ஜோசப். கடைசியாக எளிய மக்களான இடையர்கள் தங்கள் மாட்டுத் தொழுவத்தில் தங்க இடம் கொடுக்க, அந்த மாட்டுக் கொட்டிலில் அன்னை மரியாள்,  இயேசு கிறிஸ்துவைப் பெற்று எடுத்தார்.  

ஆம் தேவ மைந்தன் பிறந்தது ஒரு மாட்டுக் கொட்டிலில்தான், அவர் நினைத்து இருந்தால், ஒரு அரச குடும்பத்திலோ, இல்லை மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்திலோ பிறந்து இருக்க முடியும், ஆனால் அவர் எளிமையின் சாட்சியாக ஒரு ஏழைக் குடும்பத்தில், மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். 

 மகிழ்ச்சி நிறைந்த இந்தச் செய்தி வானதூதர்களால் முதன் முதலில் சொல்லப்பட்டதும், எளிய மக்களான இடையர்களுக்குத்தான், அவர்களும் மகிழ்வோடு வந்து குழந்தை இயேசுவைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதன் பின்னரே விண்மீன் வழி காட்ட மூன்று ஞானிகள் அவரை வந்து கண்டனர்

கிறிஸ்து பிறந்தது மட்டும் இவ்வளவு எளிமை இல்லை, அவர் வளர்ந்ததும், வாழ்ந்ததும் மிகவும் எளிமையாகவே. எளிய மனத்தோர் பேறு பெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களது என்ற தான் சொன்ன வார்த்தைக்கு அடையாளமாகவே அவர் வாழ்ந்தார்

அதைப் போல் தான் பணிவிடை பெற அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன் என்ற தாரக மந்திரமாகக் கொண்டு, பணி வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். 

அப்படி வாழ்ந்த கிறிஸ்துவின் பிறப்பின் பெருநாளை நாம் எப்படி கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் என்ற ஒரு கேள்வி என் மனதில் தோன்றுகிறது, 

இந்த இடத்தில் ஒரு சிறிய கதையினைச் சொல்லுகிறேன், அன்னை மரியாள், புனித ஜோசப்பிடம், தாம் ஒரு கனவு கண்டதாகவும், அதில் இயேசு பிறந்த நாளுக்கு, மக்கள் தமக்கு புதிய ஆடைகள், இனிப்புகள், உணவுகள் என தங்களுக்கு மட்டும் வாங்கிக் கொண்டார்களாம், பிறந்த நாளிற்கு உரியவருக்கு ஒன்றும் கொடுக்கவில்லையாம், இதைக் கண்டு தான் அழுததாகவும், அத்துடன் அந்த கனவு கலைந்து விட்டதாகவும் சொன்னார்.

இது ஒரு கற்பனைக் கதைதான், ஆனாலும் நடக்கும் சம்பவங்கள் உண்மை, பிறந்த நாளிற்கு உரியவருக்கு கொடுக்காமல் நாம் நமக்கு மட்டுமே செய்து கொள்கிறோம், 

அப்படியானால் இயேசு கிறிஸ்துவுக்கு, அவரின் பிறந்த நாளுக்கு நான் என்ன கொடுக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?, அடுத்தவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி, எனக்கே நீங்கள் செய்தது போல் என்ற ஆண்டவரின் வாக்கினை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஆதரவு இல்லாதவர்கள், வறுமையால் வாடுபவர்கள், இப்படி துன்பக்கரத்தில் சிக்கித் தவிக்கும் ஒருவருக்காவது நீங்கள் உதவி செய்தால், அதுதான் இயேசு கிறிஸ்துவிற்கு நீங்கள் கொடுக்கும் பிறந்த நாள் பரிசு. 

தன்னை நேசிப்பதுபோல் உன் அயலானையும் நேசி என்ற ஆண்டவரின் வாக்கின்படி, தனிமையின் தவிப்பில் இருக்கும் ஒருவருக்காவது உங்களால்  பரிவும், பாசமும் கொடுத்தீர்கள் என்றால் அது இயேசு கிறிஸ்துக்கு நீங்கள் கொடுக்கும் பிறந்த நாள் பரிசு.

ஆம் அன்புக்குரிய நண்பர்களே உன்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது நாம் மட்டும் மகிழ்வது என்பதில்லை, நாமும் மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழ்விப்பது, அந்த மகிழ்ச்சிதான் கிறிஸ்து பிறப்பின் உண்மையான பெருவிழாவாக இருக்கும்.

இந்த ஆண்டு முதல் இது போல் உண்மையான கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடுவோம் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொண்டு கிறிஸ்துவை வரவேற்கத் தயாராவோம்.

இந்த இனிய நாளில் இறை இயேசுவின் அன்பும், மகிழ்ச்சியும் உங்களோடு இருக்கட்டும் என்ற வேண்டுதலுடன், உங்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இறை பிறப்பின் இனிய பிறந்தநாள்

 1. நண்பர் ஜோவுக்கு
  அன்பு வணக்கம் .
  தங்கள் கட்டுரையில் உண்மையான கிறிஸ்மஸ் எது எனத் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்.
  அந்தக் கிறிஸ்மஸ் வரும் நாளை எதிர்பார்ப்போம்
  அன்புடன்
  பெஞ்சமின் லெபோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *