பதின்மத்தின் பரிதவிப்பில்………….

1

பவள சங்கரி

குழந்தைப் பருவம் மற்றும் காளப் பருவம், ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அழகிய, நுண்ணிழைகளால் நெய்யப்பட்டதொரு மெல்லிய பருவம் இந்த ‘டீன் ஏஜ்’ என்கிற பதின்மப் பருவம்! ஆம் அதிகமாக உணர்ச்சிவயப்படுதலும், அச்சம் கொள்ளுதலும், ஊசலாடும் உள்ளமும், கோபம் கொள்ளுதலும், கை வந்த கலை இந்தப் பருவத்தினருக்கு. பெற்றோராகிய நாமும் சில காலம் முன்புதான் இப்பருவத்தைக் கடந்து வந்தவர்களாக இருப்பினும், ஏனோ பல சமயங்களில் இன்று நம் குழந்தைகளின் அப்பருவத்திற்கேயுரிய பிரச்சனைகளைக் கண்டு, அச்சம் கொண்டு, அதனை விட்டுப் பிடிக்காமல், அவர்கள் மீது மேலும் அழுத்தம் ஏற்படுத்த எத்தனிக்கிறோம். பெற்றோர் தம் குழந்தைகளுடன் நல்ல நண்பர்களாகப் பழக முயற்சிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மூத்தோர் என்ற ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். கலீல் கிப்ரான் அழகாகச் சொல்லுவார், ‘ குழந்தைகள் நம் மூலமாகத்தான் வெளி வந்தார்களே தவிர, அவர்கள் நம் உடைமைகள் அல்ல’. என்று.

http://coralsri.blogspot.com/2011/01/blog-post_24.html

அவர்கள் மீது நம் எண்ணங்களைத் திணித்தலை முதலில் நிறுத்த வேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ நாம் வழிகாட்டியாக மட்டுமே இருக்க வேண்டும். அதை விடுத்து அக்கப்பலை நாம் விரும்பும் திசையில் செலுத்தும் மாலுமியாக இருக்க முயற்சிக்கக் கூடாது!

நம் வல்லமை இதழின் ‘செல்லம்’ பகுதி குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, அவர்களோடு பயணித்து அவர்களை நல் வழி செலுத்தி நல்ல மனிதர்களாக உருவாக்கும் முயற்சியின் முதல் படியேயாகும்!

பெற்றோர்கள் தங்கள் செல்லங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய இரகசியங்கள் சில!

1. நண்பர்களுக்குள் ஏதேனும் உட்பூசல் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் புகைச்சல் காரணமாக நிம்மதி இழப்பார்கள்.

2. தீய சேர்க்கைகள் கொள்ளும் வேளைகளில், நம் கண்களைப் பார்த்துப் பேசத் தயங்குவார்கள். நெருங்கி வரவும் அஞ்சுவார்கள்.

3. அடிக்கடி நண்பர்கள் வீட்டில் சென்று சேர்ந்து படிக்கப் போவதாகச் சொன்னால், அது அவசியம் கண்காணிக்கப்பட வேண்டியதாகும்.

4. முக்கியமான தேவைகளுக்காக கொடுத்த பணம் தொலைந்து போனதாக சொன்னால், அது போன விதம் ஆராயப்பட வேண்டும்.

5. காலையில் வழக்கமாக எழும் நேரம் அடிக்கடி கடந்து போனால், அது குறித்து விழிப்புணர்வு கொள்ளல் வேண்டும்.

6. வீட்டின் வெளியே நிறுத்தியிருக்கும் வாகனம், நாம் தூங்கும் நேரமோ, வெளியே சென்றிருக்கும் நேரமோ மட்டும் அடி பட்டோ அல்லது இடம் மாறியோ இருப்பதைக் கண்டால் விழித்துக் கொள்ள வேண்டும்.

7. வீட்டு சன்னலின் கண்ணாடிகள் பந்து பட்டு உடைந்திருந்தால் அவசரப்பட்டு அடுத்த வீட்டு குழந்தைகளுடன் சண்டைக்குச் சென்று விடக் கூடாது.

8. அவர்கள் தேர்ந்தெடுக்கப் போகும் பாடம் சம்பந்தமாக நம் அபிப்ராயங்களை அவர்கள் மீது திணிப்பதை விட, மேலோட்டமாக நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே நன்மையளிக்கும்.

9. வீட்டுப் பாடங்கள் செய்யும் போது பகுதியாக நிறுத்தப் பட்டிருந்தால், அது நண்பர்களுக்குள் ஒப்பந்தம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! ஆம் ஆளுக்கொரு பகுதியாகச் செய்து பின்பு மாற்றி காப்பியடித்து விடுவது!

10. மாலை பள்ளி விட்டு அடிக்கடி தாமதமாக வீடு திரும்பி தகுந்த காரணம் சொல்ல முடியாமல் தடுமாறினால், நாம் தெளிவாக வேண்டும்.

11. வீட்டில் முக்கியமான பரிசுப் பொருட்களோ அல்லது எலக்ட்ரானிக் பொருட்களோ காணவில்லையென்றால், சமீபத்தில் பரிசுப் பொருளாகத் தர வேண்டிய தேவை ஏதும் ஏற்பட்டிருக்குமோ என்பதை ஆராய்தல் நலம்.

12. செல்பேசியில் அடிக்கடி தலையை நுழைத்துக் கொண்டோ, குறுந்தகவல் பரிமாறிக் கொண்டோ இருந்தால் அவசியம் அதைப் பரிசீலிக்க வேண்டும்.

13. நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி திரைப்படம் பார்க்கப் போவதோ, வீடியோ படம் பார்க்கப் போவதோ கண்காணிக்கப்பட வேண்டியதாகும்.

14. திடீரென நம் செல்பேசியின் கட்டணம் அளவிற்கதிகமாக உயர்ந்து கொண்டு போனாலும் விழித்துக் கொள்ள வேண்டும். பத்திரமாக நம் கண் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் நலம்.

15. செல்பேசியில் இருக்கும் பெயர்கள் அனைத்தும் அதன் உண்மையான வடிவம் என்று தவறாக எண்ணக் கூடாது! அடிக்கடி குறிப்பிட்ட எண்ணிற்கு அழைப்பிருந்தால் அன்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

இளங்கன்று பயம் அறியாது ஏதேனும் மாய வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்கான பாதுகாப்பு உணர்வே பெற்றோருக்கு எப்பொழுதும் அதிகமாக இருக்கும் அல்லவா? இன்னும் நிறைய ரகசியங்கள் வரும்!

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பதின்மத்தின் பரிதவிப்பில்………….

  1. கருத்துக்கள் கோர்வையாகத் தொடுக்கப்பட்டுள்ளன. இரு விஷயங்கள்:
    1. 1~15 அருமை. 16வது: தினந்தோறும் ஒரு முக்யமான தகவலை தேர்ந்து எடுத்து, வயதுக்கேற்ப, சிறார்களுடன் அலசவேண்டும். தன்னம்பிக்கையும், பொது அறிவும் வளர, வேறு உபாயம் தேவையில்லை.
    2. இது என் சொந்தக்கருத்து, அனவரதம்உம் என் சிந்தனையில். கலீல் கிப்ரான் அவர்களின் விசிறி, நான். இது வரை நம்மிடம் அவரின் படைப்புகளை பற்றி ஆவன வந்து சேரவில்லை. தற்சமயம் கூட அவரின் அருமையான் படைப்பு ஒன்றை படித்துக்கொண்டிருக்கிறேன். வல்லமை வாச்கர்களுக்கு கிப்ரானை பற்றிய ஆர்வம் இருக்குமா? தெரியவில்ல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *