வெப்பம் – திரை விமர்சனம்

1

ப்ரியா கணேஷ்

பொதுவாக தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் பணியாற்றுவது அபூர்வம். அது போல் பெண் இயக்குநர்களின் படம் என்றால் நல்ல தரத்துடன் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை வெப்பம் பொய்த்து விட்டது.

இது வழக்கமான அலுத்துப் போன டிபிகல் தமிழ் சினிமா தாதா பற்றிய படம் தான். எனினும் முதல் 15 நிமிடம் யார் – எதற்கு வருகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை.

அவ்வப்போது சென்சார் ‘கட்’ வேறு. ஒரு வேளை ரொம்ப ஆபாசமாக வசனம் எழுதி இருப்பார்களோ என்னவோ!  சமீப கால தமிழ் சினிமா வழக்கப்படி படத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள் – நாயகன் முதல் அல்லக்கை வரை ஆபாசமாக அப்பட்டமாக வசனம்  பேசினால் தான் படம் யதார்தமாக இருக்கும் என நம்புகிறார்கள்.

கதை என்று தேடினால் – இது தான் : ஒரு ஏழை பெண்மணி இரண்டு மகன்களை சிரமப்பட்டு வளர்க்கிறாள். அவள் கணவன் மிகவும் பொறுப்பு வாய்ந்த ’மாமா வேலை ’செய்பவர்.

இரண்டு குழந்தைகள் வளர்ந்து பாலாஜி (முத்துக்குமார்) கார்த்தி (நாணி- ஆந்திரா இறக்குமதி?) ஆகிறார்கள். பாலாஜி பெயின்டர் வேலை பார்த்தபடி அவ்வப்போது  தம்பியை அடித்து  நொறுக்குகிறார். கார்த்திக்கு ஒரு நண்பர் விஷ்ணு என்று. கார்த்தி தன்னை வளர்த்த கார்டியன் மகளை காதலிக்கிறார். விஷ்ணு தற்கால தமிழ் சினிமா வழக்கப்படி பாலியல் தொழிலாளியை காதலிக்கிறார். தான் உடனே பணக்காரன் ஆவதற்கு மாமா தொழில் செய்யும் ஜோதியை அணுகுகிறார். ஜோதி- போதை மருந்து வியாபாரத்தை  விஷ்ணுவிற்கு கற்றுத் தருகிறார்.

அதற்கு சீனா பவுடர் என்ற புதிய நாமகரணம் சூட்டி உள்ளனர்! விஷ்ணு கார்த்தி உதவியுடன் வியாபாரம் செய்ய முயற்சி செய்ய, நடுவில் பல ட்விஸ்ட் தாண்டி விஷ்ணு கொலை செய்யபடுகிறார். கார்த்தி தான் விஷ்ணுவை கொலை செய்தார் என போலீஸ் கார்த்தியை சிறையில் தள்ள .. இடைவேளை………. போதுமடா சாமி.

 

இந்தக் கதையை விளக்க ஏகப்பட்ட பின்னலாடை பிளாஷ்பாக் வேறு! இதில் வேடிக்கை என்னெவென்றால் அதில் ஒரு பிளாஷ்பாக் அரை குறையாக தொக்கி நிற்பதுதான்!  அஞ்சனா எதற்காக டைரக்டர் கே.வி.ஆனந்தை காப்பி அடித்தார் என்றே தெரியவில்லை.

தாதாக்கள் என்றால்  கொஞ்சமாவது மிரட்டல் தொனியில் இருக்க வேண்டும். என்பது நம் தமிழ் திரைப்பட இலக்கணம்? இப் படத்தில் வரும் அம்மாச்சி கேரக்டரை பார்த்தால் நமக்கு சிரிப்பு தான் வருகிறது.அதுவும் அந்த 50+ வயது பாட்டி, தான் தான் வில்லி என்று சொல்லும் போது சிரிப்பு தான் வருகிறது. அவர் பெயர் அம்மாச்சியாம்.

படத்தில் மாமா பையன் வேடத்தில் வரும் வில்லன்தான் முக்கிய கதாபத்திரம். இவர் என்ன செய்கிறார்? உண்மையிலேயே வில்லன்தானா, அல்லது டுபாக்கூர் ஆசாமியா என புரிவதற்குள் முக்கால்வாசி படம் முடிந்து விடுகிறது.  படத்தில் நம் தமிழ் கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் காட்சியை நாம் தவறாமல் கிளைமாக்ஸில் பார்க்கலாம். அந்த மாமா பையன் அப்பாவும், ரெண்டு பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கும்மாளம் இடும் காட்சி அற்புதம். பெண் இயக்குனர் அஞ்சனாவிற்கு ஒரு சபாஷ்.

அதே போல் படத்தில் காமெடி காட்சிகளே இல்லையே என்று வருத்தபட்ட போது கடைசியாக அந்தப் பரட்டை தலை அல்லக்கை ‘ஏய்.. எல்லாம் உள்ள போங்க’ என மிரட்டல் தொனியில் இவர் சொல்ல அனைத்து கம்பெனி ஊழியர்களும் (நாமாவது சற்று நாகரிகமாய் சொல்வோம்) பயந்து உள்ளே செல்லும் காட்சி – எப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். இந்த அல்லக்கை தான் படம் முழுக்க பலரிடம் அடி வாங்கிய கேரக்டர்.

உண்மையிலேயே நாம் பாராட்ட வேண்டும் என்றால் இசை அமைப்பாளர் ஜோசுவா ஸ்ரீதரை தான் பாராட்ட வேண்டும். காதல் படத்திற்கு பிறகு , தன் காதல் பிரச்சனைக்குப் பிறகு மிக அற்புதமாக இசை அமைத்து உள்ளார்.  மழை வரும் மணித்துளி- நம் காதில் எப்போதும் ரீங்காரமிடும் மெலடி. அதுவும் இடையில் வருடும் வயலின் இசை – நம்மை எங்கேயோ அழைத்துச் செல்லும். அது போல காற்றின் ஈரம், வெப்பம் மற்றும் ஒரு தேவதை வீசிடும் பாடல்கள் .. பிரமாதம்.

என்ன ஆச்சு கவுதம் (வாசுதேவ மேனன்) உங்களுக்கு? அற்புதமாக விண்ணைத் தாண்டி வருவாயா தந்த சூட்டோடு நடு நிசி நாய்கள் தந்து நன்றாக கடி வாங்கினீர்கள். காயம் ஆரும் முன்னே வெப்பத் தீ வேறு இப்போது சுட்டெரிக்கிறதே? பார்த்து செயல் படுங்க சார்!!

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெப்பம் – திரை விமர்சனம்

  1. திரு.ப்ரியா கணேக்ஷ் அவர்களே, உங்களுடைய விமர்சனம் அருமை. பெரிய டைரக்டர் என்றும்

    பாராமல் அருமையாக சாடியிருக்கிறீர்கள்.பொறுப்பு வாய்ந்த மாமா வேலை என்று உங்களுக்கே

    உரிய நகைச்சுவையோடு கூறியிருக்கிறீர்கள்.இசை அமைப்பாளர் ஜோசுவா ஸ்ரீதரின் காதலைப்
    பற்றியும் அறிந்து அவர் இசையையும் புகழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். well done mr. ganesh sorry
    priya ganesh.அதென்ன ப்ரியா கனேக்ஷ். உங்கள் மனைவி பெயரா? keep it up.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *