வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

பவள சங்கரி

 

நெஞ்சம் பதறுகிறது…………..


’கொடுமை கொடுமை என்று போனால் அங்கொரு கொடுமை துள்ளிக் கொண்டிருந்ததாம்!’ அப்படித்தான் ஆனது ஒரு 23 குழந்தைகளின் நிலைமை! ஆமாங்க….. குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு,  தலசீமியா எனப்படும் ரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டு ரத்தம் செலுத்துவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தக் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் தங்கள் கவனக் குறைவால், கேட்பவர்களின் இரத்தம் உறையக் கூடிய ஒரு செயலைச் செய்துள்ளனர்.  ஆம் அந்த 23 குழந்தைகளுக்கும் எச்ஐவி பாதித்த ரத்தத்தை அந்த மருத்துவர்கள் செலுத்தியுள்ளனர். இதனால் அந்த 23 குழந்தைகளையும் எச்ஐவி நோய் தொற்றியுள்ளது. நெஞ்சம் பதைக்கும் இந்தச் செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

இவர்களில் பலர் சிறுமிகள். குஜராத் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தாலும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர் அக்குழந்தைகளின் பெற்றோர் மருத்துவர்களின் முழுமையான கவனக்குறைவு மட்டுமே இக்கொடுமைக்கு காரணமாகிறது.

சில நாட்களுக்கு முன் மதுரையில் இதே போன்று ஒரு மாணவிக்கு ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் செலுத்தப்பட்டு அந்தப் பெண்ணும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அந்த இரத்த வங்கி மீதும் மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்று தவறு நேராமல் இருக்க வேண்டுமாயின் குற்றம் புரிந்த இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு தெய்வமாகவே காட்சியளிக்கக்கூடிய ஒரு தொழில் மருத்துவத்தொழில். நம் மருத்துவத்துறை சிறிது சிறிதாக முன்னேறி இன்று அதி நவீன மருத்துவ முறைமைகளும் கண்டுபிடிக்கப்பட்டு நோயாளிகளின் ஆயுளுக்கு பெருமளவிற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் முன்னேறியுள்ளது. அதற்கேற்றார்போல் இன்றைய நவீன வாழ்க்கை முறைகள் புதிது புதிதாக , வகை வகையாக பல நோய்களையும் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புனிதமான இந்த மருத்துவத் தொழிலில் அதிகம் சேவை மனப்பான்மை அவசியமாகிறது. வாங்கலில் இருக்கும் இன்பத்தைவிட கொடுக்கலில் இருக்கும் நிறைவு கொண்டிருப்பவர்களே இந்தப் புனிதமான தொழிலுக்கு பொருத்தமானவர்களாக இருக்க முடியும்.

யுனானி, இயற்கை வைத்தியம், சித்த – மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம் என்று எத்தனை வைத்திய முறைகள் இருந்தாலும், அலோபதி என்கிற இந்த மருத்துவ முறையில் தான் நவீன மருத்துவ முறைமைகள் கையாளப்படுகின்றன. அடிப்படை மருத்துவப் பட்டப்படிப்பிற்கும் மேல் உயர்கல்வி கற்றால் மட்டுமே இன்று மருத்துவக் கல்வி பயன்படும் வகையில் உள்ளதும் நிதர்சனம். பல சிறப்புப் பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது ஒரு நல்ல மருத்துவர் என்ற பெயர் எடுப்பதற்கு. இவ்வளவெல்லாம் சிரமப்பட்டு கல்வி கற்று பணிக்கு வரும் போது ஒரு சிறிய கவனக் குறைவால் எத்துனை சேதம் விளைந்து விடுகிறது என்பதையும் உணர வேண்டும். இன்று மருத்துவச் செலவு என்று பார்த்தால், பாதிக்கப்பட்டவர்கள் சொத்தை விற்றோ,கடனை உடனை வாங்கியோதான் மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் இது போன்று உத்தரவாதமில்லாத கவனிப்புகளால் நோயின் கொடுமையைவிட, மருத்துவம் பற்றிய அச்சமும், மருத்துவர் பற்றிய ஐயமும், நோயின் தன்மையை மேலும் பயங்கரமாக்கிவிடாதா? பல மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பணத்தின் மீது குறியாக இருப்பதைவிட மருத்துவம் செய்வதில் குறைவான ஈடுபாடு காட்டுவதும் காண முடிகிறது.

இதில் மருத்துவ மனையில் பணிபுரியும் மேல்நிலை ஊழியர் முதல் கடைநிலை ஊழியர் வரை அடங்குவர்.

ஒரு நல்ல மருத்துவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான வல்லமைகள்:

* நல்ல ஆரோக்கியமான உடல் நலமும், மன நலமும், குறிப்பாக நல்ல நினைவாற்றல்
* சேவை மனப்பான்மை, பொறுமை, சக்தி.
* தன்னம்பிக்கை, கவனிப்புத்திறன், உணர்வு சமநிலை.
* சீர்தூக்கிப் பார்க்கும் தெளிவான மனநிலை, உடன் முடிவெடுக்கும் திறன்
* பணிக்காலம் முழுவதும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், 
* சூழ்நிலைக்கேற்ற முடிவெடுக்கும் திறன், சுய – ஊக்கம்
* இரக்க சுபாவம், நோயாளிகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம்
* கடின உழைப்பு
* சாமான்யருக்கும் அதிகப்படியான அறிவுத்திறன்
* பல மணி நேரங்கள் கூட தொடர்ந்து நின்று கொண்டு பணிபுரியும் திறன்
* இவையனைத்திற்கும் மேலாக, நோயாளியின் உயிரும், அக்குடும்பத்தாரின் உயிரும் தம் கையில் இருக்கிறதென்ற பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும்!

இவையெல்லாம் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவத் தொழிலை தேர்ந்தெடுக்க முடியும். பணம் சம்பாதிப்பது மட்டுமே கொள்கையாக வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேறு எத்தனையோ தொழில் இருக்கிறதே, அவர்கள் மருத்துவத் துறையை தயவுசெய்து தேர்ந்தெடுக்காமல் இருப்பார்களாக!

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

 1. “நெஞ்சம் பதறுகிறது” தலையங்கம் படித்தேன். கவனமின்மையால்
  பல தவறுகள் நடக்கின்றன. இது எல்லாத் துறையிலும் தான். கவனம் இன்மை,
  கவனக்குறைவு போன்றவை டாக்டர்களிடம் இருந்தால் மனித உயிருக்கு
  ஆபத்து ஏற்படக்கூடும். ஆனால் மருத்துவம் என்பது நான்கு கூறுகளைக்
  கொண்டுள்ளது என்பார் வள்ளுவர். அதில் எங்கு தவறு ஏற்பட்டாலும்
  மருத்துவம் பொய்த்துவிடும். மருத்துவரை மட்டும் குறைகூறிப் பயனில்லை.
  “உற்றவன் தீர்ப்பான் மருந்து உளைச் செல்வானென்று
  அப்பால் நாற் கூற்றே மருந்து” என்ற குறளில் நோயாளியின் ஒத்துழைப்பு,
  மருத்துவரின் செயல்பாடு, மருந்தின் தரம், நோயாளியைக் கவனிக்கும் ஆளின்
  (நர்சிங்) செயல்பாடு இவையெல்லாம் சேர்ந்ததே மருத்துவம் என்கிறார்.
  இக்காலத்துக்கும் இது பொருத்தமாக இருப்பது வியப்புத்தான்.
  இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 2. மருத்துவத் துறைக்கான சீட்டுக்கள் இங்கே ஏலம் விடப்படுகின்றன! ஏலத்தில் வெல்பவர் எல்லாம் மருத்துவரானால் இது எல்லாம் சகஜமப்பா! லட்சக் கணக்கில் பணத்தை வீசி சீட்டு வாங்கினால் விட்டதை எப்போதுதான் பிடிப்பதாம்! இந்த அழகில் இவர்கள் அனைவரும் கிராமங்களில் ஒரு வருட காலம் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் இருக்கிறது! கிராமங்களைக் கடவுள் காத்திடுவாராக!

 3. அதே சமயம் சேவை நோக்கத்தோடும் மனித நேயத்தோடும் பணியாற்றி மக்கள் சேவை செய்யும் பல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களின் உயரிய சேவைகளை நம் கவனத்தில் கொண்டு பாராட்டவும் மறக்கக்கூடாது!

 4. ‘மருத்துவர்கள் தங்கள் கவனக் குறைவால், கேட்பவர்களின் இரத்தம் உறையக் கூடிய ஒரு செயலைச் செய்துள்ளனர். ஆம் அந்த 23 குழந்தைகளுக்கும் எச்ஐவி பாதித்த ரத்தத்தை அந்த மருத்துவர்கள் செலுத்தியுள்ளனர். ‘

  ~ இது கவனக்குறைவால் ஏற்பட்ட செயல் அன்று. இது ஒரு பேயாட்டத்தின் விளைவு. எச் ஐ வி நோயாளிகளிடம் இரத்தம் காசு கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். அதை விற்றும் இருக்கிறார்கள். இத்தகைய ஈனஜன்மங்கள் இருக்கும் நாட்டில் தூக்குத்தண்டனையை எப்படி விலக்க முடியும்? இந்தக்குற்றத்துக்கு ஏற்ற தண்டனை யாக தூக்குத்தண்டனையை சட்டம் விதிக்க வேண்டும். இது தமிழ்நாட்டிலும் நடக்கிறது. இன்று[18 09 2011] லண்டன் டைம்ஸ் தகவலொன்று நம்மை தலை குனியவைக்கிறது: பொய் சான்றிதழ்கள் கொடுப்பதில் நம் டாக்டர்களில் கை வரிசையை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *