தூக்கு தண்டனையினை ஏன் ஒழிக்க வேண்டும்?

6

டு

ஆசிரியர் குழு,

வல்லமை மின்னிதழ்,

இந்தியா.

 

தூக்குதண்டனையினை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் நியாயமான நிகழ்வுகளை யோசித்து இதை சொல்கிறார்களா என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.

குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது என்பது காலங்காலமாக எல்லா நாடுகளிலும் நடந்துவருகின்ற செயல்கள்தான்.  விசாரிக்கும் முறையும், கொடுக்கப்படும் தண்டனைகளும் குற்றங்களுக்கு தகுந்தவாறும், நாடுகளுக்கு தகுந்தவாறும் வேறுபடும் என்பது மட்டுமே உண்மை.  இதில் அரபு தேசங்களில் தண்டனைகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்பது நாம் படித்தறிந்த… கண்டறிந்த உண்மைகள்தான். இதில் மரண /தூக்கு தண்டணைகளும் அடங்கும்.  இந்த தண்டனையினை மேல் நாடுகளில் விஷ ஊசி மூலம் நிறைவேற்றுபவர்களும் உண்டு.  மின்சாரத்தின் மூலமாக “மின்சார நாற்காலியில்” உட்கார வைத்து இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவர்களும் உண்டு.  இவை இரண்டும் இன்றுவரை மேல் நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள்தான்.  நமது நாட்டில்தான் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றும் முறை காண்பதற்கு கொஞ்சம் கடுமையாக, விகாரமாக இருக்கிறது என்பது எனது எண்ணம்.  நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் நிலையிலும் இந்த “தூக்கு தண்டனை”யினை அனைவருக்கும் கொடுத்துவிடுவதில்லை.  செய்யும் குற்றங்களை ஆராய்ந்து அதன் கொடுஞ்செயல்களின் தன்மையினை நன்கு ஆராய்ந்து தான் அதிகபட்ச தண்டனையான “தூக்குதண்டனை” வழங்கபடுகிறது.

இப்படி வழங்கப்படும் “தூக்கு தண்டனை”ணைய இப்போது அரசியல்வாதிகள் தங்களது சுயநலத்துக்காக கேலிப் பொருளாக்கிவிட்டர்கள் என்பது வருந்ததக்க ஒன்று.  தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடுபவர்கள், இன்றைய தூக்கு தண்டனை கைதிகளின் அன்றைய செயல்களை கொஞ்சமாவது யோசித்து பார்த்தார்கள் என்றால், இவர்கள் இப்படி பேச மாட்டார்கள். தொன்னூற்று மூன்றம் ஆண்டு மும்பாயில் நடந்த குண்டு வெடிப்பில் மரணம் 259 பேர், காயமடைந்தவர்கள் 713 பேர், 2003ம் ஆண்டில் டெல்லி மும்பாய் குண்டு வெடிப்பில் இழப்பு 57, காயம் 225 பேர், 2008 நவம்பர் 26, மரணம் 166 பேர், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஆயிரத்துக்கும் மேல் – இது தவிர அரசியல் சம்பந்தமாக கொல்லப்பட்ட தலைவர்கள் கணக்கு வேறு உள்ளது.  இப்படி மனித உயிர்களின் மதிப்பு தெரியாமல் அவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லும் கொலை குற்றவாளிகளுக்கு அவர்கள் குற்றம் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்ட பின்னும் அவர்களுக்குத் தகுந்த தண்டனை நீதிபதிகளினால் வழங்கப்பட்ட பின்னும் அந்த தண்டனைகளை உடனடியாக நிறைவேற்றாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது அந்த “சட்டத்துக்கும் நீதிக்கும் செய்யும் மரியாதை குறைவாகவே” தோன்றுகிறது.  இது போன்ற நிகழ்வுகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளை நிறைவேற்றாமல் அந்த கைதிகளுக்கு பாதுகாப்புக்காக செலவிடப்படும் தொகை சில லட்சங்கள்…கோடிகள்… என சில புள்ளிவிபர கணக்குகள் சொல்கின்றன.  இந்த லட்சங்கள்… கோடிகள்… நாடு முன்னேற்றத்துக்கு செலவு செய்யலாமே…! இல்லை நாட்டின் அன்னியக்கடனை கொஞ்சமாவது அடைக்கலாமே..!

நாம் நாட்டை முன்னேற்றமான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இது போன்ற குண்டுவெடிப்பு இழப்புக்கள் மேலும் நமது நாட்டில் நிகழாமல் தடுக்கவேண்டுமென்றால் அதிகபட்ச தண்டனையான “தூக்கு தண்டனை”யை ஒழிக்கக் கூடாது.  தண்டனையின் தன்மையினை வேண்டுமென்றால் மேலை நாடுகளில் உள்ளது போல “விஷ ஊசி”, மின்சார நாற்காலி போன்ற சாதனங்கள் மூலமாக நிறைவேற்ற வேண்டும்.  அப்போதுதான் நமது நாட்டின் பாதுகாப்பு பலப்படும்.  வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவி குண்டுவைத்து கொடுமை செய்பவர்களுக்கு இந்தியாவில் மாட்டிக் கொண்டால் மரண தண்டனை நிச்சயம் என்ற பயம் வர வேண்டும்.  இல்லை என்றால் இந்தியா ஒரு இளிச்சவாய் நாடு.  இங்கு சென்று குற்றங்கள் செய்தால் நமது வீட்டுக்கு நிறைய பணம் குற்றம் செய்யத் தூண்டுபவர்களால் கிடைக்கும்…! நமக்கு இந்திய சிறைச்சாலைகளில் ராஜ மரியாதையுடன் விதவிதமான உணவு வகைகளை உண்டபடி காலம் தள்ளி விடலாம் என்ற எண்ணமே தீவிரவாதிகளின் மனதில் உண்டாகி, நாட்டின் வளர்ச்சியினை அந்நிய சக்திகள் தடுக்க காரணமாகிவிடும் என்பதுதான் உண்மை.  எனவே, அதிக பட்ச தண்டனையான “தூக்கு தண்டனையினை” கண்டிப்பாக ஒழிக்க கூடாது.  குற்றம் செய்பவர்களின் குற்றங்களுக்கு தகுந்தவாறு சரியான நீதிவிசாரணைக்குப் பிறகு நீதிபதிகளினால் கொடுக்கப்படும் தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டுமே தவிர இந்த தண்டனையில் காலதாமதம் தேவை இல்லாமல் நீடிக்கக் கூடாது.  அரசாங்க பணத்தை வீணாக்க கூடாது.

 

சித்திரை சிங்கர்,
அம்பத்தூர்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “தூக்கு தண்டனையினை ஏன் ஒழிக்க வேண்டும்?

  1. இது, சித்திரைச் சிங்கரின் தனிப்பட்ட கருத்தாகும். வல்லமையின் கருத்தாகக் கொள்ள வேண்டாம்.

    மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, ஒருவர் குற்றமற்றவர் எனத் தெரியவந்தால், அதனால் ஏற்பட்ட இழப்பை எதைக் கொண்டும் சரிசெய்ய முடியாது.

    நம் நாட்டில் வழங்கப்படும் நீதி, ஒவ்வொரு நீதிபதிக்கும் நீதிமன்றத்துக்கும் வேறுபடுகிறது. இந்த நீதியை, சாட்சிகளின் அடிப்படையில் வழங்குகிறார்கள். எவ்வளவு வழக்குகளில் வாக்குமூலம் கொடுத்தவர்கள், பிறழ் சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள்! எத்தனை பேரிடம் சித்திரவதை மூலம் வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள்… என்பதை எல்லாம் என்ணிப் பார்த்தால், இவற்றின் அடிப்படையில் வழங்கும் நீதியையும் நாம் கவனத்துடனே அணுக வேண்டும்.

    குற்றம் சாற்றப்பெற்றவர், செய்ததாக நிரூபணம் ஆனாலும், எந்த மனநிலையில் அதனைச் செய்தார் என்பது மிக முக்கியமானது.

    எனவே, உயிரை எடுப்பது அரசே ஆனாலும் அது கொலையே. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது. மேலும் அகிம்சை வழியில் ஒருவரின் மனமாற்றத்தைக் கொணருவதைத் தம் நோக்கமாகக் கொண்ட காந்தியைத் தேசப்பிதாவாகக் கொண்ட இந்தியா, மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என்பதே என் தனிப்பட்ட கருத்து.

  2. தூக்கு தண்டனை பற்றி.. ஒரு வழக்கில் ஒரு நபருக்கு எதிராக ஒருவர் பொய் சாட்சி
    சொல்லி அவருக்கு மரண தண்டனை வழங்கப் படுகிறது. பின்னர் பொய் சாட்சி
    சொன்ன நபர் பொய்யர் என்பது தெரிந்தால் அந்த நபரையும் தூக்கில் போடலாம்
    என்கிறது சட்டம். ஆனால் நிரபராதி சாகடிக்கப் பட்டுவிட்டாரே! எனவே மரண தண்டனை
    தேவையில்லை என்று வாதம் வைக்கப்படுகிறது. அந்த மாதிரி வழக்குகளுக்கு
    அது சரிதான். ஆனால் வள்ளுவர் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வேண்டும்
    என்கிறார். இந்தக் கருத்து ஐக்கிய நாடுகள் சபையில் நம்மவர்களால் சொல்லப்பட்டுள்ளது.
    “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
    களை கட்டதனோடு நேர்” என்ற குறளில் பயிரைக் காக்க களையை எடுப்பதுபோல்
    நன் மக்களைக் காக்க தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டும் என்கிறார்.
    இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

  3. அப்சல் குரு வை விடுதலை செய்! கசாப் – ஐ விடுதலை செய்! வீரப்பனை விடுதலை செய்! வெங்காய வெடியை விடுதலை செய்! அய்யோ தலை சுத்துதே! யாராவது சோடா குடுங்கப்பா!

  4. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, ஒருவர் குற்றமற்றவர் எனத் தெரியவந்தால், அதனால் ஏற்பட்ட இழப்பை எதைக் கொண்டும் சரிசெய்ய முடியாது.

    iஇது எல்லா தண்டனைக்கும் பொருந்துமே. ஒரு தண்டனையும் நிறைவேற்ற முடியாதே அது பரவாயில்லையா! எல்லாக் குற்றங்களும் சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதி கருணை மனு சட்டசபைத் தீர்மானம் என்று போன பின்னும் கூட நிறைவேற்றாமல் இருக்க இந்த வாதம் பயன்படுமே பரவாயில்லையா?

  5. நாம் நாட்டை முன்னேற்றமான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இது போன்ற குண்டுவெடிப்பு இழப்புக்கள் மேலும் நமது நாட்டில் நிகழாமல் தடுக்கவேண்டுமென்றால் அதிகபட்ச தண்டனையான “தூக்கு தண்டனை”யை ஒழிக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.