நார்வே தமிழ் திரைப்பட விழா – அறிவிப்பு

0

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்த நார்வே தமிழ் திரைப்பட விழா மூன்றாவது முறையாக வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நார்வே நாட்டின் தலைநகர் ‘ஆஸ்லோ’ (Oslo) மற்றும் ’லாரண்ஸ் கூ’ (Lawrence Co) ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது.

ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் இத்திரைப்பட விழா, கடந்த இரண்டு ஆண்டுகளை விட, முற்றிலும் வேறுபட்ட பல புதிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற இருக்கிறது.

இந்த திரைப்பட விழாவில் வழங்கப்படும் பெருமைக்குரிய ‘தமிழர் விருது’ மற்றும் இதர பிரிவுகளுக்கான விருதுகளுக்கு தமிழ் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் கலந்துகொள்ளும் திரைப்படங்கள் 01.01.2011 இல் இருந்து 31.12.2011 தேதிக்கு முன் வெளியானப் படங்களாக இருக்க வேண்டும்.

நல்ல தரமான தமிழ்த் திரைப்படங்களை நார்வேயில் வாழும் தமிழர்களுக்கும், நார்வே நாட்டு குடிமக்கள் மற்றும் சர்வதேச மக்களின் பார்வைக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் வசீகரன் சிவலிங்கம் என்பவரால் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் இத்திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும், நல்ல தரமுள்ள தமிழ்ப் படங்களிலிருந்து 15 படங்களைத் தேர்வு செய்து 25 பிரிவுகளில் ‘தமிழர் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.

மேலும் உலகத் தமிழ் சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஏனைய சினிமா கலைஞர்களை நார்வே நாட்டில் ஒன்றிணைத்து அவர்களை கெளரவப்படுத்துதல், தமிழ் சினிமாவில் பணியாற்ற ஆர்வமும், திறமையும், ஆற்றலும் உள்ள இளைஞர்களைத் தேர்வு செய்து தமிழ் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்ள விரும்புவர்களுக்கான நிபந்தனைகளையும், முக்கிய குறிப்புகளையும் விழா குழுவினர்கள் கூறியிருக்கிறார்கள்.

திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள்:

-தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாளப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

-திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப்படுத்துவதாக அமையவேண்டும்.

-உலகத் தமிழர்களின் இன்ப, துன்பங்களைப் பேசுவதாகவும், தமிழர்களின் நியாயமான விடையங்களுக்கு பாதகமற்ற முறையில் இருக்க வேண்டும்.

-தமிழ் இலக்கியங்கள், தமிழர் வரலாறு சார்ந்த திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

-மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களும், வேற்றுமொழியில் இருந்து தழுவலாக வருகின்ற திரைப்படங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது.

-திரைப்படத்தின் கால அளவு மூன்று மணி நேரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

-தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களை திரையிடுவதற்கான வடிவங்கள் (Format) DCP, Digi-Beta, Blu-Ray அல்லது DVD யாக இருக்க வேண்டும்.

-போட்டிக்கு வரும் திரைப்படங்கள் 01.01.2011இல் இருந்து 31.12.2011 தேதிக்கு முன் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும்.

-நார்வேயில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படாத, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட நல்ல திரைப்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

-திரையிடப்படும் திரைப்படங்கள் ஆங்கிலத்தில் எழுத்துவடிவில் (Sub-Title) இருக்க வேண்டும்.

-நார்வே திரைப்பட விழா தேர்வுக் குழுவில் தேர்வு செய்யப்படும் படங்கள் மட்டுமே விழாவுக்கு தகுதியானதாக ஏற்றுக் கொள்ளப்படும். தேர்வு செய்யப்படாதற்கான காரணங்கள் சொல்லப்படமாட்டாது.

-நார்வே திரைப்பட விழா தேர்வுக் குழுவால் நிராகரிக்கப்படும் திரைப்படங்களை திருப்பி அனுப்புவதற்கான செலவினை படத்தை அனுப்புபவரே ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பப்படாது.

-தேர்வு செய்யப்படும் சில திரைப்படங்கள் ‘தமிழர் விருது’ போட்டிப் பிரிவில் திரையிடப்படலாம் அல்லது சிறப்புக் காட்சிகளாகவும் காண்பிக்கப்படும்.

குறும்பட போட்டிக்கான் விதி முறைகள்:

-தமிழ் மொழி, தமிழர்கள் சார்ந்தவையாக இருக்க வேண்டும்.

-இணைய தளங்களில் ஏற்கனவே வெளியான குறும்படங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.

-நார்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

-ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.

-குறும்படங்கள் 25 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

-குறும்படங்கள் வந்து சேரவேண்டிய கடை தேதி 15.02.2012

திரைப்படங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி:

-உங்கள் திரைப்படங்கள் 15.01.2012 முன்னதாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

-தேர்வுக் குழுவினர் பார்வைக்கான DVD இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.

-தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் விழா அமைப்பினரின் www.ntff.no என்ற இணையதளத்திலும், தமிழ் நாடிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படும்.

முக்கிய குறிப்புகள்:

-தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களில் இருந்து தமிழர் விருது பெறுகின்ற இரண்டு சிறப்பு கலைஞர்களுக்கு மட்டும் பயணச் சீட்டு வழங்கப்படும். இந்த கலைஞர்கள் நார்வே தமிழ்த் திரைப்பட விழா குழுவினால் தேர்வு செய்யப்படுவார்கள்.

-தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களின் ஏனைய கலைஞர்கள் வர விரும்புகிற பட்சத்தில் விசா உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து, அதற்கான செலவுகள் மட்டும் விழாக் குழுவால் வழங்கப்படும்.

-நார்வே நாட்டில் தங்குமிட வசதிகள், உணவு, உபசரிப்பு போன்ற வசதிகள் விழா குழு சார்பில் வழங்கப்படும்.

-தமிழ்நாடு தவிர்த்த ஏனைய நாடுகளில் இருந்து வரும் கலைஞர்கள் தங்கள் செலவை தாங்களே பொறுப்பு ஏற்கவேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *