சேவாலயா பள்ளியில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழாக் கொண்டாட்டம் – செய்திகள்
திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா சேவை மையத்தில் 27.12.2011 அன்று காலை 11.00 மணியளவில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழாக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக டாக்டர்.ஜெகன் மூர்த்தி, (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அரக்கோணம்) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மனிதனின் வேண்டுதல்கள் பலவாயினும் வேறுபாடுகள் இறைவனிடம் இல்லை. இந்த எண்ணம் இறைவனிடம் இருப்பதால் தான் இந்த சிறிய கிராமத்தில் சேவாலயாவை திரு.முரளிதரன் மூலமாக இறைவன் நிறைவேற்றியிருக்கிறார். மேலும் இந்த குழந்தைகளின் சிரிப்பினிலே நான் இறைவனைக் காண்கிறேன். ஏழைகளாய் பிறப்பது தவறல்ல. அவ்வாறு வாழ்வது தான் தவறு. இயேசு பிரானும் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தான் பிறந்தார். பிறக்கும் இடம் முக்கியமல்ல அவர் வாழ்கின்ற வாழ்க்கையே மற்றவர்க்கு அவரை அடையாளம் காட்டுகிறது. துன்பங்கள் பல நேர்ந்திடினும் இயேசு பிரான் மக்களுக்கு அன்பையும் இரக்கத்தையுமே போதித்தார். இயேசு பிரானின் நற்செய்திகளை ஏற்று நடந்தாலே உலகம் அமைதியாய் இருக்கும் என்று கூறினார்.
மாணவர்கள் நல்ல தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் மேற்கொண்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்றும், சேவாலயாவின் சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக செய்து வருவதை பாராட்டினார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்க்கு ரூ.25000, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.10000 அதனை ஊக்குவிக்கும் ஆசிரியர்களுக்க ரூ.10000 வழங்கப்படும் என உறுதியளித்தார்.
திரு. பாதிரியார் பென்னி, அவர்கள் ஆற்றிய உரையில் நட்சத்திரங்கள் பலவாயினும் நிலவு ஒன்று தான், அது போல் மதங்கள் பலவாயினும் அவைகள் போதிப்பது அன்பு ஒன்று தான். குழந்தைகளாகிய நீங்களும் சிறு வயதிலிருந்தே பிறரிடம் அன்பு செலுத்துங்கள். மேலும் வரும் புத்தாண்டில் சேவாலயா மேலும் பல சேவைகள் புரிய நான் இறைவனை வேண்டுகிறேன் என்று கூறினார். ஆண்டின் இறுதியில் கொண்டாடப்படும் இந்த திருவிழா அடுத்த ஆண்டின் அமைதி வாழ்க்கைக்காக அமையும் அஸ்திவாரம் என்று கூறினார். மேலும் சேவாலயா எல்லா மத விழாக்களையும் கொண்டாடுவது தமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
விழாவில் டிக்குருஸ் குழுவினர் நடத்திய சிலம்பாட்ட சாகசங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை செய்த மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கிறிஸ்துமஸ் தாத்தா அனைத்து குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் கேக் மற்றும் இனி்ப்புகள் வழங்கி நடனத்தோடு அனைவரையும் மகிழ்வித்தார்கள். மேலும் இவ்விழாவில் சிங்கப்பூரை சேர்ந்த செல்வி.சிங், புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.சீனிவாசன், பாக்கம் திரு.சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.வி.முரளிதரன் அவர்கள் வரவேற்க, அறங்காவலர் திரு.E.லட்சுமி நாராயணன் அவர்கள் நன்றி நவில விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.