பத்திரிகைச் சுதந்திரத்தின் பரிசு

0

சக்தி சக்திதாசன், இலண்டன்

sakthidasanபணம் பாதாளம் மட்டும் பாயும் என்பார்கள். பத்திரிகைச் சுதந்திரம் எதுவரை நீளும், நீள முடியும்?

கடந்த வாரம் முழுவதும் பனியினால் உறைந்து கிடந்த இங்கிலாந்து நாட்டிற்கு கிடைத்த ஒரேயொரு உஷ்ணவெளி 2018ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்தாட்டப் போட்டி நடக்கவிருக்கும் நாடாக இங்கிலாந்து தெரிவு செய்யப்படும் என்னும் நம்பிக்கை ஒன்றேதான்.

என்ன இது, ஏதோ ஒரு கால்பந்தாட்டப் போட்டிக்கு இத்தனை முக்கியத்துவமா? என்னும் உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது.

பொருளாதார வீழ்ச்சியினைத் தடுக்கும் பொருட்டு இங்கிலாந்தின் புதிய கூட்டணி அரசாங்கம் அறிவித்த பொருளாதார கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அதன் மூலம் மக்கள் எதிர்கொள்ளப் போகின்ற வேலையில்லாத் திண்டாட்டம், பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான கட்டணத்தை உயர்த்தும் பொருட்டு அறிவித்த புதுத் திட்டத்திற்கு மணவர் மத்தியிலே எழுந்துள்ள உத்வேகப் போராட்டம் இத்தனைக்கும் மத்தியிலே நாட்டை இறுகப் பிடித்திருக்கும் பனிமழையின் தாக்கம்.

இவை இங்கிலாந்து நாட்டுப் பிரஜை ஒவ்வொருவரினதும் மனநிலையை குன்றச் செய்திருக்கும் வேளையிலே….. “இதோ பாருங்கள் 2018ஆம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் எமது நாட்டிலே நடக்கப் போகிறது” என்னும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றையாவது மக்களுக்கு கொடுத்தால் தாம் எடுக்கும் அதீத பொருளாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் தீவிரத்தைக் கொஞ்சம் திசை திருப்பலாம் என்னும் நப்பாசை, இங்கிலாந்தின் கூட்டணி அரசாங்கத்துக்கு வருவது இயற்கையே.

அது மட்டுமல்ல, கால்பாந்தாட்டத்தின் தாய்நாடு என்னும் பெயர் பெற்றிருக்கும் இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்ட அணி, உலகக் கோப்பையைத் தட்டி ஏறத்தாழ 34 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசியாக அவர்கள் உலகக் கிண்ணத்தைத் தட்டியது, அப்போட்டி 1966ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலே நடைபெற்ற போது என்பதனால் அதேபோல அப்போட்டி திரும்பவும் தமது நாட்டிலே நடந்தால் தமக்கு அக்கிண்ணத்தைத் தட்டிச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்காதா? என்னும் ஒரு ஏக்கம், மக்கள் மனத்தில் இருந்தது என்பதும் உண்மையே.

fifa

இப்போட்டி 2018ஆம் ஆண்டு எங்கு நடைபெறப் போகிறது என்பதைத் தீர்மானிக்கும் குழுவான உலகக் கால்பந்தாட்ட நிர்வாகக் குழுவினரிடம் தமது கோரிக்கையைச் சமர்ப்பித்து, அவர்களைத் தம்பால் இழுப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்த நாடுகளுடன் இங்கிலாந்தும் தொற்றிக் கொண்டது.

இதற்காக இங்கிலாந்து நாடு ஒரு நிர்வாகக் குழுவினரை அமைத்தது. இதில் பிரபலமானவர்கள் பலர் (இங்கிலாந்தின் அதிசிறந்த உதைப் பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம் உட்பட) இடம் பெற்றார்கள். இதற்காக இக்குழு சுமார் நான்கு வருடங்களாவது பணிபுரிந்திருக்கும். இங்கிலாந்தின் சார்பில் 14 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் செலவிடப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

இத்தனை முக்கியத்துவம் கொடுத்து இவ்வேற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் வேளையிலே, இறுதி முடிவை அறிவிக்க இரண்டு வாரமே இருந்த நிலையில் இங்கிலாந்து நிர்வாகக் குழுவினருக்கு ஒரு பேரிடி காத்திருந்தது.

உலகக் கால்பந்தாட்ட நிர்வாகக் குவினரைச் சேர்ந்த அங்கத்தினர் சிலரின் நடவடிக்கைகள் மீது சந்தேகக் கண் கொண்ட பார்வையை இங்கிலாந்து தேசிய தொலைக்காட்சிச் சேவையான பி.பி.ஸி. தனது நிகழ்ச்சி ஒன்றினூடாக வீசியது.

bbcஇக்குழுவினரின் அங்கத்தினர் சிலர், சில வருடங்களுக்கு முன்னால் தமது நாட்டில் உலகக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகளை நிகழ்த்தும் கோரிக்கையை முன்வைத்த நாடொன்றிடமிருந்து அக்கோரிக்கையை வெற்றி பெறச் செய்ய லஞ்சம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டு இந்நிகழ்ச்சியின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்படப் போகிறது என்பதை அறிந்ததுமே உலகக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் நம்நாட்டில் நடக்க வேண்டும் என்னும் எமது நாட்டின் கோரிக்கை பரிசீலிக்கப்பட இன்னும் இரண்டு கிழமைகளே இருக்கும் நிலையில் இந்த ஒலிபரப்பை இப்போது பி.பி.ஸி ஒலிபரப்ப வேண்டுமா? என்னும் சர்ச்சை எழுந்தது.

அரசாங்கம் தலையிட்டு இதனை நிறுத்த வேண்டுமென்ற ஒரு சாராரின் கோரிக்கைக்கு “எமது நாடு ஜனநாயக நாடு, சட்டங்களுக்கு அமைய ஒலிபரப்பப்படும் எந்த ஒரு நிகழ்சியையும் நடத்தும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு. நாம் இதில் தலையிடப் போவதில்லை” என்னும் பதில் அரசாங்கத் தரப்பிடமிருந்து வந்தது.

அதைத் தொடர்ந்து இம்முடிவுகள் அறிவிக்கப்படும் கடைசி வாரம், சுவிட்சர்லாந்துக்கு இங்கிலாந்தின் இளவரசர் சார்ல்ஸின் மூத்த புதல்வர் இளவரசர் வில்லியம், இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன், இங்கிலாந்தின் முன்னாள் உதைபந்தாட்ட அணித் தலைவர் டேவிட் பெக்கம் ஆகிய மூவரை உள்ளடக்கிய குழு விஜயம் செய்தது.

இவர்களின் முக்கிய நோக்கம், பி.பி.ஸி ஒளிபரப்பிய நிகழ்ச்சியினால் இங்கிலாந்தின் வெற்றிக்குரிய சந்தர்ப்பம் தாக்கப்பட்டிருக்குமானல் அதைச் சரிசெய்யும் பொருட்டு, உலக உதைபந்தாட்ட நிர்வாக குழுவினருடன் சுமூகமான உறவு நிலையை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள்து ஆதரவை இங்கிலாந்து நாட்டின் கோரிக்கையின் பால் திரட்டுவதே.

வார இறுதியில் இங்கிலாந்து முகாமைச் சேர்ந்தவர்கள், 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் இங்கிலாந்திலேயே நடைபெற வேண்டும் என்ற தமது கோரிக்கை வெற்றி பெறுவது நிச்சயம் என்னும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

இங்கிலாந்தைப் போலவே இப்போட்டிகள் தமது நாட்டில் நடைபெற வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்த ரஷ்ய நாட்டின் பிரதமர் புதின் அம்முடிவுகள் அறிவிக்கப்படவிருந்த ஸ்விட்சர்லாந்து நாட்டிற்குத் தாம் போகப் போவதில்லை என்று அறிவித்தார்.

இதற்கான காரணங்களில் ஒன்றாக இவ்வுலகக் கால்பந்தாட்ட நிர்வாகக் குழுவினரில் சிலர் லஞ்சம் பெற்றார்கள் என்பது அவதூறான குற்றச்சாட்டு எனவும் அதை ஒளிபரப்பிய பி.பி.ஸி நிறுவனத்தின் நாட்டின் பிரதமர் பங்குகொள்ளும் அதே நேரம் தான் செல்ல முடியாது என்பதை முன்வைத்தார்.

இத்தகைய ஒரு முக்கியமான முடிவு அறிவிக்கப்படும் வேளையிலே தமது நாட்டிற்கான ஆதரவினைப் பெறுவதற்காக ரஷ்யப் பிரதமர் அங்கே செல்லாதிருப்பது ரஷ்யா அம்முடிவு தமக்குச் சாதகமாக அமையாது என்னும் முடிவுக்கு வந்துவிட்டது என்னும் வகையில் அவதானிகள் கருத்து வெளியிட்டார்கள்.

ஆனால் நடந்தது என்ன?

அனைவரும் அதிசயிக்கும் வகையில் 2018ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்ல 2022ஆம் ஆண்டு நடைபெறும் இதே போட்டி, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து மக்களுக்கும், மொத்த நாட்டிற்குமே மிகுந்த ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. அவர்களது கனவு, பெய்த இடைவிடாத பனிமழையுடன் சேர்ந்து உறைந்து போயிற்று.

முப்பெரும் சிங்கங்கள், இங்கிலாந்து திரும்பி வந்தார்கள். மூலை முடுக்கெல்லாம் இங்கிலாந்து நாடு தோல்வியடைந்ததற்கான காரணங்களைக் கண்டறியும் அறுவைச் சிகிச்சை ஆரம்பமாகி விட்டது.

பி.பி.ஸி அத்தகைய ஒரு நிகழ்ச்சியை இப்போதுதான் ஒளிபரப்ப வேண்டுமா? ஒரு இரண்டு வாரங்கள் பொறுத்திருக்க முடியாதா? நாடு மிகவும் சோர்வடைந்த நிலையிலே இருக்கும் போது, நாட்டைக் கொஞ்சம் தெம்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கக்கூடிய ஒரு அறிவித்தலை எமக்குச் சாதகமில்லாமல் ஒரு தேசிய தொலைக்காட்சிச் சேவை செய்திருக்க வேண்டுமா? இவர்களுக்குத் தேசப் பற்றே கிடையாதா? என்பது போன்ற பல விமர்சனங்கள் பி.பி.ஸி சேவைக்கு எதிராக வைக்கப்படுகின்றன.

மறுபக்கம்,

எமது நாடு, நூற்றாண்டு ஜனநாயக மரபின் வழிமுறைகளைக் கொண்டது. ஜனநாயக நாட்டின் முக்கிய உரிமை, ஊடகச் சுதந்திரம். அது தேசிய சேவையானால் என்ன? தனியார் சேவையானால் என்ன? மக்களின் முன்னால் தம்மிடமுள்ள உண்மைகளை அம்பலத்துக்குக் கொண்டுவருவதுதான் ஊடகத் தர்மம். அதனால் எமது நாட்டிற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் பறிபோகும் என்பதனால் அதை மூடி மறைப்பது, துரோகத்தனமான செயல் என்னும் வாதம் பி.பி.ஸிக்குச் சார்பாக வைக்கப்படுகிறது.

பி.பி.ஸி. நிகழ்ச்சியினால் நடைபெற்ற அனர்த்தமல்ல, இது. இத்தகைய ஒரு உலகப் போட்டி, முன்னனி நாடுகளை விட்டு வெளியே இருக்கும் நாடுகளுக்கும் பரவ வேண்டுமானால் அப்போட்டி நடைபெறும் எல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும். அதன் காரணமாகவே ரஷ்யா, கத்தார் போன்ற நாடுகளுக்கு இச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டது, இது முன்னரே நன்கறியப்பட்ட விடயம் என்கிறார்கள், விடயமறிந்த அவதானிகள் பலர்.

இது முன்னரே தெரிந்திருந்தால் நாடு இருக்கும் பொருளாதாரச் சிக்கல் நிலையில் 14 மில்லியன்ஸ் ஸ்ரெலிங் பவுண்சை ஒரு நடைபெறமுடியாத நிகழ்விற்காகச் செலவு செய்தது தேவையா? என்னும் வாதம் எங்கோ ஒரு மூலையில் இருந்து எழுகிறது.

அனைத்தையும் படிக்கும் போது மனத்தில் ஒரு கேள்வி, பூதாகரமாக எழுகிறது. பத்திரிகைச் சுதந்திரத்தின் நீளம் எத்தகையது? அதன் எல்லை தேசப் பற்றுக்குள் அடங்க வேண்டுமா? இல்லை, மனுதர்மத்தின் கடைக்கோட்டை அண்மிக்க வேண்டுமா?

சிந்திக்க வேண்டிய கேள்வி. சிந்திப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *