எழுத்து நூலாவது இப்படித்தான்

0

தி.சுபாஷிணி

சென்னையில் ஒரே பரபரப்பு! மக்கள் வெள்ளம்! அறிவின் பிரவாகம் பொங்கிச் சாலையெல்லாம் வழிந்து ஓடுகிறது! வாகனங்கள் ஈடு கொடுக்க இயலாது திணறுகின்றன. போக்குவரத்துக் காவலர்கள் விழிகள் பிதுங்கி நிற்கின்றனர். பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளியின் வளாகத்தில் நடக்கும் 35-வது புத்தகத் கண்காட்சிக்கு செல்லும் வழியில் தான் இந்த அறிவுக் கொண்டாட்டம். படைப்பாளிகளும், படைப்புகளும் பறந்து செறிந்து கிடக்கும் நூல் திருவிழா!

சாகித்ய விருது பெற்ற காவல் கோட்டக்கார சு. வெங்கடேசன், சென்ற ஆண்டில் இதே விருது பெற்ற சூடிய பூ சூடாத நாஞ்சில் நாடன், சாரல் விருதாளர் தாமிரபரணி ஆற்று மண்ணின் மைந்தர் வண்ணதாசன், தாகூர் விருதைத் தாங்கியும் யாமத்தின் பாதுகாப்பில் உலக இலக்கிய தொடர் சொற்பொழிவாளர் எஸ். இராமகிருஷ்ணன் என பற்பல படைப்புலக பிரம்மாக்கள் கூடிக் குளிரும் திருவிழா!

இவர்களின் எண்ண அலைகளின் பகிர்தல் அளித்த பிரமிப்பில் வாசர்கள் களிக்கும் களிப்புத் திருவிழா! பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் – பல நூறு பதிப்பகங்களின் கடைகள், தங்களின் கதையோ, கவிதையோ, கட்டுரைகளோ, நாவலோ தொகுப்பாக வெளி வந்திருக்கும் சில புதிய படைப்பாளிகளின் செம்மாந்த நடைகள் – அட்டைப் பட வடிவங்களின் வண்ணப் புரட்சிகள்! – இவையெல்லாம் கூடிய மிரட்சிகளின் திருவிழா!

சிந்தனைகள், எண்ணங்கள், மதிப்பீடுகள் என அனைத்தும் கருக்கொண்டு உருவாகி, வடிவாகி, விரல்களின் மீட்டுதலால் உருவான எழுத்துக்கள்….. ஒவ்வொரு எழுத்துப் பரல்களும் இணைந்து சொற்களாய், சொற்றொடர்களாய், கட்டுரைகளாய், கவிதைகளாய், கதைகளாய், புதினங்களாய் பிறப்பெடுத்து பதிப்பகங்கள் நோக்கி பயணமாகின்றன. பதிப்பகத்தார் “வாருங்கள்! வாருங்கள்!” என உடனடியாக வரவேற்று விடமாட்டார்கள். கதைகளாய் சென்றோமானால் கட்டுரைகள் வேண்டுமென்பார்கள். கட்டுரைகளாய் அவர்கள் முகம் நோக்கினால் சுய முன்னேறம் பற்றியவை என்றால் நலம் என்பார்கள். கவிதையாய் நின்றோமானால் “அடடா! கவிதகளுக்கு நூலக ஆணை கிடைக்க மாட்டேனென்கிறதே!” என அலுத்துக் கொள்வார்கள். “சமையல் குறிப்புகளும், சோதிட நூல்களுக்கும் தான் இப்போ மவுசு!” என்பார்கள். இரபல எழுத்தாளர்கள் என்றால் பதிப்பகம் அவர்கள் வீட்டு வரவேற்பரையில் தவம் கிடக்கும். பதிப்பகம் அசந்து மறந்த நிலையில் நம்மை மதித்து விட்டால், புத்தகக் கண்காட்சியில் நாமும் பெருமையுடன் வலம் வரலாம்! நண்பர்களைக் கூட்டிச் சென்று களிக்கலாம்!

எழுத்துக்கள் பதிப்பகம் அடைந்துவிட்டால், அதன் அடுத்த கட்ட பயணம் கணினியில் அமர்வது தான். கணினித் தரவு உள்ளீட்டாளர்களின் (DTP) திறமை இங்கு நமக்கு மிகவும் தேவை. எவ்வாறெனில் எழுத்தாளர்களின் எழுத்து அவர்களுக்கும் புரிய வேண்டும். அவற்றைப் படித்து பொருண்மையை உள்வாங்கிக் கொண்டார்களானால் பிழைகளை எழுபத்தைந்து சதவீதம் குறைத்து விடலாம்! எழுத்தாளர்களோடு அவர்களும் பயணிக்க வேண்டும். முதல் நிலை பிழை திருத்தத்தில் திருத்திய படிகளில் உள்ள குறியீடுகளுக்குத் தகுந்தவாறு நிறுத்தக் குறிகள் இடுவது, பொருட்பிழைகள் திருத்துவது, விடுபட்டதைச் சேர்ப்பது, மீண்டும் மீண்டும் வந்ததை நீக்குவது என பல திருத்தங்கள் செய்யப்படும். அடுத்த கட்டம் கணினியில் பிழை திருத்தம் செய்வது தான். இதில் திருத்தங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இதற்குப் பின் நூலின் வடிவம் (டெமி, கிரௌன்) முடிவுசெய்யப்படும். குறிப்பிட்ட ஃபாரம் எண்ணிக்கைகளில் நூலை அமைப்பார்கள். அதற்கேற்றபடி விரித்தோ, சுருக்கியோ, உள்ளடக்கியோ பொருந்துமாறு செய்யப்படும். நூலின் முதற்பக்கம், முன்னுரை, பதிப்புரை, பொருளடக்கம் என வரிசைப்படுத்தப்படும். எழுத்துரு(Font) படிப்பதற்கு எளிதாகவும், பார்ப்பதற்கு அழகாகவும்இருக்கவேண்டும். அட்டையின் வடிவமைப்பின் போது, எழுத்தாளரோ அல்லது பதிப்பகத்தாரோ, தமக்கு என்ன வேண்டும் என்பதை, தெளிவாகக் கூறினால், அதற்கேற்றபடி அவர்கள் வடிவமைத்துவிடுவர். புத்தகத்தின் அழகே அதன் வடிவமும் நேர்த்தியான அட்டையும் தான்! இவை தான் முதலில் வாசகரைக் கவரும் அம்சங்கள்.

இப்பொழுது புத்தகம் அச்சிடும் நிலையில் தயார். அச்சிடப்படும் காகிதத்தின் தரமும் அதி முக்கியமானது. நூலில் உள்ள விஷயங்கள், காலத்திற்கும் நிற்பது போல், தரமான காகிதங்களில் அவற்றை அச்சிடுவதுதான் அந்நூலுக்கு மரியாதை, அல்லவா! பதிப்பகத்தார் அதை உணர்ந்து செயல்பட்டாக வேண்டும். அச்சுக்கூடம் தேர்ந்தெடுப்பதிலும் அவர்களிடம் நம் வேலையைக் கொடுப்பதிலும் தெளிவும் திட்டமும் இருந்தால் பணியைப் பெறுவதில் இடர் நேரிடாது. அட்டைப்படம் அச்சிடுதல் என்பது தனித்துறையாக விளங்குகிறது. நூலின் பக்கங்களைத் தொகுத்து சிறு சிறு தொகுதியாய் தைத்து சேர்த்து பைண்டின் செய்யப்படும். நூலின் அட்டையாக கனத்த அட்டையைப் பயன்படுத்துவார்கள். ஆனால் நூலக ஆணைக்கு இம்முறையை பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அவர்கள் அதற்குரிய விலையைக் கொடுப்பதில்லை. கிளாசிக் அணிவரிசை என்னும் வகையில் சில குறிப்பிட்ட எண்ணிக்கைகளுக்கு இந்த முறையில் செய்கின்றனர். மற்றபடி Soft Bound எனும் நூல் தாள்களை பசையால் ஒட்டி வடிவமைத்து விடுகின்றனர். இவ்வாறு வடிவம் பெற்றவுடன் அவைகள் முறையாகக் கட்டப்பட்டு மிகவும் பத்திரமாக அச்சுக்கூடத்திலிருந்து பதிப்பகம் வந்தடைந்து விடுகின்றன. பின் விற்பனைக்கு வந்து வசகர் கைகளில் அழகான தவழும் குழந்தையாய் வந்து அமர்ந்து விடுகிறது. இப்பணிகளில் எந்த ஒன்றையும் நாம் தவிர்த்தாலும் நூலின் தரம் மாற்று குறைந்துவிடும் என்பதில் நம் கவனம் இருக்கவேண்டும்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் நூல் உருவாகும் கதையை சந்தியா பதிப்பகத்தின் கடையில் பார்த்தது நான் மெய்சிலிர்த்து விட்டேன்! ஒரு நூல் கொணர அவர்கள் படும் சிரமம் எவ்வளவு என நான் உணர்ந்தேன். நாம் எவ்வளவு எளிதாக “ஏன் சார்? என் புத்தகத்தை நீங்கள் வெளியிட இவ்வளவு தாமதம்!” என எளிதாகக் கேட்டு விடுகிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.