சு.கோதண்டராமன் 

சோதி வழிபாட்டின் துவக்கம்.

அம்மையார் போற்றிய எம்மான் சுடலையில் நடனம் ஆடுபவன். சுடலையில் எப்பொழுதும் பிணம் சுடு தீ எரிந்து கொண்டிருக்கிறது. பெருமான் கையிலும் ஒரு பெருந் தீ எரிந்து கொண்டிருக்கிறது.  சூரியனும் சந்திரனும் அவனது இரு கண்களாக விளங்க, தீ அவனது மூன்றாவதான நெற்றிக்கண்ணாக உள்ளது. அவன் கண் விழித்துப் பார்த்தால் காமன் ஒண்பொடியாக ஆகி விடுகிறான். அவன் கையிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பினால் முப்புரங்களும் வெந்து அழிகின்றன. 

அம்மையார் இறைவனின் உருவத்தைப் பலவாறு வர்ணிக்கிறார். அவன் தழற் கொண்ட சோதிச் செம்மேனி எம்மான். சிவந்த நீண்ட சடை, நெற்றியில் ஒரு கண். கறுத்த கண்டம். தலையிலும் மார்பிலும் பாம்புகள். இடையில் புலித் தோல், யானை உரி. காலில் சிலம்பும் கழலும். ஒரு பக்கத்தில் உமை. மறு பக்கத்தில் திருமால். இப்படி எல்லாம் சொல்லால் வர்ணித்தாலும் அம்மையாரால் இறைவனின் இத்தகைய உருவத்தை மனக் கண்ணால் காண முடியவில்லை.

சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீயின் நடுவே, கையிலும் தீ ஏந்தி, தீப் போன்ற சிவந்த உடலுடன், அழல் வாய்ப் பேய், அழல் கண் பேய் இவற்றின் துணையோடு நடனமாடும் இறைவனை நினைத்தால் அந்தத் தீத் திரளின் சுவாலையில் மற்ற உருவ அடையாளங்கள் மறைந்து போய் சோதி வடிவம் ஒன்றே அவரது மனதில் தங்குகிறது.  

அதனால் தான் அவர் அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன், இன்றும் திருவுருவம் காண்கிலேன் என்றும் சுடருருவில் எரியாடும் எம்மான் என்றும், காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றும் என்றும் ஈசன் திருவுருவம் மின்னுஞ் சுடருருவாய் மீண்டும் மீண்டும் என் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்றது என்றும் நொந்தாத செந்தீ அனையான் என்றும் வர்ணிக்கிறார். இப்படித் தீ வடிவமாக நின்றாலும் அவன் உடல் எப்பொழுதும் குளிர்ந்து தான் உள்ளது. தீயைத் தீ சுடுமா?     

பஞ்ச பூதங்களும் அவனே என்றாலும் தீ மட்டும் அவனுடைய சிறப்பு வடிவமாகக் கருதப்படுவதற்கு வித்திட்டவர் அம்மையார். இறைவன் மாலுக்கும் அயனுக்கும் அளப்பரியன் என்று அம்மையார் சொன்னதையும் சேர்த்துப் பின்னர் வந்த மூவர் முதலிகள் காலத்தில் மாலயன் காணாப் பேரழலாக நின்றான் ஈசன் என்று ஒரு புராணக் கதை தோற்றுவிக்கப்பட்டது. 

இந்தத் தீ வடிவத்தைச் சம்பந்தர்  தன் ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடலில் போற்றினார். வேதமும் தீ வழிபாட்டை முக்கியமாகக் கொண்டதால் வேத நெறியும் சைவ நெறியும் வேறுபாடற்றதாக இணைந்தன. வேத முறைப்படி வேள்வி செய்ய இயலாதவர்களும் தீ வடிவினனான சிவனை வணங்குவதன் மூலம் துயர் நீங்கி நலம் பெற முடியும் என்ற கருத்து வளர்ந்தது. சைவம் மக்கள் சமயமாக மலர்ந்தது.

  

படத்திற்கு நன்றி: http://amitishsoni.blogspot.com/search/label/TANDAV

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.