கனம் கோர்ட்டார் அவர்களே! – 7

0

இன்னம்பூரான்

நாற்பது வருடங்களுக்கு முன்னால் உச்சநீதி மன்றத்தின் கேசவானந்த பாரதி வழக்குத் தீர்வு (AIR 1973 SC 1461) எனப்படுவது பெரிதும் பேசப்பட்டது. அரசியல் சாஸனத்தை நிலை நிறுத்தி வைத்து, அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சொத்து சுதந்திரம் பறி போகாத வகையில், நாடாளுமன்றத்தின் எல்லையை நிர்ணயித்த வகையில் அமைந்தது அந்தத் தீர்ப்பு. சட்டத்தின் மேலாண்மையை (தி ரூல் ஆஃப் லா) உறுதிப் படுத்த நீதித்துறை, இவ்வாறு நீதியின் வாய்மையை (ஜுடீஷியல் ஆக்டிவிசம்) ராஜபேரிகையென ஒலிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

2ஜி உரிமங்களை ரத்துச் செய்து, வரலாறு படைக்கும் உச்சநீதி மன்ற தீர்வு ஒன்று இரண்டு நாட்களாக, மக்களிடையே திமிலோகப் படுகிறது. மத்திய அரசை ரவுண்டு கட்டி விளாசும் இந்தத் தீர்வை முழுமையாகப் படித்தால், அதனுடைய தாக்கத்தின் தீவிரம் அறிய இயலும். 

  1. சொற்களைச் சுழற்றிப் பொய்யை மெய்யாக்கியிருக்கிறார்கள், டெலிகாம் இலாக்கா; அதாவது இந்தியாவின் மத்திய அரசு. இது வஞ்சகம்.
  2. அது யாது என்றால், “முதலில் வந்தவருக்கு முன்னுரிமை.” இயற்கையின் கொடையாகிய இந்த மின்னலைகளை அரசு, மக்களின் அறங்காவலராகப் போற்ற வேண்டும். கலப்படமற்றத் திறந்த வெளி ஏலம் தான் சிறந்தது. இடம், பொருள், ஏவல் கருதினால், “முதலில் வந்தவருக்கு முன்னுரிமை.” சுத்த ஹம்பக், டுபாக்கூர்.
  3. இந்த வஞ்சகம் அருண் ஷெளரி, மஹாஜன், தயாநிதி மாறன், ஆ.ராஜா எல்லாரும் நாட்டுக்குச் செய்த பாதகம். 
  4. எனவே, பற்பல உரிமங்களை ரத்துச் செய்ய நேரிடலாம்.
  5. இப்படித் தெனாலிராமன் குதிரை மாதிரி முன்னும், பின்னும் கால் வைத்தால், சர்வதேச வர்த்தகம் அடிபடும். அதற்கு அஞ்சிச் சுத்த ஹம்பக், டுபாக்கூர் ஆகிய தடித்தனத்துடன், குடித்தனம் செய்யலாமா?
  6. இத்தனைக்கும் சுக்ராம் காலத்திலேயே அவர் நமக்கு துக்ராம் ஆக இருந்ததும் வெட்ட வெளிச்சம்.
  7. ஆடிட்டர் ஜெனரலுக்கு ஜே!

இந்தக் கட்டுரை ‘தி ரூல் ஆஃப் லா’ வுக்கும், ஜுடீஷியல் ஆக்டிவிசத்திற்கும் ஒரு சிறிய அறிமுகத்தின் முதல் பகுதி. எனவே, 2ஜி அவலத்தைப் பற்றி ஓரளவு தான் எழுதப்படுகிறது. 2ஜியும், ஒரு கமிட்டி சொன்ன மாதிரி எஸ்.ஜியும் நம்பிக்கைத் துரோகங்கள் என்பதுடன், இங்கு நிறுத்தி விடப்படுகிறது. போதாக்குறைக்குச் சனிக்கிழமை (04 02 2012) சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஆடிட் ரிப்போர்ட் வேறே ஒரேடியாக நெருடுகிறது. யாராவது கேட்டால் பார்க்கலாம். பாசாங்காக உறங்குபவர்களை எழுப்ப முடியாது, அல்லவா!

அரசாங்கத்தின் தராசுப் படிநிலையான நீதித்துறை, எல்லா விருப்பு, வெறுப்புகளையும் பாரபட்சமின்றி விலக்கி வைத்து, வாய்மைக்கு முதலிடம் அளிக்க வேண்டும். இந்தத் தீர்வு அவ்வாறு அமைந்தது என்க. ஒரு தனி மனிதரின் விண்ணப்பத்தை ஆராய்ந்து, தன்னிச்சையாக, முறை தவறி, லஞ்சமும், ஊழலும் கரை புரண்டோடிய டெலிகாம் துறையினால் அளிக்கப்பட்ட 122 2ஜி உரிமங்களை ரத்துச் செய்து விட்டது. மூன்று கம்பெனிகளுக்குத் தலா ஐந்து கோடி ரூபாய் அபராதம். 2ஜி உரிமங்களை மறுபடியும் கண்ணியமான முறையில் வழங்க வேண்டும். அதற்கானச் சட்ட பூர்வமான அமைப்பின் பரிந்துரைகளை மனதில் கொண்டு நான்கு மாதங்களுக்குள் அரசு உரிய முறையில் ஏலம் நடத்தி, அவற்றை வழங்க வேண்டும். அக்காலத்து அமைச்சர் ஆ.ராஜா முற்றும் தகாத முறைகேடான வகையில் வழங்கிய இந்த 122 2ஜி உரிமங்களால் வந்த வருமானம் வெறும் 9000 கோடி. அதை விடக் குறைவான 3ஜி உரிமங்கள் தந்த வருமானம் 69000 கோடி. இதிலேயிருந்து கொள்ளையின் பரிமாணம் புரியும். இது இப்படி இருக்க, சில ஊடகங்கள் கேட்கிற மாதிரி, ஆடிட்டர் ஜெனரலில் நஷ்டக்கணக்கு (1.76 லட்சம் கோடி) எந்த விதத்தில் தவறு என்று தான் தோன்றுகிறது. எஸ்.ஜி. பேண்ட் விவகாரங்கள் எந்தப் பூதத்தைக் கிளப்புமோ? 

இந்தத் தொடரில் ஏற்கனவே அரசுத் துறைகளின் (சட்டம் இயற்றுவது, நிர்வாகம், நீதி வழங்கல்) செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சட்டம் இயற்றும் பொறுப்பைச் செவ்வனே செய்யாத பிரதிநிதிகள், அவர்களைத் தேர்ந்தெடுத்த ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று தான் தோற்றம். நிர்வாகக் கோளாறுகள் ஏற்படுவதற்கு, அளவுக்கு மீறிய அதிகாரம், அடுத்தவன் வீட்டில் புகுந்து புறங்கை நக்கும் அரசியலாரின் பேராசை, மக்கள் விழிப்புணர்ச்சியை இழந்தது ஆகியவை காரணம். 

தணிக்கைத் துறையின் கண்காணிப்பு, தேர்தல் ஆணையத்தின் கார்வார், நீதித்துறையின் ஜுடீஷியல் ஆக்டிவிசம் இல்லையெனின் நாடு கவிழ்ந்து விடும், மக்கள் சூறையாடப்படுவர், ஜனநாயகம் வீழ்ந்து விடும். பல நாடுகளில் இந்த ஜுடீஷியல் ஆக்டிவிசம் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதைப் பற்றியும், உலகிலேயே நடுநிலைத் தீர்ப்புக்கள் வழங்கி, என்றென்றும் போற்றப்படும் நீதிபதிகள் (டென்னிங்க்ஸ் பிரபு- இங்கிலாந்து, ஜஸ்டிஸ் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ்-  அமெரிக்கா, ஜஸ்டிஸ் வீ.ஆர். கிருஷ்ணையர்-இந்தியா) சட்டத்தின் மேலாண்மையை எடுத்துரைத்ததை நாம் மறக்கலாகாது. கொள்ளையடித்தவனைக் கேளுங்கள், “சட்டம் தன் வேலையைச் செய்யும்” என்பான். அரசியலரும் அவ்வாறே பகருவர். இரு தரப்பும் தனிமொழியில் “சட்டம் ஒரு கழுதை” என்பார்கள். சட்டம் ஒரு கழுதை தான். மற்றவர்களின் அழுக்குப் பொதியையும் சுமக்கிறது அல்லவா!

(தொடரும்) 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *