விஜயவாடாவில் நானும் தேவாவும் சேர்ந்து போட்ட இந்த மூன்றாவது நாடகத்தை மறக்கவே முடியாது. அப்படி மறக்க முடியாத அளவுக்கு அனுபவங்கள் கொடுத்த  நாடகமும் கூட இதுதான்.

விஜயவாடாவில் 1980 – ல் புஷ்கரம் வந்தது. (மகாமகம் போலப் பன்னிரண்டு வருடத்துக்கு ஒரு முறை வரும் கிருஷ்ணா நதி புஷ்கரம்). இந்தப் புஷ்கரம் வரும் போதெல்லாம் கூடவே நகரத்தில் பல புதிய கட்டடங்களும் சாலைகள் விரிவு படுத்தலும் நடந்து கொண்டே இருக்கும். அந்தச் சமயத்தில்  எழுந்ததுதான் தும்மலபள்ளி கலாக்ஷேத்ர ஆடிட்டோரியம். வந்த புதிதில் மிக அழகான வடிவமைப்பாகவும் நகரத்துக்கே களை தரும் கலை அரங்கமாக இருந்தது என்னவோ உண்மைதான். அனைத்து வசதிகளும் கொண்ட அரங்கம் முதன் முதலாக விஜயவாடாவில் அதுவும் மாநகராட்சியினர் இப்படிக் கட்டி இருக்கிறார்கள் என்ற ஆச்சரியமும் ஆனந்தமும் உண்டானதால், ‘இந்த ஆடிட்டோரியத்தில்  நாடகம் போட்டால் என்ன!’ எனத் தோன்றியது. தேவாவும் உடனே ஆமோதித்தான்.

முதலில் சில இடர்ப்பாடுகள் தோன்றின. அரங்கத்தில் ஏறத்தாழ ஆயிரம் பேர் அமரலாம் என்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நாடகம்  போட வேண்டும். அப்படிப் போட்டால்தான் தமிழ்க்கூட்டம் வரும்.  புதிதான அரங்கம் என்பதாலும் அந்தக் காலத்து அதிநவீன வசதிகள் உள்ளதாலும் அவ்வளவு எளிதாக எங்களால் ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த அரங்கத்தை வாடகைக்குப் பெற முடியவில்லை. இந்தச் சமயத்தில்தான் எங்களுக்கு என்று ஒரு தெலுங்கு அமைப்பாளர் எங்களிடம் மாட்டினார். இவர் எங்களுக்குத் தெரிந்தவர்தான். கொஞ்சம் அரசியல் செல்வாக்கும், பிரமுகர்களின் பக்க பலத்தையும் கொண்டவர் கூட.

‘உங்களுக்கு ஏன் சிரமம்? இந்த நாடகத்தை நம் அமைப்பின் பேரிலேயே போடலாமே. பெரிய ஆட்களையும் கூப்பிட்டு விழாவைக் கிராண்டாகச் செய்யலாம். நீங்கள் ரிகர்சல் போட்டுக் கொண்டு உங்கள் வேலையைப் பாருங்கள். நாடக நாளன்று வந்தால் போதும். கும்பலைப் பற்றிக் கூடக் கவலை வேண்டாம். நாங்கள் தமிழர்களையெல்லாம் விளம்பரத்தின் மூலம் அழைத்து வந்து விடுவோம்,  உங்கள் வேலை நாடகம் போடுவது மட்டுமே. எங்கள் வேலை, அடுத்த மாதம் இத்தனாம் தேதி ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் தும்மலபள்ளி கலாக்ஷேத்திரத்தில் உங்கள் நாடகத்தைப் பேனர் கட்டி மிகவும் கிராண்டாக நடத்துவது, இந்தத் தியேட்டர் உங்களுக்கு எப்படியாவது கிடைக்கச் செய்வது, என் பொறுப்பு நிம்மதியாக நீங்கள் போங்கள்’   என்றாரே பார்க்கலாம். ‘ஆஹா இப்படிக் கலைக்காகவே, கலை வளர்வதற்காகவே, கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே, அதுவும் பிற மொழியில் இருந்தால் கூட அவர்களையும் உற்சாகப்படுத்தும் இவரைப் போன்றவரை இன்று வரை சந்தித்ததே இல்லை. இனியும் சந்திப்போமோ.’ என்ற எண்ணம்தான் அப்போது எங்களிடையே வந்தது.

நாங்கள் அவர் அப்படி உறுதியாகச் சொன்னதாலும், அவர் ஏற்கனவே வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்த ஒரு அழகிப்போட்டியில் (!) நானும் தேவாவும் அமைப்பாளர்களாகக் கூட இருந்ததாலும் இந்த நாடக ஏற்பாடுகளை அவரிடம்  ஒப்படைத்து விட்டு எங்கள் எழுத்து வேலைகளையும், நாடகப் பாத்திரங்களைத் தேர்வு செய்வதிலும், ரிகர்ஸலிலும் கவனம் செலுத்தினோம். புதிய ஆடிட்டோரியத்தில் நமது தமிழ் நாடகம் என்றவுடனே நம் நண்பர்கள் பட்டாளம் குதூகலித்தது. ஏற்கனவே கூறியிருந்தபடி நல்ல நடிப்புத் திறமையை முந்தைய நாடகங்களில் காண்பித்திருந்த நம் நண்பர்களும் உற்சாகமாகவே கலந்து கொண்டதாலும், கூடவே எங்கள் மேற்பார்வை மணியின் உற்சாக அதட்டல்களும் சேர்ந்து கொள்ள ரிகர்ஸல்கள் தினமும் களை கட்டினதான். எத்தனை ஆனால் என்ன? நாடகத்தில் உள்ள ஒரே ஒரு பெண் கதாபாத்திரத்தில்  நடிக்கப் பெண்கள் யாருமே கிடைக்கவில்லை. அதுவும் விஜயவாடாவில் அன்றைய நிலையில் நம் தமிழ்க்கூட்டம் ரொம்பவே ஆச்சாரம் பார்ப்பது போலக் கூடச் சமயத்தில் தோன்றியது.

ஒரு உண்மையைச் சொல்லி விட வேண்டும். அந்தக் கால கட்டத்தில்  நாங்கள் நாடகத்தால் சற்றுத் தமிழரிடையே புகழ் பெற்றிருந்தாலும், எங்களிடையே கூடவே பிறந்த நக்கல், கிண்டல் செய்வது போன்றவை எங்களுக்கே இந்த விஷயத்தில் எதிரிகளாக மாறியதால் இந்தக் கிண்டல்களுக்காகவே பயந்து நம் தமிழ்ப்பெண்கள் யாரும் முன் வரவில்லை என்பதும் வாஸ்தவம்தாம். நண்பர்களின் வீடுகளில் உள்ள பெண்கள் கூட ‘வேண்டாம்பா.. அப்புறம் ஏதாவது கிண்டல் செய்வீங்க. நாங்க கட்டாயம் பார்வையாளராவே இருந்து தொலைஞ்சிடறோம்’ என்ற பதில் கிண்டல்தான் கிடைத்தது. அது ஒரு சோகக் கதை கூட. தினமும் யாராவது தமிழ்ப் பெண் நடிக்க முன் வருகிறார்களா என்பதற்காக நேரம் ஒதுக்கி முயற்சி செய்வோம். பலனில்லைதான், ஆனால் நாங்கள் ரொம்ப சீரியஸ் விஷயமாக எடுத்துக் கொண்டோம். சென்னையில் இருந்து சில நாடக நடிகைகளை அழைத்தால் என்ன என்று தோன்றியது. ஒரு சிலர் ஒப்புக் கொண்டார்கள் கூட.

ஆனாலும் அவர்களுக்கு ரிகர்ஸலுக்கு டைம் கொடுப்பது, எங்கே தங்க வைப்பது, எத்தனை நாள், ஏற்படும் செலவுகள் போன்ற பிராக்டிகல் கஷ்டங்கள் ஏராளமாக தெரிந்ததால் சென்னை விஷயம் ஒத்து வரவில்லை. தெலுங்கு நாடக நடிகைகளையே முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது. வேண்டுமானால் அவர்களுக்கு உண்டான தமிழ் வசனங்களைக் குறைப்போமே..

‘இன்னொரு ஐடியா இருக்கிறது..’ என்றான் தேவா. ‘பேசாமல் கதாநாயகி தெலுங்குப் பெண் என்று காண்பித்தால்.. அவள் தெலுங்கும் தமிழும் கலந்து பேசட்டுமே. நம் தமிழ் ஜனங்களுக்குதான் இரண்டு பாஷைகளும் வருமே’ என்றான். இந்த விஷயத்தில் பொதுவாகவே எங்கள் இருவருக்குமே இப்படிப் பாத்திரத்தை மாற்றி அமைக்க விருப்பமில்லைதான் என்றாலும் அப்போதைக்கு வேறு வழி தோன்றாமல் முதலில், ‘வசனத்தைத் திருத்தாமல் முயற்சி செய்து தெலுங்கு நடிகைகள் தமிழில் பேச எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் எனப் பார்ப்போம்’ என்று விஜயவாடாவிலேயே தேட ஆரம்பித்தோம்.

ஆந்திரத்தைப் பொறுத்த வரை விஜயவாடா கலைத்தாயின் தலைநகரம் கூட. தெலுங்கு நாடகக் குழுக்கள் பல இருந்தன. முக்கால்வாசி பௌராணிக நாடகக் கலைஞர்கள் கூட. அப்படிச் சில நாடகக் குழுக்கள் உதவியோடு,  ஒரு சில நடிகைகள் வீடுகளுக்கு நாங்கள் படையெடுத்து அவர்கள் மொழி ஞானத்தை டெஸ்ட் செய்தோம். பலர் எங்கள் பெண் பாத்திரத்துக்கு ஒத்து வராத வயதானவர்களாக இருந்தார்கள். ஒரு பெண்மணி  நல்ல சுத்தத் சுந்தரத் தெலுங்கில் பேசுபவர் (சீதா, மண்டோதரி வேஷங்கள் போடுபவர்). அவர் மண்டோதரியானவள் ராவணன் மடிந்தவுடன் உணர்சசிகரமாகப் பேசப்படும் தெலுங்கு வசனம் பேசி, அழுது கொண்டே பௌராணிகப் பாடலும் பாடிக் காட்டிப் பயமுறுத்தினார். அதன் பலனாக இரண்டு நாள் தூக்கம் கூட போயிற்று.

இன்னொருவர் சற்றே இளமையானவர். பார்ப்பதற்குத் தமிழ்க்களை (!) சொட்ட இருந்ததால் அவர் வீட்டுக்குச் சென்று விசாரித்தோம்.

‘நாக்கு அரவம் அண்டே சால இஷ்டமு’  (எனக்கு தமிழ் என்றால் மிகவும் பிடிக்கும்) என்று ஆரம்பித்த அந்தப் பெண்மணியாரை எங்களுக்கும் மிகவும் பிடித்து விட்டதால் எப்படியாவது நம் நாடகத்துக்குள் இழுத்துச் சேர்த்து விடுவது என்ற முடிவு முதலிலேயே உருவாயிற்று.

‘எல்லாம் சரிம்மா.. கொஞ்சம் தமிழ்லயும் பேசணும்.. நாங்க கத்துத் தந்தா கத்துப்பீங்களா.. அதை அப்படியே ஞாபகம் வைத்து மேடையிலே பேச முடியுமா?’

“அய்ய.. தமிழ் பேசறது ஒரு பெரிய கஷ்டமா?  ஒரியா பாஷை கூட நான் பேசுவேன், தமிழ்லாம் பிச்சு உதறிட மாட்டேனா?”

இப்படித் தெலுங்கில் சொன்னாரே தவிர நாங்கள் சாதாரணமாகப் பேசச் சொன்ன தமிழை அவர்  பிய்த்து உதறியதைக் கண்டு நாங்கள் பயந்து கொண்டு அங்கிருந்து ஓடி வந்தது வேறு விஷயம். இது இன்னொரு அனுபவம் தந்தது. என்னதான் இருந்தாலும் தெரியாத பாஷைக்காரர்களை நாடகத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்வது மிகவும் கடினம் என்பதை உணர்ந்தோம். வீண் முயற்சிதான். கடைசியில் (வேறு வழியே இல்லாமல்) எங்களுக்குத் துணை வந்தது எங்கள் கூடவே இருக்கும் முத்தரசிதான். அவளோ சின்னப்பெண், ‘ஹை.. நானும் நடிக்கிறேனா! சரி சரி..நான் மேடைல பேசணுமா? அண்ணா, என்னோடது ஊமைப் பெண் வேஷமா’ என்று வெகுளியாகக் கேட்டவளைக் கஷ்டப்பட்டுச் சமாதானப்படுத்தி, அவளுக்கான வசனங்களை ஒரேயடியாகக் குறைத்து விடுகிறோம்’ என்றோம்.

தேவா இன்னொரு ஐடியாவுடன் வந்தான். பெண் பாத்திரத்துக்கான வசனத்தையும் நாமே பேசி விடுவோம். அவள் மேடையில் நிற்க வேண்டும். அவள் வசனப் பகுதி வரும் போது, அதாவது,  அவள் முதலில் பேச ஆரம்பிக்குமுன்,  நானோ தேவாவோ அவளைத் தடுத்து நிறுத்தி, ‘நான் சொல்றேன். அதாவது இவள் என்ன சொல்ல வர்ரான்னா, இந்தச் சம்பந்தம் அவளுக்குப் பிடிக்கலேன்னு சொல்றா.. அப்படித்தானே கீதா’  என்று அவளைப் பார்த்துச் சொல்வோம். அவள் ’ஆமாம்’ என மட்டும் (அந்த வார்த்தை கூடப் பேசாமல்) தலையாட்டினால் போதுமானது. இது அவளுக்கும் பிடித்துப் போய் விட்டதால், ‘சும்மா ஜாலியா மேடைல நிக்கறதுதானே’ என்று நினைத்துக் கொண்டு ஒப்புக் கொண்டு விட்டாள்.. கஷ்டகாலம்டா சாமி!

எப்படியோ இந்த விஷயத்தினைச் சமாளித்தோம் என்றால் அடுத்த கஷ்டத்தை எங்களுக்குக் கொடுக்கத் தயாராகக் காத்திருந்தார் அந்த தெலுங்கு அமைப்பாளர். என்னதான் நாடக ஏற்பாடுகளை அவர் செய்து விடுவதாக முழுச்சம்மதமும் தேதியும் கொடுத்திருந்தாலும் அவர் அதற்கான வேலைகளில் துளியும் இறங்கவில்லை என்பது போகப் போகத் தெரிந்தது. ஏன், அரங்கத்தைக் கூட இன்னும் புக் செய்யவில்லை. ஒவ்வொரு முறை பேசும் போதும், ‘எல்லாம் முடித்தாயிற்று. டோண்ட் வொர்ரி,’ என்பவர் நாடகம் நெருங்க நெருங்க எங்களைக் கவலையின் உச்சத்துக்கே இட்டுச் சென்று விட்டார்.

நான் முதலில் சொன்னேன், அவர் எங்களிடம் மாட்டினார் என்று. ஆனால் நாங்கள்தான் இவரிடம் போய் மாட்டினோம். தில்லானா மோகனாம்பாளில் வரும் வைத்தியின் மறு உருவம்தான் இவர் எனபதும் நாள் நெருங்க நெருங்கத் தெரிந்ததும் இடிந்துதான் போனோம். சவடால் பேர்வழி. ‘அடடே தெரிந்து தெரிந்து இந்த ஆள் கையில் மாட்டினோமே, எங்களுக்குத் தெரிந்த தமிழர்களுக்கெல்லாம் தேதி கொடுத்து நோட்டிசு வேறு அனுப்பி விட்டோமே.. என்ன செய்வது!’

தேவா திட்டினான், ‘ஆசைடா உனக்கு. அந்தப் புது ஆடிட்டோரியத்துலதான் போடணுமா? வழக்கமா நம்ம ரயில்வே அரங்கத்திலேயே போட்டுருக்கலாம், ஆனா இப்ப அதை மாத்தக் கூட முடியாது.’  மேற்பார்வை மணியோ ’இந்த ஆள் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டேன். ஆதியிலிருந்தே இந்த ஆள் பற்றிச் சந்தேகம்தான். சரி பாவம், நீங்க ரொம்பத் தீவிரமா அந்தப் புதுசாக் கட்டின ஆடிட்டோரியத்துக்கு ஆசைப்படறிங்கன்னு அப்ப வுட்டுட்டேன். இந்த ஆள் மட்டும் ஏமாத்தினான்னு வெச்சுக்க, அவனை வுட மாட்டேன்’ என்று ரௌசு கட்டினான். எங்கள் நண்பர்கள் பலரும் இதையே சொன்னார்கள்.

ஆனாலும் நாங்களும் விடவில்லை. விக்கிரமாதித்த மகாராஜா விடாமல் இரவில் சென்று முருங்கை மரத்தில் தொங்கும் வேதாளத்தைத் தோளில் பிடித்துப் போடுவது போல, இந்தத் தெலுங்கு வேதாளத்தைப் பொழுதுக்கொரு முறை சென்று பிடித்துக் கொண்டே தோளில் போட்டதால் அந்த வேதாளமும் வேறு வழியில்லாமல் பணம் செலவழித்து யாரையோ பிடித்து சொன்ன தேதியில் அரங்கத்தையும் வாடகைக்கு எடுத்தது. (இத்தனைக்கும் 501 ரூபாய் வாடகைதான், அவர் இந்த நாடகத்துக்குச் செலவழித்ததும் அவ்வளவுதான், அதே சமயத்தில் இவரால் மட்டுமே அந்த நிலையில் சிபாரிசோடு வாடகைக்கு எடுக்க முடியும் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்) ஆனால் மாலை நேரம் கிடைக்கவில்லை. அதே தேதியில் காலை நேரம்தான் கிடைத்தது. இருந்தாலும் என்ன  செய்வது!. வாய் வழியாகவே செய்திகள் பரிமாற்றம் தொடங்கியது. ’இந்த நேரத்தில் நாடகம் தொடங்கும். காலை நேரமானாலும் கஷ்டங்களை மதிக்காமல் நாடகத்துக்கு விஜயம் செய்யுங்கள். ஹால் பெரிய ஹால். ஆகையினால் அனைத்துத் தமிழர்களும் ஒத்துழைப்புக் கொடுங்கள்’  என்று செய்திகளை எத்தனை விரைவாகப் பரப்ப முடியுமோ அத்தனை விரைவாகப் பரப்பினோம்.

நல்ல வெய்யில்.. ஆனாலும் நம் ஜனங்கள் எங்களை ஏமாற்றவில்லை. கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது கூட. நாடகமும் நல்லபடியாக நடந்தது.

விஜயவாடா தும்மலபள்ளி கலாக்ஷேத்திரத்தில் முதன் முதலாக நாடகம், அதுவும் தமிழ் நாடகம் அரங்கேற்றிய பெருமையும் பெற்றோம்.

அதே சமயத்தில் இந்த முத்தரசி மேடையில் நின்று அவள் வசனங்களுக்கு உதட்டசைக்க ஆரம்பிக்குமுன்,  நாங்கள் (நானும் தேவாவும் எப்போதுமே பாடிகார்ட் போல பக்கத்திலேயே இருக்கிறோமே) உடனே அவள் என்ன பேசப் போகிறாள் என்பதை முந்திக் கொண்டு அவள் பேசும் வசனங்களைச் சொல்ல, அந்தப் பெண் நாங்கள் படும் கஷ்டங்களை வெகு இண்டெரெஸ்டாகப் பார்த்துச் சிரித்து ரசித்துக் கொண்டிருந்ததையும் இங்கே சொல்லி விட வேண்டும். அத்தோடு விடாமல் நாடகம் முடிந்தபின் ‘அண்ணா, நான் எல்லா டைலாக்’ லாம் மறக்காமல் சொல்லிட்டேன்.. பார்த்தீங்களா’ என்று தனக்குச் சர்டிஃபிகேட் கேட்டுப் பெற்றதும் வேறு கதைதான்..

ஒரு பெண் தேடுகிறோம்.. என நாடகத்துக்குப் பெயரிட்டது கூட ஒரு சிம்பாலிக்கான தலைப்பாகவும் அமைந்து விட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “ஒரு பெண் தேடுகிறோம்

 1. இந்தக் கட்டுரைக்கு முதல் நன்றி வல்லமை ஆசிரியருக்கு. கட்டுரை கொடுத்தும் புகைப்படம் கொடுக்காமல் இருந்ததால் பல நாட்கள்  பொறுமை காத்தமைக்கு.

  இரண்டாவது நன்றி தேவா வுக்கு. முப்பது வருடங்களுக்கும் முன்பான போட்டோக்களை இன்னமும் பாதுகாத்து வைத்திருந்தாலும் எங்கு வைத்தோம் என மறந்து போய் எல்லா இடங்களிலும் தேடித் தேடிக் கிடைத்து அனுப்பி வைத்த படங்கள் இவை.

  முதல் படம். டைரக்டர் திரு. கே. விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக வந்த போது எங்கள் இருவரோடு அவர். இடது பக்கம் தேவா. வலது பக்கம் நான். திரு விஸவநாத் டைரக்ட் செய்த ‘சங்கராபரணம்’ வேறு அப்போதுதான் வந்து முடிந்த சமயம் அது.

  இரண்டாவது படட். நாடகத்தில் ஒரு காட்சி. மறுபடியும் நானும் தேவாவும் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்டபோது பயப்படும் காட்சி.

 2. சுவை மிகு டக்குரை. அதாவது ‘டக்’ ‘டக்’ ந்னு வர கட்டுரை. உங்களுக்கு பெண் தேடத்தெரியவில்லை. பின்னெ. ‘…இந்தக் கிண்டல்களுக்காகவே பயந்து நம் தமிழ்ப்பெண்கள் யாரும் முன் வரவில்லை என்பதும் வாஸ்தவம்தாம்…’
  வயசு ரொம்ப பால்யம் போல இருக்கிறது. அதான், கிண்டலுடன் கொஞ்சல் கலந்தளிக்கத்தெரியவில்லை. இன்னம்பூரான்

 3.                                             ஹா…ஹ..ஆ அற்புதமான ரியல் ஸ்டோரி ,ரீல் ஸ்டோரியாக ,எடுத்தாள் சூப்பராக இருக்கும் ,pl எடுங்களேன் ,திவாகர் ***தேவா**

 4. பல்துறை வித்தகராய், பன்முக ஆளுமையராய்,
  செல்லிடம் செழிப்பாராய், சேரிடம் சிறப்பவராய்
  தொல்நிலை தேர்வாராய், தொழுதே வாழ்வாராய்
  நல்நிறை நாடகராய், நமக்கோ திவாகரராய்.

 5. நல்ல நாடகம். :))))  அது சரி, நிஜம்மாவே அந்த ஃபோட்டோவில் நீங்களா? அடையாளமே புரியலை! :))))) 

  இந்த அனுபவத்திலிருந்தும் ஒரு கதை பிறக்கும் போலிருக்கே. 

 6. நாடக அனுபவம் அருமை.  நாடகத்தை மீண்டும அறங்கேற்றும் எண்ணம் உண்டா?

 7. Thanks for sharing the sweet memories sir…

  Though not related to this even in anyway, It’s cho sweet and enjoyable to read about this. Wonder, how you would have enjoyed while thinking of those days…!!!

  Great Sir….

 8. adaadadada.. kindal, nakkal innamum pokalai – அவர் மண்டோதரியானவள் ராவணன் மடிந்தவுடன் உணர்சசிகரமாகப் பேசப்படும் தெலுங்கு வசனம் பேசி, அழுது கொண்டே பௌராணிகப் பாடலும் பாடிக் காட்டிப் பயமுறுத்தினார். அதன் பலனாக இரண்டு நாள் தூக்கம் கூட போயிற்று.

  P.S. Swamy – Vallamaila indha captch code checking kodumai thaanga mudiyalai swamy

 9. சுவாரசியமான பதிவு.
  பூப்போட்ட சட்டை போட்டவர்தானே நீங்க?

 10. எளிமையாக, இனிமையாக,…. நாடகம் போடக் கஷ்டப்பட்டதை, ……அது இறுதியில் அளித்த மகிழ்ச்சியைச்…… சுவைபடச் சொல்லியிருக்கீங்க. மேலும் தொடரட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.