பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 36

 

கேள்வி :

இத்தனை காலமாக இந்தியாவின் ஒரே செம்மொழி என்று கூத்தாடப்பட்டு வந்த வடமொழிக்கு இல்லாத, அதேபோது தமிழுக்கு மட்டுமே இருப்பதாக, நிறுவப்பட்ட சிறப்புகள் எவை? அவை நிறுவப்பட்ட பின்தான் – வேறுவழியின்றி – நம்மை மைய அரசு ‘கண்டு’ கொண்டதாக அறிகிறேன். தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இனிமை தனிமை, இளமை, வளமை, இறைமை, மறைமை, தாய்மை, தூய்மை, அம்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறும் செம்மொழிக்கு இலக்கணம் என்று படித்தேன். இவற்றில் வடமொழி பெறத் தவறிய தகுதிகள் எவை? தமிழ் எப்படி அவற்றில் வடமொழியை (பிற உலகச் செம்மொழிகளையும்) முந்துகிறது?– வெ.சீ. ராஜு

பதில் :

செம்மொழி என்ற சொல் classical language என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் புதிதாகக் காலனிய காலத்தில் படைக்கப்பட்ட சொல். தமிழ் இலக்கண மரபில் இந்தச் சொல் கையாளப்படவில்லை. செந்தமிழ் என்ற சொல்தான் உள்ளது. இரண்டுக்கும் பொதுவானது செம் என்னும் அடை. இந்த அடைக்கு நேரான என்னும் பொருள் உண்டு (செங்கோலில் இந்தப் பொருளைக் காணலாம்). இந்தப் பொருளிலேயே இந்த அடை செந்தமிழ் என்னும் சொல்லில் வழங்குகிறது. தொல்காப்பியர் சொல்லதிகார எச்சவியலில் செந்தமிழ்ச் சொல்லே செய்யுளில் வரும் இயற்சொல் என்கிறார். இந்தச் சொல்லைச் செய்யுளில் வரும் திசைச்சொல், திரிசொல், வடசொல்லிலிருந்து வேறுபடுத்திச் சொல்கிறார். இந்தக் கருத்தின் அடிப்படையில் செந்தமிழ் செய்யுள் தமிழ் -அதாவது இலக்கியத் தமிழ்- என்று விளங்கிக்கொள்ளலாம். நேர்தமிழ் என்றால் பழைய இலக்கணம் கூறும் விதிகளிலிருந்து வழுவாத மொழி என்னும் பொருள் வந்துவிட்டது; செம்மையான மொழி என்னும் பொருள் வந்துவிட்டது. இருப்பினும் செந்தமிழின் இலக்கண வளர்ச்சி ஒரே நேர்கோட்டில் இல்லை. காலம்தோறும் மாறி வந்திருக்கிறது; நேற்றைய செம்மை வேறு, இன்றைய செம்மை வேறு.

செந்தமிழ் என்ற சொல்லுக்கு எதிர்மறையாகப் பிற்காலத்தில் வளை தமிழ் என்னும் பொருளில் (கொடுவாளில் இந்தப் பொருளைக் காணலாம்) கொடுந்தமிழ் என்னும் சொல் பிறந்தது. வீரமாமுனிவர் வளையும் தமிழைப் பேச்சு மொழியாகக் கண்டார். இன்றைய மொழியியலில் இந்தச் சொல் கிளைமொழிகளை (dialects) குறிப்பதாகக் கொள்ளலாம்.

செம்மொழியில் உள்ள செம், நேர் என்ற பொருளில் வழங்கவில்லை. Classical என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருளிலேயே வழங்குகிறது. இந்த ஆங்கிலச் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. இதன் பல பொருள்களுக்குச் செம் என்னும் அடை பொருந்தாது. இந்த அடை மொழியோடு சேர்ந்து வரும்போது, பின்வந்த மொழிகளுக்கு வரலாற்றுக் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த, அவற்றுக்கு ஆதர்சமாக விளங்கும், அவற்றுக்கு மூல இலக்கியம் படைத்த மொழி என்ற பொருளில் வழங்குகிறது. ஒரு மொழி இந்தத் தன்மைகளைப் பெறக் காலப் பழமை வேண்டும்; ஆனால் அது மட்டுமே போதாது. எழுத்து வடிவம் பெற்ற சுமேரியன் முதலான மொழிகள் இலக்கியம் படைக்காததால் செம்மொழி எனப்படுவதில்லை. அவை பண்டை மொழி என்றே சொல்லப்படும். இலக்கியம் படைத்த லத்தீன் மொழி காலத்தால் பிந்தியதானாலும் இலக்கியம் படைத்ததால், மேலே சொன்ன மற்ற தன்மைகளைக் கொண்டிருப்பதால் செம்மொழி எனப்படும். இதன் இலக்கியம் லத்தீனிலிருந்து பிறந்த மொழிகளுக்கு ஆதர்சமாக இருக்கும். அதுவே செவ்விலக்கியம். சமஸ்கிருதத்திற்கும் இந்தத் தன்மைகள் உண்டு. செவ்விலக்கியம் இல்லாமல் செம்மொழி இருக்காது. சமஸ்கிருதத்தைச் செம்மொழி என்று முதலில் அழைத்தவர்கள் காலனிய காலத்து ஐரோப்பிய இந்தியவியல் ஆய்வாளர்கள். சுதந்திர இந்திய அரசு இந்தப் பெயர் மரபைத் தொடர்ந்தது.

தமிழுக்குச் செவ்விலக்கியம் இருக்கிறது. இன்றைய தமிழ் இலக்கிய ஆசிரியர்களுக்கு இது ஆதர்சமாக இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பல வகையில் விடை சொல்லலாம். இருப்பினும், தமிழின் கலாச்சார வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த, தனித்தன்மை கொண்ட இதன் சங்க இலக்கியம் செவ்விலக்கியம். பின்வந்த தமிழ் இலக்கியங்கள் இதை ஏற்றும், மறுத்தும், மாற்றியும் வளர்ந்திருக்கின்றன. இந்த இலக்கியத்தைக் கொண்ட தமிழ் செம்மொழி. இது அரசாங்க அங்கீகாரத்தால் வரும் ஒன்றல்ல. சங்க இலக்கியத்துக்கும் அதன் மொழிக்கும் ஒரு குறிப்பிட்ட கால வரையறை உண்டு. இந்தக் காலத்தைத் தமிழின் செம்மொழிக் காலம் என்று சொல்ல வேண்டும். லத்தீனும் சம்ஸ்கிருதமும் தொடர்ந்து இலக்கியம் படைத்துக் – கொண்டிருக்கவில்லையாதலால் இம்மொழிகளின் செவ்வியல் தன்மையில் காலவேறுபாடு காட்டுவதில்லை. தமிழ், கிரேக்க, சீன மொழிகளில் செம்மொழிக் காலகட்டம் என்று ஒரு காலகட்டத்தைச் சொல்லலாம். இவை ஒரு காலகட்டத்தில் செம்மொழிகள்; இன்றைய காலகட்டத்தில் நவீன மொழிகள். அன்று செம்மொழியாக இருந்து இலக்கியம் படைத்து இன்று நவீன மொழியாக இருந்து இலக்கியம் படைப்பது தமிழின் சிறப்பு. கிரேக்கம், சீனம், அரேபியம் போன்ற சில மொழிகளே இந்தச் சிறப்பைப் பெற்றவை. இந்தத் தனிச் சிறப்புக்குக் காரணம் தமிழ் வளையும் மொழியாக இருந்து வளர்ந்ததே.

கேள்வியில் பட்டியலிட்டுள்ள குணநலன்கள் மொழியின் உள்ளார்ந்த தன்மைகள் அல்ல, அவை மனிதர்கள், முக்கியமாக மொழியைப் பேசுபவர்கள், மொழியின் மீது ஏற்றும் தன்மைகளே. தமிழில் நாம் சில சிறப்புத் தன்மைகளை ஏற்றிப் பெருமைப்படுவது போல், வேறு மொழிபேசுபவர்கள் தங்கள் மொழிகளில் சில சிறப்புத் தன்மைகளை ஏற்றிப் பெருமைப்படுவார்கள். மொழிகளிடையே அவற்றின் தன்மைகளைப் பற்றிய போட்டி இல்லை; மொழிகளுக்கு அந்தத் தன்மைகளைத் தருபவர்களுக்கிடையேதான் போட்டி. தமிழின் செம்மொழித் தகுதிக்கு வாரிசுகளாகிய நாம் செய்ய வேண்டிய கடமை உலக அளவில் கிளாசிக் எனப் போற்றப்படும் தகுதி பெற்ற இலக்கியத்தைப் படைப்பதே.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 36

 1. The entite Tamilnadu and Tamil speaking people are agog with the caefully poltically orchestrated ‘semmozhi ‘ mania.

  There are 2 ways in which I look at this. Tamil as a histrical phenomenon and what is a classical language.

  Tamil has a historical continuam going back to 2000 years and a bit more. Like any language, Tamil has undergone historical change.Tamil which we speak today is very different from Tholkappiyar’s Tamil. Due to a lack of proper terminology , we call both Tamil. Therefore calling Tamil as a ‘classical language’ is somewhat unsatisfactory. The first question is which Tamil we mean – Tholkappiyar’s Tamil or today’s Tamil. The political and language movemnets of the 20th century Tamilnadu deliberately obfuscated this. Due to this obfuscation, there has been no historical consciouness, no view of Tamil language as a historical phenomenon, and a conflation of today’s spoken language with langauges of 2000 years old.

  The second point relates to what is a classical language. Tamils immedietely latch on to Prof.George Hart’s letter ( “it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own, not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature.”) and repeat it ad nauseam as if by chanting that mantra, the whole world will begin to respect Tamilians. That the Tamilians have an axe to grind in this matter is obvious. Be that as may, there are other aspects of a classical language which has not been pointed out by Prof. Hart. Edward Sapir has noted in his book ‘Language’ “When we realize that an educated Japanese can hardly frame a single literary sentence without the use of Chinese resources, that to this day Siamese and Burmese and Cambodgian bear the unmistakable imprint of the Sanskrit and Pali that came in with Hindu Buddhism centuries ago, or that whether we argue for or against the teaching of Latin and Greek [in schools] our arguments are sure to be studded with words that have come to us from Rome and Athens, we get some indication of what early Chinese culture, Buddhism, and classical mediterranean civilization have meant in the world’s history. There are just five languages that have had overwhelming significance as carriers of culture. These are classical Chinese, Sanskrit, Arabic, Greek, and Latin. In comparison with these, even such culturally important languages such as Hebrew and French sink into a secondary position.”

  As Sapir has noted one important aspect of a classical language has been it’s influence on different cultures , languages and nations over a long period of time, far from it’s place of origin. By this criteria, Tamil definitely fails as a Classical Language. Tholkappiyar’s Tamil has not been a ‘carrier of culture’ outside Tamil regions. Sapir has even ruled out even languages such as French or Hebrew on this criterion, notwthstanding their outstanding literature which is appreciated world wide.

  Semmozhi Mania among the Tamilians is not a good thing – even for Tamilians. It does nobody any good, apart from the Tamilnadu politicians who have a good diversion and many contractors becomng rich on the vast sums of money spent for it.

  Even if half as much attention and money is given to health and education, it will bring far more productive returns. Mass Ego Boosting by Tamils, suitably massaged by the politicians will only give them an illusion of self-importance.

  Vijayaraghavan

Leave a Reply

Your email address will not be published.