அசோகமித்திரனுக்குச் சாரல் விருது 2011
தமிழின் முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன், 2011ஆம் ஆண்டுக்கான சாரல் விருதினைப் பெறுகிறார். ஜேடி-ஜெர்ரி ஆகியோர் தம் தந்தையர் ராபர்ட் – ஆரோக்கியம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளை, இந்த விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அசோகமித்திரனின் பங்களிப்பு தொடர்பாக இந்த அறக்கட்டளை கூறியுள்ளதாவது:
ஒரு நாடகக் கதாபாத்திரத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்ட அசோகமித்திரன் என்கிற தியாகராஜன் தமிழ் இலக்கிய உரைநடை வரலாற்றின் ஒரு காலகட்டம்.
சக ஜீவன்களின் மீது கரிசனம் ததும்பும் இவரது படைப்புகள் எளிமையானவை. எளிய மனிதர்களின் வாழ்வில் நாம் கண்ட அல்லது காணத் தவறிய சில தருணங்களைத் தன் பார்வையின் வழியே படம் பிடித்தவாரே நமக்கு வேறொன்றை உணர்த்தி விடுபவர் அசோகமித்திரன்.
இதழோரம் புன்னகையை அரும்ப வைக்கும் இவரது ஆக்கங்கள் அதே சமயம் நுனிக்கரும்பின் துவர்ப்பின் கரகரப்பையும் ஒருசேரத் தந்து நம்மை யோசிக்க வைப்பவை.
சுய பிரஸ்தாபமும், தன் முனைப்பும், முன்னிருத்திக் கொள்ளுதலும், குழு மனோபாவமும் இன்றி ஒரு கலைஞன் காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதற்கான சாட்சி இவர்.
செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்து, சில மொழிகளைக் கற்றுத் தெளிந்து, ஐம்பதுகளில் எழுத த் துவங்கிய அசோகமித்திரன் ஆங்கிலத்தில் எழுத முடிந்தும் திருப்தி கொள்ளாமல் இன்றும் தமிழிலேயே எழுதி வருபவர்.
தமிழர் வாழ்வில், கலைகளில், நலனில் அக்கறையுடன் இயங்கி வரும் இவர் , வைதீகத்தை உதறிய அரிய கலைஞன்.
இவருக்கு முன்பு இந்த விருதினை ஞானக்கூத்தன், திலீப்குமார் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்த விழாவின் அழைப்பிதழ் இதோ: