முனைவர் மு.வ. – நினைவலைகள் சில

 

 

பேரா. பெஞ்சமின் லெபோ

புதுச்சேரியின் புகழ் பெற்ற பள்ளி – பெத்தி செமினரி உயர் நிலைப் பள்ளி.. அதில் மூன்றாம் படிவம் படித்துக்கொண்டிருந்த சமயம். அறிவின் மீது அடங்காத தாகம் ; கண்டதையும் படித்து முடித்துவிடவேண்டும் என்ற வேகம் ; தமிழின் மேல் தணியாத மோகம் – எனக்கு! விளைவு, உண்ணும் போது மட்டுமல்ல கண்ணுறங்கும் போது கூடக் கையில் புத்தகத்தோடுதான் இருப்பேன்.அப்போது, முனைவர் மு.வ அவர்களின் அறிமுகம் கிடைத்தது. எப்படி ?

தமிழ்ப் பாடப் புத்தகத்தில் நாலைந்து அதிகாரங்கள் – திருக்குறளில் இருந்து. வகுப்பில் ஆசிரியர் சொன்ன பதவுரை, பொழிப்புரை போதவில்லை. விளக்கம் வேறு எங்கே கிடைக்கும்? தேடினேன்… எங்கள் இல்லத்தில், ஏராளமான தமிழ் நூல்கள் – பழந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் ; பிரஞ்சு, இந்தி, மலையாளம், கன்னடம்…நூல்கள் – இருந்தன. ஏட்டையும் தொடுவது பாவம் எனப் பெண்களை வீட்டுக்குள் பூட்டிவைத்த அந்தக் கால கட்டத்தில், புதுச்சேரி மகளிருள் முதல் முதலாகத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதிச் சிறப்பாகத் தேறிச் சாதனை படைத்துப் பிரஞ்சுப் படிப்பையும் ஆசிரியப் பயிற்சியையும் முடித்து ஆசிரியராகப் பணியில் அமர்ந்தவர் என்னருமைத் தமக்கை அறச்செல்வி கர்மேலா அக்கா அவர்களே. பன்மொழிப் புலவராகத் திகழ்ந்த அவர்கள் முயற்சியால் எங்கள் இல்லத்தில் அருமையான நூலகம் இருந்தது. அஃதென் அறிவுப் பசிக்கு அமுத சுரபியாய் அமைந்தது. அந்தக் கருவூலத்தில்தான் கண்டெடுத்தேன் ‘திருக்குறள் தெளிவுரை’ என்னும் நூலை. பரிமேலழகர் என்ற பேரருவியில் தலையைக் கொடுத்துவிட்டுக் குளிக்கவும் முடியாமல் படிக்கவும் இயலாமல் திக்கு முக்காடிப்போய்த் திசை தெரியாமல் ஓடி வந்த எனக்குக் கோடையிலே கிடைத்த குளிர் தருவாய் அமைந்த அத் தெளிவுரை, தென்றலாகத் தவழ்ந்து வந்தது, தனி இன்பம் தந்தது! மீசை கூட அரும்பா எனக்குக் கூடப் புரிகின்ற அளவுக்கு எளிய நடை, தெளிவான உரை… பாடத்துக்காகப் படிக்கப் போனவன் திருக்குறள் அமுதத்தில் மூழ்கிப் போனேன் – இன்று வரை கரை சேர முடியாமல். ஆசிரியர் யார் என்று பார்த்தேன் – யாரோ டாகடர் மு வரதராசன் என்று இருந்தது. யார் அவர்? அறியேன். எங்கிருக்கிகிறார் ? தெரியாது! இப்படித்தான், முன்னம் அவருடைய நாமம் கேட்டேன் ; மூர்த்தி அவர்தம் கீர்த்தி கேட்டேன் ; பின்னும் அவர் நூல்கள் படித்துப் பார்த்தேன்; பெயர்த்தும் அவர்க்கே பித்தன் ஆனேன்.

வயது வளர வளர மு வரதராசனார் நூல்கள் மேல் ஆர்வம் வளர்ந்தது : ‘கரித்துண்டு’ படித்தேன் ; மனத்தைப் பறிகொடுத்தேன், பாதி நாவல் புரியவில்லை என்றாலும் கூட ; ‘கள்ளோ காவியமோ’ படித்தேன் ; புரிந்தும் புரியாததுமாக இருந்தது. ‘கயமை’ ? படித்து முடித்ததும் பிடித்துப்போயிற்று!அதில் வரும் வில்லனைப் போன்றவர்களை ஒழித்துக் கட்டுவதே என் வாழ்வின் நோக்கம் ஆயிற்று! ஒவ்வோர் ஆண்டும் வளர்ச்சி – உடலில் மட்டும் அல்ல அறிவிலும். அவர் எழுத்துகள் புரிபடத் தொடங்கின ; கருத்துகள் உள்ளத்தில் பதிந்தன ; அவர் நாவல்களில் வரும் நல்லவர்களைப் போல் வாழவேண்டும் என்ற வேட்கை ; தீயவர்களைப் பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்ற வேணவா! இவை யாவும் நான் மட்டும் உணர்ந்தவை அல்ல ; என்னைச் சுற்றி இருந்த நண்பர்களுக்கும் இருந்தன. மு வரதராசன் எங்கள் உள்ளத்தில் அறிஞர் வரதராசனார் ஆனார். அந்தக் காலகட்டத்தில், பெர்னார்ட் ஷா எனக்கு நண்பர் ஆனார் ; திரு வி .க வின் அறிமுகம் கிடைத்தது. எல்லாம் அறிஞர் மு வ அவர்கள் நூல்களால் விளைந்த நன்மைகள்.

மெட்ரிகுலேசன் பள்ளி இறுதித் தேர்வை எழுதி முடித்த பின் கல்லூரி வாசலை எட்டிப் பார்க்கு முன் நாள் தோறும் நண்பர்கள் நால்வர் – செயபால் (இன்று சென்னை தரமணியில் இருக்கும் NERI என்னும் அறியியல் அமைப்பின் இயக்குனராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருக்கும் தலை சிறந்த விஞ்ஞானி, பிலிப் (ஆங்காங்கின் தலை சிறந்த மருத்துவராகப் பணியாற்றிப் பணிநிறைவு செய்த பிறகும் இங்கிலாந்து மருத்துவ மனைகளுக்கு ஆலோசகராக வந்து போகும் மருத்துவ நிபுணர்), கிருட்டிணமூர்த்தி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மேலாளராகப் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே பல்லாண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்துவிட்டவர்), நான் – மாலை வேலைகளில், புதுச்சேரிக் கடற்கரை ஓரம் இருந்த பூங்காவில் அமர்ந்து பலவற்றைப் பற்றி விவாதித்துக்கொண்டு இருப்போம். அப்போதெல்லாம் கண்டிப்பாக அறிஞர் வரதராசனரைப் பற்றிப் பேசாமல் இருக்க எங்களால் இயலாது. அந்த அளவுக்கு மு வ மேல் பற்றும் பாசமும் வைத்திருந்தோம். என்றாவது ஒரு நாள் அவரைச் சந்திக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு, தவம்… என எல்லாமும் ஆயிற்று. எங்களைப் போலவே பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை அவர் எழுத்து ஈர்த்தது ; அவர்க்கு விசிறிகளாக ஆக்கிப் பார்த்தது. எங்களுக்குள் நல்ல வழக்கம் : ஒவ்வொருவர் பிறந்த நாளுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு நல்ல நூல் எதாவது வாங்கிப் பரிசளிப்போம். அப்படித்தான் அந்த ஆண்டு எனக்குப் பரிசாகக் கிடைத்த நூல் : ‘The Treatment of Nature in Sangam Literature’. எங்கள் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய பேராசிரியர் தம் முனைவர் பட்டத்துக்காக எழுதிய ஆராய்ச்சி நூல். அக்காலத்தில் முனைவர் பட்டத்துக்கு எழுதும் நூல், தமிழ் ஆராய்ச்சி நூலாக இருந்தாலும் அதனை ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும். ‘Advanced studies in Tamil prosody ‘ என்ற தலைப்பில் ஆராய்சிக் கட்டுரை வெளியிட்டு முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் தமிழ் அறிஞர், ஏ சி செட்டியார் என அன்புடன் அழைக்கப்பெற்ற அ சிதம்பரநாதன் செட்டியார் ஆவர். அவர் பட்டம் பெற்றது அண்ணாமலைப் பலகலைக் கழகத்தில். சென்னைப் பலகலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் தமிழ் அறிஞர் எங்கள் மு . வரதராசனார். அவரின் அந்த ஆராய்ச்சி நூலைப் பார்த்தாலும் படித்தாலும் பக்க நின்று கேட்டாலும் வேர்ப் பலவாய் இனிக்கும். சங்க கால மக்கள் எப்படி இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதைச் சங்க காலப் புலவர்கள் இயற்கை வழியாகப் புலப்படுத்தும் பாங்குகளை மிகச் சிறப்பாக விளக்கி இருப்பார் அந்த நூலில். என்னை மிகக் கவர்ந்த நூல் அது.

‘ஓவச் செய்தி’ என்ற நூலின் வழியே அகநானூற்றை எனக்கு அறிமுகபடுத்தினார், மு.வ ; முல்லைத் திணை, நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, கொங்குதேர் வாழ்க்கை.எனப் பல நூல்கள் வாயிலாகச் சங்க இலக்கியங்களை அறிய வைத்தார். அவர் எழுதிய ‘சிலப்பதிகாரத்தை’ப் படித்தபோது, இளங்கோவடிகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘கண்ணகியானால் கடுகிப் போ, மாதவியானால் மடிமேல் மேல் வா ‘ என்ற அளவில் கண்ணகி, மாதவி பற்றி மக்கள் கொண்டிருந்த கருத்துகளை இவர் நூல்கள் – ‘கண்ணகி’ , ‘ மாதவி’ – அடியோடு மாற்றி அமைத்தன. கண்ணகி பற்றிய அருமை பெருமைகள் ஒரு படி உயர்ந்தன ; பத்தரை மாற்றுப் பசும்பொன் மாதவி என்று இத்தரை உணரும் வண்ணம் அவளின் உண்மைப் பண்பு நலன்கள் உயர் குணங்களை விளக்கிச் சொன்னவர் இவரே. இப்படிப் பல நூல்கள் வழியே எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இவரை நேரிலே சந்திக்கும் நாள் விரைவில் வரும் என நான் – நாங்கள் – எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், அந்த நாளும் வந்தது ….

புகுமுக வகுப்பு (PUC = Pre University Class) படித்த போது புதுவை அரசு திங்கள் தோறும் ஐம்பது உரூபாக்கள் உதவித் தொகையாகக் கொடுத்தது. (அப்போது அது எங்களுக்குப் பெருந் தொகை !) அதனை வாங்கி அப்படியே வீட்டில் கொடுத்துவிடுவோம். (அவ்வளவு நல்ல பிள்ளைகள் நாங்கள்!) கோடை விடுமுறைக்கு முன் வந்த உதவிப் பணத்தை வீட்டில் கொடுக்க மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி இசைவு பெற்று இருந்தோம். அந்தப் பணத்தைச் செலவு செய்ய திட்டமும் தீட்டி இருந்தோம். முன்னர்க் குறிப்பிட்ட நாங்கள் நால்வரும் சேர்ந்தோம். கூடவே சாய் சங்கர் என்ற வகுப்புத் தோழரும் சேர்ந்துகொண்டார். நாங்கள் ஐவரும் சென்னை செல்வது என்று ஏற்பாடு. அங்கே தங்கத் தன் உறவினர் வீட்டில் ஏற்பாடு செய்து தந்தார் நண்பர் சாய் சங்கர். சென்னையில் என்ன என்ன பார்ப்பது, எங்கு எங்கே சுற்றுவது…என்றெல்லாம் ஏற்கனவே திட்டங்கள் வகுத்தாயிற்று. சென்னை முதல் அனுபவம், வாழ் நாள் முழுதும் மறக்க முடியாதது ; சுவையானது கூட. வாய்ப்புக் கிடைத்தால் பிறகு சொல்கிறேனே!

மறு நாள் – எங்கள் வாழ்வின் பொன்னாள், எங்கள் கனவு நிறைவேறும் நன்னாள்! காலையில் கிளம்பிப் பத்து மணிக்கு முன்னாடியே சென்னைப் பல்கலைக்கழகம் போய் விட்டோம். அங்காடி இங்காடி அங்கே அலைந்து இங்கே அலைந்து ஒரு வழியாகக் கர்ப்பக் கிரகத்தை நெருங்கி விட்டோம், இதய தெய்வத்தைத தரிசிக்கும் ஆவல் நொடிக்கு நொடி சுரம் போல் ஏறிக்கொண்டு இருந்தது. அந்தச் சமயம்தான் நந்தி வழி மறித்தது. – “அப்பாயன்ட்மென்ட் வாங்கினீங்களா?” என்று. “ஐயாவைப் பார்ப்பதற்காக வெகு தொலைவில் இருந்து வந்திருக்கும் ஏழை மாணவர்கள் நாங்கள்” என்று விளக்கிச் சொல்லிக் கெஞ்சிய பின்பு மன்ம் இரங்கிய வாயிற் காவலர் உள்ளே சென்றார். திக் திக் மனத்தோடு காத்திருந்தோம். சற்று நேரம் கழித்து வந்தவர், எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்!

யாரைப் பார்ப்பது பெரும தவப் பயன் என எண்ணி இருந்தோமோ அவரே எங்கள் முன் அமர்ந்து இருக்கிறார்! எங்களால் நம்பவே முடியவில்லை. இராமர் முன் நிற்கும் அனுமனாகக் கை கட்டி வாய் புதைத்து நாங்கள் நிற்க அன்பு ததும்பும் விழிகளால் எங்களை அளவெடுத்த படியே அமரச் சொல்கிறார். என்னவெல்லாமோ பேச வேண்டும் என்று எண்ணி வந்த நாங்கள் ஒன்றும் பேச நா எழாமல், பக்திப் பரவசத்தில் மிதந்துகொண்டு இருக்கிறோம். அவரே பேச்சுக் கொடுத்து எங்கள் ஊர், பெயர்கள் பள்ளி, எங்கள் எதிர்காலப் படிப்பு…பற்றி எல்லாம் விசாரிக்கிறார். கனவில் உரைப்பதுபோல் பதில் சொல்கிறோம்.

அச்சமயம் சென்னைப் பலகலைக் கழகம், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தது. மூன்று தொகுதிகளாக வெளிவர இருந்த அதில் முதல் தொகுதி அப்போதுதான் வெளிவந்த நேரம். அதனை நாங்கள் வாங்க விரும்புகிறோம் என்று சொன்னதும், அங்கே உள்ள ஸ்டேட் பாங்கில் பணம் கட்டி அதன் சலானைப் பலகலைக் கழக நூல் விற்பனைப் பிரிவில் கொடுத்து நூலைப் பெற வேண்டும் என்பதை விளக்கி, வாயிற் காவலரை அழைத்து எங்களில் ஒருவரை அவரோடு அனுப்பி நூலகளை வாங்கி வரச் செய்தார். அவற்றில் தம் கையொப்பத்தையும் பொறித்துத் தந்தார். அந்த அகராதியைப் பதிப்பிக்கும் முனைவர் அ சிதம்பரநாதன் செட்டியார் தற்போது அங்கே இருப்பதாகவும் அவரையும் சந்தித்துச் செல்லும்படி அவரிடம் எங்கள ஆற்றுப்படுத்திய அன்பை இன்றும் மறக்க இயலாது. சிறிது நேரம் எங்களோடு உரையாடியபின் எங்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

அவர் வேண்டுகோள்படி, முனைவர் அ சிதம்பரநாதன் செட்டியார் அவர்களைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்ற அவர், அகராதியில் தம் கையொப்பம் இட்டு அடுத்த அறையில் திருமிகு கா அப்பாத்துரையார் இருப்பதைக் கூறி அவரிடமும் கையொப்பம் வாங்குமாறு அறிவுறுத்தினார். அந்த அகராதித் தயாரிப்பில் துணை நின்றவர் கா. அப்பாத்துரையார்தான். அவர் கை எழுத்தும் அந்த நூலில் பதிந்தது.

சிலம்பிலே பெரும ஈடுபாடு கொண்டவர் செட்டியார். அவரிடம் சிலம்பு பற்றிப் பல கேள்விகள் எழுப்பினோம். மாணவப் பருவத்தில் இருந்த எங்கள் அறியா வினாக்களைத் துச்சமாகக் கருதாமல் பொறுமையாக அவர் பதில் கூறியது எங்களுக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளித்தது. ஏதோ அவர்தான் கண்ணகியைத் தூண்டி விட்டு மதுரையை எரித்தது போல் கண்ணகி மதுரையை எரித்தது பெருந் தவறு என்று காரம் சாரமாக நாங்கள் வாதிடக் குழந்தைகளின் குறும்பைக் கண்டு மகிழும் தந்தையாக அவர் எங்களுக்குப் பதில் உரைத்தமை பெரியவர்கள் என்றுமே பெரியவர்கள்தாம் என்பதை உணர்த்தியது.

தமிழ்ப் பேரறிஞர்கள் தமக்குள் ஒற்றுமை பாராட்டுவது இல்லை என்ற அவப் பெயரையும் துடைத்து எறிந்த அம்மூவரையும் பெருமிதத்தோடு வணங்கி நின்றோம். இனி அவர்களை எங்கே காணப் போகிறோம் என்று எண்ணி விடைபெற்றோம். அதன் பின் ஓரிரு ஆண்டுகளுக்குள் ஏ சி செட்டியார் குடும்பச் சிக்கல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட செய்தி இடிபோல் எங்களைத் தாக்கியது. சில ஆண்டுகளில் அப்பாத்துரையாரும் காலமானார்.

பின், மவுன்ட் ரோட்டில் இருந்த இக்கின்பாதம்ஸ் என்ற புகழ் பெற்ற நூல் விற்பனை நிலையம் சென்று கையில் இருந்த காசுக்கு முடிந்த வரை நூல்கள் வாங்கிப் புதுச்சேரி சென்று சேர்ந்தோம். அந்த ஆண்டு ஷேக்ஸ்பியரின் நானூறாவது ஆண்டு விழா. அதன் நினைவாக ELBS (English Language Book Society ) என்னும் நிறுவனம் ‘The Complete Works of Shakespeare’ . என்னும் நூலை வெளியிட்டு இருந்தது . அவரின் படைப்புகளின் மூலத்தை மட்டும் பதிப்பித்து இருந்தார்கள். விலை அப்போது உரூபாக்கள் ஆறு மட்டுமே.மு வ பைத்தியம் போலவே ஷேக்ஸ்பியர் பித்தனாகவும் விளங்கிய நான் அந்த நூலையும் வாங்கி வந்து விட்டேன். பல ஆண்டுகள் பத்திரமாக் வைத்திருந்த அந்த நூலைப் பறி கொடுக்க நேர்ந்தது என் வாழ்வின் சோகங்களில் ஒன்று.

பின் சென்னை இலயோலாக் கல்லூரியில் இளம் அறிவியல் வகுப்பில் சேர்ந்தேன் ; அங்கே தமிழ்த் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் அருட்தந்தை வி.மி ஞானப்பிரகாசம் அடிகளார் என் மீது தனிப்பட்ட அன்பும் பாசமும் கொண்டிருந்தார். சென்னைக் கல்லூரி மாணவர்கள் இடையே நாவல் பற்றிய கருத்தரங்கு நடத்தும் பொறுப்பு இலயோலாக் கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது ; அதனை என் பேராசிரியர் அருட்தந்தை வி.மி ஞானப்பிரகாசம் அடிகளார் எனக்கு அளித்தார். எங்கள் கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஸ்டெல்லா மாரிஸ் , இராணி மேரி, எதிராஜ் கல்லூரி, விமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி (W.C.C).. மாணவர்களைக் கொண்டு வெகு சிறப்பாக நடத்திக்கொடுதேன். ஆடவரும் மக்ளிருமாகப் பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்கின் தலைப்பாக யாருடைய நாவல்களை எடுத்துக்கொண்டேன் தெரியுமா? ஆம், பேரறிஞர் மு.வ அவர்களின் நாவல்களையே கருப்பொருள் ஆக்கினேன்.

பத்துப்பாட்டில் ஒன்றான ‘சிறுபாணாற்றுப் படை’ பட்ட வகுப்புக்குப் பாட நூலாக எங்களுக்கு இருந்தது. அந்தப் பாட நூலை நான் மற்ற மாணவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என அடிகளார் விரும்ப அப்படியே நடத்திக்கொடுத்தேன். சக மாணவர்களும் என் சொற்பொழிவைக் கேட்க வந்து கூடுவர். இந்த இரு செய்திகளும் முனைவர் மு.வ அவர்கள் காதுகளுக்கு எட்டின. காரணம், என் பேராசிரியர் அருட்தந்தை வி.மி ஞானப்பிரகாசம் அடிகளார். அப்போது அவர் முனைவர் மு.வ அவர்களிடம் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். அவர் வழியாக இச்செய்திகளைக் கேள்விப்பட்ட மு.வ அவர்கள் என்னைக் காண விரும்புவதை அடிகளார் என்னிடம் கூற நானும் சரி என்றேன். – கரும்பு தின்னக் கூலியா? யாரைக் காண வேண்டும் என்று தவம் இருந்து ஒரு முறை சென்று பார்த்தேனோ, அவரே என்னைக் காண விரும்புகிறார்! யாருக்கு வாய்க்கும் இப்பேறு?

ஆண்டு தோறும், சென்னைப் பலகலைக் கழகத்தில் முனைவர் இரா.இராசமாணிக்கனாரின் நினைவுச் சொற்பொழிவு நடை பெறும். அந்த வாரத்தில், விசுவாமித்திரன் பின் செல்லும் இராமனாகச் சென்றேன், அறிஞர் மு.வ அவர்களைக் காண.. முனைவர் மு.வ அவர்களிடம் என் பேராசிரிய அடிகளார் என்னை அறிமுகம் செய்து வைக்கிறார் : “என் மாணவர்களில் மிகச் சிறந்த முதல் மாணாக்கர் இவர்தான்” என்று.

‘வாங்க, வாங்க, அடிகளார் உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார் ; உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி ” என்று என் தோளைத் தட்டிக் கையைப் பற்றி அன்புடன் வரவேற்கிறார் மு.வ. வானத்திலே பறப்பது போன்ற உணர்ச்சி எனக்கு. “நான் கூற வேண்டியதை நீங்கள் கூறிவிட்டீர்கள் அய்யா” என்று பணிவாக் நான் கூறப் புன்னகையுடன் எங்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று தம் பக்கத்தில் அமர வைத்துக்கொள்கிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவரிடமே மாணவனாக நான் வந்து சேர இருப்பதை அவரும் அறியவில்லை யானும் உணரவில்லை அப்போது.

விதியின் கைகள் வலியவை ; அதனால்தானே திருவள்ளுவரும்,
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் ” என்றார்.

ஆங்கிலமும் அறிவியலும் படித்து இளம் அறிவியல் பட்டத்தை முதல் வகுப்பில் தேறிப் பெற்ற யான் திசை மாறிய பறவையாகிப் போனேன் ; படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் படிக்கச் சேர்ந்தேன். அப்படிச் சேர நேர்ந்தது இன்னொரு வரலாறு. பின்னொருகால் வாய்ப்பு வரின் அது வரி வடிவம் பெறக் கூடும். முதுகலை மாணவர்களுக்குப் பல்கலைகழகத்தில் வாரம் ஒருமுறை மு.வ அவர்கள் வகுப்பு எடுப்பார்கள். சென்னையில் பச்சையப்பன் கல்லூரி,மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் மட்டுமே அப்போது முதுகலைத் தமிழ் இருந்தது. அவ்விரு கல்லூரி மாணவர்கள் குழுமி இருக்கிறோம். அதுதான் மு வ அவர்கள் எங்களுக்கு எடுக்கும் முதல் வகுப்பு. ஒவ்வொருவர் பெயராக அழைத்து விசாரித்து வருகிறார் மு.வ. என் பெயரை அவர் அழைத்ததும் எழுந்து நிற்கிறேன். அவர் முகத்தில் பெரும வியப்பு. “அட, உங்களை நான் அறிவேனே! அடிகளாரின் தலை மாணாக்கர் அல்லவா நீங்கள். வகுப்பு முடிந்த பின் என்னை வந்து பாருங்கள்” என்று சொல்லி வேறு எதுவும் கேளாமல் என்னை அமர வைத்து விட்டார். வகுப்பு முடிந்ததும் என் சக மாணவர்கள் என்னைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்து விட்டார்கள், “வந்ததும் வராததுமாக எப்படி மு வ அவர்களைப் பிடித்து விட்டாய்? அவரை முன்பே தெரியுமா ? எப்படித் தெரியும்?…..”.

வகுப்பு முடிந்ததும் சந்தித்தேன். என்னைப் பற்றி ஆதியோடு அந்தமாக விசாரித்து அறிந்தார் ; தமிழ் படிக்க வந்த காரணத்தைக் கேட்டார் ; விளக்கம் சொல்லி இடம் கிடைக்கத் தொல்காப்பியம் காரணமாக அமைந்ததை விளக்கி முடித்ததும் தம் வியப்பை வெளிப்படுத்தினார்.

என் பேராசிரியப் பெருந்தகை மு.வ அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, பிறகு பலமுறை வாய்த்தது. அவ்வளவு பெரிய அறிஞர் …அவர் எழுத்தைப் போலவே எளிமையாக இருப்பார். வகுப்பில்தான் பேராசிரியர் – மாணவர் என்ற பாகுபாடு. வகுப்பு அறைக்கு வெளியே மிகத் தோழமையோடு பழகுவார். பாடங்களை மிகச் சுவையாகவும் நடத்துவார். சில சமயங்களில் பாடத்தை விட்டு வெளிச் செய்திகளில் அவர் மூழ்குவதும் உண்டு. அப்படி வேறு செய்தி சொன்னாலும் மறுபடி பாடத்திற்குள் நுழையும் ஆற்றலும் அவருக்கு இருந்தது. இவரின் இத்தகு பண்புகளைக் கூர்ந்து கவனித்த யான், என் பேராசிரியப் பணிக் காலத்தில் அவற்றைப் பின் பற்றினேன் ; என் பணி சிறக்க அவையும் காரணங்கள் ஆயின.

வகுப்பில் ஒரு முறை திரைப்பட நடிகர்கள் பற்றிய பேச்சு எழுந்தது. அப்போது அவர் கூறிய கருத்துகள் எங்களைப் பெரிதும் சிந்திக்க வைத்தன : “திரைப் படத்தையும் வாழ்க்கையையும் ஒன்று போலவே எண்ணும் பேதைமை நம் மக்களிடம் இருக்கிறது. படத்தில் வில்லனாக நடிப்பவர்கள் வாழ்கையிலும் வில்லனாகவே இருப்பார்கள் ; நல்லவனாக் நடிப்பவர்கள் வாழ்விலும் உண்மையாகவே நல்லவர்கள் தாம் என்று நம்மவர்கள் நம்பி விடுகிறார்கள். உண்மை அது அல்ல. வில்லனாக நடிக்கும் நம்பியார் உண்மையில் எவ்வளவு நல்லவர் தெரியுமா….” என்று விளக்கமாகவே மு வ அவர்கள் தெளிவாக விளக்கினார்கள்.

அவர் அடிக்கடி வற்புறுத்துவது தனி மனித ஒழுக்கத்தை. தனி மனிதன் ஒழுக்கமாக வாழ்ந்தால் வீடு ஒழுக்கமாக இருக்கும் ; வீடு ஒழுக்கமாக இருந்தால் நாடும் ஒழுக்கமாக் இருக்கும். இப்படிப்பட்ட அரிய பெரிய கருத்துகளை மிக எளிமையாகக் கூறுவார். அவர் உரையில் ஆடம்பரமோ அடுக்கு மொழியோ இரா. எவரையும் இழித்துரைத்தோ பழித்துரைத்தோ அவர் பேசி நாங்கள் கணடது இல்லை. குரலும் மென்மையாக் இருக்கும் ; பேச்சும் தன்மையாக இருக்கும். எல்லாருடைய கருத்தையும் காது கொடுத்துக் கேட்பார். அவர் அடிக்கடி கூறும் கருத்துகள் இரண்டை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் :

“தமிழன் நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது ; வல்லவனாகவும் வாழவேண்டும்”

“இமயம் வரை சென்றவன் தமிழன் ; கடாரம் வரை வென்றவன் தமிழன்….வென்ற நாடுகளை எல்லாம் திருப்பித் தந்துவிட்டுத் திரும்பி விட்டானே. நாடு பிடிக்கும் ஆசை இல்லை என்றால் கூட அங்கெல்லாம் தமிழை மட்டுமாவது நிலை நாட்டி வந்திருந்தால் இன்று உலகம் முழுக்க தமிழ் நிலை பெற்று இருக்குமே!”

எவ்வளவு கருத்தாழம் மிக்க கருத்துகள்!

படிப்பை முடித்துக்கொண்டு விடைபெறப் போனேன் ; என் பணியும் வாழ்வும் சிறக்க என்னை வாழ்த்தி வழி அனுப்பி வைத்த அப் பேராசிரியப் பெருந்தகை தன்னிடமே ஆராய்ச்சி மாணவனாக நான் வரவேண்டும் என்ற விருப்பத்தை முன் மொழிந்தார்.” இறையருள் அப்படி இருப்பின் அப்படியே ஆகட்டும் ஐயா ” என்று சொல்லி விடை பெற்றேன்.அதன் பின் 1971 -ஆம் ஆண்டு இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் கருத்தரங்கைப் புதுவையில் நடத்தினோம். ஏற்பாடுகளைத் தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த் துறை முன்னின்று செய்தது. பேராசிரியர் மா.ரா பூபதி அவர்களின் வலக் கரமாகச் செயல்பட்டேன். ஏறக் குறைய தமிழ்ப் பேரறிஞர்கள் பலரும் பங்குகொண்ட கருத்தரங்குக்குத் தலைமை தாங்க முனைவர் மு வ அவர்களையே அழைத்திருந்தோம். அப்போது அவரைச் சந்தித்த போது, தன்னைச் சுற்றி இருந்த பெருந்தமிழ் அறிஞர்கள் தெ.போ .மீனாட்சிசுந்தரம், தில்லிப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேரா சாலை இளந்திரையன், அண்ணாமலைப் பல்கலைகழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேரா வ.சுப மாணிக்கம், மொழி இயல் துறைத்தலைவர் பேரா அகத்தியலிங்கம்…. முதலியோர்க்குத் தன் சிறந்த மாணாக்கன் என என்னை அறிமுகப் படுத்தியது யான் பெற்ற பெரும பேறே.!

என் பேராசிரியப் பெருந்தகை மு வ அவர்களைக் கடைசியாகச் சந்தித்ததும் அந்தக் கருத்தரங்கில்தான். அதன் பின் அவர் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் இருந்து விடுபட்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆனார். அப்பதவியில் இருந்தபோதே 1974 -இல் அக்தோபர்த் திங்கள் 10 ஆம் நாளில் அமரர் ஆனார். அச்சமயம் யான் காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். செய்தி கேட்டதும் என் மாணவர்களும் யானும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினோம் பின்னர் அரை மணி நேரம் என் பேராசிரியப் பெருந்தகை பற்றி உரை ஆற்றினேன் . என் மாணவர்கள் ஆடாமல் அசையாமல் அமைதி காத்து உரையைக் கேட்டறிந்தனர்.

அண்மையில், என் முதுகலை வகுப்புத் தோழர் முதுமுனைவர் பேராசிரியர் ச சு இராம இளங்கோ, எங்கள் பேரா. மு.வ அவர்கள் எழுதி இதுவரை அச்சேறாத நூல்களைத் தொகுத்து ‘மு.வ.கட்டுரைக் களஞ்சியம்’ என்னும் நூலைத் திருவள்ளுவர் ஆண்டு 2042 மார்கழி 18ஆம் நாள் (3-1-2012) சென்னையில் வெளியிட்டார். பாரி நிலையம் இதனைப் பதிப்பித்திருக்கிறது.

மு. வ புகழ் என்றுமே மூவாப் புகழே!

– பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு
(நன்றி : பிரான்சு, ‘கம்பன்’ இலக்கண இலக்கியத் திங்கள் இதழ்).

 

 

F%81._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

2 thoughts on “முனைவர் மு.வ. – நினைவலைகள் சில

  1. மு.வ. நூற்றாண்டில் அவரை நினைவுகூர்ந்தமை நன்று. பேராசிரியராகவும் படைப்பாளராகவும் ஒருசேர மிளிர்ந்தமை அவர்தம் சிறப்பு; கலப்பில்லாத் தமிழில் புனைகதை படைக்க முடியும் எனச் செயலால் நிறுவியதன் மூலம், அரிய வழிகாட்டியாய் வாழ்கிறார். தாங்கள், அவரின் மாணவர் என அறிந்து மகிழ்ச்சி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க