தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 25

7

இன்னம்பூரான்

பழங்கதை

அகில உலக நாடுகளின் தணிக்கைச் சங்கமொன்று உண்டு. INTOSAI என்று அதற்குப் பெயர். அம்மாதிரியே, ஆசிய அமைப்பு ஒன்று உண்டு. அதன் பெயர்: ASOSAI. அதற்கு இந்த வருடம் இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்தியாவின் தணிக்கைத்துறையைப் பற்றி அறிய மக்களிடையே ஆர்வம் கூடி வரும் வேளையில், உலகளவில் அத்துறையின் பணியைப் பற்றி எழுத நினைத்தேன். கண் முன் வந்து நிற்பதோ, ஒரு பழங்கதை. ஆம். தனது நாற்பது வருட அனுபவத்தின் அடிப்படையில், ஹிந்து இதழில், அக்டோபர் 24, 1986 அன்று வந்திருந்த கட்டுரை ஒன்றும் அதிலிருந்த மேற்கோளும்.

“தன் முதுகுக்குப் பின்னால் நடப்பதையெல்லாம், அரசு உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சொன்னதைச் செய்கிறோமா என்று அலச வேண்டும். இல்லையென்றால், தன் போக்கைச் சரியான பாதையில், மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் ஒழிய, (ஆப்ரஹாம் லிங்கன் சொன்னது போல) ஜனநாயகம் ‘மக்களால், மக்களுக்காக, மக்களால் வழி நடத்தும்’ ராஜபாட்டையாக அமையாது.” சொன்னது ஸர் ஐவர் ஜென்னிங்க்ஸ் என்ற அரசியல் சாஸன வல்லுனர். இந்தியாவின் ‘ஐக்கிய நாடு அமைப்பு’(Federalism) பற்றி அருமையான ஆலோசனைகளை அளித்தவர். 1953ல் அவர் சென்னை வந்திருந்தார். ‘தெளிவு’ என்றால், அவர் பேச்சைக் கேட்க வேண்டும்.

அக்டோபர் 24, 1986 அன்று வந்திருந்த கட்டுரையில் இந்த மேற்கோளுடன், நாடாளுமன்றத்தின்/சட்ட சபையின் பொதுக் கணக்கு மன்றம் எவ்வாறு தணிக்கை அறிக்கைகளைக் கையாள வேண்டும் என்பதைப் பற்றி எழுதியவர், எனது நண்பரும், தணிக்கைச் செயல்பாடுகளைப் பற்றிய ஆசானுமாக இருந்த திரு. டி.நரசிம்மன் அவர்கள். அவரை 89 வயதில் மார்ச் 2, 2012 அன்று இழந்தோம். வல்லமை எனக்கு சுயேச்சையாக எழுதும் உரிமையை அளித்துள்ளது. இன்று திரு. டி.நரசிம்ஹன் அவர்களின் பாமரகீர்த்தி எழுத விழைகிறேன். ஏனெனில், கோர்வையாக ஹிந்து இதழில் அவர் எழுதி வந்த கருத்துக்கள், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் பின்னும், நம் நாட்டின் நடப்பை/ அரசின் போக்கை/ ஜனநாயகத்திற்குப் ‘பட்ட காலில் படும்’ படுகாயங்களைத் தெளிவுற உரைக்கின்றன. ஒரு நூற்றாண்டு என்பதை முதலில் விளக்க வேண்டும்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ல். அதற்கு முன் சில வருடங்களாகவே, நாடெங்கும் அதுவே பேச்சு. நான் பள்ளி மாணவன் அந்தக் காலக்கட்டத்தில். திரு. டி.நரசிம்ஹன் அவர்களோ 1946-ல் இந்தியத் தணிக்கைத்துறையில் அசிஸ்டெண்ட் அக்கவுண்டண்ட் ஜெனரலாகப் பதவியில் அமர்ந்தவர். அவரது தீர்க்க தரிசனமான கட்டுரைகளோ 1986ல் வெளி வந்தன. இதற்கு நடுவில், 1957ல் எனக்கு அவர் மேலதிகாரி/ஆசான். 1980-களில் நாங்கள் இருவரும் ஆந்திரப்பிரதேசத்தில் பணி புரிந்தோம். அவர் மூத்த அக்கவுண்டண்ட் ஜெனரல். நான் இளைய அக்கவுண்டண்ட் ஜெனரல். என்னால் ஆன வரை, வழக்கம் போல் நானும் அவரைத் தொணத்தினேன். எதற்கு இதையெல்லாம் சொல்ல வருகிறேன் என்றால், மனித இனத்தின் தொகையே சமுதாயம். சுற்றம் உறவு தந்த சமுதாயம். பள்ளிக் கல்வியின் நன்கொடையான சமுதாயம். அலுவலகம் தொழிற்சமுதாயம். நாடு தேசாபிமான சமுதாயம். எல்லாமே உள்வட்டங்கள் தான், உலகளவில்.

இன்று உலகளவில் இந்தியத் தணிக்கைத்துறை, ஆசியத் தணிக்கை அமைப்பின் தலைமை ஏற்றுள்ள காலக்கட்டதில், என்னுடைய தொழிற்சமுதாயத்தில், தொடக்கத்திலிருந்து, எனது நண்பரும், தணிக்கைச் செயல்பாடுகளைப் பற்றிய ஆசானுமாக இருந்த திரு. டி.நரசிம்மன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவரது மனைவி திருமதி. அம்புஜம் நரசிம்மனுக்கும், புதல்வர் திரு.ராம்ஜீக்கும்,சுற்றத்துக்கும் என் சார்பிலும், வல்லமை சார்பிலும் அனுதாபம் தெரிவிப்பது என் கடனே. தருணம் கிடைத்தால், அவருடைய பணி/ கட்டுரைகள் பற்றிப் பிறகு பார்க்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 25

  1. எனக்கு திரு. நரசிம்மன் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் உண்டு.
    எதிலும் ஒரு தெளிவு,மனதில் உள்ளதை புண்படாதவண்ணம் வெளிப்படையாக கூறும் குணம்,விசாலமான பார்வையுடன் எதையும் அணுகும் திறமை ,பரந்த அறிவு, உதவும் மனப்பான்மை எல்லாம் ஒருங்கே கொண்டிருந்த உன்னதமான மனிதர்.
    தணிக்கை அதிகாரியாக பணி செய்வது எளிதல்ல.மனோ தைரியமும் கூர்ந்த பார்வையும் தேவை.இதை பெருமளவிற்கு கொண்டிருந்த அவர் அதிகாரிகளுக்கு ஒரு முன் மாதிரி(role model)
    அன்னாரின் மறைவு ஒரு பெரிய இழப்பு

  2. தணிக்கைத் துறையில் அனுபவமோ, பாண்டித்யமோ இல்லாதவள் எனினும், பொதுவான விஷயங்களில் ஆர்வம் கொண்டவள்.  வயது – துறை – என்று எவ்விதத் தொடர்பும் இல்லாத -என்னைபோன்ற ஒருநபரும் கூட சிந்தித்துப் பார்க்க முடிவதான தெளிவு அமரர் நரசிம்மன் அவர்களுடையது – நான் எப்போதைக்கு எப்போதோ – படிக்கும் அந்த சமயத்திலும் கூட அவரது எழுத்துக்களில் கரைந்து போய் நின்ற வேளைகள் உண்டு. அன்னார்  இறைவனடி சேர்ந்தார் எனபது அறிந்து மனம் எண்ணுவது இது தான்; இத்தகைய பெரியவர்கள் கொண்டிருந்த தேச பக்தி – தெய்வ பக்தி – சமூக பக்தி ஆகிய பண்புகள்  அரிதாகிப் போய்விடுமோ?

    வாராதது போல் வந்து தாராதது போல் தந்துவிட்டுச் சென்றிருக்கிற மாமணிகளும் அவர்களது சிந்தனைச் செல்வமும் எத்தனை மகத்தானவை என்பதை – பலம் மிகுந்த உங்கள் எழுத்துக்களில் உணருகிறேன் –  சீரிய சிந்தனைக்கு எவரும் தணிக்கை எனும் முட்டுக்ககக்ட்டைப் போடமுடியாது என்பதனை சொல்லாமல் சொல்லிப் போந்தவர் நரசிம்மன்.

    உங்கள் பக்கத்தைப் படித்தவுடன், தலைமுறை இடைவெளி இருப்பினும் – வயது காணாது என்றாலும் – எங்களைப் போன்றவர்களும் கூட உங்கள் பக்கமே என்று  என்னால் பார்க்கமுடிகிறது. 

    நீங்கள் தரும் உத்வேகத்திற்கு – நன்றி – பாராட்டுக்கள்!

  3. எனக்கு இந்த இரண்டு பின்னூட்டங்களும் ஊக்கம் மட்டுமல்ல, ஆறுதலும் அளிக்கின்றன. திரு. பார்த்தசாரதி ஒரு வரியில் சொல்லிவிட்டார்,’… தணிக்கை அதிகாரியாக பணி செய்வது எளிதல்ல…’ என்று. திரு.நரசிம்ஹன் போன்ற சான்றோர்களின் role model தான் எங்களுக்கு மார்கபந்து. சொல்லப்போனால், இந்த பதிவுக்கு பின் என் சகபாடிகள் இருவருடன் அளவளாவினேன். அவர்களும் இதையே தான் சொன்னார்கள்.பொதுவான விஷயங்களில் ஆர்வமுள்ள முனைவர்.அவ்வைமகள் இரு ஆழமான கருத்துக்களை முன் வைத்துள்ளார். 1. ‘… சீரிய சிந்தனைக்கு எவரும் தணிக்கை எனும் முட்டுக்கட்டைப் போடமுடியாது…’ & 2.’… தலைமுறை இடைவெளி இருப்பினும் – வயது காணாது என்றாலும் – எங்களைப் போன்றவர்களும் கூட உங்கள் பக்கமே…’ என்று. அவை எனக்கு உத்வேகம் அளிக்கின்றன. திருமதி. விசாலம் ராமன் அவர்களும், இப்படித்தான், உத்வேகம் அளித்தார். வல்லமை ஆசிரியர் எவ்வளவு சொல்லியும், ‘யாரும் படிப்பதில்லை’ என்று எண்ணி, இந்த தொடரை நிறுத்தி வைத்திருந்தேன். இனி பொறுப்பதில்லை. ‘…இது பொறுப்ப தில்லை, -தம்பி! 
எரி தழல் கொண்டு வா…’ என்றான், வீமன் (பாஞ்சாலி சபதம்- இரண்டாம் பாகம்: 66). அந்த மாதிரி இளைய தலைமுறைக்கு, வருங்கால சந்ததிக்கு, அரசு, சமுதாயம், தணிக்கை, தர்மம், நியாயம், சட்டம், அவற்றிற்கும் மேலான இறையாணைகள், இவற்றையெல்லாம் பற்றி, என் அனுபவத்தில் நான் கண்டு கொண்டதை, பகிர்ந்து கொள்வது கடமையே என்ற சிந்தனை மேலோங்கி நிற்கிறது. இன்றைய காலகட்டம் அப்படி இருக்கிறது.  சுய சரிதையும், ஓரளவு கலந்து வருவது, சுவை கூட்டும் என தோன்றுகிறது.  ஆசிரியரிடம் நான் சொல்வது உண்டு, ‘ஒரு புல்லட்டின் போர்ட்‘ போடுங்கள் என்று. இந்த பதிலை புல்லட்டின் போர்டில், ஒரு சிறிய பொது அறிமுகத்துடன் போட்டு, அதை துவக்கி வைக்கலாம் என்று ஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள்.இன்னம்பூரான்10 02 2012

  4. இன்னம்பூரான் அவர்களுக்கு வணக்கம். தணிக்கை துறையின் நிர்வாக அமைப்பை பற்றி எனக்கு தகவல் வழங்க முடியுமா? நான் எனது நண்பர்களுடன் கோயில்கள் தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்று கோயில்களின் சொத்துகளை பாதுக்காக்கும் பல்வேறு வேலைகளை செய்து வருகிறோம். இந்து சமய அறநிலை துறை போன்ற ஒரு ஊழல் துறையை பார்க்க முடியாது/ எந்த ஆவணம் கேட்டு விண்ணப்பித்தாலும் எனக்கு கிடைக்கும் பதில்

    “இந்த தகவல் இந்த அலுவலகத்தில் இல்லை”. எனக்கு கோயில்கள் தொடர்பாக செய்யப்பட்ட தணிக்கை ஆவணங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக 1945 ஆண்டுகள் காலத்தில் நடைபெற்ற தணிக்கை ஆவணம் கிடைத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். இதை எல்லாம் பாதுகாத்து வைத்து இருப்பார்களா 🙁

    இதை பற்றி எனக்கு தகவல்கள் வழங்கினால் எனக்கு உபயோகமாக இருக்கும்.

    தணிக்கை துறை எல்லா மாவட்டத்திலும் இருப்பார்களா? இல்லை ஒரு சில மாவட்டத்தில் மட்டும் இருந்து பணியாற்றூகிறார்களா?

    கோயில்கள் தொடர்பாக அவர்கள் தயாரித்த தணிக்கை அறிக்கையின் நகல்களை பெற நான் யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

    உதாரணத்திற்கு திருச்சி ஸ்ரீரங்க கோயில் தொடர்பாக தயாரிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையின் ஆவணத்தை நான் யாரிடம் பெற முடியும்.

  5. உங்களுடைய ஆர்வத்தை மெச்சுகிறேன். தணிக்கைத்துறை 150 வருடங்களாக, இந்தியாவில் பணி புரிகிறது. அது அரசுக்குக் கட்டுப்பட்டதில்லை. நமது அரசியல் சாஸனம் அதற்கு உரிய சுதந்திரம் கொடுத்துள்ளது. அத்துறையை பற்றி நான் இங்கு விவரமான தொடர் எழுதியிருக்கிறேன். மின் தமிழ் என்ற அமைப்பில் 40  சுற்றுகள் வந்துள்ளன. அவற்றில், உமக்கு அத்துறை சம்பந்தமான விவரங்கள் கிடைக்கும். மேலும் கேட்டால், விடை அளிப்பேன். தணிக்கைத்துறை அரசு துறைகள் எல்லாவற்றையும் சுழற்சி முறையில் ஆடிட் செய்யும். ஆனால், இந்து சமய அறநிலை துறை மாநில ஆட்சிக்கு உட்பட்ட லோக்கல் ஃபண்ட் ஆடிட் துறையினால் தணிக்கை செய்யப்படுகிறது. நான் தற்காலம் அமெரிக்காவில் இருப்பதால், நேரடியாக உதவ முடியவில்லை. மன்னிக்கவும்.  இந்திய தணிக்கைத்துறை பழைய ஆடிட் ரிப்போர்ட்களை ஓரளவு சென்னையிலும், பெருமளவு டில்லியிலும் பாதுகாக்கிறது. லோக்கல் ஃபண்ட் ஆடிட் துறையின் நடைமுறை பற்றி அறியேன். சென்னையில் ரீச் என்ற அமைப்பு கோயில்களின் புனருத்தாரணத்துக்கு உழைக்கிறது. நீங்கள் இணைந்து உழைக்க விரும்பலாம். தொடர்புக்கு, வல்லமை ஆசிரியரை அணுகவும். உங்கள் விசாரிப்புக்கு நன்றி.இன்னம்பூரான் 

  6. @ இன்னம்பூரான்,

    தங்கள் பதிலுக்கு நன்றி. எனக்கு ரீச் மக்களை சந்தித்து இருக்கிறேன். நீங்கள் மின் தமிழில் எழுதிய கட்டுரைகளின் லிங்க் கொடுத்தால் உபடயோகமாக இருக்கும். வலை தளத்தில் தேடினேன் கிடைக்கவில்லை 🙁

  7. நன்றி பல. பின்னூட்டங்களுக்கு பதில் அங்கேயே போடுவது என் வழக்கம்.நான் எழுதுவது பெரும்பாலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடும் குழு ‘மின் தமிழில்’. தமிழ் வாசல் என்ற தளத்திலும் அவை வருவது உண்டு. வல்லமையில் பல கட்டுரைகள் வந்துள்ளன. அவர்களின் தேடுபொறி உதவும். என்னுடைய ப்ளாக் & ஒலித்தமிழ் இணைய தளத்திலும் அவற்றை ஏற்ற நேரமின்மையால் தவிக்கிறேன். எனக்கு இந்தியாவில் அதற்கு உதவி தேவை. மாணவர்கள் உதவினால், ஓரளவு நிதி அளிக்கலாம். என் நண்பர்கள் Google ல் Innamburan என்று தேடினால், அவை கிடைப்பதாக சொல்கிறார்கள். நீங்கள் தேடி படிக்க நேர்ந்தால், உங்கள் அபிப்ராயத்தை எனக்குத் தெரிவித்தால், சந்தோஷம். நீங்களும் மின் தமிழில் இணைவது பற்றி யோசிக்கலாம். நல்ல மடலாடற்குழு.  http://groups.google.com/group/minTamil?pli=1http://innamburan.blogspot.com/
    நன்றி, இன்னம்பூரான் 12 04 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *