உலகின் ஒப்புயர்வற்ற காதலி: பிளாரன்ஸ்
அவ்வை மகள்
சவானா நதி தீரத்தில் காலமெல்லாம் காத்திருக்கிறாள்
ஜார்ஜியா மாநிலத்தையும் தென் கரோலினா மாநிலத்தையும் பிரிப்பது போல ஓடும் சவானா நதி – படகுப் போக்குவரத்துக்குப் பெயர் போனது. வணிகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு படகுகள் வந்து போவதும். சுற்றுலாப் படகுகள் உல்லாச உலா வருவதும் கண்கொள்ளாக் காட்சி. இப்படகுப் போக்குவரத்தைப் பார்க்கும்போது, சென்னை பக்கிங்காம் கால்வாயில் படகுப் போக்குவரத்தை நாம் பாதுகாத்துப் பராமரித்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும்.
ஆந்திர மாநிலம் வழியாக ஒரிசா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தித் தந்த பக்கிங்காம் கால்வாயில், உப்பு வாணிகம் வெகு ஜோராய் நடந்ததாகப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அந்தக் கால்வாயைப் பார்க்காமல் நான் எங்கும் செல்ல முடியாது – சென்னையில் அடையாறு நமது பேட்டை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்தக் கால்வாய், ஆக்கிரமிப்புக்களால், குறுகிப் போனதும், குப்பைக்கூளங்களால் அடைசல் கண்டு போனதும், மாடி ரயில் வந்ததால் ஒட்டுமொத்தமாய் மேடிட்டுப்போனதும் நானறிந்தவை.
இங்கு சவானா நதியைப் பார்கும்போதெல்லாம், இதே போன்ற ஆழமும் இதே போன்ற அகலமும் தானே நமது பக்கிங்காம் கால்வாய்க்கும்!! அதைக் காப்பாற்றத் துப்பில்லாமல் விட்டு விட்டோமே என்று மனம் நொந்து வெந்து போகிறது. சவானா நதி அத்தனை அழகாய் இருக்கிறது. நதியின் கரை சென்னையின் மெரீனா கடற்கரையை நினைவுபடுத்துகிறது. கரை நெடுகிலும் சிலைகள். மண்ணின் மணத்தையும் மானத்தையும் ஒருங்கே பறை சாற்றும் சிலைகளின் அணிவகுப்பு இங்கே!!
அவற்றுள் பிளாரன்ஸ் என்ற பெண்ணின் சிலை பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். சவானா நதியின் மீது பயணம் போன தனது காதலனின் வரவை எதிர்ப்பார்த்தபடி கரையின் மீது காத்திருக்கும் பிளாரன்ஸ், தான் நிற்கும் இடம் காதலனுக்குத் தெரியவேண்டுமென்பதற்காக தனது துப்பட்டாவை வீசுகிறாள்.
ஆனால், வந்த படகில் காதலன் இல்லை.
இனி வரப்போகும் படகுகளில் காதலன் வருவான் என நின்ற இடத்திலிருந்து துளியும் நகராமல், துப்பட்டாவை வீசியபடி நிற்கிறாள் பிளாரன்ஸ். அவள் இவ்வாறு நாற்பத்து நான்கு ஆண்டுகள் நின்றது சரித்திரம் காட்டும் சான்று,
ஓடங்கள் நதியினில் ஓட, தான் மட்டும் ஒருத்தியாய், தூக்கிய கைகளில் வீசிய சீலையும், ஒத்தாசைக்கு ஒரு நாயுமாக இரவும் பகலுமாகக் காதலனுக்காய்க் காத்த்திருக்கிறாள் பிளாரன்ஸ். இக்காட்சி காண்பவர் மனதைப் பிசைகிறது.
காதல் என்றால் – காதலி என்றால் பிளாரன்ஸ் தான்!!
ஆடாது அசையாது நிற்கும் பிளாரன்ஸ் சிலையைக் காணும்போது “ஓடம் நதியினிலே — “ஒருத்திமட்டும் கரையினிலே” என்ற பாட்டு நம் நினைவுக்கு வரும்.