அடைகாக்கும் காதல்…
பிச்சினிக்காடு இளங்கோ
இத்தனை ஆண்டுகள்
உருண்டோடிவிட்டன
இதுவரை பார்த்ததில்லை
பேரழகியல்ல
பெரும்பணக்காரியுமல்ல
ஒரு சின்ன புன்னகைக்காரி
பேசிக்கொண்டதே இல்லை
பார்த்துக்கொண்டதுதான் நடந்தது
ஒரு சிறு இடைவெளியில்
அவள் வீடு
பக்கத்து வீட்டில்தான்
மக்கள் கூட்டம்
அது ஒரு
கருமாதி இரவு
மக்களுக்குள் இருந்துகொண்டே
பார்த்தேன்
நடவுப்பயிர் ஒதுக்கி
நடந்துவரும் காற்றைப்போல்
அவள் பார்வை
என்னன்ன
நினைத்திருப்பாள்!
எப்படியெல்லாம்
நினைத்திருப்பாள்!
இதுவரை
பகிர்ந்துகொள்ளாமலேயே
இருவேறு குடும்பங்களாகிவிட்டோம்
இல்லை இல்லை
இருவேறு தீவுகளாகிவிட்டோம்
காதல் கொடிபிடிக்காமல்
இப்படி வேர்விட்டிருப்பது
யாருக்குத்தெரியும்
அவளோ இவளோ
அய்யங்கள் எழலாம்
அய்யத்திற்கிடமின்றி
காப்பாற்றிவருகிறேன்
அவளையும்
அடைகாக்கும் காதலையும்
பிச்சினிக்காடு இளங்கோ
(29.07.2011)
படத்திற்கு நன்றி:
http://untoldlove.webs.com/apps/photos/photo?photoid=131110037