மறவன்புலவு க. சச்சிதானந்தன்

பேரினை நீக்குவோம், பிணம் என்று சொல்வோம், சூரையங் காட்டிடைச் சுடுவோம். பின்னர் நீரில் மூழ்குவோம். அவர் நினைப்பையே ஒழிப்போம். இப்படி எத்தனை எத்தனை பேரின் வாழ்வு நினைப்பு ஒழிந்த வாழ்வாயிற்று?

ஏனெனில் அவர்கள் எதையும் விட்டுச் செல்வதில்லை. பயனுள்ள எதையும் விட்டுச் செல்வதில்லை.

2,600 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒருவரை நினைக்கிறோம். அவர் விட்டுச் சென்றவை நமக்குப் பயன்தருகிறது. அவர் நம் நினைவை விட்டு அகலக் கூடாதென்பதற்காக, அவருக்குச் சிலை எழுப்புகிறோம். கடந்த 2,300 ஆண்டுகளாக அவருக்குச் சிலை எழுப்பும் முயற்சியை உலகின் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் விடாது செய்து வருகின்றனர். புத்தர் பெருமான் விட்டுச் சென்ற அறக் கோட்பாடுகள் மனித சமுதாயத்தின் சொத்து. அந்த அறக் கோட்பாடுகளை மறக்கக் கூடாது என நினைவூட்டவே புத்தர் சிலைகள்.

ஆறு இயல்பாகப் பாய்கிறது. அந்த நீரை இக்கரையில் உள்ளோரும் அக்கரையில் உள்ளோரும் பங்கு கொள்வதில் சிக்கல். இதனால் போர் மூளும் அபாயம். புத்தர் செவியுறுகிறார். ஓடோடிச் செல்கிறார். அரச குடும்பத்தினரான தன் உறவினர், ஒருவரோடு ஒருவர் போரிட உள்ளனர் என்றதும் கபிலவஸ்துவுக்கு அவர்களிடம் செல்கிறார். போரை நிறுத்துங்கள். உயிர் இருந்தால்தானே தண்ணீர் பயன்படும். போரில் மாண்டபின் தண்ணீர் எதற்கு. மனிதர்களிடையே எழும் சிக்கலுக்குப் போர் தீர்வல்ல என்கிறார். அவர் அறவுரையை, அறிவுரையைக் கேட்ட உறவினர் போரைக் கைவிட்டனர். அமைதியாக வாழ்ந்தனர்.

இரத்தின அரியணை யாருக்குச் சொந்தம்? மாமனுக்கா மருகனுக்கா? அரச குடும்பத்தினரான இருவரும் விட்டுக் கொடுக்க மறுக்கின்றனர். படையணி திரட்டுகின்றனர். போருக்குத் தயாராகிய அரச உறவினரிடம் ஓடோடி வருகிறார் புத்தர். நிகழ்ந்த இடம் நாக நாடு என அழைத்த யாழ்ப்பாணம். நாகப்பட்டினத்தில் இருந்த புத்தர், யாழ்ப்பாணம் வருகிறார். போர் முகத்தில் இருந்த இரு அணிகளிடமும் பேசுகிறார். இரத்தின அரியணையில் தானே அமர்ந்து அறக்கோட்பாடுகளை விளக்குகிறார்.

அரச வாழ்வைத் துறந்தவர். அரச நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாதவர், ஆனாலும் அறக் கோட்பாடுகளை விளக்கி மனித உயிர்களைக் காப்பாற்றுகிறார். போர்களை நிறுத்துகிறார்.

மனிதரிடையே ஏற்படும் சிக்கல்களுக்கு அறவழியே அமைதி தரும் என்றவர் புத்தர். அதனால் அவர் இறந்தும் வாழ்கிறார். சிலைகளாகி உலகெங்கும் நினைவு கூரப்படுகிறார். ஆப்கானிஸ்தானில் 2000 ஆண்டுகளுக்குமுன் எழுப்பிய புத்தரின் சிலைகளைச் சில ஆண்டுகளுக்குமுன் குண்டுவைத்துத் தகர்த்தனர். 2000 ஆண்டுப் பராம்பரீயம் ஒரே நாளில் தரைமட்டமாகியது. இந்தச் செய்தி கல் மனத்தவரையும் கரைக்கும். போரைப் புறந்தள்ளியவரின் சிலைகள் போரை முன்னெடுத்தவரால் தகர்ந்தன.

செய்தி அறிந்த உலகம் கண்ணீர் சிந்தியது. சிறுவர் தொடக்கம் முதியவர் வரை நெஞ்சு கனத்தனர், நினைந்து கசிந்தனர். இலங்கையில் குருணாக்கல் நகருக்கு அருகே, இரம்பொடைக்கல் என்ற சிற்றூர். அங்கே புத்த கோயில். அருகே அறநெறிப் பாடசாலை. அந்தப் பாடசாலையின் மாணவர் புத்த கோயிலில் வாழ்ந்த துறவி அமரமொழித் தேரரிடம் வந்தனர். அந்த இளம் பிஞ்சு உள்ளங்கள் அழுதன, ஆற்றாது அரற்றின.

உடைந்த சிலை போன்று சிலை எழுப்புங்கள், நிதி திரட்டுகிறோம் என அந்த மழலைகள் துறவி அமரமொழித் தேரரிடம் அழுது கேட்டனர். தொழுது இறைஞ்சினர். அந்தப் பிஞ்சு உள்ளங்களின் உணர்வலைகள் துறவியைத் தூண்டின.

புத்த கோயில் அருகே 80 அடி உயரமாக நிமிர்ந்து நின்ற கற்குன்றைத் துறவி பார்த்தார். அந்தக் கற்குன்றில் அழகான புத்தர் சிலையை அமைப்போம் எனச் சிறார்களைத் தேற்றி அனுப்பினார்.

அடுத்த 10 ஆண்டுகளில் வியத்தகு நிகழ்வுகள் தொடர்ந்தன. நிகழ்ந்தவற்றின் சுருக்கத்தைக் காணைச் சொடுக்குக,

http://www.youtube.com/watch?v=5upZj2FOEz8

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நினைப்பற நினைந்தோமா?

  1. Let the temple be there and en route the hihgway little away from the temple and it is possible . It will be appreciated by somany present and future generationS for the good deed and preserving the such fantastic wonderful historical and monumental temple.
    May Lord shiva change everyone to support this act.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.