வருகின்றாள் காந்திமதி
செண்பக ஜெகதீசன்
நெல்லை நகர் வீதியிலே
நெல்லையப்பர் துணையுடனே
மெல்ல வலம் வருகின்றாள்
மேன்மை மிகு காந்திமதி (நெல்லை நகர்)
அல்லலதை அகற்றி விட்டே
அடியவரைக் காத்திடவே
வில்லில் வரும் அம்பாக
விரைந்தவளும் வருகின்றாள் (நெல்லை நகர்)
வேணுவன நாயகியாள்
வெற்றியினைத் தந்திடவே
தாணு மூர்த்தி துணையுடனே
தவமியற்றி வருகின்றாள் (நெல்லை நகர்)
கம்பை நதிக் கரைதனிலே
காத்திருந்த தேவியவள்
கும்பிட்ட அடியவரின்
குறை தீர்க்க வருகின்றாள் (நெல்லை நகர்)
எண் நான்கு அறம் வளர்த்த
ஏந்திழையாள் காந்திமதி
கண்ணுதலான் துணையுடனே
கடை வீதி வருகின்றாள் (நெல்லை நகர்)
ஆனி மாத நன்னாளில்
ஆலமுண்ட கண்டனுடன்
தேனின்மொழி காந்திமதி
தேரிலேறி வருகின்றாள் (நெல்லை நகர்)
(அருள் மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப்பெருந்திருவிழாவில் டாக்டர். சீர்காழி.சிவசிதம்பரம் அவர்கள் மேடையிலே இசையமைத்துப் பாடியது)
படத்திற்கு நன்றி:http://www.tamilhindu.net/t1201-topic