Life Is Beautiful-திரை விமர்சனம்
மோகன் குமார்
பாபர் என்று மொகலாய அரசர் பற்றி சிறு வயதில் கதை சொல்வார்கள். தன் பையனுக்காக தன் உயிரையே அவர் தந்தார் என்பதாக இருக்கும் அந்தக் கதை ! ஏறக்குறைய அதே போன்ற நிகழ்வு தான் இக்கதையும்.
கதை
இத்தாலியில் வாழும் குய்டூ (Guido) ஒரு ஜாலியான பேர்வழி. அனைவரையும் சிரிக்க வைக்கும் இயல்புடையவர். ஹீரோயினை (டோரா) கண்டதும் காதல் கொள்கிறார். குய்டூஒரு யூதர் (Jews ). டோராவோ மிக பணக்கார இத்தாலிய குடும்பத்தை சார்ந்தவள். குய்டூ தனது வேடிக்கைகளால் அவளை கவர்கிறார். டோராவுக்கு நடக்கும் திருமண நிச்சயதார்த்தத்தில் புகுந்து அவளை குதிரையில் தூக்கிச் செல்கிறார். குதிரையில் செல்வதன் அடுத்த ஷாட். ஐந்து வருடம் கழித்து, அவர்கள் தங்கள் நான்கு வயது குழந்தையுடன் குதிரையில் போவதாக காண்பிக்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போர் மிக சூடு பிடித்து இத்தாலியில் வன்முறை நடந்தேறுகிறது. இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் ஹிட்லரின் படையால் கொல்லப்பட்டது நாம் அறிந்திருப்போம். அந்தக் காட்சிகள் அரங்கேறுகின்றன.
குய்டூ மற்றும் அவரது மகன் ஜோஷ்வா ஹிட்லரின் படையால் சிறை பிடிக்கப்படுகிறார்கள். அவர்களுடன் ஏராளமான யூதர்கள் ஒரு ரயிலில் வேறு ஒரு இடத்திற்கு (கேம்ப்) செல்கிறார்கள். டோரா ஒரு இத்தாலியன் என்பதால் அவளைச் சேர்க்காமல் ரயில் கிளம்ப, தன் கணவர் மற்றும் மகனுடன் தானும் வருவேன் என அடம் பிடித்து டோராவும் ரயிலில் ஏறுகிறாள். ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் கேம்ப்பில் குடியமர்த்தப்படுகிறார்கள்.
குய்டூ தன் மகன் ஜோஷ்வாவிடம் ” இது ஒரு விளையாட்டு” என்றும், இதில் வெல்ல வேண்டும் என்றால், ” ஜோஷ்வா அழக் கூடாது; பசிக்கிறது என சொல்ல கூடாது; அம்மாவிடம் போக வேண்டும் என சொல்லக் கூடாது; மேலும் பகல் முழுதும் ஒளிந்திருக்க வேண்டும்” என்று கூறுகிறான். அப்பா நம்பும் விதத்தில் சொல்வதால் மகனும் நம்புகிறான். ஓரிரு முறை ஜோஷ்வா ” விளையாட்டு போதும் ” என்று சொல்லும் போது ” நாம் தான் முன்னணியில் இருக்கிறோம்; வென்று விடுவோம்” என சொல்லி சமாதானப்படுத்துகிறான் குய்டூ.
படத்தின் இறுதியில் தன் மகனை ஒரு சிறு இடத்தில் மறைத்து விட்டு மனைவியைத் தேடிப் போகிறான் குய்டூ. அப்போது தன் மகனிடம் ” எல்லாம் ஓய்ந்து சத்தம் இல்லாமல் இருக்கும் போது தான் வெளியே நீ வர வேண்டும். இல்லாவிடில் தோற்று விடுவாய்” எனக் கூறுகிறான்.
மனைவியைத் தேடிப் போகும் குய்டூ சுட்டுக் கொல்லபடுகிறான். மறு நாள் அமெரிக்கப் படை வந்து நிலைமை சீராகிறது. ஜோஷ்வா தன் தாயுடன் சேர்ந்து விட்டு ” நாம் ஜெயிச்சிட்டோம்” எனக் கூச்சலிடுகிறான். அப்போது இயக்குனர் பின்னணியில் ” இது தான் என் கதை. என் வாழ்க்கை என் தந்தை எனக்குத் தந்த மிகப் பெரும் கொடை” எனச் சொல்ல படம் நிறைகிறது
ராபர்டோ பெனிக்னி என்பவர் கதையை எழுதி, இயக்கி நடித்துள்ளார் (பாக்யராஜ். ராஜேந்தர் மாதிரி “அனைத்தும்” செய்யும் ஆட்கள் அங்கும் உண்டு போலும் !) இவர் மனைவி தான் படத்தின் ஹீரோயின்.
நடிகர், இசை, வெளிநாட்டு படம் என நான்கு வகைகளில் (இசைக்கு மட்டும் இரண்டு) ஆஸ்கர் விருதுகளை அள்ளியது இந்தப் படம். துவக்கத்தில் எதோ ரொமாண்டிக் படம் போல சென்றாலும், பாதிக்குப் பிறகு தான் நிஜ வலி தெரிய ஆரம்பிக்கிறது. ஹிட்லர் யூதர்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றார் என வரலாற்றில் படித்துள்ளோம். அதைப் படமாய்ப் பார்க்கும் போது, ஒரு தந்தை மற்றும் சிறுவன் கண்கள் வாயிலாக நெகிழ வைக்கும் விதத்தில் கூறியிருக்கின்றனர்.
ராபர்ட்டோ நடிப்பு அருமை. எனினும் நமது நாகேஷ் நீர் குமிழி, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் சோகத்தை உள்ளே வைத்துக் கொண்டு காமெடி செய்வார் இல்லையா? அத்தகைய பாத்திரம் தான் ! ஆனால் ராணுவம் யூதர்கள் கொலை – என்கிற அந்த பேக் டிராப் – தான் கதையை வேறு தளத்துக்கு எடுத்து செல்கிறது. கதை யூதர்கள் கொலைகளை பற்றி உரக்கச் சொல்லவில்லை. மிக மெலிதாகத்தான் முணுமுணுக்கிறது. எதனால் இத்தனை பேர் கொல்லப்படுகின்றனர் என்பது குறித்த எந்த விபரமும் திரைக் கதையில் இல்லை. ஆனாலும் போதுமான தாக்கத்தை அது விளைவித்துவிடுகிறது !
பொதுவாக “உலகப் படங்கள்” என்பவை விஷுவலுக்கு மிக அதிக முக்கியத்துவம் தந்து வசனத்துக்கு மிகக் குறைந்த வேலை தான் தரும். ஆனால் இந்தப் படம் அதற்கு நேர் மாறாக உள்ளது. நான் பார்த்த வரை மிக அதிக வசனம் கொண்ட வெளி நாட்டுப் படம் இது என்பேன். படத்தின் பிற்பகுதியில் அப்பா- பையன் பேசுவதிலேயே படம் நகரும் போது முழுக்க வசனத்திலேயே நகர்வதில் அர்த்தம் உள்ளது. முதல் பாதியும் கூட முழுக்க வசனத்தில் செல்வது ஏன் எனத் தெரியவில்லை ! இது படத்தை முழுதும் ரசிக்கப் பெரிய பிரச்சனையாக உள்ளது.
படத்தை இம்முறை புத்தகக் கண்காட்சியில் உலகப் படங்கள் டீவீடி விற்ற கடையில் வாங்கினேன். வழக்கமான கடைகளில் விற்கும் டீவீடி முப்பது எனில் இங்கு விலை எழுபது ரூபாய் ! ஒரிஜினல் வெர்ஷன் என்பதால் விலை அதிகம். இருக்கட்டும் ! சப் டைட்டில் இருக்கா என்ற போது ” இருக்கு!” என்றனர். கடைசியில் பார்த்தால், இந்தியில் இருந்தது சப் டைட்டில் ! நொந்து போயிட்டேன் ! படம் ஆங்கிலத்தில் ஏற்கனவே டப் செய்யப்பட்டிருந்தாலும் மிக அதிக வசனம் மற்றும் வேகமான வசனம், இதனால் முழுக்க புரிய வாய்ப்பில்லை. இதனால் இந்தப் படம் பார்ப்போருக்கு நான் சொல்ல விரும்புவது: நிச்சயம் ஆங்கில சப் டைட்டில் இருக்கிறதா என தெரிந்து கொண்டு பாருங்கள் ! அப்போது மட்டுமே படத்தை முழுக்க ரசிக்க முடியும்.
இதே படம் தமிழில் வந்தால் நிறைய மெலோ டிராமா ஆகியிருக்கும். அதற்கான வாய்ப்பு நிறைய இருந்தும் அதிக மெலோ டிராமா இல்லாமல் சரியான முறையில் எடுத்த இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஹீரோ சாகும் போது கூட ஒரு வீரர் அவரை ஒரு மறைவிடத்துக்கு கூட்டிச் செல்கிறார். துப்பாக்கி வெடிக்கிறது. பின் அந்த வீரர் மட்டும் திரும்பி வருகிறார். அவ்வளவு தான் ! ஹீரோ இறந்து விட்டதை, அதன் வலியை அந்த துப்பாக்கி சத்தத்திலேயே நாம் உணர்கிறோம் !
நிஜத்தில் படத்தின் இயக்குனர் தன் சிறு வயதில் இத்தகைய சம்பவங்களை சந்தித்தார் என்பதும் அவர் தந்தை இப்பட ஹீரோ போல் அவரைக் காப்பாற்றினார் என்பதும் நெகிழ்ச்சியான தகவல்கள் !
படம் முடிந்த பின், இரண்டாம் உலகப் போரில் பல்லாயிரக்கணக்காய் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவில் மனம் கனத்து போனது.
ஆங்கில சப் டைட்டிலுடன் அவசியம் இந்தப் படத்தைப் பாருங்கள் !