ஸ்ரீதர் ரத்தினம்

கேள்வி:வணக்கம். என் பெயர் குகேச சங்கரன். எனக்கு 78 வயதாகிறது.பேஸ் மேக்கர் வைத்துள்ளேன். பேஸ் மேக்கர் வைத்து 11 மாதம் ஆகிறது. இத்தனை நாள் தலைச் சுற்றல் இல்லை.இப்பொழுது குனிந்தாலோ நிமிர்ந்தாலோ தலை சுற்றுகிறது. இதனால்தான் ஏற்படுகிறதா? நான் ஒரு நாளைக்கு 2 முறை 2 மாடி ஏறி இறங்கலாமா? தயவு செய்து பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்பது நாம் முன்பே அறிந்த உண்மை. மேலும் இருதயமானது ஒரு தசையும் நாணும் இணைந்த ஒரு உறுப்பு, அதில் நான்கு அறைகள், ரத்த ஓட்டம் அந்த நாலு அறை (chambers) வழியாகவும் செல்லுவதை ஒரு வழிப்படுத்துவதற்கு என்று சாதனங்கள், வால்வ், (valves) உண்டு. இரண்டு ஏட்ரியம்(atrium) மற்றும் இரண்டு வென்ட்ரிகிள் (ventricle) என்ற அறைகள் கொண்டது நம் இருதயம். இவை முறையே வலப்புற ஏட்ரியம்( right atrium) வலப்புற வென்ட்ரிகிள் (right ventricle) மற்றும் இடது ஏட்ரியம்(left atrium) மற்றும் இடது வென்ட்ரிகிள் (left ventricle) என்பன ஆகும்.

அவை அசுத்த ரத்தம் உடலின் எல்லா உறுப்புக்களில் இருந்து இருதயத்தை அடைந்து அங்கிருந்து நுரையீரலை அடைந்து சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இருதயத்தை அடைந்து ரத்தநாளங்கள் மூலமாக எல்லா உறுப்புகளையும் அடைவதற்கு மிகவும் அவசியம். இருதயத்தின் தசைகள் ஒரு சேர இறுகி அழுத்தும்போது ரத்தமானது ஒருவழிப் பாதை(valves) மூலம் ஒரு அறையிலிருந்து மற்ற அறைக்கு செல்லும். இவற்றில் இடது வென்ட்ரிகிள் (left ventricle)மிகவும் முக்கியமானது. ஏன் என்றால் இது சுத்தப்படுத்தப்பட்ட ரத்தத்தை உடலுக்கு அனுப்பும் அறையாகும்.

இருதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளைப் போல் அல்ல. அவை தானே துடிக்கும் தன்மையும் ஒரு சேர இறுகும் தன்மையும் கொண்டது. எந்தத் தசையும் வேலை செய்ய நரம்புத் தூண்டுதல்(neural stimulation) மிக அவசியம். இருதயம் துடிக்க அதன் வடிவமைப்பில் நரம்புகள் உள்ளன, இவை நம் உடலின் மற்ற நரம்புகளைப் போல் நமது மூளையின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்காதவை (autonomous nervous system). இந்த நரம்புகள் நமது இதயத்தைத் துடிக்கச் செய்யும், மேலும் அவை நமது இதயத்தின் அறைகளை ஒரு சீரான வேகத்துடன் உடலின் தேவைக்கு ஏற்பத் துடிக்கச் செய்யும்.

மேலும் ஏட்ரியம்(atrium) மற்றும் வென்ட்ரிகிள் (ventricle) ஒன்றாக இறுகுவதில்லை, முதலில் ஏட்ரியம் இறுகும், அதைத் தொடர்ந்து வென்ட்ரிகிள் இறுகி ரத்தத்தை இருதயத்திலிருந்து வெளியே செலுத்தும். இதனை வால்வ் ஒருவழிப் படுத்தும். இருதயத்தின் நரம்புகள் இந்த அறைகள் இறுகிக் குறுகுவதைத் துவக்கி வைக்கும்(stimulation and initiation), மேலும் அவை ஒன்றன்பின் ஒன்றாகக் குறுகுவதைச்(timing and synchrony) சீர் படுத்தும்.

இந்த நரம்பு அமைப்பைக் கண்டக்க்ஷன் பாதை (conduction system) என்று அழைப்போம், இது வலப்புற ஏட்ரியம் அருகில் உள்ள சைனோ ஏட்ரியல் நோடில் (sino atrial node) ஆரம்பித்து, ஏட்ரிய வென்ட்ரிகிள் தடத்தின் (atrioventricular pathway) வழியே ஏட்ரிய வென்ட்ரிகிள் நோடை (atrioventricular node) அடைந்து அங்கிருந்து வென்ட்ரிகிள் தடத்தின் (ventricular pathway) வழியாக வென்ட்ரிகிளை அடைந்து அதைத் துடிக்கச் செய்யும். ஒவ்வொரு இருதயத் துடிப்பையும் சைனோ ஏட்ரியல் நோடில் (sino atrial node) ஆரம்பிக்கும் சிறிய மின்சாரத் துகள் (electrical impulse)துவக்கி வைக்கும். இந்தத் துகள் தடத்தில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு தசைகளைத் துடிக்கச் செய்து நம் இருதயத்தை இயங்க வைக்கும். சைனோ ஏட்ரியல் நோட் (sino atrial node) இதனால் இருதயத்தின் பேஸ்மேக்கர் (pacemaker) என்றழைக்கப்படுகிறது. இந்தப் பாதையில் எந்த இடத்தில் ரத்து ஏற்பட்டாலும் இருதயம் சரியாக இயங்காது. இதனை கண்டக்க்ஷன் ப்ளாக் (conduction block) என்று கூறுவோம்.

சரியான துவக்கம் இல்லாததால் நமது வென்ட்ரிகிள் குறைந்த வேகத்தில் துடிக்கும். இதனால் உடல் தளர்ச்சி, அசதி உண்டாகும். கண்டக்க்ஷன் ப்ளாக் (conduction block) மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction), வால்வுகளின் வியாதிகள் போன்றவற்றால் ஏற்படுகிறது. இருதயத் துடிப்பை 24 மணிநேரத்துக்கு இசீஜி மூலம் ஆராய்ந்து (24 hour ECG ) மிகக் குறுகிய வேகத்தில் அது துடிப்பது உறுதியானால் எக்ஸ்டெர்னல் பேஸ்மேகர் (pacemaker) பொருத்தப்படும். இந்தக் கருவி நம் இருதயம் துடிக்க வேண்டிய வேகத்தில் அதைத் துவக்கி இயங்க வைக்கும். இவற்றில் பல்வேறு விதங்கள் உண்டு, அவற்றைப் பற்றி மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

பேஸ்மேகர் பொருத்துவது இருதயத்தின் துடிப்பைச் சீர்படுத்தி, அதன் மூலம் இருதயத்தின் செயல்பாட்டினை, தன்மையோடு செயல்பட வைக்கும் நோக்கத்துடன் செய்யும் சிகிச்சையாகும். பேஸ்மேகர் பொருத்திக் கொண்டவர்கள் மாடி ஏறி இறங்குவதில் தவறு இல்லை. தொடர்ந்து அசதி, மூச்சு முட்டுவது இருந்தால் உங்கள் இருதயநல மருத்துவரை அணுகவும். ஏன் என்றால் பேஸ்மேகர் செக் தேவைப்படலாம்.

 

பேஸ்மேக்கர் படத்திற்கு நன்றி:http://www.healthcentral.com/heart-disease/h/pacemaker-side-effects.html

மனித இதயத்தின் படத்திற்கு நன்றி:http://texasheart.org/HIC/Topics/Proced/pacemake.cfm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.