குழந்தைகள் கலைக்களஞ்சியம் குறுந்தகடு

 

ஆண்ட்டோ பீட்டர்

சென்னை மாநிலக் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த திரு தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பெற்றது. இந்திய மொழிகளில் 10 தொகுதிகளைக் கொண்ட விரிவான கலைக் களஞ்சியம் தமிழில் தான் முதன் முதலாக வந்தது என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும். இதைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஓர் ஒப்பு உயர்வற்ற ஆக்கபூர்வமான தமிழ்த் தொண்டாகக் கருதலாம். இவற்றிற்கு 2240 அறிஞர்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனர்.

‘கலைக்களஞ்சியம்’ என்னும் பொருள் பொதிந்த சொல்லைத் தமிழகத்திற்கு வழங்கிய பெருமையும் தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கே உரியதாகும். இச்சொல் தமிழ் வழக்கிலும் வேரூன்றி நிலைத்துவிட்டது.

பொதுக் கலைக்களஞ்சியத்தைத் தமிழில் முதல் பதிப்பாகத் திறம்பட வெளியிட்டுச் சிறந்த அனுபவம் பெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகம், 1968-இல் குழந்தைகளுக்கெனத் தனியே அழகிய வண்ணப் படங்களுடனும் விளக்கப்படங்களுடனும் கூடிய சிறந்ததொரு குழந்தைகள் கலைக்களஞ்சியத்தைப் பத்துத் தொகுதிகளில் முதல் பதிப்பாக வெளியிட்டது. 1968-இல் தொடங்கப்பட்ட குழந்தைகள் கலைக் களஞ்சிய முதல் பதிப்புப் பணி மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 1976-இல் திறம்பட நிறைவேறியது. குழந்தைகள் கலைக் களஞ்சியம் முதற் பதிப்பிற்கும் திரு. ம. ப. பெரியசாமித்தூரன் அவர்களே தலைமைப் பதிப்பாசிரியராக விளங்கினார். குழந்தைகள் கலைக்களஞ்சியம் முதல் பதிப்பின் மாதிரிப் படிவம் ஒன்றை 22-03-1965-இல் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டது.

குழந்தைகள் கலைக்களஞ்சிய சிறப்புகள்:

· சிறுவர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி அவர்தம் பொது அறிவையும், அறிவியல் அறிவையும் வளர்க்கும் நேர்த்தியான அறிவுக் கருவூலம்.
· இக்களஞ்சியம் பல்வேறு அழகிய வண்ணப்படங்களும், விளக்கப் படங்களும் நிறைந்து சிறந்து விளங்குவது.
· இதன் உள்ளடக்கம் எளிய, இனிய தமிழ் நடையில், பல்துறை அறிவு பற்றிய சிறுசிறு கட்டுரைகளாக அமைந்துள்ளது.
· அகரவரிசையில் அமைந்த 10 தொகுதிகளைக் கொண்டது; ஒவ்வொரு தொகுதியும் 96 பக்கங்களைக் கொண்டது.
· பெயர் அளவில் குழந்தைகள் கலைக் களஞ்சியம் என்றாலும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் யாவரும் படித்துப் பயன்பெறும் வகையில் தரம்மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது.
· எல்லாத் துறைகளிலும் மக்களுக்குத் தெரிய வேண்டிய இன்றியமையாப் பொருள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
· இந்திய மொழிகளில் முதலில் தோன்றிய சிறப்பானதொரு குழந்தைகள் கலைக் களஞ்சியம் இதுவேயாகும்.
· எல்லா நூலகங்களிலும் இன்றியமையாது இடம்பெற வேண்டியது இக்களஞ்சியம்.
· இக்களஞ்சியத்தின் ஒவ்வொரு தொகுதியும் ஓர் அறிவுக் கருவூலம்.

குழந்தைகள் கலைக்களஞ்சியம் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்ததால் அதற்குப் பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் சீரிய வரவேற்பிருந்தது. அன்றைய தமிழ்நாடுஅரசு குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பின் மறு பதிப்பைத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் வழி வெளியிட்டு, 10,000 படிகள் சிறுவர் கரும்பலகைத் திட்டத்திற்கும், முதியோர் கல்வித் திட்டத்திற்கும் பயன்படுத்த ஏற்பாடு செய்தது. இதை தொடர்ந்து இரு பதிப்புகள் வந்தன.

குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் பத்துத் தொகுதிகளின் உள்ளடக்க விவரங்கள் பின்வருமாறு:

தொகுதி ஒன்று:

அ முதல் இந்தியா வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1982
பதிப்பாசிரியர்: திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தொகுதி இரண்டு:

இந்து மதம் முதல் ஔவையார் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1983
பதிப்பாசிரியர்: திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தொகுதி மூன்று:

கக்கரி முதல் கும்மி கோட்டம் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1984
பதிப்பாசிரியர்:திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தொகுதி நான்கு:

குயில் முதல் டார்ஜீலிங் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1985
பதிப்பாசிரியர்: திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தொகுதி ஐந்து:

டால்ட்டன் முதல் நாணயங்கள் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1986
பதிப்பாசிரியர்: திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தொகுதி ஆறு:

நாய் முதல் பிரிட்டன் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1986
பதிப்பாசிரியர்: திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தொகுதி ஏழு:

பிரீஸ்ட்லி ஜோசப் முதல் மலை ஏற்றம் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1987
பதிப்பாசிரியர்: திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தொகுதி எட்டு:

மழை முதல் லியனார்டோ-டா-வீன்சி வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1987
பதிப்பாசிரியர்: திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தொகுதி ஒன்பது:

லிவிங்ஸ்ட்டன், டேவிட் முதல் வைரஸ் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1988
பதிப்பாசிரியர்: திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தொகுதி பத்து:

வௌவால் முதல் ஹௌரா வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1988
பதிப்பாசிரியர்: திரு.ம.ப.பெரியசாமித்தூரன்

தற்பொழுது தமிழ் வளர்ச்சிக் கழகம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் குறுந்தகடு (டிவிடி) வடிவில் வெளியிட்டுள்ளது. இந்த குறுந்தகட்டின் அதிகாரபூர்வ விற்பனையாளராக சாஃப்ப்டவியூ பதிப்பகத்தை தமிழ் வளர்ச்சிக்கழகம் நியமித்துள்ளது. குறுந்தகட்டின் விலை ரூ.300/=. கிடைக்குமிடம்; சாஃப்ப்டவியூ பதிப்பகம், 118.நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29 தொலைபேசி : 23741053, 9940666188

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.