வார்த்தையால் ஆன உலகம்
ஷைலஜா
வார்த்தை
வாளாகும்,
வருடும் மயிலிறகாகும்.
யாழையும் குழலையும்
ஓரங்கட்டிவிடும்
மழலையின்
சொல்லாகும்.
இதன் வழிகள் மூன்று.
கனியும்;
காதலாகிக் கசியும்;
கடிந்தும் மிரட்டும்
என சிறுவாசல் கொண்ட
விழிவழி முதல்வழி.
தொலைவில் இருந்தாலும்
குரல் அடையாளம் காட்டும்.
உணர்வுக்கு ஏற்றபடி
ஒலி வடிவத்தை
மாற்றித் தரும்.
சாமரமும் வீசும்
சாட்டையாய் அடிக்கவும் செய்யும்
நாவின் துணையோடு வரும்
இதழ்வழி,
இதன் இரண்டாம் வழி.
முதலிரண்டையும்
முட்டாளாக்கிவிடும்
முழுமையான உணர்வுகளை
முக்கியமாய் தெரிவிக்கும்
தொடுகைவழி அதுவே
மூன்றாம் வழி.
அரிசி சிந்தினால்
அள்ளிவிடலாமாம்
இது சிதறினால்
அள்ள இயலாதென்று
வாழ்க்கைப் பாடத்தில்
முதல் பக்கத்தில் இது
இருப்பது இதன்
தனிச் சிறப்பு
அதை மனத்தில் கொள்வது
மனிதருக்கு மதிப்பு.
தேகத்தைக்
குதறவும் செய்யும்
குதூகலமாக்கி
உற்சாகத்தைக்
கொடுக்கவும் செய்யும்.
அகத்தில்
பெருமௌன வெளியில்
உலா வரும்.
புறத்தில் ஒலி வடிவங்களுக்கு
உயிரைத் தரும்.
கவிஞர்களுக்கு
களிமண்ணாய்க்
குழைந்து வரும்.
வார்த்தை இல்லா உலகில்
வாழ்வதும் சாத்தியமோ?
கவிதைகளில் சொல்லாட்சியும், அணிகளும் புகழப்படுகின்றன. சொல்லின் பயன், பொருளில் அல்லவோ? பொருள் படிந்து விட்டால், அந்த கவிதையின் தரம் வெகுவாக உயர்ந்து விடுகிறது. அதுவும் ‘வார்த்தை
வாளாகும்,
வருடும் மயிலிறகாகும்.’ போல உவமை பொருந்தி விட்டால். ‘மெளனவெளியும்’ எனக்கு பிடித்து விட்டது.