அம்மா என்னும் மந்திரச் சொல்!

4

அண்ணாமலை சுகுமாரன்

Annamalai_SUGUMARANஅம்மா என்பது வெறும் சொல் மட்டும் தானா? உண்மையில் அது ஒரு பதவியல்லவா? எப்படி நமது புராணங்களில் பிரம்மா, இந்திரன் முதலியவை ஒரு பதவியாக இருந்து அது பலரால் தொடர்ந்து நிரப்பப்பிட்டு வருகிறதோ, அதே போல் அம்மா என்னும் பதவிகளும் எங்கும் பலரால் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன.

அம்மா இல்லாமல் இவ்வுலகில் எந்த ஜீவராசியும் உருவாக இயலாது. எல்லா இடங்களிலும் அம்மா என்னும் ஒரு பதவி தவறாமல் நிரப்பப்பட்டே தீரவேண்டும். அம்மாவின் அவசியம் ஆதி நாட்களில் இருந்து இன்னமும் மாறாமல் இருந்து வருகிறது. எல்லா இடங்களிலும் எந்த நாட்டிலும் அம்மா என்பது ஓர் அத்தியாவசியமான பதவி தான்.

பெண் எனப்படுபவளுக்கு அம்மா எனும் பதவியைப் பெறக் காரணமாக இருந்த முதல் மகனுக்குத்தானே அம்மாவின் ஸ்தூல உடலுக்கு,  உயிர் நீத்த பின் இறுதிச் சடங்கு செய்யும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அப்பாவின் இளமைக்கும் வலிமைக்கும் சாட்சியாக இருந்த கடைசி மகனுக்குத்தானே தந்தையின் இறுதிச் சடங்கு செய்யும் உரிமை, நமது நாட்டிலே வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒரு அசைக்க முடியாத உரிமைகள், அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இறுதிச் சடங்கு யார் யார் செய்ய வேண்டும் என்ற முறைமை வேறு எந்த நாட்டிலாவது நடைமுறையில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இறுதி சடங்குகள் செய்யும் முறைமையையும் எரிக்கும் போதும் அல்லது புதைக்கும் போதும் எத்தகைய சடங்குகளைச் செய்கிறார்கள் என்று ஆராய்ந்தாலே, சமூகவியலின், மானிடப் பரவல்களின் வரலாறும் தொடர்பும் சிறிதளவு தெரியக்கூடும். மரபு என்பது மரணத்தின் போதும் மறையாமல் தொடர்ந்து பாவிக்கப்படுகிறது. நமது சரித்திரத்தின் மிக முக்கிய சான்றுகளில் முதுமக்கள் தாழிக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறதே. தமிழர் பரவிய எல்லா இடங்களிலும் முதுமக்கள் தாழி கிடைக்கிறதே.

சமீபத்தில் நடந்த இரு இலக்கியக் கூட்டத்தில் எழுத்தாளர் ஷங்கரநாராயணன் (அவர் பெயரை அவர் அப்படித்தான் எழுதுகிறார்) பேசும்போது தமிழ் எழுதும் முறையிலே முற்றுப்புள்ளியோ, அரைப் புள்ளி, கால் புள்ளி ஆகியவை இடும் முறை கிடையாது. இவை எல்லாம் வேறு நாட்டிடம் இருந்து நம்மிடையே இறக்குமதியானவை என்றார். மேலும் ஒரு சொற்றொடர் முடிவடைந்ததா என்பது அந்த சொற்றொடரின் அர்த்தம் முடிவடைந்ததை வைத்தே முடிவு செய்யப்படும். அதற்கு நமது மரபைப் பொறுத்தவரை எந்தக் குறியீடும் தேவை இல்லை என்று சிந்தனையைத் தூண்டும் விதமாகப் பேசினார்.

அப்படியேதான் நம் நாட்டைப் பொறுத்த வரை எல்லோரது வாழ்க்கைப் பயணத்திற்கும் முற்றுப் புள்ளியை, பயணம் முடிவடைந்ததை அதன் பயன் முடிவடைந்தபோதே நிர்ணயிக்கப்படுகிறது. வாழ்க்கைப் பயணத்தின் அந்தப் பயன்தான் என்ன?

நமது சனாதன மதம் என்னும் வாழ்க்கை முறை வகுக்கும் மூத்தோர் சொன்ன வழியில் நாம் சொர்க்கம் அடைவதை மட்டும் குறிக்கோளாகக் கொள்வதில்லையே. சொர்க்கத்தில் இருப்பதும் தற்காலிகமே என அவர்கள் உரைத்திருக்கின்றனர்.

இதர மதங்கள் எல்லாம் சொர்க்கம் செல்வதையே வாழ்வின் பயனாக கூறிக்கொண்டிருக்கும் போது, நமது சனாதன மதம் மட்டுமே அதற்கும் சில படிகள் மேலே போய் முக்தி என்னும் விடுதலையே வாழ்க்கை பயணத்தின் முடிவு என்று அறுதியிட்டுக் கூறிவந்தது.

மரணம் என்பது முற்றுப் புள்ளியோ, அரைப் புள்ளியோ. கால் புள்ளியோ கிடையாது. இப்போது அம்மா என்னும் பதவி மூப்பு பெற்று, அந்தப் பதவி முடிவடைந்ததாகக் கொள்ளலாமே தவிர, அத்துடன் வாழ்க்கை முடிந்ததாகக் கொள்ள முடியாது. மரணம் ஒரு முற்றுப் புள்ளியல்ல.

வெளியேறிய ஆன்மா, அத்துடன் அறுதலைப் பழசான மூட்டையில் இன்னும் கொஞ்சம் வினைச் சுமையை ஏற்றிக்கொண்டு, அல்லது கொஞ்சம் குறைத்துக்கொண்டு, மீண்டும் வேறு ஒரு பதவியேற்று மகனாகவோ, மகளாகவோ,வேறு பாத்திரமேற்று வேறு வகுப்பிலே,வேறு விதமான கொடுக்கல் வாங்குதலை முடிக்க அதன் பயணங்களைத் தொடர்கின்றது.

amirthavalliஇப்படித்தான் என் அம்மா அமிர்தவல்லியும் 2010 டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று மரணம் அடைந்தார்.

அதற்கு இரண்டு மாதம் முன்பு, உடல் நலம் குன்றி அவர்கள், மன நலம் குறைந்து வாடியபோது நான் அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து அங்கே பழியாகக் கிடந்தேன். அப்போது நான் எனது உணர்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட போது, பலரும் எனது மன வாட்டத்திற்கு மருத்துகள் தடவினர். அப்போதும  சிலர் நான் சற்று ‘ஓவர் ஆக்ட்’ செய்கிறேனோ என்றுகூட நினைத்தனர்.

ஆனால் எனக்கு அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது அம்மாவின் உடல் வாட்டமோ, அல்லது மரண கண்டமோ (இது எங்க அம்மாவே சொன்ன சொல்) மட்டும் அல்ல. அப்போது நிகழ்ந்த உறவுகளின் மரணமே. மனித உணர்வுகள் மாயமாய்ப் போன விதமே. எனக்கு வாழ்வின் பொருள் பற்றி அப்போது ஆழ்ந்த பல சந்தேகங்கள் எழுந்தன.

இது நாள் வரை எனது வாழ்வின் பொருள், என் அம்மாவின் தேவையைப் பூர்த்தி செய்வதிலேயே கழிந்துவிட்டது. உறவுகள் ஒன்றும் “ராண்டமாக”  ஏற்படுவதில்லை. அவற்றிலும் ஓர் ஒழுங்கு முறை இருக்கிறது. ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்கிறது என்பது என் ஆழ்ந்த நம்பிக்கையாக அது நாள் வரை இருந்து வந்தது. ஆனால் அம்மா என்னும் பதவியை அதுவரை ஒழுங்காகவே நிர்வகித்து, என்னுடன் சேர்த்து ஐந்து சகோதர சகோதரிகளுக்குத் திருமணம் செய்வித்து, பிறகு அவர்களுக்கு வேண்டிய வாழ்வின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, பேரன் பேர்த்திகளை வளர்த்து, படிக்கவைத்து, அவர்களை வேலைக்கு அமர்த்தி, இத்தகைய பணிகளிலேயே தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த அந்த அம்மா என்னும் ஜீவன், கடைசி நாட்களில் உதாசீனப்படுத்தி, பந்தாடப்பட்டபோது நானும் அதிர்ந்து போனேன். ஏனெனில் இதில் பெருவாரியான காரியங்கள், எனது வாழ்வில் நான் ஈட்டிய பெருவாரியான பொருளிலேயே நடைபெற்றன. அக்காலத்தில் நான் மட்டுமே பொருளீட்டும் நிலையில் இருந்தேன்.

மின் வாரியத்தில் தொடர்ந்து அதே பணியில் இருந்திருந்தால் இன்றைக்கு ரூபா 25,000 ஓய்வூதியம் பெறக்கூடும். அத்தகைய பணியை விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வேலை தேடிப் போனது, இத்தகைய கடமைகளை இங்கு பெறும் சம்பாத்தியத்தினாலே மட்டும் நிறைவேற்ற முடியாது என்பதால் தானே? எனது 19 வயதிலேயே அரசு வேலைக்குச் சென்றும் முப்பத்தாறு வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தது, அம்மாவுக்கு உறுதுணையாக இருக்கத்தானே?

எனது திருமணத்திற்கு பின் அவர்கள் என்னை விட்டுப் பிரிந்து தனியே இருக்க ஆரம்பித்தும் கூட அவர்கள் நலம் வேண்டி, பல்வேறு வகையில் துணையாக இருந்தேன். எனவே அவர்கள் செய்த பணிகள் உதாசீனம் செய்யப்பட்ட போது, நானும் உதாசீனம் செய்யப்பட்டதாகவே உணர்ந்தேன்.  பெரும் பகுதியான எனது வாழ்க்கை வீணாகிப் போனதாக உணர்ந்தேன்.

பிறருக்கு நாம் செய்த உதவிகளைக் கூறுவதால் எந்தப் பயனும் விளையாது. மாறாக, செய்த கடமைகளைச் சொன்னதால் பகைமையே வளரும் என்பது எனக்குத் தெளிவானதுதான். ‘ஈவது விளம்பினால் விளைவது கேடே’ என்பதும் புரிகிறது.

ஆனாலும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையுமே ஓர் இலக்கியம் போல் சுவாரசியம் நிறைந்ததுதான். என் அம்மா மரணமைந்த போது, அவர்களின் வயது 90. மூப்பு என்பதும் அனைவர்க்கும் கிடைப்பதில்லை. இத்தனை வயது வாழ்வதும் பெரும் பேறே.

இத்தனை வயது வாழ்ந்ததில் அவர்கள் கண்டதும் உணர்ந்ததும் அநேகம் இருக்கும். அவற்றை உடனிருந்து உணர்ந்ததால் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், முடிந்தவரை நான் உணர்ந்ததை உள்ளது உள்ளபடி, சில பகுதிகள் கூற நினைக்கிறேன். அந்தக் காலத்து லஷ்மியின் புதினம் போலவே பலரது வாழ்வும் திருப்பங்கள் நிரம்பியே அமைந்திருக்கிறது. அதை எனது பார்வையில், நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன், உங்களுக்குப் பொறுமை இருக்கும் வரை.

(தொடரும்……….

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அம்மா என்னும் மந்திரச் சொல்!

 1. உலகில் “அம்மா ” என்னும் மந்திரச் சொல்லுக்கு இணையாக வேறு சொல்லே இல்லை!

  இதை உணர்ந்தவர்கள் வாழ்விலிருந்து அந்த அம்மா பிரிவதே இல்லை!

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 2. Sugumaran,

  it looks as if you are talking to each reader in person. Nice writing. I share your feelings and always be with you as a friend. Amma is the powerful mantra which engulfs us

 3. அம்மா என்பது சாமான்யமான பொருளா என்ன?
  கட்டுரை துயரத்தையும் உணர்ச்சிகளையும் ஏந்தி நிற்கும் பாண்டமாக அமைந்திருக்கிறது. தங்கள் அன்னை தன் தூல வடிவில் நின்று உங்களை நிச்சயம் ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.
  தொடர்கட்டுரைகளைப் படிக்கக் காத்திருக்கிறோம்.
  கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *