சாத்தான் வேதம் ஓதுகிறது
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
2010 டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் திருமதி சோனியா காந்தி பேசிய பேச்சைக் கேட்டால் சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற வாக்கியம்தான் நினைவிற்கு வருகிறது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த 1986இல் மத்திய அரசு, போஃபர்ஸ் என்னும் ஸ்வீடிஷ் கம்பெனியிடமிருந்து பீரங்கிகளை வாங்கியது. அப்போது இந்தப் பேரத்தில் போஃபர்ஸ் யாருக்கும் தரகு வழங்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. ஆனால் பேரம் முடிந்த பிறகு வின் சாத்தா என்னும் இந்தியருக்கும் ஒத்தோவியோ குவாத்ரோச்சி (Ottavio Quattrocchi) என்னும் இத்தாலியருக்கும் தரகு வழங்கப்பட்டதாகத் தெரிய வந்தது. குவாத்ரோச்சி என்பவர் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர். அப்படிச் செய்தி வந்த பிறகு, பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்தார். தங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர்கள் யாருக்கும் போஃபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது சம்பந்தமாக எந்தப் பேரமும் நடக்கவில்லை என்றார்.
ஆனால் குவாத்ரோச்சி ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு வந்து போய்க்கொண்டிருந்தார். விசாரணை முற்றி, குவாத்ரோச்சி பணம் பெற்றுக்கொண்டார் என்பது ஓரளவு உறுதியாகியதும் குவாத்ரோச்சி 1993இல் நாட்டை விட்டே ஓடிவிட்டார். அவரை இந்தியாவிற்குக் கூட்டிவந்து விசாரிக்க, காங்கிரஸ் தலைமையில் நடந்த இந்திய அரசு பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவர் இந்திய அரசிற்குக் கொடுக்க வேண்டிய வருமான வரியை அவரிடமிருந்து வசூலிப்பது பற்றிய பிரச்சனை இப்போது கிளம்பியிருக்கிறது. டிசம்பர், 31, 2010 அன்று இந்திய வருமானவரித் துறை குவாத்ரோச்சியும் வின் சாத்தாவும், அவர்கள் போஃபர்ஸ் கம்பெனியிடமிருந்து பெற்ற தொகைக்கு இந்திய அரசிற்குக் கட்ட வேண்டிய வருமான வரித் தொகையைக் கட்டவில்லை என்று அறிவித்திருக்கிறது.
ஊழல் வழக்குகள் – அவை அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் – வேகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாட்டில் நடக்கும் எந்த விஷயங்களிலும் ஒளிவு மறைவின்மை இருக்கவேண்டும் என்றும் சோனியா பேசியிருக்கிறார். இப்போது இவர் போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் குவாத்ரோச்சியும் வின் சாத்தாவும் தரகுத் தொகை பெற்றார்கள் என்பதை ஒப்புக்கொள்வாரா? சி. பி. ஐ-ஆல் மூடப்பட்டுவிட்ட இது பற்றிய விசாரணையை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றாவது சொல்வாரா?
ஊழலை ஒழிக்க இப்போது ஒரு பெரிய போராட்டம் நடத்துகிறது பி.ஜே.பி. கட்சி. இவர்கள் கதை என்ன? இந்தக் கட்சி ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் சட்ட விரோதமாக இரும்புத் தாதுவைச் சீனாவிற்கு அனுப்பிக்கொண்டிருந்தது தெரியவந்ததும் அந்த ஊழலைக் கண்டித்து, அவர்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர பி.ஜே.பி. மேலிடம் முயன்றதா? ரெட்டி சகோதரர்களைக் காப்பாற்ற முதலமைச்சர் எடியூரப்பாவைத்தான் மிரட்டினார்கள். காங்கிரஸில் ஊழல் மலிந்து கிடக்கிறது; நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியைத் தருகிறோம் என்று சொன்ன பி.ஜே.பி. ஊழலில் திளைத்த எடியூரப்பாவைப் பதவியிலிருந்து விலக்க முடியவில்லை. இவர் மீது வழக்குத் தொடர, கர்நாடக மாநில ஆளுநர் அனுமதி கொடுத்திருக்கிறார்.
இந்தியாவில் எல்லோரும் கல்வி பயில வேண்டும்; கடைசிக் குடிமகனுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்; அப்போதுதான் இந்தியாவால் முன்னேற முடியும் என்று காங்கிரஸ் மாநாட்டில் பேசியிருக்கும் ராகுல் காந்தி, நான் சோனியா காந்தியின் மைந்தன்; என் தந்தையும் தாயும் பிரபலங்கள் என்பதால்தான் தான் அரசியலில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்று ஒப்புக்கொள்வாரா?
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் உறவினர்கள் திடீர் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றமே கடிந்துரைத்திருக்கின்றது. இதே மாதிரி குற்றச்சாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவரின் உறவினர்கள் மீதும் இருக்கிறது.
மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தகவல் பெறும் உரிமை, அரசில் நடக்கும் சில ஊழல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதை விரும்பாத அரசியல்வாதிகளும் கம்பெனிகளும் அரசாங்கத்திடம் தகவல் கேட்கும் பொதுநலவாதிகளைத் தீர்த்துக் கட்டிவிடுகின்றன. இது இன்றைய (ஜனவரி 23, 2011) நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில் முதல் பக்கச் செய்தி. குஜராத்தில் சட்ட விரோதமாக பூமிக்கடியில் கிர் தேசிய சரணாலயத்தில் இருக்கும் சுண்ணாம்பை சிமெண்ட் கம்பெனிகளுக்காகத் தோண்டுவதை வெளிப்படுத்தியவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சட்ட விரோத வணிகச் செயலில் ஈடுபட்டிருப்பவர் பி.ஜே.பி. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். இந்தக் கட்சிதான் ஊழல்களை எதிர்த்துப் போராடுகிறதாம்!
இந்தியாவில் பொதுப்பணித் துறையில் இருக்கும் ஒரு உறவினரைச் சந்தித்தபோது அவர் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார் என்று அறிந்து அதிர்ந்து போனேன். பதினான்கு வருஷங்கள் வேலை இல்லாமல் இருந்து இப்போது வேலை கிடைத்திருப்பதால், லஞ்சம் வாங்குவதில் தவறில்லை என்பது அவர் வாதம். எப்படி இருக்கிறது இது! லஞ்சம் வாங்குபவர்கள் ஒவ்வொரு வகையில் தங்கள் செயலுக்குச் சமாதானம் தேடிக்கொள்கிறார்கள்.
இந்தியா என்றாலே ஊழல் மலிந்த நாடு என்பது உறுதி ஆகியிருக்கும் நிலையில் ஊழலை ஒழிப்பது பற்றி இந்த அரசியல்வாதிகள் பேசும்போது எரிச்சலாக இருக்கிறது.
எல்லா அரசு நடவடிக்கைகளிலும் இப்போது அமெரிக்காவில் ஒளிவு மறைவின்மை (transparency) வந்திருக்கிறது. எல்லாம் கணினியில் பதிவாகிவிடுகிறது. குடிமக்கள் எல்லோருக்கும் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய ஒரு எண் (identity number) கொடுத்திருக்கிறார்கள். இக்காரணங்களால் ஊழல் குறைவாக இருக்கிறது. இந்தியாவிலும் இப்போது இப்படி ஒரு முறை வரப் போவதாகக் கூறுகிறார்கள். அப்படி ஏதாவது நடந்து இந்தியா மாறினாலொழிய, இந்திய அரசியல்வாதிகள் யாரும் திருந்தப் போவதில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்று பேசிக்கொண்டே இருப்பார்கள். மக்களும் யார்தான் ஊழல் செய்யவில்லை என்று அரசியல்வாதிகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இது ஒரு வகையான ஜனநாயகம்!
======================================
படங்களுக்கு நன்றி – topnews.in | flashnewstoday.com