சிரத்தா நடத்தும் ‘தூஸ்ரா’ நாடகம்
சிரத்தா
நாடகம் என்னும் முக்கியமான கலை வடிவம் நலிவுற்றிருக்கும் தற்காலச் சூழலில் அதன் பாரம்பரியப் பெருமையை நிலைநாட்ட தன்னார்வலர்கள் சிலர் இணைந்து நிறுவிய ஒரு அமைப்பே ‘சிரத்தா’. நாற்பது வருடங்களுக்கு மேலாக நாடகத் துறையில் இயங்கி வரும் T.D. சுந்தரராஜன், சிவாஜி சதுர்வேதி என்கிற நடிகர்கள் இருவரின் சிந்தனையில் உருவானது, சிரத்தா. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியின் அதீத பாதிப்பால் பொலிவு இழந்திருக்கும் நாடகத் துறையின் இருபது வருடத்துக்கு முந்தைய ஆளுமையை மறுபடி கொணருவதே இவர்களின் குறிக்கோள்.
சிரத்தாவின் பொது நோக்கம் தரமான, வித்தியாசமான, சமரசங்கள் செய்யாத நாடகங்களை வழங்குவது. இதற்காக சிரத்தா கீழ்க்கண்ட வழிகளைத் தேர்தெடுத்திருக்கிறது.
* வித்தியாசமான கதையமைப்பு கொண்ட கதைகளைத் தேர்தெடுப்பது.
* சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு நூதனமான நாடகங்கள் எழுதி, இயக்க வைப்பது
* கதையமைப்பு, பாத்திரப் படைப்புக்கு ஏற்றவாறு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தருவிப்பது.
* அரங்க அமைப்பு, ஒலி ஒளி போன்ற தொழில்நுட்ப உத்திகளில் சமரசம் செய்யாமல், பொருட்செலவு பாராமல், துல்லியமாய் அமைப்பது
* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இப்படிப்பட்ட நாடகங்கள் தயாரித்து வழங்கி, நுழைவுக் கட்டணம் விதிக்காமல் எல்லோரையும் நல்ல நாடகங்களைப் பார்க்க வைப்பது.
சிரத்தா தயாரித்து விவேக் சங்கர் எழுதி இயக்கிய முதல் நாடகமான “தனுஷ்கோடி” கடந்த அக்டோபர் மாதம் ஐந்து காட்சிகள் நடத்தப்பட்டன. இந்த நாடகத்தில் பல குழுக்களைச் சார்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெற்றார்கள். புயல், வெள்ளத்தால் மூழ்கிப் போன தனுஷ்கோடியின் இறுதி ஒன்றரை மணி நேர நிகழ்வுகளின் பின்னணியில் ஒரு கதை பின்னி, நிகழ்த்தப்பெற்ற இந்த நாடகத்தில் மேடையில் நாடகம் நடந்த ஒன்றரை மணி நேரமும் மேடைக்குள்ளேயே மழை பொழிகிற, இதற்கு முன் உலகத்திலேயே செய்து காட்டப்படாத, ஒரு காட்சியமைப்பு உருவாக்கப்பட்டது. அது போலவே இறுதிக் காட்சியில் ராட்சத அலை அடித்து அந்த ஊரே மூழ்கிப் போவதாய் நாடக மேடையிலே யாரும் நடத்திக் காட்ட முனையாத இமாலய முயற்சி, பெருத்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. நாடகம் பெருவெற்றி பெற்றது. சிரத்தா என்கிற அமைப்பை எல்லோரையும் நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வைத்தது.
சிரத்தா தயாரிக்கும் இரண்டாவது நாடகம் “தூஸ்ரா” ( கிரிக்கெட்டின் கதை) .
தூஸ்ரா (கிரிக்கெட்டின் கதை):
ஆனந்த விகடனில் வெளியான “சுழல் பந்து“ என்கிற ஆனந்த் ராகவின் கதையின் நாடகமாக்கம் இது.
இந்தியா பெரும் மோகம் கொண்ட விளையாட்டு கிரிகெட். இந்த நாட்டின் ஒவ்வொரு சிறுவனும் இந்த விளையாட்டை ஆடாமல் வளர்வதில்லை. தெருவோரத்திலிருந்து வளர்ந்து தொலைக்காட்சி, வானொலி, மைதானம் என்று கோடிக்கணக்கானவர்களைத் பாதிக்கும் விளையாட்டு.
நுணுக்கங்கள் நிறைந்த ரசமான ஒரு ஆட்டமாயிருந்த இந்த விளையாட்டு கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் ஒரு கேளிக்கையாய், வியாபாரமாய், பொருள் ஈட்ட உதவும் ஒரு துறையாய் உருமாறி வந்திருக்கிறது. ”தூஸ்ரா” விளையாட்டின் இந்த வீழ்ச்சியைத் தான் சொல்லப் போகிறது. கணேஷ் என்கிற ஒரு இருபது வயது இளைஞன் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கி, மாறிவரும் கிரிகெட் சூழலினால் மெல்ல மெல்ல இயல்பு மாறிப் போகும் கதையைச் சொல்கிற நாடகம் இது.
தூஸ்ராவின் கதாநாயகன் கிரிக்கெட் தான். கிரிகெட்டே தன் கதையைச் சொல்கிறது. தெருவோரம் ஆடுகிற சிறுவர்கள் கிரிகெட்டிலிருந்து நாடகம் துவங்கி, பணம், அரசியல், மனச்சோர்வுறும் வீரர்கள், கோபமுறும் ரசிகர்கள் என்று கிரிக்கெட்டின் மாறி வரும் இயல்பைச் சித்தரிக்கிறது தூஸ்ரா.
நாடகம் தெருவோர கிரிகெட்டிலேயே முடிகிறது. “நான் பணத்தின் நிறமறியா இந்தச் சிறுவர்கள் ஆடும் தெருவோர கிரிகெட்டில்தான் இன்னும் ஜீவித்திருக்கிறேன்” என்று கிரிகெட்டே தன் கதையைப் பார்வையாளர்களுக்குச் சொல்கிற மாதிரி நாடகம் அமைந்திருக்கிறது.
கிரிக்கெட் வீரனாகும் தன் வாழ்க்கையின் குறிக்கோளில் தோற்றாலும் நேர்மையில் தோற்காத ஒரு தந்தை, பாகிஸ்தானுடன் தோற்றதற்காகப் பலிகடா ஆக்கப்படும் ஒரு காப்டன், ஆட்டத்தின் நுணுக்கங்களைச் சற்றும் அறிந்திராமல் அதன் பிரபலத்தில் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு கிரிக்கெட்டை நிர்வாகம் செய்யும் அரசியல்வாதி, அவர்களின் கைப்பாவையாய்த் தேர்வுக் குழு, கிரிக்கெட் வீரர்களைத் தெய்வமாய் வணங்கும் – அவர்கள் தோற்றுபோனால் வசை பாடும் ரசிகன், இயல்பு மாறிப் போய்க்கொண்டிருக்கிற மகனைக் குடும்பத்தில் திரும்பக் கொணர முயலும் அம்மா, வீரர்களை விளம்பர சாதனங்களாய் உபயோகித்துப் பொருள் ஈட்டும் விளம்பர நிறுவனங்கள், விளையாட்டில் சூதாட்டத்தைக் கொணர்ந்து அதைச் சீரழிக்கும் தரகர்கள் என்று வளைய வருகின்றன தூஸ்ராவில் இயங்கும் பாத்திரங்கள்.
தமிழ் நாடக மேடையில் மிக அரிதாக எடுத்துக் கையாளப்பட்ட விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்ட கதையமைப்பு கொண்டது “தூஸ்ரா”. மனத்தைத் தொடும் சம்பவங்களோடு நகைச்சுவை இழையோட, கதையைச் சொல்லியிருக்கிறோம். டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி இருவரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் யுவஸ்ரீ மற்றும் கீதா ஜெயராமன் இருவரும் நாடகத்தில் வரும் இரு பெண் பாத்திரங்கள். இதர நாடகக் குழுக்களிலிருந்து நடிகர்கள் நடிக்கிறார்கள்.
நடிகர்கள்
- டெல்லி கணேஷ்
- காத்தாடி ராமமூர்த்தி
- கிரீஷ்
- பாலாஜி
- யுவஸ்ரீ
- கீதா ஜெயராமன்
- அலெக்ஸ்
- சுவாமி கணேசன்
- பாலு
- மது
- ஸ்ரீதர்
- முரளி
தொழில்நுட்பக் குழு இயக்குநர் – கிருஷ்ணமூர்த்தி
இசை: குஹப் பிரசாத்
ஒலி – ஒளி அமைப்பு: பெருமாள் பாபு
நாடகாசிரியர் / இயக்குநர் ஆனந்த் ராகவ் குறித்து:
பத்து வருடங்களுக்கு மேலாய், சிறுகதை, கட்டுரைகள், நாடகங்கள் என்று பல தளங்களில் இயங்கும் எழுத்தாளர். பெரும்பாலான சிறுகதைகள் விகடனில் வெளிவந்தவை. கல்கி, கலைமகள், அமுதசுரபி, குமுதம், வடக்கு வாசல், ஊஞ்சல், சூரிய கதிர் போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.
இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான மாதாந்திரப் பரிசை மூன்று முறை பெற்றவர். ஆனந்த விகடன் “முத்திரைக் கதை” பரிசை நான்கு முறை பெற்றவர். இவை தவிர கலைமகள், அமுதசுரபி, குமுதம் பத்திரிகைகள் மற்றும் ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் ஆறு முறை பரிசுகள் வென்றவர்.
ஐம்பது சிறுகதைகள், இரு கட்டுரைத் தொடர், நான்கு மேடை நாடகங்கள் இவரது இலக்கியப் பங்களிப்பு. மூன்று புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்பகள், இந்திய ராமாயணங்களோடு தாய், மலேசிய, கம்போடிய, ஜப்பானிய, பர்மிய மற்றும் இதர கிழக்காசிய ராமாயணங்களை ஒப்பிட்டு எழுதிய “ராமகியன்” என்கிற புத்தகமும் இதில் அடங்கும்.
ஆனந்த் ராகவின் முதல் நாடகம், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘சுருதி பேதம்’. அதைத் தொடர்ந்து, 2010 ஆகஸ்ட் மாதம் சென்னையில் மேடையேறிய ‘தனிமை’ என்கிற அமெரிக்காவின் கிரியா கிரியேஷன்ஸுக்காக எழுதியது. இவரின் மூன்றாவது நாடகமே “தூஸ்ரா”.
ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் ஜனவரி 25 முதல் ஜனவரி 28 வரை நான்கு நாட்களுக்கு நாடகம் நடக்கும். தூஸ்ரா நாடகம் நான்கு நாட்களுக்கு மட்டுமே நடக்கும். நுழைவுக் கட்டணம் இல்லாத இந்த நாடகத்துக்கு நாடக ரசிகர்களை சிரத்தா அன்புடன் வரவேற்கிறது.
தொடர்புக்கு:
ANAND RAGHAV : 09663371962
TD SUNDARRAJAN : 9840450537
SHIVAJI CHATURVEDI : 9840208583