அபூர்வமான புதிய அனுபவங்கள்

1

(நினைவுகளின் சுவட்டில் – பாகம்  II – பகுதி  13)

வெங்கட் சாமிநாதன்

Venkat_swaminathanசாந்தி பத்திரிகை எனக்குப் பிடித்திருந்தது. பொதுவாக எல்லோரும் வெளிப்படுத்தும், பிரபலமாகியுள்ள அபிப்ராயங்களை எதிர்த்து மாற்றுக் கருத்து சொல்வது என்ற சமாசாரம் பத்திரிகை என்னும் இன்னொரு பொது மேடையில் வெளிவருவது படிக்க எனக்கு மிகவும் உற்சாகம் தருவதாகவும் புதிய அனுபவமாகவும் இருந்தது. அதிலும் நான் கொண்டிருந்த அபிப்ராயத்தை அச்சில் இன்னொருவர் சொல்லப் பார்ப்பது என்பது, எனக்கு ஆதரவாக இன்னொரு குரல் இருக்கிறது என்ற மனோ திடம் தருவதாகவும் இருந்தது. இனி என் அபிப்ராயங்களை அடித்துப் பலமாகச் சொல்லலாம் என்ற ஒரு தைரிய உணர்வு தோன்றியது.

சாந்தி பத்திரிகையின் தொடர்ச்சியாக, ஏதோ ஒரு தினசரி பத்திரிகையில் வெளிவந்திருந்த இரண்டு மதிப்புரைகள் என் கவனத்தைக் கவர்ந்தன. அது எந்தப் பத்திரிகை என்று நினைவில் இல்லை. ஏதும் தமிழ் நாளிதழ் வாங்கியதாகவோ, அல்லது புர்லாவில் என் அருகில் இருந்த யாரும் தமிழ் தினப் பத்திரிகை எதுவும் வாங்கியதாகவோ கூட நினைவில் இல்லை. ஹிராகுட்டில் இருந்த போது தான் விடுதலை பத்திரிகையை ஓரிரு மாதங்கள் சந்தா கட்டி வரவழைத்துக்கொண்டிருந்தேன். பின் அதன் மேல் வெறுப்பு ஏற்படவே, அதை உடன் நிறுத்தியும் விட்டேன். ஆனால் இன்னமும், இப்போதும், இதை எழுதும் இந்தக் கணத்திலும், ‘ரகுநாதன் கதைகள்’ என்றும் ‘கு.அழகிரிசாமி கதைகள்’ என்றும் இரண்டு சக்தி காரியாலய வெளியீடுகளுக்கு தமிழ்ப் பத்திரிகை ஒன்று தந்திருந்த மதிப்புரையின் அச்சுத் தோற்றம் மனத்திரையில் ஓடுகிறது.

உடனே அந்த இரண்டு புத்தகங்களையும் வரவழைத்தேன். அவை வந்ததும் பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. நன்றாக பைண்ட் செய்யப்பட்டு நல்ல தாளில் அச்சிடப்பட்ட பெரிய அளவிலான டெமி என்பார்களே அந்த சைஸில். இரு புத்தகங்களிலும் பெரிய மையிட்ட கண்களும் நெற்றியில் குங்குமமும் தீட்டிய பெண்கள் படம் ஏதும் அட்டையில் இல்லை அது ஒரு பெரிய வித்தியாசம். சட்டென்று கன்ணில் படும் வித்தியாசம்.. படம் ஏதும் இல்லாது, கெட்டியான ப்ரௌன் நிறத்தில் ஜாக்கெட் போட்டிருந்த புத்தகங்கள்.. தாம் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்கள் இவர்கள் என்று சக்தி காரியாலம் பிரகடனப்படுத்துவது போல் இருந்தது புத்தகத் தயாரிப்பு. இதெல்லாம் எனக்குப் புது அனுபவங்கள்.

அக்காலத்திய பெரிய பிரபல பிரசுரங்களான, கலைமகள், தமிழ்ப் புத்தகாலயம் எல்லாம் இப்படிப் புத்தகங்கள் தயாரிப்பதில்லை. புத்தகங்கள் இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தன. சிதம்பர ரகுநாதன் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர். பள்ளி நாட்களில் என் நண்பனும் கவிஞனுமான ஆர். ஷண்முகம் கொடுத்த ‘முதல் இரவு’ என்ற தடை செய்யப்பட்ட நாவல், அதற்காக சிதம்பர ரகுநாதன் சிறை வாசம் இருந்து, பின்னர் அது பற்றி அவருமோ அல்லது அவரது பிரசுரகர்த்தர்களோ பேசாத நாவல், படித்திருந்தேன். இப்போது சாந்தி பத்திரிகை. பத்திரிகைகளிலேயே கூட தான் வித்தியாசமான பத்திரிகை என்று சாந்தி எனக்குத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது.

இரண்டு பேரிலும் எனக்கு சிதம்பர ரகுநாதனின் கதைகள் மிகவும் பிடித்துப் போயின. ‘வென்றிலன் என்ற போதும்’, ‘ஆனைத் தீ’, ‘ஐந்தாம் படை’ போன்ற கதைகள் இப்போது மறுபடியும் படிக்கக் கிடைத்தால் விருப்பத்துடன் படிப்பேன். கிட்டத் தட்ட அறுபது வருடங்கள் ஆகிவிட்டன.. அன்றிலிருந்து சில வருடங்கள் வரை சிதம்பர ரகுநாதன் தான் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக இருந்தார். அடுத்தடுத்து வந்த ‘புதுமைப்பித்தன் வரலாறு’, ‘புதுமைப்பித்தன் கவிதைகள்’,  ‘இலக்கிய விமர்சனம்’ எல்லாம் அவரிடம் இருந்த என் மதிப்பை வளர்த்தன என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், ‘நீயும் நானும்’ என்றோ என்னவோ ஒரு தொகுப்புக்குப் பிறகு அவர் மேல் எனக்கு இருந்த மதிப்பு வேகமாக சரியத் தொடங்கியது.

ஏதோ ஒரு கதை, சிறையிலிருந்து தப்பிய தன் கணவனின் தோழன் தன் வீட்டில் தஞ்சம் அடைகிறான். போலீஸ் அவனைத் துரத்தி வந்து வாசல் கதவைத் தட்டுகிறது. கதவை உடைக்கிறார்களோ என்னவோ, இவள் தன் குழந்தையை கதவின் மேல் அறைகிறாள். போலீஸ் திகைத்துப் போய் நிற்க, வீட்டில் ஒளிந்திருந்தவன், தன் கணவனின் தோழன், வீட்டுப் பின் புறமாகத் தப்பி ஓடுகிறான். அவனைத் தப்புவிக்க தன் குழந்தையைக் கதவில் அறைந்து கொல்கிறாளாம் ஒரு தாய். வர்க்கப் போராட்டத்தில் ஒரு தாய் என்னென்ன தியாகமெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது. இதைத் தான் ரகுநாதன் பாட்டாளி வர்க்கத்துக்குச் சொல்கிறாரா? இந்தக் கதையைப் படித்ததும் ‘சீ’ என்றாகிவிட்டது. இப்படித்தான் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்காக எழுத்தாளர்கள் தம் பங்கைச் செலுத்த வேண்டும் போலும். அதிலிருந்து பின்னர் படித்த ரகுநாதனின் எந்த எழுத்தும் எனக்கு வெறுப்பையே தந்தது.

ku.alakirisamyஆனால் கு. அழகிரிசாமி கதைகள் எனக்குப் பிடித்திருந்தாலும், ஒரு புதிய சிறுகதை எழுத்தாளரை எனக்கு அப்போது அறிமுகப்படுத்தினாலும், இனி கு. அழகிரிசாமியையும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், ‘சிதம்பர ரகுநாதன் கதைகள்’ என்ற முதல் தொகுப்பு தந்த உற்சாகமும் பரவசமும் கு. அழகிரிசாமி எழுத்தில் நான் காணவில்லை. ஆனால் ஓரிரண்டு வருஷங்களில் சிதம்பர ரகுநாதனின் எழுத்திலிருந்து நான் விலகிச் சென்றது போல, கு. அழகிரிசாமி அத்தகைய வெறுப்பையும் தரவில்லை. பின் வருடங்களில் அவரை நான் படிக்கப் படிக்க, ஒரு நிதானத்தோடேயே கு. அழகிரிசாமி என்னில் வளர்ந்து வந்தார். ‘ராஜா வந்திருக்கிறார்‘ என்று ஒரு கதை. அது தான் அந்தத் தொகுப்பில் எனக்கு நினைவில் இருப்பது. அது ஒன்று தான் என்றாலும், அதுவும் அறுபது வருடங்களாக நினைவில் இருக்கிறதே. அதைத் தான் சிறப்பாகப் பின்னாளில் க. நா. சுப்பிரமணியமும் குறிப்பிட்டு வந்தார். அலட்டிக்கொள்ளாது, வெகு சாதாரணமாக ஒரு பெரிய விஷயத்தை மெல்லிய எள்ளலோடு சொல்லிவிடும் அவரது தனித்துவம் எனக்குப் பிடித்திருந்தது.

க.நா.சுப்பிரமணியம் என்றதும் ஒரு வருடம் முன் ஹிராகுட்டில் இருந்த போது, செல்லஸ்வாமியின் பக்கத்து வீட்டு ஜனார்த்தனம் என்பவர் அமுதசுரபி பரிசாகக் கிடைத்த க.நா.சு.வின் ‘ஒரு நாள்’ படித்த பிறகு, க.நா.சு. எழுத்துகளையும் கிடைத்த அளவு படிக்க வேண்டும் என்று தோன்றியது. கலைமகள் பிரசுரத்தில் ‘பொய்த்தேவு’, ‘ஒரு நாள்’ இரண்டும் கிடைத்தன. கிட்டத் தட்ட 300 பக்கங்கள் கொண்ட பைண்ட் செய்யப்பட்ட அந்தப் புத்தகம் மூன்று ரூபாய்க்குக் கிடைத்தது. நன்றாக நினைவில் இருக்கிறது. அது 1946-47இல் பிரசுரமானது. பின்னர் அது தொலைந்து போய், 70-களிலோ அல்லது 80-களிலோ அதே முதல் பதிப்பு அதே மூன்று ரூபாய்க்கு வாங்கியதும் நினைவிலிருக்கிறது.

என் வாசிப்புத் தேர்வுகள், எழுத்தாளத் தேர்வுகள், புர்லாவில் புதிய நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்தன. அவர்களிடையே என் வாசிப்பும் தேர்வும் நான் உதிர்த்த அபிப்ராயங்களும் என் கருத்துகளுக்கு ஒரு மதிப்பை உருவாக்கின. ‘இது என்னய்யா வெளங்காத எழுத்து, என்று அட்டகாசமான கருத்துகளை உதிர்த்த தேவசகாயம் கூட ‘உலகத்திலே இருக்கற வெளங்காத எழுத்தையெல்லாம் படிச்சுக்கிட்டிருப்பார்ல்லா இவரு’ என்று என்னை ஒதுக்கி விடவில்லை. ‘அவரைக் கேளுங்க’ என்று என்னைக் கைகாட்டி விடுவது அவர் வழக்கம்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, எனக்குப் பிடித்தவையாக பல புதிய அனுபவங்கள் வந்து சேர்ந்தன. முதல் அனுபவம் யாரோ ஒரு பஞ்சாபிப் பெண், முப்பதைத் தொட்டுக்கொண்டிருப்பவள், சிவந்த, ஒல்லியான, நெடிய  உருவம். பெயர் மறந்து விட்டது. மீரா பஜன் பாட்டுகள் பாடினாள். அந்த இனிமையான குரலும், புதிய சங்கீத வடிவமும் என்னை மெய் மறக்கச் செய்துவிட்டன. அந்தத் தினம் தான் எனக்கு ஜோகன் படத்தில் கீதா ராய் பாடியவை எல்லாம், மீராவின் பஜனைப் பாட்டுகள் என்று தெரிந்தது. அது தான் எனக்கு மீரா பற்றியும், மீராவின் பாட்டுகள் பற்றியும் முதல் அறிமுகம். எம்.எஸ் சுப்புலக்ஷ்மி பாடி நடித்திருந்த திரைப்படம் ‘மீரா’ அதற்கும் முன் வெளிவந்திருந்தாலும் அப்போது நான் பார்த்திருக்கவில்லை.  எம்.எஸின் ‘மீரா’ எனக்குப் பார்க்கக் கிடைத்தது வெகு ஆண்டுகள் பின்பு தான்.

அன்று அந்தப் பஞ்சாபிப் பெண் பாடியது என்னில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. பாட்டு முடிந்ததும் வீட்டுக்கு வந்தால் மனம் நிம்மதி இழந்திருந்தது. அந்தப் பெண் எப்போதும் பாடிக்கொண்டிருக்க மாட்டாளா, நாம் அங்கேயே கேட்டுக்கொண்டிருக்க மாட்டோமா, என்ற ஒரு ஏக்கத்தில் மனம் இருண்டு போயிற்று. இது ஒரு பைத்தியக்காரச் சிந்தனை தான். இருந்தாலும் மனத்தில் நிரம்பியிருந்த ஏக்கமும் இழப்பு உணர்வும் இப்படியெல்லாம் நினைக்கத் தூண்டியது. அது மெல்ல மெல்ல மறைந்துவிட்டது தான். ஆனால் மனம் தெளிய வெகு நாட்கள் ஆயிற்று. பின் அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டதுமில்லை. அந்த இனிய சங்கீதம் அந்த ஒரு நாள் மாலையோடு மறைந்தும்விட்டது. கீதா ராய் என் நினைவுகளில் இன்னமும் வாழ்ந்திருக்க, கீதா ராயின் குரல் இனிமையும் மீராவும் தான் காரணம் என்று இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.

geeta roy

ஜோகன் படத்தில் கீதா ராய் பாடல்கள்

இது போன்ற இன்னொரு புதிய அனுபவம், புதிய சங்கீத ரூபம் கேட்டது, புர்லாவில் அந்த ஆரம்ப வருடங்களில் தான். சுசித்ரா மித்ரா என்னும் வங்காளிப் பெண். அந்தப் பெண்ணும் அப்போது தன் இருபதுகளில் இருந்த இளம் பெண் தான். அது தான் முதன் முறையாக நான் ரபீந்திர சங்கீதம் கேட்பதும். அவள் பாடியது எல்லாம் தாகூரின் கீதங்கள் தான். ஆனால் அந்தக் கீதத்தின் சங்கீத வெளிப்பாடு, புதிதாக இருந்தது. எல்லாம் சற்று மேல் ஸ்தாயியில், மெல்லிய இழையாகக் காற்றில் மிதப்பது போன்ற சலனத்தில் கேட்கக் கேட்க பரவசமாக இருந்தது என்னமோ வாஸ்தவம் தான். ஆனால், தாகூர் என்னதான் இயற்கையின் அழகையே பாடினாலும், கண்ணனின் குழந்தமையில் அன்புப் பெருக்கெடுத்தாலும், எல்லாம் ஒரு சோகத்தையே அடிநாதமாகக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அந்தச் சோகமும் கேட்க இனிமையாகத் தான் இருந்தது. தெய்வத்தை நோக்கி உரத்துத் தன் சோகத்தைச் சொல்வது போல இருந்தது.

suchitra_mitraசுசித்ரா மித்ராவின் ரவீந்திர சங்கீதம்

அப்போது எனக்கு வங்காளியும் புரியாத மொழிதான். வங்காளி புரிந்து கொள்ளவும் தட்டுத் தடுமாறி பேசவும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்க, எனக்குப் புர்லாவில் கிடைத்த நட்பின் கொடை எனச் சொல்லத் தக்க நண்பன் மிருணால் காந்தி சக்கரவர்த்தியோடு அறிமுகமும் நெருங்கிய தோழமையும் கிடைக்க, இன்னம் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அந்த நாட்களில் என்னைத் துக்கமும் இனிமையும் ஏக்கமும் கலந்த உணர்வுகளில் ஆழ்ந்திருக்கச் செய்த பாடகிகளில் சுசித்ரா மித்ரா இரண்டாமவர்.

சுசித்ரா மித்ரா, புர்லாவிற்கு வந்தது மிக அபூர்வமான வருகை என்று தான் தோன்றுகிறது. அவர் அதன் பிறகு புர்லாவிற்கு வரவே இல்லை. அவர் என்னில் ரவீந்திர சங்கீதத்தில் ஒரு பிடித்தத்தை ஏற்படுத்தி விட்டுப் பின் மறைந்தே போனார். அவர் பற்றிப் பின் நான் ஏதும் செய்தி கேட்கவே இல்லை. அவர் அதன் பின் மிகவும் புகழ்பெற்ற ரபீந்திர சங்கீத பாடகியாயிருந்தார். ஆனால் அவர் பெயர் எனக்கு மறந்து விட்டிருந்தது. என்னவென்று அவரைக் குறிப்பிடுவது, இந்த நினைவுகளில் என்று நான் கொஞ்ச நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தேன். சில நாட்கள் முன் தான் சுசித்ரா மித்ரா என்னும் புகழ் பெற்ற ரவீந்திர சங்கீதக் கலைஞர் தனது 89ஆவது வயதில் மரணமடைந்ததாகச் செய்தி பத்திரிகைகளில் வந்தது. அப்போது தான் இந்தச் சுசித்ரா மித்ராதான் 1951இல் நான் புர்லாவில் கேட்ட சுசித்ரா மித்ரா என்று நினைவுக்கு வந்தது.

அப்போது நினைத்துக்கொண்டேன். 1950களில் ஒரிஸ்ஸாவின் அந்த ஒதுங்கிய முகாமில், ஏதோ தேவதை போல் வந்து, பின் தேவதைகள் போலவே மறைந்தும் விட்டார் அவர். எத்தகைய அபூர்வ அனுபவம் அது. முன்னர் மீரா பஜன் பாடி மறைந்து விட்ட தேவதை போல. தம் சங்கீதத்தின் இனிமையை சில மணி நேரம் பிரவாஹிக்கச் செய்துவிட்டு மறைந்து விட்டனர்…

(நினைவுகள் தொடரும்….

===========================================

படங்களுக்கு நன்றி – azhiyasudargal.blogspot.com, hindisongs.net, obitpatrol.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அபூர்வமான புதிய அனுபவங்கள்

  1. அருமையான பகிர்வுகள் ஒவ்வொன்றும். மீண்டும்,மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *