தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் – 5

0

 

தி.சுபாஷிணி

மூவலூர் இராமாமிர்தம் – (1883-1962)

திருவாரூர் கிருஷ்ணசாமிக்கும் சின்னம்மாளுக்கும் பிறந்த இவர், ஏழ்மையின் காரணமாக, மாயவரம் மூவலூர் ஆச்சிக் கண்ணு என்னும் தாசியால் வளர்க்கப்பட்டார். சாதியின் பெயரிலும் பிறப்பின் அடிப்படையிலும் கடவுளின் பெயரில், பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கிய ஒரு சமூகக் கொடுமைக்கு எச்சரிக்கை மணி அடித்தவர் இவர். இதற்காக 1925இல் இசைவேளாளர் சங்க மாநாடு கூட்டினார்; தேவதாசி முறை ஒழிப்பைப் பிரகடனப்படுத்தினார்.

தேசவிடுதலையுடன், சமூக இழிவிலிருந்தும் விடுதலை பெறப் போராடும் சமூகப் போராளியான இவரை மகாத்மா காந்தியடிகளும் அண்ணாதுரை அவர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர். ‘பொட்டறுப்புச் சங்கம்’ என்கின்ற அமைப்பைப் பல ஊர்களில் ஏற்படுத்தினார். மீட்கப்பட்ட தேவதாசிகளுக்கு ‘யுவதி சரணாலயம்’ ஒன்றை உருவாக்கி, அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொணர்ந்தார். மேலும் இவர், பெரியார் இயக்கத்தில் இணைந்து தீண்டாமை, விதவை மறுமண மறுப்பு, தேவதாசிமுறை, பால்ய விவாகம் ஆகிய சமூக இழிவுகளை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.

மூன்றாம் வகுப்பே படித்த இவர், 1963இல் “தாசிகளின் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்” என்கின்ற நாவலை எழுதினார். அது, தேவதாசி முறை எப்படி விபச்சார வர்த்தக முறையாக மாறியது என்பதற்குச் சிறந்ததோர் ஆவணமாகத் திகழ்கிறது.

1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, திருச்சியிலிருந்து சென்னை செல்லும்போது கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1949இல் அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கினார். இவரும் தம்மை அக்கழகப் பணிகளில் இணைத்துக் கொண்டு தீவிரமாக முப்பது ஆண்டுகள் சுறுசுறுப்பாக உழைத்தார்.

அண்ணாதுரை வாழும் காலத்தே தி.மு.க. சார்பில் 1956இல் இவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தார். திமுக ஆட்சி, ‘பெண்கள் திருமண உதவி’ திட்டத்திற்குப் பொருத்தமாக இவரது பெயரைச் சூட்டி இவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.

படத்திற்கு நன்றி :

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *