சேவாலயாவின் இலவச நூலகம் – சுவாமி விவேகானந்தா நூலகம்
செய்திக் குறிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள வாடாநல்லூர் கிராமத்தில் செயல்படும் சேவாலயா சேவை மையத்தில் இன்று 29-03-2012 சுவாமி விவேகானந்தர் நூலகத்தை சுவாமி பிரமதேஷானந்தா (செயலாளர், இராமகிருஷ்ண மடம், மல்லியங்கரணை, உத்திரமேரூர்) அவர்கள் தலைமையேற்றுத் திறந்து வைத்து உரையாற்றினார்.
விழாவில் அவர் பேசுகையில் சுவாமி விவேகானந்தர் புத்தகத்தை மிகவும் விரும்பியவர். ஒருவருடைய மனது ஒரு திறந்த புத்தகம் போன்று இருக்க வேண்டும் என்று கூறியவர். எந்த ஒரு புத்தகத்தை படிப்பதாலும் அதில் ஆழ்ந்து அதிலுள்ள கருத்துக்களை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். ஏனெனில், மனிதப் பிறவியானது, மிகவும் அபூர்வமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
ஒரு நூலகம் 1000 கோவில்களுக்குச் சம்மென்றும் சமுதாய ஒற்றுமையைக் குறிக்கும் ஒரு சின்னம் என்றும் கூறினார். இலவசமாக அமைத்துத் தரப்படும் இந்த நூலகத்தை மாணவர்களும் பெரியோர்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் இங்கு ஏற்கனவே இயங்கும் இலவச கணினிப் பயிற்சி மையம் மற்றும் இலவச தையல் பயிற்சி மையங்களின் சேவைகளைப் பாராட்டிப் பேசினார்.
முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு. V.முரளிதரன் அவர்கள் விருந்தினர்களை வரவேற்க சேவாலயாவின் கசுவா மைய நிர்வாகி திரு.A.A.கிங்ஸ்டன் அவர்கள் நன்றி நவில, விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.
சேவாலயாவுக்காக,
(V.முரளிதரன்)
நிறுவனர் & நிர்வாக அறங்காவலர்