திவாகர் 

 நாடகம் – 6, காதல் கடிதம்-2 

காதல் கடிதம் – 1

வனஜா: அது சரி, ராமா.. உங்களை ஒரு கேள்வி கேக்கலாமா?

ராமர்: கேள்விதானே.. எது வேண்டுமானாலும் கேளேன்..

வனஜா: நீங்க சீதையை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணீங்களா! அப்படியெல்லாம் இல்லியே.. அப்ப நீங்க எப்படி இப்போ மட்டும் இந்த தாஸுக்கு சப்போர்ட் பண்றேன் பேர்வழின்னு காதலை போற்றமுடியறது?

ராமா: நானும் சீதையும் என்றுமே காதலர்கள்தான் வனஜா?

வனஜா: அது எப்படி?

ராமா: அது அப்படித்தான்.. ஏன்.. நீ தமிழ்க்கவிதைகளைப் படித்ததில்லையா?.. கம்பராமாயணம் நன்றாகப் படி, உனக்குத் தெரியும்.. எங்கள் காதல் எப்பேர்ப்பட்டது என்று.. நீ திரைப்படங்கள் பார்த்திருக்கிறாய் அல்லவா.. வேண்டுமானால் அதிலொரு பாடலை நினைவு படுத்துகிறேன். ‘மணிமுத்து மாணிக்க மாடத்திலிருந்து ஜானகி பார்த்திருந்தாள்.. அவள் மைவிழி சிவக்க மலரடி நோக ராமனைப் பார்த்திருந்தாள்’ என்று சீதை என்னை முதல் முதலாக மிதிலையில் பார்த்தபோது பாடுவதாக வரும். அவள் என்னைப் பார்த்த பார்வையானது என் மனதுக்குள் தைக்க நான் உடனடியாக அவளை ஏறிட்டுப் பார்க்கிறேன். அதைத்தான் கம்பன் அழகாக ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்று பெரிய காவியம் பாடிவிட்டார். ராமாயணத்தின் மொத்த கதையே எங்கள் இருவருக்காக எழுதப்பட்டது. மிதிலையில்தான் எங்கள் காதல் ஆரம்பித்தது என்றாலும் அது எங்கள் உள்ளத்தோடு உதிரத்தோடு உணர்வோடு இணைந்த காதல். அதனால்தான் அவள் என்னை முதல் முதலாகப் பார்த்த அவள் நிலையை கவிஞர் அப்படிப் பாடுகின்றார். என் நிலைமையும் அப்போது அதுதான் என்று நான் சொல்லவும் வேண்டுமோ..

 

வனஜா: ஹூம்.. ஓகே.. அப்படியே வெச்சுக்குவோமே.. சரி, நீங்கள் உள்ளத்தால் உணர்வால் காதலிச்சுதான் கலியாணம் பண்ணிக்கினீங்க.. நம்பறேன்.. ஆனா.. அப்படிப்பட்ட நல்ல ஒரு காதல் மனைவியை சந்தேகிச்சு அக்னியில் குளிக்கவெச்சது சரியா.. நீங்க செஞ்சது சரியா? நியாயமா.. தர்மமா? இது ஆண்டவனுக்கே அடுக்குமா?

ராமர்: (சிரித்து விட்டு) வனஜா! நீ நிறைய திரைப்படங்கள் பார்க்கிறாய்.. சரி, உன் வழியே வருகிறேன்.. இந்த ராமாயணத்தை சாதாரணமாக்ப் படித்தால் உனக்கு ஒரு விஷயம் மிகத் தெளிவாகத் தெரியும். அது ராமன் என்ற ஒருவனே மிகப்பெரிய கதாநாயகன் என்பது. ராமன் தாய் தந்தையை மதிக்கும் நல்லதொரு மகன், ராமன் தம்பியரை மதிக்கும் நல்ல சகோதரன், ராமன் நல்லதொரு இளவரசன், ராமன் தந்தைக்காக அரசைத் தியாகம் செய்தவன், ராமன் காட்டுக்கு சென்று கடுமையான வாழ்வை அனுபவித்தவன், ராமன் பல முனிவர்களின் தவத்துக்கு ஊறு விளைவித்த அசுரர்களை அழித்து அவர்களை காப்பாற்றியவன், ராமன் அகல்யைக்கு சாபவிமோசனம் அளித்தவன், ராமன் சபரிக்கு மோட்சம் அளித்தவன், ராமன் வாலியை வதம் செய்து சுக்கிரீவனுக்கு நியாயம் செய்தவன், கடைசியில் சீதையை ராவணண் சிறையிலிருந்து மீட்க வானரப்படைகளோடு இலங்கை சென்று ராவணனோடு அத்தனை அசுரர்களைக் கொன்ற மகாவீரன்.. இப்படியெல்லாம் வருகிறது இல்லையா?

ஜானகி: ஆமாமாம்.. எல்லாமே உங்க புகழ்தான்.

ராமர்: சரி, இப்படி ராமனுக்குதான் எல்லாப் புகழ்மாலையும் வருகின்றதே தவிர, எனக்கு என் கஷ்டங்களுக்குத் துணையோடு துணையாக நின்று, என்னுடன் நடையாய் நடை நடந்து வனவாசத்தை அனுபவித்து ஒருவருடம் இலங்கையில் படாத மனக் கஷ்டங்களுக்கெல்லாம் ஆளாகி துயரத்தில் விழுந்து ஒவ்வொரு கணமும் ராமன் நினைவிலேயே வாழ்ந்து கொண்டு, ராமனுக்காகவே, அவன் வந்து, ராவணனை அழித்து, தன்னை மீட்டெடுக்கவேண்டும் என்கிற வைராக்கியத்தோடு தியாகசீலியாக தவசீலியாக வாழ்ந்த சீதையை அவள் வாழ்ந்த அந்த அறநெறி வாழ்க்கையை உலகுக்கு எடுத்துக்காட்டவே அந்த நாடகம் நடத்தப்பட்டது..

வனஜா: நாடகமா.. நல்லா இருக்கே.. சீதையின் அக்கினிப் பிரவேசம் உங்களுக்கு நாடகமா?

ராமர்: ஆமாம் வனஜா! ராமர் ராமர் எல்லாம் ராமரே எனும் புகழ்பவர்களுக்கு அந்த ராமனுக்கு பின்னே ஒளிந்து கொண்டு செயல்படுவது சீதாதேவிதான் என்பதை எடுத்துக்காட்டவே இந்த ராமன், – தானே தன் உயர்ந்த தெய்வ நிலையிலிருந்து ஒரு படி கீழிறிங்கி சீதையை சந்தேகித்தது போல பேசியது, அதன் பிறகு அக்கினிப்பிரவேசம் நடக்கச் செய்தது.. மாற்றோர் ராமனை மனதுக்குள் நிந்திக்க, சீதையை ஆராதிக்க இப்படிச் செய்தது… அதே சமயத்தில் ராமனாகிய எனக்கும், சீதையாகிய அவளுக்கும் அக்கினி என்பது குளிர்ச்சி தரும் விஷயம் என்பது நன்றாகவே தெரியும், ஆனால் இந்த மனிதர்கள் எல்லோருமே சந்தேகப் பிறவிகள்தான்.. சந்தேகம்’ என்று வந்துவிட்டால் அதை மாற்ற ராமனாலும் முடியாது என்று எல்லோரும் பேசும் நிலைக்கு ஏன் சென்றேன்… இங்கே ராமனாகிய நான் மேல் நிலையிலிருந்து ஒரு படி தாழ்ந்து போக, சீதையாகிய அவள் எல்லோர் மனதிலும் ஒரு படி உய்ர்ந்து நிற்கச் செய்ததும் கூட ஒரு நாடகம்தான்.. இப்போது கூட உன்னைப் போன்றோரின் கோபத்துக்கு ராமனாகிய நான் ஆளாகிறேன் அல்லவா…. ராமர் சீதை கதை அப்படியே இருக்கட்டுமே, – அது சரி, உன் அத்தான் தாஸ் இப்போதெல்லாம் திருந்திவிட்டதாக கேள்விப்பட்டேன்.. உண்மையா.. காதல் கீதல் இவையெல்லாம் மாயை, அவை எல்லாம் இனி தன்னிடத்தில் கிடையாது என்றானாமே உண்மையா.. இனிமேல் மனதில் இந்த வனஜா தவிர யாருக்கும் இடம் கிடையாது என்று கூட வருந்துகிறானாமே, உண்மையா வனஜா!

வனஜா (ஆச்சரியத்துடன்)ஓ.. ஈஸ் இட்! உண்மையா ராம்!.. . எனக்குத் தெரியாதே.. தாஸ் அத்தான் உண்மையாவே மனம் வருந்தி திருந்திட்டாரா.. ஐ காண்ட் பிலீவ் இட்!.. தாஸ் அத்தானாவது காதல் ஒழிக’ன்னு சொல்றதாவது.. இம்பாஸிபிள்!

ராமர்: ம்.. நான் என் காதில் விழுந்ததை ஏதோ உனக்கும் தெரியுமாக்கும் என்று சொல்லிவிட்டேன்.. போகட்டும் வனஜா.. ஒருவேளை இந்த காதல் வாழ்க என்று இனியும் சொல்லாமல், காதலே போ போ’ என்று காதல் எதுவும் பிடிக்காத தாஸ் எனும் என் பக்தனை நீ மனப்பூர்வமாக மணந்துகொள்கிறாயா?

வனஜா: (சந்தேகத்துடன்) ராம்! எனக்கு என்னவோ நீங்க சொல்றதைப் பார்த்தா நம்பணும்னு தோணறது. அதே சமயத்தில் இந்த தாஸ் அத்தான் கோணபுத்தியும் நல்லாவே தெரியுமே.. அத்தானாவது காதலே போ போ’ன்னு சொல்றதாவது.. ஒண்ணு செய்யுங்க ராம்.. தாஸ் அத்தானை எனக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லுங்கள்..

ராமர்: ஆஹா! காதல் கடிதமா? உடனே எழுதி வாங்கி விட்டால் போயிற்று.. என் பக்தனுக்கு பிடித்த விஷயமாயிற்றே!

வனஜா: ஐய்யோ.. காதல் கடிதமா? அவ்வ்.. எனக்கு வாந்தியே வரும்.. காதல் கடிதம் இல்லே ராம்.. இம்போசிஷன் கடிதம்.. காதல் ஒழிக காதல் ஒழிக ந்னு 108 முறை இம்போசிஷன் கடிதம்.. ஒண்ணு எழுதித் தரச்சொல்லுங்க.. நான் உடனே சம்மதம் சொல்லி கழுத்தையும் நீட்டறேன்..

ராம்: அட.. இது என்ன வனஜா? என் பக்தன் ராம் ராம என்றுதான் இப்படி எழுதிப் பழக்கம்.. வேண்டுமெனில் வனஜா வனஜா என்று எழுதச் சொல்கிறேனே..

வனஜா: அவர் ஏன் செய்யமாட்டார்.. நோ.. இந்த காதல் வாழ்க.. காதலித்தால்தான் கலியாணம் என்று ஊரெல்லாம் பைத்தியம் பிடிச்சுத் திரியற தாஸ் எனக்குத் தேவை இல்லே.. அவரோட காதல் பைத்தியம் முழுசும் தெளிஞ்சு வரணும்.. அதனாலதான் சொல்லறேன்.. அவர் காதல் ஒழிக ஒழிக ந்னு எழுதித்தரட்டும்.. போனாப்போறதுன்னு கல்யாணம் பண்ணிக்கிறேன்..

ராம்: ம்.. சரி, நான் அப்படி ஒரு கடிதம் வாங்க முயற்சி செய்கிறேன்.. கடிதம் வாங்கிவந்ததும் கூட நீ திருமணம் செய்ய விரும்புவாய் என்பது என்ன நிச்சயம்?

வனஜா: ஐயோ ராம்! என் மேலேயே சந்தேகமா?

ராம்: பூமிக்கு இறங்கிவந்தால் எனக்கும் இந்தப் பாழாய்ப்போன மனிதக்குணம் தொத்திக்கொள்கிறது வனஜா.. என்ன செய்ய.. சரி ஒன்று செய்யேன். நீ சொன்னபடி செய்வதாக உன் அத்தானுக்கு ஒரு கடிதம் எழுதிக்கொடேன்.. இதோ வெற்றுத்தாளும் நான் கொண்டு வந்துள்ளேன்….

வனஜா: ஓஹோ எல்லாம் பிரிபேர்ட் ஆ வந்திருக்கீங்க (என்று சொல்லி அந்த வெற்றுத்தாளை வாங்கிக்கொள்கிறாள்). அது சரி, எனக்குக் கடிதம் எழுதவெல்லாம் வராது.. நீங்களே சொல்லுங்க.. எழுதறேன்..

ராமர்: அன்புள்ள அத்தான் வணக்கம்.. உங்கள் வனஜா எழுதுவது என்னவென்றால், என்னுடைய பிரியமான அத்தான் இப்போதெல்லாம்..

வனஜா: ஐய்யைய்யோ.. இது காதல் கடிதம் போல இருக்கே.. நான் அப்படியெல்லாம் எழுதமாட்டேன்பா.. ஒண்ணு செய்யுங்க ராமா, கீழே கையெழுத்து வேணும்னா போடறேன்.. எனக்கு வேண்டியது தாஸ் அத்தானிடம் ;காதல் ஒழிக’ ந்னு அவர் கைப்பட எழுதிய இம்போஸிஷன் லெட்டர்’.. அவ்வளவுதான்.

*********************************************************

மேற்கண்டது காதல் கடிதம் நாடகத்தில் பிற்பகுதியில் வரும் காட்சி. காதலித்துதான் தான் கலியாணம் செய்யவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் தன் பக்தனுக்காக அவனுக்கென யாரை விதி தீர்மானித்ததோ, அந்தப் பெண்ணோடு அவனை இணைக்கவேண்டிய கட்டாய் நிலையில் ராமர் அவதிப்படுவதை இந்த நாடகத்தில் காட்டியுள்ளேன். கதாநாயகி இவனுக்கு உறவுமுறைப்பெண்ணாகப் பார்த்திருந்தேன்.. அதே சமயத்தில் அந்தக் கதாநாயகிக்கு இவன் கொள்கைக்கு நேரெதிர் கொள்கையும் வகுத்துக் கொடுத்து, இவன் காதல் வாழ்க என்றால் இவள் காதல் ஒழிக என்று நேரெதிர் பாணியைப் பின்பற்றுமாறு இருந்தேன். இதை கதாநாயகியின் அறிமுகத்திலேயே இப்படி சொல்லியிருப்பேன்.. (மிலிடரி அண்ணா எனும் பாத்திரம் மூலமாக)

***********************************************************
மிலிடரி அண்ணா: என்னது வனஜா வராளா.. அதுவும் இங்கே தங்கப்போறாளா.. ஐய்யோ லஷ்மி… உன் தம்பிக்கும் அவளுக்கும் ஆகவே ஆகாது.. இவன் காதல் பைத்தியம்னா.. அவள் காதலுக்கு எதிரின்னு சொல்ற பைத்தியம்.. ரெண்டும் ஒரு நிமிஷம் ஒண்ணா சேராதுங்க.. உனக்கு விஷயம் தெரியுமா.. போன மாசம் பேப்பரிலயே இவ நியூஸ் வந்திருச்சு. இவ காலேஜுல யாரோ ஒரு பையன் இவ விஷயம் தெரியாம இவளுக்கு காதல் கடுதாசி கொடுத்துட்டானாம். வனஜா என்ன பண்ணினா தெரியுமா.. அத்தனை பேரையும் கூப்பிட்டு அவனை அவமானம் பண்றா மாதிரி நடு கிரௌண்டுல நிக்கவெச்சு, அவன் எழுதின அந்தக் கடுதாசியை அவனே சாப்பிடச்சொன்னதோட இல்லாம, ஒரு பெரிய பேப்பர்ல, காதல் ஒழிக காதல் ஒழிக ந்னு இம்போசிஷன் 1008 தடவை எழுத வெச்சு பெண்ட் கழட்டிட்டாளாம்.. அப்படிப்பட்டவள் கிட்ட இந்த தாஸ் ஏதாவது சில்மிஷம் பண்ணி அவமானப்பட்டான்னு வெச்சுக்க, அவனை அந்த ராமனாலும் கூட காப்பாத்த முடியாது..

ராமர் (வந்துகொண்டே) கூப்பிட்டீர்களா?

**************************************************************
இப்படிப்பட்ட காதலியை ராமர் கதாநாயகனுக்குக் கட்டி வைக்கவேண்டுமென அவர் பாணியில் ஏற்பாடு செய்து உதவுவதாக நாடக்ககதையில் காண்பித்திருந்தேன். தாஸும் ராமரும் பல இடங்களில் அலைந்தும் அவனுக்கு ஏற்ற காதலி கிடைக்காததால் ராமர் தன் பக்தனிடம் ‘ஏன் உன் அத்தை பெண் வனஜாவையே கலியாணம் செய்துகொள்ளேன்’ என்று கேட்க அவன் அந்தப் பெயரைக் கேட்டதுமே பயப்படுகிறான்.. தானும் அவளும் எதிரெதிர் துருவம் என்பதாகவும், ஒருவேளை அவள் மனம் மாறி தனக்கு ஒரு காதல் கடிதம் எழுதி காதல் செய்தால் மட்டுமே அவளைத் திருமணம் செய்துகொள்வேன்.. ஆனால் இதெல்லாம் நடக்காத விஷயம்.. வனஜாவுக்கு காதல் பிடிக்காது, எனக்கோ காதல்தான் உயிர்மூச்சு…. நாமதான் நேரெயே பார்த்தோமே.. பொதுவா காதலைப் பிடிக்கறவங்களே எனக்கு காதல் கடிதம் கொடுன்னா முறைச்சுப்பார்த்து கோபப்பட்டு பின்வாங்கிடறாங்க.. ’காதல் ஒழிக’ என்கிற வனஜா எனக்கு வளைந்து கொடுப்பாளா.. ஊம்ஹூம்.. நீ ஒருவேளை மனசு மாறி ஐய்யோ பாவம்’னு உன்னோட சக்தி, இல்லேன்னா மாயமந்திரம் போட்டாக் கூட, அவ கிட்டே உன் பாச்சா பலிக்கது. ஷி இஸ் வெரி ஸ்டப்பர்ன்.. அவளை விடு ராம், என் கொள்கை என்னன்னு உனக்குத் தெரியுமே ராம்.. 187 காதல் கடிதம் எழுதியவனுக்கு அட்லீஸ்ட் ஒரு பதில் காதல் கடிதம் வராமல் கலியாணம் செய்துகொண்டால் எப்படி ராம்.. வனஜாகிட்டேருந்து காதல் கடிதம்லாம் நோ சான்ஸ்.. நோ.. நோ..’ சரி, வேற விஷயம் பேசுவோமே ராம்’ என்கிறான்.தாஸ்.

ஸ்ரீராமராக நடித்தவர் நண்பர் சிவராமன். தமிழ் வெகு அழகாகப் பேசுவார் (ஆனால் கட்டாயம் எழுதிக்கொடுக்கவேண்டும்). ராத்திரி பகல் பார்க்காமல் மன்ப்பாடம் செய்வார். இவர்தான் ஏற்கனவே பாரதியாகவும் நல்ல தமிழ் பேசி நடித்தவர். அருமையாக இந்தப்பாத்திரத்தை செய்து கொடுத்தார். இந்த நாடகத்தில் பெண் கதாபாத்திரங்கள் மூவர். கதாநாயகி ஒவ்வொரு முறையும் மாறுவார். வித்யா, சுகன்யா, பிரியா இந்தப் பாத்திரத்தில் நடித்துக்கொடுத்தனர். அவர்கள் திறமையை மிக அற்புதமாக வெளிப்படுத்தினார்கள். வழக்கம்போல மனோகர்தான் தாஸ்..

ரிகர்சலின்போது, மனோகருக்கு ஒரு கஷ்டம் கொடுத்தேன்.. ஹீரோ தன் நண்பனிடம் குறைப்பட்டுக்கொள்ளவேண்டும்.. காதல்னா சும்மாவா.. ‘நான் அவளுக்குக் கடிதம் எழுத, அவள் எனக்கு கடிதம் எழுத, திரும்பவும் நான் பதில் எழுத, இப்படி மாறி மாறி எழுதிண்டே பீச், பார்க் நு சுத்த வேண்டாமா.. இந்த சினிமால வருமே ‘சண்டே பிக்சர், மண்டே பீச், டுயூஸ்டே சர்க்கஸ், வென்ஸ்டே டிராமா, நாம போவோம் ஜாலியாகலாமா’ ந்னு நானும் சின்ன டூயட் பாடவேண்டாமா’ என்று டைலக் பேசவேண்டும்.. சண்டே பிக்சர் வசனம் ரைம் போல பாடவேண்டும்.. மனோகரோ, ‘நான் எல்லாவற்றையும் செய்கிறேன்.. ஆனால் சண்டே பிக்சர் ரைம் வசனம் மாத்திரம் வேண்டாமே.. ரிகர்சல்ல மிஸ்டேக வந்தா சரி, ஆனா சடக்குனு மெயின் டிராமால வசனம் ரைம் போயிடுச்சுன்னு வெச்சுக்க.. நல்லாயிருக்காதே’ என்றார்.. நான் ’மாத்தவெல்லாம் முடியாது.. இந்த ரைம் கஷ்டப்பட்டு பழகு.. அந்த ஃப்ளோ’ல போகறச்சே, அதுவும் நல்லா வரச்சே ஆடியன்ஸ் கைதட்டாம இருக்கமுடியாது’ன்னு’ கட்டாயப்படுத்தினேன்.. மனோகர் பேசிய அந்த வசனங்களுக்கு ஆடியன்ஸ் கைதட்டல் மிகப்பலமாக அதிர்ந்தது’ என்று சொல்லவும் வேண்டுமா.. நல்ல நடிகர் மனோகர்.. சென்னையிலேயே இருந்திருந்தால், அங்குள்ள அதிகமான சந்தர்ப்பங்களுக்கும், அவரின் நாடக அனுபவங்களுக்கும் (இப்போதுள்ள தொலைக்காட்சி தொடர்களின் ஊடே) அவரின் நிலை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம். (இன்றும் YGP நாடகக்குழுவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்).

பொதுவாக நாடகங்கள் மனிதனின் கலைத்தாகத்தைத் தணிக்கத்தான் உதவுகின்றன. நாடகத்தால் எந்த ஒரு சிறந்த கலைஞனும் சம்பாதித்ததாக சரித்திரம் இல்லை. ஒரு நல்ல நாடக நடிகன் தான் நடிக்கும்போது தன் நடிப்புக்காக அரங்குகளில் கைதட்டல் கேட்கும்போதெல்லாம் மனதுக்குள் மிகப் பெரிய செல்வந்தன் ஆகின்றான். அவன் ஆத்மா பெருத்த நிம்மதியை அடைகிறது. அதே போல நல்ல நாடகங்களைப் பார்ப்பவர்கள் கூட.. ஒரு இரண்டு மணிநேரம் ஆடியன்ஸை ஸ்டேஜ் மீதே வைத்திருக்கவேண்டிய நிலையில், இக உலகில் உள்ள கஷ்டங்களையெல்லாம் மறந்து நாடகத்தை ரசிக்க வைக்க வேண்டும்.. அதுவும் அமெச்சூர்க்காரர்கள் நாடகம் போடுவது என்பது பழைய நாட்களில் கலியாணம் நடத்திக்காட்டுவது போலத்தான்.. கலியாணம் பண்ணிப்பார், வீட்டைக்கட்டிப் பார் என்பதெற்கெல்லாம் இந்தக் காலங்களில் மதிப்பில்லாமல் போய்விட்டது. ஆனால் இன்னமும் அமெச்சூர் நாடகம் நடத்திக் காட்டுவது என்பது மிகவும் சிரமமான காரியம்தான்..

இன்னும் வரும்.

 படத்திற்கு நன்றி :

http://yogashamkara.wordpress.com/2011/07/18/sita-gayatri-mantra/

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “காதல் கடிதம் – 2

  1. முதல்லே ஸ்ரீராமநவமி ஸ்பெஷலோனு நினைச்சேன். 😀 நல்லாவே இருக்கு உங்க நாடக நினைவுகள். அடுத்ததுக்குக் காத்திருக்கேன்.

  2. அற்புதம் சார்…ரொம்ப சுவாரசியமா இருக்கு. அதுவும் ஒரே ஒரு பத்தியில ராமனோட பெருமை அத்தனையும் சொல்றது மிகவும் அருமை.
    நன்றி

  3. கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டிருக்கிறீர்கள். இன்று 31.3.12 காலை சன் தொக்காவில் ஓர் உரையாடல் பதிவு. இல. கணேசன், கல்யாணராமன், நான் மூவரும். இராமன் மனிதனாகப் பிறந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமானவன் என்றார் இல. கணேசன். நீங்களோ மனிதனாகப் பிறந்த தெய்வம் என்கிறீர்கள். பாவம் இராமன்! யார் யாருக்கெல்லாம் எப்படி எப்படி இழுக்கமுடியுமோ அவனை அப்படி இழுங்கள். வனசாவுக்காகத் தூது போகிறாராம்! எல்லாம் காவிரி நீரின் கற்பனை, சுந்தரருக்காகச் சிவனே தூது போகவில்லையா?

  4. The story of Rama is well said few lines here. My view is different. By stepping down from higher stage, it seems Rama has sacrificed his higher status thus become on more reason for heroism. Actually Agni Pravesam was determined by Seeta herself.

    Any how,  very interesting drama.narration.Sir

  5. Interesting article! One explanation I heard recently sounded very logical and acceptable which I want to share with you – Rama tells Vibheeshana to bring Sita all decked up; She wonders why He wants Her decked up now; worried Sita gets dressed up ( Kamban Kavi in explaining how her tangled hair was straightened makes very interesting reading) – Sita goes to meet Rama – He does not show any loving expression; Valmiki  / Kamba Ramayana do not say anything to indicate that Rama asked Sita to do Agnipravesam! She herself volunteers to prove Herself and asks LAKSHMANA to light the fire to prove Her modesty.  Why Lakshmana? She could have asked Hanuman to light the fire as She knows Hanuman and has had many dialogues with Him.

    She has spoken some insulting words to Lakshmana  – Bhagavadha Abacharam is Her crime for which even God cannot excuse Her. So Sita had to undergo the punishment in the hands of the Bhagavadha, Lakshmana, and after this incident She really becomes “blameless”…. It is to be noted that the separation for 10 months was not enough to clear Her mistake. Moral of the story is – one can get away with Bhagavat Abacharam but not with Bhagavadha Abacharam as Bhagavadha is one step above Bhagawan!

    End of it, who are we to question anything that Valmiki / Kamban wrote? Who are we to question Rama and Sita? 

    Thanks for this opportunity to write on Rama and Sita!

    Uma

  6. எல்லாமே  நாடகம்தான் அண்ணலும் அன்னையும் முன்னமே பேசிவைத்துக்கொண்டு  போட்ட நாடகம்தான்…  மானைப்பிடிக்க ராமன் புறப்படும்போது  அன்னையிடம் விடைபெற்று முறுவல் செய்வார் என கம்பன் பாட்டு உண்டு. அ ந்தப்புன்னகையில்   ‘ஆரம்பமாகிறது சீதை நம்  நாடகத்தின் 
    க்ளைமாக்ஸ் ‘என்று இராமன் சொல்லாமல் சொல்வதாக சீதைக்குத்தோன்றுமாம்!!   அருமையாக புதுமையாக  எழுதிய திவாகருக்குப்பாராட்டு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *