நான் அறிந்த சிலம்பு – பகுதி 14
மலர் சபா
புகார்க்காண்டம் – 3. அரங்கேற்று காதை
முத்தமிழ்ப் புலவன்
அலையோசைமிகு
கடல்சூழ் புவிதனில்
தமிழ் நாடு வாழ்
மக்கள் அறிந்த தன்மையன்;
முத்தமிழ் முற்றும் அறிந்தவன்.
வேத்தியல் பொதுவியல் என்றிரு
நாட்டிய நாடக நூல்களின்
விதிக்கூறுகள் நன்கறிந்து
அந்நெறிகள் தவறிடாமல்
கடைப்பிடிப்பவன்.
இசைப்புலவன் வரித்து வைத்திட்ட
நீர்மைகளின் நியதிகளின்
போக்கறிந்தவன்.
இசைப்புலவன் தாளத்தில்
எய்துவைத்த அழகனைத்தும்
தம் கவியதனில்
அறிந்தது அறிந்த வண்னம்
மரபுகள் மீறாமல்
வடித்து வைக்கும்
கவிஞன் தானவன்.
பகைவர்கள் பேசிவைத்த
வசைமொழிகளின் வகையறிந்து,
தாம் இயற்றும் கவியதனில்
அவ்வசைமொழிகள் வாராமல்
நாடகக்கவி செய்யவல்ல
நன்மைதரு நாவுடையன்.
நல்ல நூலை வழங்கவல்ல
நூலறிவு வாய்ந்தவன்
கவிப்புலவன் அவனொடும்…
தண்ணுமை ஆசிரியன்
(தண்ணுமை – மத்தளம்)
ஆடல் பாடல் இசை வகைகள்
மூவகைத் தமிழ்,
பண்வகைகள்,
இருவகைத்தாளங்கள்,
எழுவகைத்தூக்கு,
இவற்றில் உண்டாகும் குற்றங்கள்,
தமிழில் வழங்கும்
நால்வகைச் சொற்கள்,
நுண்ணிய தெளிவுடன்
கற்றுத் தேர்ந்தவன்.
இரட்டித்து இசைக்கும் இசையை
இசையாசிரியன் மேலும் இரட்டிப்பாக்க
இசை நெகிழாது நிரம்ப நிறைத்து
வகுத்துப் பிரித்து
இசையாசிரியன் இரட்டித்த
இசையதனை
அவன் பகுத்தவாறே
கூட்டிக் குறைத்துத்
தொகுக்கத் தெரிந்தவன்.
யாழுடன் குழலும்
வாய்ப்பாட்டும்
இழைந்து இசைக்க
கேட்பவர் செவிதனில்
இன்பம் சேர்க்க
விரல்களைச் சரிவர அசைத்து
மத்தளம் இசைக்க வல்லவன்.
பிற கருவிகளின்
குறைந்த ஒலியை நிரப்பியும்
மிகுத்த ஒலியை அடக்கியும்
ஈடுகள் செய்திடும் திறனுடையவன்.
ஆக்குமிடத்தும் அடங்குமிடத்தும்
பிற கருவிகளின் இசை
நலிந்திடா வண்ணம்
அதிகமாய் ஒலிக்காமல்
அளவோடு இசைப்பவன்.
இங்ஙனம்
இசையில் பிழை நேராதவாறு
தம் அருந்தொழிலை அழகுறச் செய்யும்
தண்ணுமை ஆசிரியன் அவனொடும்..
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே 26 – 55
http://www.divinebrahmanda.com/2010/07/kannagi-kovalan-silapathikaram.html