புதுவை எழில்

 

இயேசுவைத் தேடியவர் பலர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு… பெத்லகேம் என்ற சிற்றூருக்கு வெளியே! வயல்வெளிகளில் பனி, குளிரின் கொடுங்கோல் ஆட்சி! நள்ளிரவு நேரத்தில் இறைவன் மாட்சி;! மோனத் தவம் இருந்தது வானம்! ஆட்டுக் கிடைக்குக் காவல் காக்கும் இடையர்கள். திடீரெனக் காரிருளில் பேரொளி. தாவீதின் ஊரிலே மீட்பர் பிறந்துள்ள செய்தியை வானவர் அறிவிக்கிறார். கேட்ட இடையர்கள் ஆட்டுக் கிடையை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைத் தேடி ஓடினர். இயேசுவைத் தேடுதல்; அன்று தொடங்கியது.

கீழ்த்திசையில் இருந்து ஞானியர் இயேசுவைத் தேடி வருகின்றனர். எருசலேம் நகரை அடைகின்றனர். யூத மன்னன் பிறப்பை வான்மீன் வழியே அறிந்து, அவரை வணங்க வந்திருப்பதாக மன்னன் ஏரோதுவைக் கண்டு சொல்கின்றனர். ‘அடாது உழைத்துப் படாத பாடு பட்டு உரோமைப் பேரரசன் சீசரின் காலைப் பிடித்து அரியணை அமர்ந்த எனக்குப் போட்டியாக மற்றொரு அரசனா? யாரவன்? எங்குப் பிறந்திருக்கிறான்? விட்டு வைக்கலாமா அவனை! சுட்டுப் பொசுக்க வேண்டாவா!”

குள்ளநரி ஏரோது, உள்ளத்து எண்ணங்களைத் தன் கள்ள மனத்திலே பதுக்கிக்கொண்டான். வந்திருக்கும் ஞானியர்க்கு உதவும் சாக்கில், யூத அரசன் பிறந்திருக்கும் இருப்பிடத்தை அறிந்துகொள்ள விழைந்தான். தலைமை குருக்கள் அனைவருக்கும் யூத குல வேத விற்பன்னர்களுக்கும் அவசர அழைப்புகள் பறக்கின்றன. வேத ஆகமங்கள் எழுத்தெண்ணி அலசப் பட்டு ஆராயப்படுகின்றன. இசுராயலை ஆள்பவர் பெத்லகேம் என்ற சிற்றூரில் தோன்றுவார் என்ற செய்தி தெரிய வருகிறது. இயேசுவைத் தேடி வந்த ஞானியர் பெத்லகேமை நாடிச் செல்கின்றனர். இயேசுவைத் தேடி இன்னொரு பயணம் தொடங்குகிறது.

இயேசுவைத் தேடிக் கண்டபின், திரும்பி வந்து தனக்குத் தகவல் தருமாறு குள்ள நரி சொல்லி அனுப்புகிறது. ஆனால், வானவர் வழிகாட்டலில் ஞானியர் திசை திரும்பி எருசலேம் வராமலேயே தத்தம் ஊர்களுக்குத் திரும்பிவிடுகின்றனர். வருவார்கள் ஞானியர் தருவார்கள் தனக்குத் தகவல் என வழி மீது விழி வைத்துக் காத்திருந்த ஏரோது இலவு காத்த கிளியானான்! எரிமலைக் குழம்பாய்க் கொதித்துப்போனான். இயேசுவைத் தேடிக் கொன்று ஒழிக்கத் தன் படைகளுக்குக் கட்டளை இட்டான். இங்கும் இயேசுவைத் தேடல் தொடாகதை ஆனது.

பெற்றவர்களே இயேசுவைத் தேடியதும் உண்டு. அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கும் போது. பாஸ்கா பெரு விழாவைக் கொண்டாட எருசலேம் வருகிறது திருக்குடும்பம். விழா முடிந்து நசரேத் திரும்பும் அவர்கள் நடுவில் இயேசு இல்லை! அவரைக் காணாமல் திகைத்த பெற்றோர்கள் பதைபதைப்போடு எருசலேம் திரும்புகிறார்கள், இயேசுவைத் தேடி!

இப்படி இயேசுவைத் தேடி வந்தவர் பலர் – ஆம் திருமுழுக்கு பெற்றபின் தவம் செய்யப் பாலைவனம் செல்லுகின்ற இயேசுவைச் சோதிக்கத் தேடி வருகிறான் சோதிப்பவன். அந்தச் சாத்தான் முதல், மரித்துக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவைத் தேடி வந்த மகதல மரியா வரை அவரைத் தேடி வந்தவர் பலர் : நிக்கோதேமு என்ற பரிசேயர் இரவோடு இரவாக அவரைத் தேடி வருகிறார். அப்பத்தையும் மீனையும் பலுகச்செய்து பந்தி வைத்துப் பரிமாறிய இயேசுவைத் தேடி மக்கள் கூட்டம் அலைபாய்கிறது. இறை நிந்தனை செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டி அவரைக் கொல்லத் தேடுகிறது குருக்கள் கூட்டம். அந்தக் கூட்டத்திடம் இயேசுவைக் காட்டிக்கொடுக்க அவரைத் தேடி வருகிறான் கூட இருந்தே குழி பறிக்கும் யூதாசு! இப்படி இயேசுவைத் தேடி வந்தவர் பலர்!

இந்தப் பலரில் நானும் ஒருவன்.

ஆம், இயேசுவைத் தேடி அண்மையில் இசுராயேல் வரை போய் வந்தேன். அவரின் பெற்றோர் வாழ்ந்த ஊர் நசரேத். அங்கு அவர் வாழ்ந்ததால் அவரை நசரேயனாகிய இயேசு என அழைத்தனர். (காண்க மத் – 2:23 ; யோவான் – 19:19). அங்கே மரியாள் நீர் மொண்ட கிணறு இருக்கிறது. அந்தக் கிணற்றுக்கு நீர் தந்த ஊற்று உள்ளது. வானவர் வந்து மரியாளுக்கு வாழ்த்து சொன்னதாகக் கூறப்படும் வீடு இருக்கிறது. அதன் மேல் மரியன்னைக்கு அழகான பெரிய பேராலயம் இருக்கிறது. அதில் பல நாடுகளின் உடைகளையும் புனைந்து அந்த அந்தப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களில் சொலிக்கும் மரியன்னையின் படங்கள் மின்னுகின்றன. பேராயலத்தின் உள்ளே தனிக் கண்ணாடிப் பெட்டியில் சீன அழகியாக மினுக்கும் மாதாவைக் காணலாம். கூடவே… அடடே இது என்ன வியப்பு! ஆம் சென்னை பெசன்ட நகரில் விளங்கும் நம் வேளாங்கண்ணி அன்னையின் சுருபம். பேராயலயம் அருகே சூசைத் தந்தையின் (அக்கால) இல்லம். அதன் மேல் அமைந்திருக்கும் திருக் கோயில். கண்களைக் கூர் தீட்டிக்கொண்டு இங்கெல்லாம் தேடினேன் இயேசுவை! இங்கே எங்கும் இயேசு எனக்குத் தென்படவில்லை!

நசரேத்துக்கு அருகே உள்ள ஊர்தான் கானா ஊர். இயேசு முதல் புதுமையை நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் ஊர். அங்கே விரைந்தேன். அழகான கோவில். அதன் சுரங்கப் பகுதியில் சில பழங்கால மண் சாடிகள். இவை இயேசு காலத்தவையா? சந்தேகம்தான்! இயேசுவின் முதல் புதுமையைக் குறிப்பிடும் ஒரே நூல் யோவானின் நற்செய்தி மட்டுமே! அதிலும் யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன” என்று குறிப்பிடுகிறது. (யோ 2 : 6). குடம் பற்றியோ சாடிகள் பற்றியோ குறிப்பு அதில்ஏதும் இல்லை! இயேசுவைத் தேடினேன். அங்கும் அவர் இல்லை!

நடந்தும் மலைப் பாதைகளைக் கடந்தும் சென்று போதனைகள் அவர் புரிந்ததும் அதிகாரத் தோரணையில் பேய்களை விரட்டி அடித்ததும் நோய்களைத் துரத்தியதும் கலிலேயப் பகுதிகளில். அவற்றில் பல இடங்களைப் போய்ப் பார்த்தேன். அவர் பல முறை படகிலே கடந்த கலிலேயக் கடல் (திபேரியாக் கடல் அல்லது கெனசரேத் ஏரி) மீதும் பயணம் செய்தேன். தண்ணீர் மீது ஐயன் நடந்த கடல் அதுதானாம். அக்கடல் மீது நடந்து வந்து காட்சி தருவாரோ என்ற ஏக்கம் என்னுள்…
எங்காவது கண நேரம் இயேசு தரிசனம் கிடைக்குமா எனத் தேடினேன். அவரைக் காணவில்லை!

இயேசுவின் ஊர் என அறிவித்துப் பலகை மாட்டி வைத்திருக்கும் கப்பர்நாவும் சென்று பார்த்தேன். அவர் காலத்திய சினகாக் – செபக் கூடம் – இடிந்து கிடந்தது. அருகே, பேதுருவின் வீடாம். அதனைக் கண்ணாடிகளில் மூடி வைத்துப் பாதுகாத்து மேலே தற்காலக் கோயில் எழுப்பி இருக்கிறார்கள். பேதுருவின் மாமியாரை இயேசு குணப்படுத்திய இல்லமாம் அது. அங்கேயாவது இயேசு தென்படுவாரா எனத் தேடிய எனக்கு ஏமாற்றமே! எண்வகைப் பேறுகளை இயேசு முழங்கிய குன்றம், அப்பம் மீன்களைப் பலுகச் செய்த இடம், அவர் திருமுழுக்கு பெற்ற யோர்தான் நதி, மறு உரு எய்திய தபோர் மலை என இன்னும் பல இடங்களில் இயேசுவைத் தேடினேன், தேடினேன் தேடி அலைந்தேன். பயனில்லை!

சரி, எருசலம் போவோம் என அங்கே வந்து சேர்ந்தேன். அந்த நகர் அருகே உள்ள பெத்லகேம் – மண்ணில் உள்ள மக்களை எல்லாம் மீட்க வந்த புண்ணியன் பிறந்த பூமி ஆயிற்றே! அவரைக் கண்டிப்பாகப் பார்க்கலாம் என்ற ஆவலுடன் அங்கே விரைந்தேன். மூன்றடி வாயிலுக்குள் முதுகை வளைத்துத் தலையைச் சாய்த்துத்தான் உள்ளே புக முடியும். அப்படியே புகுந்தேன். ஏகப் பட்ட தலைகள், ஏராளமான மக்கள். பல நாட்டு முகங்கள்! மாட்டுத் தொழுவம் நடுவே காட்டும் இளம் புன்னகை மிளிர இயேசு இருப்பார் என்ற கனவோடு வந்த எனக்கு ஏமாற்றம்! சலவைக் கல்லில் சிறு பீடம், அதன் கீழே சலவைக் கல்லில் தாவீதின் விண்மீன் வடிவம்… அங்கேதான் குழந்தை இயேசு பிறந்ததாக ஐதிகமாம். பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்திலும் இயேசுவைக் காணோம்!

மறுபடி எருசலேம்! தனிமைக்கும் செப இனிமைக்கும் இயேசு தேடி வந்தது ஒலிவமலைக் குன்றுக்குத்தான். அங்கே சென்றேன். அங்கிருந்துதான் அவர் விண்ணகம் சென்றதாகக் கூறுவார்கள். அங்கே – ஈராயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒலிவ மரங்கள் இருந்தன, இயேசுவைத்தான் காணோம். உரோமர்களின் இடிந்த அரண்மனை, ”Ecce Homo’ ‘ எனப் பிலாத்து பறைசாற்றிய இடம், இயேசுவை இழுத்து வந்த வழி, அவர் சிலுவை சுமந்து சென்ற வழிகள்… என எல்லா இடங்களிலும் அவரைத் தேடி அலைந்தேன். இறுதியாகக் கல்வாரி என்றும் கொல்கத்தா என்றும் அழைக்கப்படும் இடத்தையும் அடைந்தேன். தேடித் தேடி அலைந்ததுதான் மிச்சம். இயேசுவைத் தேடித் தேடி அலுத்துப் போன ஏரோதுவாக ஆனேன்.

பிறகு?

35000 அடிகள் உயரத்தில் ‘Corseair Boeing ‘ 747 மிதந்துகொண்டிருந்தது. இசுராயலில் இருந்து பரி (Paris) நோக்கிப் பயணம். என்னை நோக்கிச் சிரித்தபடியே கை நீடடியது, என் அடுத்த சீட்டில் இருந்த Corseair Boeing யூதக் குழந்தை. அதன் கன்னத்தைச் செல்லமாகத் தட்டிய நான் அலுப்பில் சாய்ந்தேன். தேடிய இயேசுவைக் காண முடியாத சோகம் மனத்தில், கண்களை மூடிய அரை மயக்கத்தில் நான்.

‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்திடுவார் ஞானத் தங்கமே…”

போயிங் விமானத்தில் அந்தக் காலச் சித்தர் பாடலா?!!! அரை மயக்கக் கண்களை மெல்லத் திறந்தால்…

அங்கே?

அவர்’... சிரித்துக்கொண்டிருந்தார்.

இல்லாத இடத்தில் எல்லாம் போய்த தேடி அலுத்துவிட்டாய், இல்லையா தம்பி! அதைத்தான் உங்கள் சித்தர் பாடி வைத்திருக்கிறாரே!

உன்னைப் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே நான் தீர்க்கதரிசனம் சொல்லி இருக்கிறேனே, கவனிக்கவில்லையா நீ?” –
நான் விழித்தேன்.

“யோவான் 7 -ஆம் அதிகாரம் 34 ஆம் வசனத்தைப் பாரேன்.
‘நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் காணமாட்டீர்கள்!’-

உனக்காகவே கூறிய வசனம்.”…

நெருப்பு சுட்டால் போல் உண்மை உரைத்தது. அவர் தொடர்ந்தார் :

‘பிறகு, என்னை எங்கே காணலாம் என்கிறாயா? அயலவனை நேசிப்பவனிடம் நான் இருக்கிறேனே!
அயலவனை நீ நேசித்தால் உன்னில் என்னைக் காணலாமே!

சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என நான் சொல்லி இருக்கிறேனே.
என்ன பொருள் இதற்கு? சிறு பிள்ளைகளிடத்திலே என்னைக் காணலாம் என்பது தானே!

மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று சொல்லி இருக்கவில்லையா? அப்படியானால், உன் சகோதர சகோதரிகள் இடையே நான் இல்லையா?..

யோசித்துப் பார்… உனக்குள்ளேதானே நான் வாழ்கிறேன். நானாக நீ வாழ்வதால்தான், நானாக நீ வாழ்ந்தால்தான் கிறிஸ்து அவனாக – கிறிஸ்துவனாக நீ வாழ இயலும். ஆகவே, என்னை நீ வெளியே தேடாதே!”

அவர் மறைந்தார். என் மயக்கம் தெளிந்தது.

‘சிக்கெனப் பிடித்தேன், எங்கெழுந்தருளுவது இனியே” என்று என் இதயத்தில் இருந்த இயேசுவை –

எங்கெங்கோ நான் தேடிய இயேசுவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அதனை ஆமோதிப்பதைப் போல் அந்தச் சிறு குழந்தை என்னை நோக்கிப் புன்முறுவல் செய்து கையை ஆட்டியது.

 

படங்களுக்கு நன்றி :

http://www.bibleplaces.com/holysepulcher.htm

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க