சாந்தி மாரியப்பன்

இதோ,

இன்னுமொரு புத்தாண்டு.

வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம்.

கர வருடத்தை வழியனுப்பி விட்டு நந்தன வருடம் பிறந்திருக்கிறது. இந்தச் சித்திரை மாதம் முதல் தினத்தை நாம் தமிழ்ப்புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகிறோம். என்னதான் தமிழ்ப்புத்தாண்டு என்றாலும் இது தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரியில், முக்கியமாக எங்கள் நாஞ்சில் நாட்டுப்பகுதியில் இன்றும் கேரளச் சாயலுடன் விஷூக்கனி கண்டே கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் தாக்கத்தில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் விஷூக்கனி காணும் வழக்கம் ஒரு சில ஆண்டுகளாகக் காணப்படுகிறது.

விஷூ என்பதற்கு சரிசமமான என்ற பொருளும் உண்டு. அதாவது இன்றைய தினம் நாளும், இரவும் ஒரே அளவைக் கொண்டிருக்குமாம். இதனால்தான் நாஞ்சில் பகுதியிலும், கேரளத்திலும் இதை நாங்கள் சித்திரை விஷூ என்றே குறிப்பிடுவோம்.

சித்திரை விஷூவை முன்னறிவிப்பது போல் எங்கும் மஞ்சள் சரக்கொன்றை மலர்கள் பூத்துக்குலுங்க ஆரம்பித்து விட்டன. சர விளக்குகளை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டி விட்டது போன்று தோன்றும் இந்த மஞ்சள் சரக்கொன்றை சிவனுக்கு மிகவும் பிரியமானதாம். இந்தப்பூ விஷூக்கனியில் கட்டாயம் இடம் பெறும்.

பூஜையறையிலோ அல்லது வரவேற்பறையிலோ விஷூவுக்கு முந்தைய நாள் இரவில் விஷூக்கனிக்கான ஏற்பாடுகள் அந்த வீட்டின் மூத்த பெண்மணியால் செய்யப்படும். ஒரு உருளியிலோ அல்லது அகலமான ஒரு தாம்பாளத்திலோ எல்லா வகையான பழங்கள், வெற்றிலை பாக்கு, தேங்காய், தங்க,வெள்ளி நகைகள், பணம், சில்லறைக்காசுகள் போன்றவை நிரப்பப்பட்டு, அதனுடன் மஞ்சள் சரக்கொன்றை மலரும் வைக்கப்படும். இதனை ஒரு கண்ணாடியின் முன் வைப்பார்கள். இந்த உருளியின் அருகில் அழகான கிருஷ்ணர் படமோ அல்லது சிலையோ வைக்கப்படும். இதனுடன் நிலவிளக்கும் மறுநாள் காலையில் தீபமேற்றத் தயாராக வைக்கப்படும். வாசலில் அழகான மாக்கோலம் போடப்பட்டு, நுழைவாயிலில் மாவிலைத்தோரணங்களும் கட்டி அலங்கரிப்பதுண்டு.

மறுநாள் இருள் பிரியாத, ஒருவர் முகம் இன்னொருவருக்குச் சரியாகப் புலப்படாத அந்த அதிகாலையில் வீட்டின் மூத்த பெண்மணி முதலில் எழுந்து, தீபமேற்றி விஷூக்கனி தரிசித்து விட்டு, வீட்டின் உறுப்பினர்களை ஒவ்வொருவராகக் கண்களைப்பொத்திக் கொண்டு வந்து, விஷூக்கனியின் முன் நிறுத்துவார். கண்களைத் திறந்ததும், இனிய கனி வகைகளையும், தங்கம், வெள்ளி, காசு பணம் போன்ற ஐஸ்வர்யங்களையும் முதலில் கண்டு விட்டு, தீபத்தையும் தரிசித்து விட்டு, பின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பர். வருட ஆரம்பத்தில் நல்லவையையே கண்டால், அந்த வருடம் முழுமையும் நன்றாகவே இருக்கும், வருட முழுமைக்கும் காசு பணத்திற்கும் இனிமைக்கும் குறைவிருக்காது என்பது நம்பிக்கை. வருட ஆரம்பத்தில் தன்னுடைய முகத்தையே பார்த்துக்கொண்டால் பிற்பாடு ஏதாவது தீங்கு வந்தால் கூட, “யார் முகத்துல முழிச்சேனோ.. தெரியலை சாமி” என்று அடுத்தவரை வைய இடமிருக்காது 🙂

கனி கண்டானதும், அனைவரும் குளித்துத் தயாராக வந்ததும், பூஜை நடைபெறும். அவலுடன், பழங்கள், வெல்லம், தேன், தேங்காய் போன்றவை சேர்த்துப் பிசைந்து உருண்டை பிடித்து நைவேத்தியமாக வைப்பார்கள்.

புதுமணத்தம்பதியினருக்குப் பெண் வீட்டிலிருந்து தலை விஷுச் சீராக கிலோ கணக்கில் அவல், வெல்லம், தேங்காய், பழங்கள், ஏலக்காய், வெற்றிலை பாக்கு எல்லாம் முதல் நாளே வந்து விடும். தமிழகத்தின் மற்ற இடங்களைப்போல் அல்லாமல், எங்கள் பகுதியைப் பொறுத்த வரை, சித்திரை முதல் நாள் என்றால் அவல்தான் பிரதானமாக கருதப்படும். அதுவும் சம்பா அவல் என்றால் இன்னும் விசேஷம்.

தீபாராதனை முடிந்ததும், வீட்டின் மூத்தவர்கள் இளையவர்களுக்குப் பரிசாகப் பணம் கொடுப்பதுண்டு. இதை நாங்கள் “விஷூக் கை நீட்டம்” என்று சொல்லுவோம். சொந்தங்கள் கொடுக்கா விட்டால் கூட கையை நீட்டி அவர்கள் பாக்கெட்டிலிருந்து உரிமையுடன் பணத்தை எடுத்துக் கொள்வதாலும் இதற்கு கை நீட்டம் என்று பெயர் வந்திருக்குமோ என்னவோ. யோசிக்க வேண்டிய விஷயம் இது 🙂 இன்றைய தினம் முழுக்க சிறியவர்கள் அனைவரும் பெரியவர்கள் காலில் தடால் தடால் என்று விழுந்து எழுந்திருப்பார்கள். எதற்கா?.. ஆசி வாங்குவதற்கில்லை, கை நீட்டம் வாங்கத்தான். காலில் விழுந்தால் கையில் காசு.

மதிய விருந்து ‘சத்ய’ என்று அழைக்கப்படுகிறது. பலாப்பழ சீசன் தொடங்கி விட்டபடியால் இன்றைக்கு நிறைய வீடுகளில் பலாப்பழ பிரதமன் செய்யப்படும். சிறுபயிறு பாயசமும் கட்டாயம் இடம் பெறும். வெறும் ஒரு வகைப் பாயசத்துடன் நாங்கள் திருப்தி அடைந்து விடுவதில்லை,.. ஆகவே, ‘விஷு சத்ய’வில் பால் பாயசமும் உண்டு.

இன்றைய தினம் கோயில்களிலும் கனி காணல் நடைபெற்று பக்தர்களுக்கு பகவான் கை நீட்டம் கொடுப்பார். சில சமயங்களில் தமிழ்,கேரள புத்தாண்டு தினங்கள் ஒரே நாளில் வருவதுண்டு. இந்த முறை கேரள மக்களுக்கு நாளை புத்தாண்டு பிறக்கிறது. ஆகவே ஐயப்பன், இன்று அவனைத்தரிசிக்கச் சென்ற என்னிடம், ”மக்ளே,.. நீ நாள வரூ. நமக்கு கனி காணாம். பின்னே கை நீட்டமும் தராம். இப்போள் ஈ அரவண கழிக்கூ” என்று சொல்லி அரவணைப் பிரசாதத்தைத் தந்து அனுப்பினான். சென்ற வருடம் ஒரே நாளில் தமிழ் மலையாள விஷூக்கள் வந்ததால், தரிசனம் செய்யப் போயிருந்த போது கை நீட்டம் கிடைத்தது.

சென்ற வருஷம் சந்தோஷங்களும், சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம். நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே. மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.

கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகி விடாமல், மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகி விடாமல்,புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய்,..

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிறந்திருக்கும் நந்தன ஆண்டு அனைவரின் வாழ்விலும் நந்தவனமாய் மகிழ்ச்சி குலுங்கிடச் செய்யட்டும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.