ஏழை சிறார்களுக்கு புத்தாண்டுப் பரிசு!
தலையங்கம்
நண்பர்களே,
அனைவருக்கும் இனிய நந்தன் புத்தாண்டு வாழ்த்துகள்.
நாட்டில் சுனாமி எச்சரிக்கையும், நிலநடுக்க அச்சமும் வந்து மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த புத்தாண்டு உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு அதிரடித் தீர்ப்பினால் அச்சம் த்ணிந்து, குளிர்காற்று வீசச் செய்துள்ளது. 2009ஆம் ஆண்டில் அரசு கொண்டுவந்த சட்டத்தின்படி, 6 முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் 25 சதவிகித இடம், இலவசமாக ஏழைக் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டது. அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் இதனை உரிமை மீறல் என்று அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதிகள் எஸ்.எச்.கபாடியா (தலைமை நீதிபதி) கே.எஸ் ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வியாழக்கிழமை, ஏழை மாணவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் செல்லுபடியாகும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளைத்தவிர மற்ற அனைத்துப் பிரிவு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 25 சதவிகித இடங்களை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபில் அவர்களும் இத்தீர்ப்பை வரவேற்றிருக்கிறார். இதன் மூலம் அனைத்து சர்ச்சைகளும் முற்றுப் பெற்றது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது,
ஒருபுறம் நெடிதுயர்ந்த கட்டிடங்களும், மறுபுறம் மழையும், வெய்யிலும் மழலைகளோடு தாமும் சேர்ந்தே உறவாடும் நிலையில் உள்ள பள்ளிகள், என்று நம் இந்தியாவில் இரு மாறுபட்ட சூழலகளே காணப்படுகின்றன. இந்த நிலைமை மாறி அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான மேன்மையான கல்வி கிடைக்க வேண்டுமென்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வாக அனைத்து பள்ளிகளையும் அரசுடமையாக்கி, அனைத்து குழந்தைகளுக்கும் பனிரெண்டாம் வகுப்பு வரை இலவசமாகக் கல்வி பெறும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்பதே, கல்வியாளர்களின் விருப்பமாக உள்ள்து.
படத்திற்கு நன்றி :
http://geniusbeauty.com/cute/pictures-beautiful-flower-bouquets/
உண்மை. கல்விச்சிறந்த தமிழ்நாட்டை மீண்டும் நேர் நிமிர்த்திக் காட்டவேண்டிய கடைமை, உணர்வோடு நின்றுவிடாமல் செயலாக்கமும் பெறவேண்டும்.